பெண்ணால் முடியும்!

பிப்ரவரி 16-28,2022

 முதல் முயற்சியில் அய்.ஏ.எஸ்.

 

நமது இலக்குகளை அடைய உண்மை உழைப்பும் ஆர்வமும் இருந்தால் போதும், அதற்கான முயற்சியைத் தொடர்ந்து செய்யும் பட்சத்தில் நாம் அந்த இலக்கை எளிதில் அடைய முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் சென்னையைச் சேர்ந்த ஷானாஸ் இலியாஸ் என்னும் பெண். குடும்பம், குழந்தை என மாறிய நிலையிலும் அய்.ஏ.எஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றிக்காக அவர் எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் அவராகவே படித்து வெற்றி பெற்று உள்ளார் என்பது சிறப்பானது. அவரைப் பற்றிக் கூறுகையில்…

“நான் பிறந்து வளர்ந்தது சென்னை, வண்டலூரில்தான். படிப்பும் இங்குதான். அதன் பிறகு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் 2015இல் முடித்தேன். பிறகு அய்.டி.யில் வேலை பார்த்தேன். இதற்கிடையில் வீட்டில் எனக்குத் திருமணம் பேசி முடிச்சாங்க. குடும்பம், வேலைன்னு என் வாழ்க்கை நகர்ந்த சமயத்தில்தான் நான் கருவுற்றேன். அதனால் வேலையினை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. வீட்டில் ஓய்வாக இருந்த அந்தக் காலநேரத்தை, பயனுள்ள முறையில்,  செலவழிப்-பதற்காக டி.என்.பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்காகப் படிக்கத் திட்டமிட்டேன். ஆனால், என்னால் தேர்வு எழுத முடியவில்லை. காரணம், அந்த நேரத்தில்தான் எனக்குக் குழந்தை பிறந்தது. அதனால் முக்கியத் தேர்வினை என்னால் எழுத முடியவில்லை. ஆனால், தேர்வுக்காக நான் நன்றாகவே தயார்படுத்தி இருந்தேன். அதைப் பார்த்த என் பெற்றோர் ஒரு மாதத்தில் உன்னால் குரூப் 2 தேர்வுக்குப் படிக்க முடியுமென்றால் உன்னால் கண்டிப்பாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் படிக்க முடியும் என்று என்னை ஊக்கப்படுத்தினார்-கள். குழந்தைக்கு 4 மாதங்கள் ஆனபோது வீட்டிலிருந்தே படிக்க ஆரம்பித்தேன். முந்தைய ஆண்டுகளுக்கான டாப்பர்ஸோட அடிப்படை புத்தகங்களை மட்டும் படித்தேன். முன்னதாக தேர்வுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பே எப்படிப் படிக்க வேண்டும் என்பதையும், நேரத்தை எப்படியெல்லாம் மிச்சப்படுத்திப் படிக்க வேண்டும் என்பதையும் திட்டமிட்டுக் கொண்டேன்.

நான் எந்த இடத்திலாவது சோர்ந்து போவதாக உணர்ந்தால் அப்போது என்னுடைய முயற்சியையும் செயல்பாடுகளையும் அதிகப்-படுத்தினேன். குழந்தைக்கு ஒரு வயதான    பிறகு எப்போதும் அம்மாவுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்பும். அந்த சமயங்களில் குழந்தையுடனே சேர்ந்து படிக்கப் பழகிக் கொண்டேன். அப்பாவும் அம்மாவும் எனக்கு உறுதுணையாக குழந்தையைப் பார்த்துக் கொண்டனர். என் இலக்கை அடைந்ததற்கும் நான் படித்த பள்ளியும், அதன் தாளாளர் விஜயன் அவர்களும்தான் முக்கியக் காரணம்’’ என்ற ஷானாஸ் பெண்களுக்கு திருமணமானாலும் தங்களுக்கான பாதையை சரியாகத் திட்டமிட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

“ஆண், பெண் யாராக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கை அடைய வேண்டும் என்கிற லட்சியம் இருக்கும். சிலர் சிறு வயதில் நிறைய படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பார்கள். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சிறிய வாய்ப்பு கிடைத்தால்கூட அதைப் பயன்படுத்தி அவர்களின் லட்சியங்களை அடைய வேண்டும். போட்டித் தேர்வுக்குப் படிப்பவர்களுக்கு போட்டித் தேர்வு எதுவாக இருந்தாலும் பாடப் புத்தகத்தைப் படித்தாலே போதும், எந்த கோச்சிங் சென்டரும் தேவையில்லை. பள்ளியில் ஆசிரியர் சொல்லித் தருவதைவிட எந்த சென்டரும் சொல்லித் தரப் போவதில்லை. நீங்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம். நீங்கள் படிப்பது சரியா என்பதை அறிந்து கொள்ள மாதிரித் தேர்வுகள் எழுதுவதும், முழு நம்பிக்கையுடன் படிப்பதும் மிகவும் அவசியம்’’ என்று அனைவரையும் ஊக்கப்படுத்துகிறார்.

அவர் படித்த பள்ளியின் தாளாளரும் முனைவருமான விஜயன் அவர்கள் தனது மாணவி ஷானாஸ் பற்றிக் கூறுகையில்,

“பள்ளிப் பாடங்களை தெளிவாகப் படித்தாலே இதுபோன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஷானாஸ் போல பல மாணவ, மாணவியர் எந்த தனிப்பட்ட வெளிப் பயிற்சிகளும் இல்லாமல்தான் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்’’ என்கிறார் இது பெண்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் : சந்தோஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *