மஞ்சை வசந்தன்
தங்கள் ஆதிக்கத்தின் அடிப்படையான சாஸ்திரம் மதத்திற்கு எதிராய் யார் போராடினாலும் அவர்களை அழித் தொழிப்பதே ஆரிய பார்ப்பனர்கள் அன்று முதல் இன்றுவரை செய்யும் அடாவடிச் செயல். உயிர்நேயம் போதித்த சமணர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு எதிராய் நின்றதால் அரசன் துணையோடு 8000 சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றான் _ திருஞானசம்பந்தன் என்ற ஆரிய பார்ப்பான். மத வழக்கத்தைத் தகர்த்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நந்தன் கோயிலுக்குள் செல்ல முயன்றதால், தீயில் தள்ளிக் கொன்றுவிட்டு இறைவனோடு இரண்டறக் கலந்ததாய் மோசடி செய்தனர். சமணத்தை ஏற்று உயிர்நேயம் பேசியதால் அப்பரை சிதம்பரம் கோயில் கருவறையில் அடித்துக் கொன்று புதைத்தனர். அதுவே சிதம்பர இரகசியம் ஆனது. அப்பரைக் கொன்றதன் எதிர்வினையாய் திருஞானசம்-பந்தர் திருமணத்தின்போது குடும்பத்தோடு தீவைத்துக் கொளுத்தப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக அடுத்து வள்ளலாரைக் குறி வைத்தனர். வள்ளலாரும் உயிர்நேயம் பேணியவர். வாடிய பயிரைக் கண்டபோது வாடியவர்; ஜாதியை மதத்தை, சடங்குகளை, சாஸ்திரங்களை, பூசைகளை கடுமையாகச் சாடினார், எதிர்த்தார், வேதங்கள் புராணங்களை மறுத்தார்.
“சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
சாதி மதம் சமயமெனும் சங்கடம் விட்டு…
சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம் விட்டு
கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்
இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயல் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம
வழக்கமெல்லாம் குழிக்கொட்டி மண்மூடிப்போக
நால்வருணம் ஆச்சிரம ஆசாரம் முதலாம்
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே
சாதியைநீள் சமயத்தை மதத்தையெலாம்
விடுவித்தென் றன்னை ஞான
நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
நிலைதனிலே நிறுத்தி யருளிய
மதத்திலே சமய வழக்கிலே மாயை
மருட்டியே இருட்டியே மறவாக்
கதத்திலே மனத்தை வைத்து வீண்பொழுது
நிலத்திலே போக்கி மயங்கி யேமாந்து
நிற்கின்றார். மதமெனும் பேய் பிடித்தாட ஆடுகின்றோர்
தோத்திரஞ் செய்து ஆங்காங்கே தொழுகின்றார்.
சாதிசம யங்களிலே விதிபல வகுத்த
சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று”
என்று கடுமையாகச் சாடினார்.
எல்லோரும் சமம் என்று சமரச சுத்த சன்மார்க்க சங்கம் அமைத்தார்.
வள்ளலாரை பலரும் பின்பற்றினர். இதைக் கண்டு பார்ப்பனர்கள் பதறினர். தங்கள் ஆதிக்கத்தைத் தகர்த்து அறிவை வளர்க்கும் இவரை விட்டுவைக்கக் கூடாது என்று கொதித்தனர். ஜாதியும் மதமும் ஒழிந்தால் தங்கள் உயர்நிலை ஒழியும். சடங்கு ஒழிந்தால் தங்கள் பிழைப்பு (வருவாய்) போகும் என்று அஞ்சினர். எனவே, வள்ளலாரைக் கொல்லச் சதிசெய்து கருங்குழியிலிருந்து மேட்டுக்குப்பம் நடந்துசெல்லும்போது, வள்ளலாரை அடித்துக்கொன்று புதைத்துவிட்டு, வீட்டுக்குள் சென்று மறைந்துவிட்டார் என்று ஏமாற்றினர்.
அப்பரைக் கொன்றபோதும், நந்தனாரை எரித்தபோதும், வள்ளலாரைப் புதைத்தபோதும் மக்களை ஏமாற்ற அவர்கள் இறைவனோடு சேர்ந்துவிட்டார்கள் என்றே ஏமாற்றினர். வள்ளலார் படுகொலை செய்யப்பட்டார் என்பது தென்னார்க்காடு மாவட்ட கெசட்டில் (ஆங்கில ஆட்சியின்போது) பதிவாகியுள்ளது. அதேபோல் காந்தியாரும் மதவெறிக்கு எதிராக தன் செயல்பாட்டைத் தொடங்கினார். பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் கருத்துச் சொல்லத் தொடங்கினார். “வேதம் ஓதுதல்தானே வேதியர்க்கு அழகு. தர்ப்பையும் பஞ்சாங்கமும் படிக்க வேண்டிய நீங்கள் ஏன் சனாதனத்தையும் தார்மீக நெறியையும் விட்டுவிட்டு ஸ்டெதாஸ்கோப்பையும், டிஸ்கொயரையும் எடுக்க விரும்புகிறீர்கள்? (மருத்துவம் படிக்கவும், பொறியியல் படிக்கவும் ஏன் விரும்புகிறீர்கள்?)’’ என்று கேட்டார்.
அரசு நிகழ்வுகளில் மதத்திற்கு வேலையில்லை யென்றார் காந்தி. இப்படியெல்லாம் காந்தியார் பேச ஆரம்பித்ததும் ஆரிய பார்ப்பனர்களுக்கு ஆத்திரம் பொங்கியது. மதத்தையும், நம் ஆதிக்கத்தையும் காந்தி ஒழிக்கப் பார்க்கிறார். மதச்சார்பற்ற நாடாக இந்தியாவை ஆக்கத் துடிக்கிறார். இவரை இனி விட்டுவைக்கக் கூடாது என முடிவெடுத்தனர். இதைத் தந்தை பெரியார் அவர்களே, இந்தியா சுதந்திரம் பெற்றது 15.8.1947இல்; காந்தியார் கொல்லப்பட்டது _ 30.1.1948இல்; அதாவது சுதந்திரம் பெற்ற 165ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று சொன்னது 7.12.1947இல்; காந்தி கொல்லப்பட்டது 30.1.1948இல். அதாவது அவர் நம் நாடு மதச்சார்பற்றது என்று சொன்ன 53ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி, இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகிவிட்டார். அவர் கொல்லப்படாவிட்டால் இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகிவிடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள் என்றார்.
ஆம், மதத்திற்கு எதிராயும், ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராயும் போர்க்குரல் கொடுத்த காரணத்தால்தான் வள்ளலாரையும், காந்தியாரையும் ஆரிய பார்ப்பனர்கள் படுகொலை செய்தனர் என்பதே மறைக்கப்பட முடியாத உண்மையாகும்.
மேலும் அரிய தகவல்களை அதிகம் அறிய,
1. காந்தியார் கொலை _- அதிர்ச்சியூட்டும் தகவல்கள், -கி.வீரமணி (திராவிடர் கழக (இயக்க) வெளியீடு)
2. பெரியாரும் இராமலிங்கரும் (பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு)
என்ற இரண்டு நூல்களையும் படியுங்கள்!
பார்ப்பனர் பற்றி அறியுங்கள்!