மஞ்சை வசந்தன்
உலகத் திருக்குறள் மய்யம்
இணைய மாநாட்டில் வாசிக்கப்பட்டது
வாழ்க்கைத் துணை:
பெண்ணை அடிமையாய், வேலைக்காரியாய், உரிமையற்றவளாய், போகப் பொருளாய், பிள்ளை பெறும் கருவியாய்க் கருதிய சமுதாயத்தில் பெண் ஆணுக்கு நிகரானவள், அவளுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அவள் ஆட்சியாளராய், கல்வியாளராய் வரமுடியும். அவள் ஆணுக்கு இணையானவள் என்று பெரியார் தன் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டார். அதற்கான நன்றிக் கடனாய் பெண்கள் அவருக்கு அளித்த சிறப்பே ‘பெரியார்’ என்னும் அடைமொழி.
ஒரு பெண்ணை ஓர் ஆணுக்குத் திருமணம் செய்வதை கன்னிகாதானம் என்றனர். அவள் என்ன பொருளா, தானம் செய்ய என்று கேட்ட பெரியார், இல்வாழ்வில் ஓர் ஆணுடன் இணையும் பெண் அந்த வாழ்வின் கூட்டாளி. கணவன் மனைவி இருவரும் துணைவர்கள். ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் துணைவர்கள் என்று திருமண முறையையே மாற்றினார். திருமண ஒப்பந்தம் ஆக்கினார்.
இந்தக் கருத்தை இரண்டா-யிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொண்டிருந்த வள்ளுவர், வாழ்க்கைத் துணை என்று தன் குறளில் பதிவு செய்தார். வாழ்க்கைத் துணை நலம் என்று 10 குறட்பாக்களை எழுதி தன் கருத்தைப் பதிவு செய்தார்.
“மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” (குறள்-51)
என்று அந்த முதல் குறளிலே வாழ்க்கைத் துணை எனும் சொல்லாக்கத்தைப் பதிவு செய்தார்.
உழவு
ஆரியப் பார்ப்பனர்கள் உழவை இழிதொழிலாகக் கருதினர். வெறுத்து ஒதுக்கினர். ஆனால், அதற்கு நேர் எதிராய் வள்ளுவர் உழவை உலகின் உயர்ந்த தொழிலாக உயர்த்திப் பேசினார்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள்: 1031 )
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (குறள்: 1033 )
உழவினார் கைமடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை (குறள்: 1036 )
என்பன போன்று பத்துக் குறட்பாக்களில் உழவின் மேன்மையை, கட்டாயத்தை வள்ளுவர் கூறியுள்ளார்.
தந்தை பெரியார் அவர்களும் ஆரிய சனாதன சாஸ்திரக் கருத்துகளுக்கு எதிராய் கடும் கண்டனத்தைத் தெரிவித்து உழவின் சிறப்பை உழவர் சிறப்பை பல முறை கூறியுள்ளார்.
குடிஉயர்த்தல்
குடி என்பதற்கு குடும்பம் என்றும், குடிமக்கள் என்றும் இருவகையில் பொருள் கொள்ளலாம். குடிஉயரச் செய்ய முயல்கின்றவர்-களின் தகுதியை வள்ளுவர்,
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும் (குறள்: 1028 ) என்கிறார்.
குடி உயர உழைக்கக் கூடியவர்களுக்கு பருவம் இல்லை, கிழமை இல்லை, இவற்றைக் கருதினால் அவர்கள் முயற்சிக்கு அது கேடாகும் என்கிறார்.
இங்கு பருவம் என்பது காலத்தையும் குறிக்கும், உழைக்கின்றவர் வயதையும் குறிக்கும்.
குடிஉயர்த்த நினைத்து முயற்சி செய்கின்றவர்-களுக்கு காலமும் இல்லை. வயதும் இல்லை. பெற்றோரை இழந்த பிள்ளைகளுள் ஒன்று குடும்பப் பொறுப்பைத் தோளில் சுமந்து பிள்ளைப் பருவத்திலே குடியைக் காத்து உயர்த்திய நிகழ்வுகள் கண்கூடு. நல்ல நாள் கெட்ட நாள், இராகுகாலம், எமகண்டம் என்பதெல்லாம் குடிஉயர்த்த முனைவோர்க்கு இல்லை.
தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்த திருக்குறள் இது. இக்குறளின் கருத்தையே பெரியார் அடிக்கடி கூறியுள்ளார். அதன் அடிப்படையில்தான் இளம் வயதுடைய கி.வீரமணி அவர்களிடம் மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்தார். அவரால் இச்சமுதாயத்தை உயர்த்த முடியும் என்று நம்பினார்.
குடிஉயர்த்த உழைக்கின்றவர்கள் மானம் பார்க்கக் கூடாது. இழிவு, மட்டம், கேவலம் போன்ற உணர்வுகளுக்கு ஆட்படக் கூடாது என்று தன் அறிவுரையாகவே கூறியுள்ளார்.
சுயமரியாதையை _ தன்மானத்தைப் போதித்த பெரியார், பொதுநலத்துக்காகப் பாடுபடுபவர்கள் தன்மானம் பார்க்கக் கூடாது. இனமானத்திற்காக தன்மானத்தைக்கூட விட்டுக்கொடுக்கலாம்; விட்டுக் கொடுக்க வேண்டும் என்றார்.
நன்றி:
நன்றி பாராட்டல் பற்றி தந்தை பெரியார் தனது கருத்தை மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்; பலமுறை கூறியுள்ளார்.
நன்றி என்பது பலன் பெற்றவர் பாராட்ட வேண்டியதே தவிர, உதவி செய்தவர் எதிர்பார்க்கக் கூடியது அல்ல. பலன் பெற்றவன் நன்றி பாராட்டாமல் நன்றி மறந்தாலும் அதை எண்ணி உதவி செய்தவன் வருந்தக் கூடாது. அவ்வாறு வருந்தினால் அவன் செய்த உதவி பயன் கருதிச் செய்யப்பட்டதாகும். தொண்டும் உதவியும் பயன் கருதிச் செய்யப்படுவதில்லை. கைம்மாறு கருதாது செய்யப்படுவதாகு-மென்றார்.
இக்கருத்து திருக்குறளிலும் ஆழமாக _- தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு (குறள்: 211)
என்றார் வள்ளுவர்.
உலகை உய்விக்கும் மழை மக்களிடம் நன்றி எதிர்பார்த்தா பொழிகிறது? இல்லையே! இந்த உலகம் கைம்மாறாய் மழைக்கு என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய இயலாதே என்கிறார். மழையின் மாண்பு தொண்டு செய்வோர்க்கு வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
மேலும்,
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது (குறள்: 103 )
என்றும் வள்ளுவர் கூறுகிறார்.
பயன் கருதாது செய்யப்படுவதே உதவி, தொண்டு என்பதை இதன்மூலம் வள்ளுவர் வரையறுத்துக் கூறிவிட்டார்.
தந்தை பெரியாரும் இக்கருத்தையே அப்படியே கூறியுள்ளதை ஒப்பிட்டு உறுதி செய்யலாம்.