முனைவர் வா.நேரு
இனி வரும் உலகம் எப்படி எல்லாம் இருக்கும் என்று சிந்தித்த தந்தை பெரியார் “சுகம் பெறுவதிலும், போக போக்கிய மடைவதிலும், நீண்ட நாள் வாழ்வதிலும் ஆராய்ச்சியும், முயற்சியும் வளர்ந்து கொண்டே போகும்” என்றார். மனிதர்களின் பல நூற்றாண்டுக் கனவு நீண்ட நாள்கள் வாழ்வது. நீண்ட நாள்கள் வாழ்வது மட்டுமல்ல, இளமையாகவே வாழ வேண்டும் என்பதும் மனிதர்களின் நீண்ட நாள் கனவு ஆகும். அதற்கான ஆராய்ச்சி ஒரு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது, இன்றைய காலகட்டத்தில்.
வயது முதிர, முதிர இதய நோய் வருகிறது, மறதி நோய் வருகிறது, வாதம் உள்ளிட்ட பல நோய்கள் வருகின்றன. இதற்கு என்ன காரணம்? உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும் உழைக்கும் காலம் என்று ஒன்று இருக்கிறது. 60 வயது ஆச்சா, இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை பண்ணியாச்சா? என்று இயல்பாகக் கேட்கும் அளவிற்கு மருத்துவம் இன்று வளர்ந்திருக்கிறது. இருதய மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறது. ஒருவரின் உடம்பில் இருக்கும் பழுதடைந்த இருதயத்தை எடுத்துவிட்டு, நல்ல செயல்படும் இருதயத்தைப் பொருத்துவதன் மூலமாக ஒருவரின் வாழ் நாளைக் கூட்ட முடிகிறது.
இயந்திரத்திற்கு என்ஜின் போல, நமது மனித செல்களின் அக ஒன்றியமாக வாழ்ந்தும், என்ஜினாகச் செயல்படுவதும், பரிணாம வளர்ச்சியில் நுண்ணுயிரின் நீட்சியாகவும் இருக்கின்ற ‘மைட்டோகாண்ட்ரியா’ ஆகும். ஆற்றல் காரணியான, `ஏ.டி.பி (adenosine triphosphate = ATP)` எனும் வேதிப்பொருளை உருவாக்கி, அனைத்து செல்களின் செயல்-பாடுகளுக்கும் தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல், செயல்முறைகளை ஒருங்கிணைக்கும் தொடர்பு மய்யங்களாகவும், மைட்டோகாண்ட்ரியா செயல்படுகிறது.
வயதிற்கும், முதுமைப் பருவ தள்ளாமை நோய்களுக்கும் முக்கிய காரணம், நாளடைவில் குறையும் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏ.யின் அளவு, ஒருமைப்பாடு மற்றும் செயல்பாடு இவற்றின் பிறழ்வுகள்தான். இந்த சேதங்களை _ பல அடுக்குகளை துல்லியமாகத் தாண்டி சீரமைத்து, செல்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதன் மூலம், முதுமைப் பருவ தள்ளாமை நோய்களைத் தடுக்கலாம்.
உடலின் ஒவ்வோர் உறுப்பிலுமுள்ள செல்களுக்கும், ஒரு டைமர் (timer) கடிகாரம் உள்ளது. வயதாவதால் வரும் தோல் சுருக்கத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டால், தோல் செல்கள் தன்னைத்தானே புதுப்பிக்க பிரிந்து பெருகும் (cell division and proliferation) டைமர் அவகாசம் 60 முறை மட்டுமே!”
நம் தோல் செல்கள் 60 முறை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும்.அதற்குப் பின்பு அதற்கு சத்துப் போய்விடும். தோல் செல்களைப் புதுப்பித்துக்கொள்ள இயலாது.அது நமது 80 வயதில், 90 வயதில் நிகழலாம்.அப்படியென்றால் அந்த தோல் செல்களுக்கு சத்துக் கொடுப்பதன் மூலம், மறுபடியும் அந்தத் தோல் செல்கள் புதுப்பித்துக் கொள்ள இயலும். சுருங்கிய தோல்கள் விரியும். பழைய மாதிரி தோற்றமளிக்கும். இது குறித்தான ஆய்வுகள் நிறைய இப்போது நடக்க ஆரம்பித்திருக்கின்றன.
“இந்த செல் மறுஉருவாக்க முறை மூலம், பழுதான இயந்திர பாகங்களை மாற்றுவது போல, இயக்கம் இழந்த பழுதான உடல் பாகங்களை, மாற்று அறுவை சிகிச்சைக்கு, நன்கொடையாளர் அல்லது தொப்புள் கொடி ஸ்டெம் செல்கள் இல்லாமல்கூட மாற்றி, ஆரோக்கிய ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம்.” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட கணினி, இணையத் தகவல் தொடர்பு புரட்சியாலும், மரபணு ஆராய்ச்சியாலும் மனிதர்கள் நீண்ட நாள் வாழ முடியும் என்பது மட்டுமல்ல, இளமையாகவும் வாழவைக்க முடியும் என்ற ஆயிவின் முடிவு மனித குல வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது.
நீண்ட காலம் வாழக்கூடிய மனிதர்கள், எப்படி வாழ்கிறார்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் என்னென்ன, உணவு முறைகள் என்னென்ன, உடற்பயிற்சி போன்றவை என்னென்ன என்பனவற்றின் மூலமாகத்தான், ஒரு மனிதர் நீண்ட நாள் வாழ்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முடியும் என்பது சென்ற நூற்றாண்டின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், ஆராய்ச்சி முடிவுகள், ஒழுக்கமாக வாழும் சில மனிதர்கள் சீக்கிரம் இறந்து போவதையும், குண்டக்க மண்டக்க வாழும் சில மனிதர்கள் நீண்ட காலம் வாழ்வதையும் எடுத்துக் காட்டியது. அப்படியானால் நீண்ட காலம் வாழ்வதற்கான அடிப்படை என்ன என்பதனைப் பற்றிய ஆய்வுகளை உயிரியல் மற்றும் மரபியல் அறிவியல் அறிஞர்கள் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார்கள்.
மனிதர்களை ஆய்வு செய்வது மட்டுமல்ல, நீண்ட காலம் வாழும் வேறு உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சியையும் சில உயிரியல் அறிஞர்கள் செய்து வருகிறார்கள். மரபணு எனப்படும் ஜெனிட்டிக்ஸ் அறிவியலின் வளர்ச்சி பல ஆய்வுகளுக்கு வழி வகுத்துள்ளது. மனிதர்களை விட அதிக ஆண்டுகள் வாழும் விலங்குகளை, பறவைகளை தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.
வில்வித்தை திமிங்கலம் (Bowhead Whale), பெரிய ஆமை (Giant Tortoise), ஒரு வகை வவ்வால், ஆப்பிரிக்க யானை போன்றவை நீண்ட காலம் வாழ்க்கூடியவை. இந்த விலங்கினங்களின் மரபணுக்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்கிறார்கள். நீண்ட காலம் வாழும் விலங்குகளில் இருக்கும் மரபணுக்களின் தனித்தன்மை என்ன என்பதையெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மரபணு ஆராய்ச்சியில் டி.என்.ஏ. பற்றிய ஆராய்ச்சி பல புதிய பாதைகளைக் காட்டிக் கொண்டுள்ளது. “செல்லின் மூலக்கூறான டிஎன்ஏ (Deoxyribo nucleic acids – DNA), படங்களில் பார்ப்பது போல் அல்லாமல், நூல்கண்டு போல சுருண்ட குரோமோசோம் கட்டமைப்பு அவிழ்ந்து விடாமல் பாதுகாப்பது, அதன் முனைக்கூறு தொப்பிகள் (Telomeres). இதன் செயல்பாட்டை, ‘ஷூ லேஸ்’களின் (shoelace) முடிவில், அதன் நூல்கள் எளிதில் அவிழ்ந்து விடாமல் பாதுகாக்கும் பிளாஸ்டிக் தொப்பிகளோடு ஒப்பீடு செய்யலாம்.
ஒவ்வொரு முறை செல் பிரியும் போதும், இந்த தொப்பிகள் சுருங்குவதால், ஒரு கட்டத்திற்கு மேல் செல்கள் பிளவுபட முடியாமல், முதுமை அடையும் (cellular sensescence). அண்மைக்காலத்தில், இஸ்ரேல் விஞ்ஞானிகள், ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை (HBOT) எனும் நெறிமுறை மூலம், முனைக்கூறு தொப்பியின் நீளத்தை அதிகரித்து, செல்கள் முதிர்ச்சி அடையத் தேவையான டைமர் அவகாசத்தை மீட்டமைக்க (reset) முடியும் என்று மெய்ப்பித்து, நிரந்தர இளமை நோக்கிய பாதையை வகுத்துள்ளனர்.”
உடலில் உள்ள செல் மறு உருவாக்க முறை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக அல்டாஸ் லேப் (Altoslab) என்னும் அமைப்பு, ஜனவரி 19, 2022இல் தொடங்கப்பட்டுள்ளது. இது ஓர் உயிரியல் தொழில் நுட்ப நிறுவனம்
(Bio-Technology Company). பல ஆயிரம் கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் நோபல் பரிசு பற்ற பல அறிவியல் அறிஞர்கள். மருத்துவர்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இணைந்துள்ளார்கள். இந்த அமைப்பின் நோக்கம், உடம்பில் உள்ள செல்கள் எப்படி மறு உருவாக்கம் செய்கிறது என்பதையும், அந்த செல்கள் மறு உருவாக்கத்தின் மூலமாக மனிதர்கள் நீண்ட காலம் இளமையாக வாழ்வதற்கு வழி ஏற்படுத்துவதும், நோய் வாய்ப்பட்டவர்களைக் குணப்படுத்தி மருத்துவத்தில் புரட்சி ஏற்படுத்துவதும் ஆகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் (Altoslab.com) சென்று வாசித்தால், வாசிக்க வாசிக்க ஆர்வம் ஊட்டும் செய்திகள் நிறைய இருக்கின்றன.
அல்டாஸ் போன்ற நிறுவனங்களின் ஆராய்ச்சிகள் பெருமளவிற்கு வளர்கின்றபோது, நாம் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறும்போது, நூறு ஆண்டுகள் வாழ்க என்று கூறுவதற்குப் பதிலாக, 200 ஆண்டுகள் இன்று போல இளமையாக வாழ்க, வாழ்க என ஒரு 25 வயதுக்காரரை வாழ்த்தலாம். அப்படி ஒரு நாள் இனி வரும் உலகில் வரும் என்பதற்கான சாத்தியக் கூறுகள், அறிவியல் வளர்ச்சியால், அறிவியல் ஆராய்ச்சியால் தென்படுகிறது. நன்றி.
1) பி.பி.சி.1.2.2022 ..அறிவியல் அதிசயம்: மனிதன் மரணத்தை வெல்வது சாத்தியமா? நீடித்த இளமையை நோக்கி முன்னேறும் மருத்துவம்…நமச்சிவாயம் கணேச பாண்டியன் அவர்களின் கட்டுரை.
2). Altoslab.com