மஞ்சை வசந்தன்
“அண்ணா’’ எனும் இந்த மூன்றெழுத்து வெறும் சொல்லல்ல; பெயரல்ல. அது இந்தத் தமிழினத்தின் மூச்சு; தந்தை பெரியாருக்கே அது உயிர்.
தந்தை பெரியாரை அண்ணா சந்தித்த காலந்தொட்டு, ஈரோட்டு இல்லத்தில் தங்கி அண்ணா பணி செய்த காலம், திராவிடர் கழகம் என்று பெயர் அறிவிப்பு செய்து, திராவிடர் கழகச் செயல் வீரராய் சுழன்று சுழன்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த காலம், கருத்து வேறுபாடு கொண்டு, தி.மு.கழகம் உருவாக்கி தனித்
துச் செயல்பட்ட காலம் என்று எத்தனையோ திருப்பங்கள், எதிர்நிலைகள், கருத்து மோதல்கள், கடும் விமர்சனங்கள் எல்லாம் நிகழ்ந்த நிலையிலும் அய்யா _ அண்ணா உறவு அப்பா_பிள்ளை உறவாகவே உணர்வுடன் ஒன்றியதாய் இருந்தது.
அதனால்தான், 1967இல் பெருவெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன், பெரியாரை அளவற்ற மரியாதையோடும், பாசத்தோடும் சென்று சந்தித்தார் அண்ணா. அய்யாவும் தனது தலைப்பிள்ளையைக் கண்ட மகிழ்வுடன், வாஞ்சையோடு அணைத்து மகிழ்ந்தார்; நெஞ்சம் நெகிழ்ந்தார்.
அரசியலில் நேரடியாக ஈடுபடக் கூடாது என்பது பெரியார் கொள்கை. அரசியலில் அதிகாரம் பெற்றால்தான், நம் கொள்கைத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்பது அண்ணாவின் கொள்கை. இரண்டும் முரண்-பட்டாலும், அந்த இரண்டும் ஒரே இலக்கு நோக்கிய உயர்ந்த முடிவுகள். அதனால்தான் தி.க., தி.மு.க. இரண்டும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்றார் அண்ணா.
சொன்னது மட்டுமல்ல; சொன்னபடியே நடந்தும் காட்டினார். ஆரிய பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு, சுயமரியாதை, சமூகநீதி, பெண்ணுரிமை, தமிழ், தமிழர், தமிழ்நாடு, மீட்சி, எழுச்சி, உயர்வு என்று எல்லாவற்றிலும் திராவிடர் கழகத்தின் கொள்கையை அப்படியே ஏற்று, அவற்றை நிறைவேற்றவும் செய்தார்.
அப்படி வந்தவைதான் ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமணச் சட்டம், தமிழ்மொழி வளர்ச்சிக்கான பல திட்டங்கள். அடுத்தடுத்து அண்ணாவால் குறுகிய காலத்திலே இவை செய்யப்பட்டன. அய்யா நெகிழ்ந்து போனார். இதுவல்லவா ஆட்சி! என்று பாராட்டினார்.
கொள்கை உறவா அய்யா _ அண்ணா பாச உறவா என்று இரண்டும் போட்டியிட்டு வளர்ந்த நிலையில் பேரிடியாய் அண்ணாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. செய்தி வந்ததும் பெரியார் துடிதுடித்துப் போனார்.
எதையும் சிக்கனமாகச் செலவு செய்து பழக்கப்பட்ட பெரியார், அண்ணா நலம் பெற பெருந்தொகையையும் தர முன்வந்தார். அண்ணா எப்படியாவது பிழைத்து வரவேண்டும் என்பதில் அவருக்கிருந்த வேட்கையை அது வெளிப்படுத்தியது.
எப்போதும் எதற்கும் சோர்வடையாத, தளராத அய்யா, அண்ணா உடல்நலம் பாதிக்கப்பட்டதும் நிலைகுலைந்தார். அய்யா பெரியாரின் தவிப்பை ஆசிரியரே கீழ்க்-கண்டவாறு பதிவு செய்துள்ளார்.
“அண்ணாவுக்கு உடல்நலம் பாதிக்கப்-பட்டு, சென்னை பொது மருத்துவமனையில் தங்கி, அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அமெரிக்காவில் நியூயார்க் டவுன்ஸ்டே மருத்துவமனையில் சேர்த்து, டாக்டர் மில்லர் அவர்களால் அவருக்குத் தனிச் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்-பட்டன. அதை அவர் அரசு செலவில் செய்து கொள்ளவிரும்பவில்லை. கட்சிதான் நிதி உதவியது! அரசு இயந்திரம் தனது சொந்த இலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற உயர்ந்த நெறியை, அவர் ஆபத்தான நிலையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோதும் கூட கடைப்பிடிக்கத் தவறவில்லை.
அப்படி அண்ணா அவர்களைப் பல முக்கிய தலைவர்களும், சென்னை பொது மருத்துவ-மனையில் பார்த்து, வாழ்த்தி வழியனுப்பினர். அய்யா அவர்களும் இதற்காகவே சென்னை வந்தார்கள். தவத்திரு.குன்றக்குடி அடிகளாரும் அன்று வந்திருந்தார்கள். ‘ஸ்பெஷல் வார்டு கியில்’ தங்கிச் சிகிச்சை பெற்று வந்த அண்ணாவைக் கண்டதும், கசிந்து கண்ணீர் விட்டு ஆறுதல் சொன்னார் அடிகளார்! அவ்விரு பெருமேதைகளுக்கும் சேர்த்துத் தைரியம் சொன்னார் அய்யா அவர்கள்! ‘இயற்கைக்கு விட்டு விடுவோம். அறுவை சிகிச்சை நல்லபடி முடிந்து, நல்ல உடல்நலத்தோடு திரும்ப வேண்டும் தாங்கள்’ என்று அய்யா தனது பேரன்பினை அண்ணாவிடம் தெரிவித்துக் கொண்டார்கள்!
அண்ணாவுக்கு அந்த மொழிகள் எத்தகைய பெரிய ஆறுதலை அந்த நேரத்தில் தந்தன என்பது அதிகம் பேசாமல், வாஞ்சையுடன் அவர் தலையாட்டி நன்றி தெரிவித்ததன் மூலம் எங்களுக்குத் தெரிந்தது; ‘தங்கள் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், இடையறாத சுற்றுப் பயணத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்’ என்று அண்ணா, அய்யாவைப் பார்த்துக் கூறினார்! அருகில் இருந்த எங்களுக்குக் அக்காட்சி வார்த்தைகளால் வடிக்க முடியாத உணர்ச்சிக் காவியமாய் இருந்தது!
விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என்று அண்ணா – அய்யாவை அப்போது கேட்டுக் கொண்டார்.
திடலுக்குத் திரும்பினார் அய்யா அவர்கள். உணவு முடித்துச் சிறிது படுக்கையில் ஓய்வு எடுக்கும் பழக்கம் பொதுவாக இல்லை அய்யாவுக்கு_என்றாலும் கூட, மனச் சோர்வுடன் காணப்பட்ட அய்யா அவர்கள் ஏதோ ஒன்றை இழந்தவர் போல மிகுந்த கவலையுடன் கட்டிலில் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டவராக அமர்ந்திருந்தார்கள்.
‘விடுதலை’ அலுவலகத்தில் (சில அடிகள் தூரத்தில்) எனது அறையில் பணிபுரிந்த என்னை அய்யா அழைக்கிறார் என்ற தகவல் வந்தவுடன் சென்றேன்.
“ஏம்பா, அண்ணா விமானம் புறப்படுவது இன்று எத்தனை மணிக்கு?” என்று என்னைக் கேட்டார். நான் (பகல்) இரண்டரை மணிக்கு என்றேன். தமது கடிகாரத்தைப் பார்த்து 2:15 மணி. நாம் விமான நிலையம் சென்று அண்ணாவைப் பார்த்து வரலாமே என்றார். அவரது பாசமிகுந்த தவிப்பினை அருகில் இருந்த என்னாலும், புலவர் இமயவரம்பனாலும் உணர முடிந்தது!
சற்றுத் தயங்கிக் கொண்டே நான் அய்யா அவர்களிடம், “சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் போய்ச் சென்றடைய எப்படியும் 35 முதல் 45 மணித்துளிகள் ஆகும். நாம் போய்ச் சேருவதற்குள் விமானம் புறப்பட்டுப் போய்விடக் கூடும்; அய்யா! நம்மால் அண்ணாவைப் பார்க்க இயலாமல் ஆகிவிட்டால், என்ன செய்வது?” என்று கூறினேன்.
எந்த ஒரு சிறு முடிவு எடுத்துவிட்டாலும், எளிதில் அதை மாற்றிக் கொள்ளாதவர் அய்யா என்பது எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும், என்றாலும் அவர்கள் அங்கே போய் ஏமாற்றத்திற்கு இரையாகக் கூடாதே என்-பதற்காகத் தான், இப்படிக் குறுகிய கால அவகாசம் பற்றி அய்யாவுக்கு நினைவூட்ட வேண்டிய நிலைக்கு நான் ஆளானேன்!
அய்யா அவர்கள் உடனே, “அதனால் என்ன? அண்ணாவைப் பார்க்க முடியாவிட்டால் என்ன? அவர் விமானம் புறப்பட்டுச் செல்லும் அல்லவா? அதைப் பார்த்து வருவோமே” என்றார்!
அதில்தான் எத்துணை பாசப் பிழியல்கள்! குழந்தைத்தன கொஞ்சல் உணர்வுகள்! அடடா! நெகிழ்ச்சியால் தாக்குண்டோம், உடனிருந்த நாங்கள். அவசரமாக அய்யா வேனை எடுக்கச் சொல்லி, அய்யாவையும், தள்ளுச் சக்கர நாற்காலி உள்பட ஏற்றி, புறப்பட்டோம். ஓட்டுநருக்கு மிகமிக வேகமாகப் போக நாங்களே ‘கட்டளை’யிட்டோம் _ வழமைக்கு மாறாக! சென்னை மவுண்ட் ரோட்டில் (அப்போது அண்ணா சாலையாக அது பெயர் மாற்றம் பெறவில்லை) சாலையின் இருமருங்கிலும் மக்கள் சோகம் படர்ந்த முகங்களுடன் ‘சாரை சாரையாக’ புறப்பட்டுச் செல்லும் கார்களைவிட அண்ணாவை அங்கே நின்று வழியனுப்ப மக்கள் காத்திருந்தனர்.
‘அய்யா பெரியார் அதோ போகிறார், விமான நிலையம் போகிறார் போலும்’ என்ற குரல்கள். போக்குவரத்து விதிகளைக் கூடத் தற்காலிகமாகப் புறந்தள்ளி அய்யா ‘வேன்’ விமானம் போல பறந்து சென்று மீனம்பாக்கத்தினை அடைந்தது. விமானம் எதுவும் மேலே பறக்கவில்லை என்பதை வேனிலிருந்தே உறுதி செய்து கொண்டே போகிறோம்.
அப்பாடி! அண்ணா புறப்படவில்லை. மணி 2:45 அப்போது. அமைச்சர்கள், தலைவர்கள், அதிகாரிகள் அணிவகுத்து, சோகப் புயலில் சிக்குண்டு, அமைதி ஆட்சி புரியும் நிலையில் அங்கே நின்றனர்! எங்கே குண்டூசி விழுந்தாலும் அதன் ஓசை கேட்கும் போல் இருந்தது. அவ்வளவு நிசப்தமான சூழ்நிலை! அய்யாவை இறக்கித் தள்ளு சக்கர நாற்காலியில் அமர்த்தினோம். அய்யா ஓர் ஓரத்தில் நின்றால் போதும், உள்ளே விமானம் அருகில் போக வேண்டாம் என்று எங்களுக்குக் கட்டளை பிறப்பித்தார்.
சில மணித்துளிகளில் ஒரு காரில் அண்ணா, (முன் இருக்கையில் கலைஞர்) வந்தார். இருமருங்கிலும் இருந்தோரை நோக்கிக் கையாட்டி வந்த அவர், அய்யாவை அங்கு எதிர்பார்க்கவில்லை. அய்யாவும், பலருடன் ஒருவராக சக்கர நாற்காலியில் அமர்ந்து இருப்பதைக் கண்டவுடன், வண்டியை நிறுத்தச் சொன்னார். ஏன், கதவைத் திறந்து இறங்கும் உணர்ச்சிக்கும் ஆளானார் அண்ணா _ கையெடுத்துக் கும்பிட்ட நிலையில்! அதைப் பார்த்த அய்யா, ஓங்கிய குரலில், “தயவு செய்து நிறுத்தாதீர்கள், செல்லுங்கள்’’ என்று கூறினார். அனைவருடைய கண்களும் கண்ணீர் அருவிகளைக் கொட்டின! அக்காட்சி அய்யாவின் கவலை படர்ந்திருந்த முகம்பற்றி அண்ணா நியூயார்க்கிலிருந்து அய்யாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அருமையாகப் படம் பிடித்து இருந்தார்!
அய்யா ஒருவாறான நிம்மதியுடன் விமான நிலையத்திலிருந்து திரும்பினார். கலகலப்பாக ‘வேனில்’ உள்ளவர்களிடம் பேசும் வழமையுள்ள அய்யா அவர்கள் அன்று அப்படிச் செய்யவில்லை.
அமைதி வடிவாய் ஆழ்ந்த யோசனைக் களத்தில் நிற்பவர் போலக் காட்சி அளித்தார்.’’
அய்யாவுக்கு அண்ணா எழுதிய கடிதம் ஓர் இலக்கியம் ஆகும்.
இதுவரை அண்ணா மீது அய்யா கொண்ட அளவற்ற அன்பை _ பாசத்தைக் கண்டோம். இனி அண்ணா பெரியார் மீது கொண்டிருந்த பற்றை அண்ணாவே கூறியவாறு காண்போம்.
வசந்த காலம்
எனக்கென்று ஒரு வசந்த காலம் இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு _ ஆண்டு பலவற்றுக்குப் பிறகு _ அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு இன்றைய கவலைமிக்க நாள்களிலே எழ முடியாத புன்னகையைத் தருவித்துக் கொள்ளுகிறேன். பெரியாருக்கு அந்த வசந்த காலமும் தெரியும்; இன்று நான் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும்.
‘வசந்த காலம்’ என்றேனே, அந்த நாள்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி, அவருடன் காடுமேடு பல சுற்றி வந்த நிலை. அந்தக் காடு மேடுகளில் நான் அவருடன் தொண்டாற்றிய போது, வண்ண வண்ணப் பூக்கள் குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன்.
அப்போது, கலவரம் எழாமல் ஒரு பொதுக் கூட்டத்தை ஒழுங்காக நடத்தி முடித்திட முடிந்தால் போதும், பெரிய வெற்றி என்றே பெருமிதம் தோன்றும். புறப்படு முன்னர், தலைபோகும் _ தாடிபோகும் _ தடி போகும் _ உயிர்போகும் என்ற மிரட்டல் கடிதங்களைப் படித்திட வேண்டிய நிலை.
பெரியாரால் திருந்திய தமிழரோ பலப்பலர்!
அண்ணாதுரை! இதைப் பார்த்தாயா! என்று ஒரு கடிதத்தை வீசுவார். ஆமாமய்யா! என்று ஒரு கடிதத்தைத் தருவேன். வருகிறாயா? என்று என்னைக் கேட்க மாட்டார் _ வருவேன் என்பது அவருக்கு நன்கு தெரியுமாதலால். செல்வோம்; பெரியாரின் பேருரை நிகழ்த்தப்படும். வந்தவர்களில், உருட்டல், மிரட்டல் கடிதம் எழுதியவர் இருந்திருப்பின் அடுத்த கூட்டத்திற்கு அவர் அய்யாவிற்காக மாலை வாங்கிக் கொண்டுதான் வருவார்! அத்தகைய தெளிவும் வாதத்திறமையும் பேச்சில் கிடைக்கும். அத்தகைய தெளிவுரை பெற்றுப் பெற்று, தமிழரில் பலர், பலப்பலர் திருந்தினர் என்பது மட்டுமல்ல, தமிழகத்திலேயே ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது.
ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை!
அந்த வரலாறு தொடங்கப்பட்டபோது நான் சிறுவன். அந்த வரலாற்றிலே புகழேடுகள் புதிது புதிதாக இணைக்கப்பட்ட நாள்களிலே ஒரு பகுதியில் நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். அந்த நாள்களைத்தான் என் வசந்தம் என்று குறிப்பிட்டிருக்கிறேன். பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர், பற்பலர். அவருடன் மற்ற பலரைவிட இடைவிடாது இருந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தவன் நான். அந்த நாள்கள் எனக்கு மிகவும் இனிமையான நாள்கள்; இன்றும் நினைவிலே கொண்டு வரும்போது இனிமை பெறுகின்றேன்.
எதையும் தாங்கும் இதயத்தை எனக்குத் தந்தார்!
எத்தனை எத்தனையோ கருத்துகளை உரையாடலின் மூலம் தந்திருக்கிறார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பதை நான் கற்றுணரும் வாய்ப்பும் தந்தார். பொதுத் தொண்டாற்றுவதில் ஓர் ஆர்வமும், அகமகிழ்வும், மனநிறைவும் பெற்றிடச் செய்தார்.
கோபத்துடன் அவர் பலரிடம் பேசிடக் கண்டிருக்கிறேன்; கடிந்துரைக்கக் கேட்டிருக்கிறேன்; “உன்னை எனக்குத் தெரியும் போ!’’ என்று உரத்த குரலில் கூறியதைக் கேட்டிருக்கிறேன்; ஒருநாள் கூட அவர் என்னிடம் அவ்விதம் நடந்து கொண்டதில்லை. எப்போதும் ஒரு கனிவு, எனக்கென்று தனியாக வைத்திருப்பார். என்னைத் தனது குடும்பத்தில் பிறவாப் பிள்ளை எனக் கொண்டிருந்தார்.
தமிழன் வரலாற்றில் முக்கியக் கட்டம்!
நான் கண்டதும் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான்.
இப்போது நான் உள்ள வயதில் அவர் இருந்தார். நான் அவருடன் இணைந்தபோது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.
அதற்குமுன் முப்பது ஆண்டுகள் அவர் பணியாற்றி வந்திருக்கிறார்.
இந்த ஆண்டுகள் தமிழரின் வரலாற்றிலே மிக முக்கியமான ஆண்டுகள். திடுக்கிட வைக்கிறாரே! திகைப்பாக இருக்கிறதே! எரிச்சலூட்டுகிறாரே! ஏதேதோ சொல்கிறாரே! என்று கூறியும், விட்டுவைக்கக் கூடாது! ஒழித்துக் கட்டியாக வேண்டும்! நானே தீர்த்துக் கட்டுகிறேன்! என்று மிரட்டியும் தமிழகத் துள்ளாரில் பலர் பேசினர்; ஏசினர்; பகைத்தனர்; எதிர்த்தனர்; ஏளனம் செய்தனர்; மறுப்பு உரைத்தனர். ஆனால், அவர் பேச்சைக் கேட்ட வண்ணம் இருந்தனர் _ மூலையில் நின்றாகிலும், மறைந்திருந்தாகிலும்! அந்தப் பேச்சு அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்தபடி இருந்தது. எதிர்த்தவர்கள், ஏளனம் புரிந்தவர்கள், ஏனோ தானோ என்று இருந்தவர்கள் தத்தமது நிலை தன்னாலே மாறிடக் கண்டனர்; கொதித்தவர்கள் அடங்கினர்; மிரட்டினோர் பணிந்தனர்; அலட்சியம் செய்தோர் அக்கறை காட்டினர்!
அவருடைய பேச்சோ, அது தங்கு தடையின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது. மலைகளைத் துளைத்துக் கொண்டு, கற்களை உருட்டிக் கொண்டு, காடுகளைக் கழனிவளம் பெறச் செய்துகொண்டு ஓசை நயத்துடன் _ ஒய்யார நடையுடன்! அங்கே பேசுகிறார், இங்கே பேசுகிறார், அதைக் குறித்துப் பேசுகிறார், இது குறித்துப் பேசுகிறார் என்று தமிழகம் இந்த அய்ம்பது ஆண்டுகளாகக் கூறி வருகிறது.
பெரியார் வாழ்வு முழுவதும் உரிமைப் போரே!
மனதிற்பட்டதை எடுத்துச் சொல்வேன் _ எது நேரிடினும் _ என்ற உரிமைப்போர் அவருடைய வாழ்வு முழுவதும், அதிலே அவர் கண்ட வெற்றி மிகப் பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர் அந்த வெற்றியின் விளைவுகளை. இந்தத் தமிழகத்தில் தூய்மையுடன் மனத்திற்குச் சரியெனப் பட்டதை எவரும் எடுத்துரைக்கலாம் என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அறிவுப் புரட்சியின் முதல்கட்ட வெற்றி இது! இதற்கு முழுக்க முழுக்கப் பொறுப்பாளர் பெரியார்! இந்த வெற்றி கிடைத்திட அவர் ஆற்றிய தொண்டின் அளவு, மிகப் பெரியது.
பெரியார் கண்ட தமிழகம்!
தமிழகத்தில் இன்று அவரால் ஏற்பட்டுள்ள இந்த நிலை இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாதது. பிற பகுதியினர் இதுபற்றிக் கேள்விப்படும்போது, வியர்த்துப் போகின்றனர். அப்படியா! _ முடிகிறதா! _ நடக்கிறதா! _ விட்டு வைத்திருக்கிறார்களா! _ என்று கேட்கிறார்கள் _ சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு.
அரித்துவாரம், கல்கத்தா, பாட்னா, கான்பூர், காசி, லாகூர், அலகாபாத், அமிர்தசரஸ் மேலும் இவை போன்ற நகர்களில் என்னையும் உடன் அழைத்துக் கொண்டு பெரியார் சுற்றுப்பயணம் செய்தபோது, ஒவ்வோர் ஊரிலும் இதுபோலத்-தான் கேட்டனர். யார்? அந்த ஊர்களிலே உள்ள பகுத்தறிவுவாதிகள்!
அந்த இடத்துப் பகுத்தறிவுவாதிகள் படிப்பார்கள் _ பெரிய பெரிய ஏடுகளை; எழுதுவார்கள் _ அழகழகான கட்டுரைகளை. கூடிப் பேசுவார்கள் _ சிறிய மண்டபங்களில் போலீசு பாதுகாப்புப் பெற்றுக்கொண்டு! இங்கு?
பழைமையின் பிடிவாதம் பொடிப்பொடியானது!
இங்கா இவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழைமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எதற்கு அவர் பணிந்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?
ஏ அப்பா! ஒரே ஒருவர், அவர் நம்மை அக்குவேறு ஆணிவேறாக எடுத்தெடுத்து வீசுகிறாரே என்று, இந்நாட்டை என்றென்றும் விடப்போவதில்லை என்று எக்காளமிட்டுக் கொண்டிருந்த பழைமை அலறலாயிற்று! புதுப்புதுப் பொருள் கொடுத்தும், பூச்சுமெருகு கொடுத்தும் இன்று பழைமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. என்றாலும், விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டிருக்கிறது என்பதை அறியாதவர் இல்லை!
எனவேதான் பெரியாருடைய பெரும் பணியை, நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல; ஒரு சகாப்தம் _ ஒரு காலகட்டம் _ ஒரு திருப்பம் என்று கூறுவது வாடிக்கை.
அக்கிரமம் தென்படும்போது, மிகப் பலருக்கு அது தன்னைத் தாக்காதபடி தடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், ஒதுங்கிக் கொள்வோம் என்ற பாதுகாப்பு உணர்ச்சியும் தான் தோன்றும்; எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் எளிதில் எழுவதில்லை.
நேர்மைக்காகப் போராடிய பெரியார்!
பெரியார் அக்கிரமம் எங்கு இருந்திடக் கண்டாலும், எந்த வடிவிலே காணப்படினும், எத்தனை பக்கபலத்துடன் வந்திடினும் பெரியார் அதனை எதிர்த்துப் போராடத் தயங்குவதில்லை.
அவர் கண்ட களம் பல; பெற்ற வெற்றிகள் பலப்பல! அவர் தொடுத்த போர் நடந்தபடி இருக்கிறது! அவர் வயது 89! ஆனால் போர்க் களத்திலேதான் நிற்கின்றார்!
அந்தப் போரிலே ஒரு கட்டத்தில் அவருடன் இருந்திடும் வாய்ப்பினைப் பெற்ற நாள்களைத்-தான் வசந்தம் என்று குறிப்பிட்டேன்.
மேலும் பல ஆண்டுகள் அவர் நம்முடன், நமக்காக, வாழ்ந்திருக்க வேண்டும். தமிழர் வாழ்வு நல் வாழ்வாக அமைவதற்கு, பன்னெடுங் காலமாக இருந்து வரும் கேடுகள் களையப்படுவதற்கு, அவருடைய தொண்டு தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் என்பதில் அய்யமில்லை. வாழ்க பெரியார்!
(பேரறிஞர் அண்ணா அவர்கள் “தந்தை பெரியார் 89ஆம் ஆண்டு ‘விடுதலை’ மலருக்கு’’
எழுதிய கட்டுரை)
அண்ணா பற்றி ஆசிரியர்
சுயமரியாதை இயக்கத்திற்கு அண்ணா வருவதற்கு முன்பே, தோழர்கள் பட்டுக்-கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதன், சா.குருசாமி போன்ற பலர் இருந்தனர்.
என்றாலும், அண்ணாவின் நாவன்மை, சிறந்த கொள்கைப் பிடிப்பு, எழுத்து வளமும், எளிமையும் – நுண்ணிய நூலாய்வுகளும் _- சொற்போர்களில் என்றும் வாகை சூடும் வளம் கொண்ட ஆற்றல் மூலமும் தனது முத்திரையை சில ஆண்டுகளிலேயே பதித்துவிட்டார்!
1938இல் அண்ணா அவர்கள் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகி, விடுதலை பெற்று, போராட்டக் களத்தை வெற்றிப் பாதையில் நடை போட வைத்து, வெற்றிக் கனி பறிப்பது என்பதில், தந்தை பெரியாரிடம் பெற்ற பயிற்சியும், கொள்கைச் செறிவும், எவரும் அவரை விரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு இயக்கத்தவரிடம் வித்திட்டு விட்டன!
இளைஞர்களும், மாணவர்களும் மலரை மொய்த்த வண்டுகளாகவே அண்ணாவின் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டார்கள்!
அண்ணாவின் படிக்கும் ஆர்வம், எழுத்து வன்மை, பேச்சாற்றலை அடையாளம் கண்டு பயன்படுத்திய தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அண்ணா காஞ்சிபுரம் சென்று தனியே ‘திராவிட நாடு’ என்னும் பெயரில் ஒரு வார ஏடு நடத்திட தந்தை பெரியாரின் இசைவைப் பெற்று, அவர்தம் வாழ்த்துகளோடு ஈரோட்டிலிருந்து பிறந்த மண்ணான காஞ்சிக்கே புலம் பெயர்ந்தார்!
‘திராவிட நாடு’ பத்திரிகைக்கு தந்தை பெரியாரின் தொடக்க கால ஆதரவு, வாழ்த்து, நிதி உதவி, அச்சகத்திற்குத் தேவைப்படும் சாமான்கள் கொடை இவற்றைப் பெற்ற அண்ணா, (வாரப்) பத்திரிகை ஆசிரியராக உயர்ந்தார்!
அண்ணாவை 28 வயது இளைஞராக இருக்கும்போதே துறையூரில் நடந்த முசிறி தாலுகா சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை தாங்க வைத்து முன்மொழிந்தார் தந்தை பெரியார்!
அன்று தொடங்கிய அண்ணாவின் லட்சியப் பயணம் – இடையில் பல கருத்து உரசல்களும், பூகம்பங்கள் போன்றவைகளும் திராவிடர் இயக்கத்தில் வந்தபோதிலும், இலக்கில் குறியாக இருந்து இறுதியில் புதியதோர் அரசியல் வரலாற்றுப் பொன்-னேட்டை இணைத்தார் _- 1967இல் ஆட்சிப் பீடமேறி!
அறிஞர் அண்ணா 1937இல் சுயமரியாதை இயக்க மாநாட்டுக்குத் தலைமை தாங்கி, அவ்வுரையில் பெரியார் தடம் பதித்தார்; ஈரோட்டுத் தேரின் வடம் பிடித்திழுத்தார்!
அதன் இலட்சியங்கள்,
தத்துவங்களாகப் பூத்தன!
போராட்டங்களாகவும், செயல்களாகவும் காய்த்தன!
1967இல் அண்ணா ஆட்சிக்கு வந்தார்; தன் தலைவருக்கே அரசைக் காணிக்கை ஆக்கினார் என்பது வரலாறு காணாத விந்தையல்லவா!
நீர் அடித்து நீர் விலகாது
கிராமப்புறத்தில் ஓர் அனுபவ பழமொழி சொல்வார்கள். ‘நீர் அடித்து நீர் விலகுமா?’, ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும்’ என்பர்.
நீரைப் பிரிக்க எண்ணி படகு செலுத்தினால் படகு கடக்கும் வரை நீர் விலகும். பின் உடனே ஒன்று சேர்ந்துவிடும். இதற்குக் காரணம் என்ன? புறக்காரணங்களால் சில நேரங்களில் விலக நேர்ந்தாலும் அக்காரணம் அகன்றதும் ஒன்று சேரும். அந்த விலகல்கூட மேல்மட்டத்தில் தானே தவிர அடிமட்டத்தில் இருக்காது. அப்படித்தான் திராவிடர் கழகம், தி.மு.கழக உறவு அரசியல் காரணங்களால் சில நேரங்களில் விலகி நின்றாலும், அக்காரணம் அகன்றதும் சேர்ந்து கொள்ளும். காரணம் உள்ளூர உணர்வுபூர்வமாய் இணைந்தே இருப்பதுதான். அதனால்தான் எதிரிகள் எவ்வளவு முயன்றாலும் தோற்றுப்-போகிறார்கள். திராவிட அமைப்புகளுக்கும், மக்களுக்கும் உள்ள உறவுகூட அப்படித்தான். அது அடி ஆழத்தில் உணர்வால் ஒன்றியது. அதனால்தான் வீழ்த்த நினைப்போர் வீழ்ந்து போகின்றனர். இந்த உணர்வை ஊட்டியவர்கள் யாவர்? பெரியார், அண்ணா, கலைஞர். அதற்கு அவர்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.
மூவரின் மொத்த வடிவம் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இன்றைக்கு தந்தை பெரியார் இல்லை; பேரறிஞர் அண்ணா இல்லை; முத்தமிழறிஞர் கலைஞர் இல்லை. ஆனால், மூவரின் மொத்த வடிவமாய் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளார்கள். மூவரின் கொள்கை உறுதி, போர்க்குணம், அஞ்சாமை, அயரா உழைப்பு, மக்களின் நலனை எண்ணுதல், அதற்காக செயலாற்றல்; சமூகநீதி காத்தல், தமிழ், தமிழர், தமிழ்நாடு வளர்ச்சிக்குப் பாடுபடல் என்று எல்லாவற்றிலும் மேலோங்கி நிற்கிறார். அதனால், முதல்வர்களின் முதல்வராய் போற்றப்படுகிறார்.
முப்பெரும் தலைவர்களின் இலக்குகளை நிறைவேற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அவருக்கு இருப்பதாலும், அதன்வழி தமிழரின் மேம்பாடு அமைவதாலும், அவருக்குத் துணையாய், ஆதரவாய் அனைவரும் நிற்க வேண்டும். அதுவே, இந்த மூவருக்கும் நாம் செய்யும் மரியாதை.
ஒரே ஒளிக்கீற்று
11 வயதில் பொதுவாழ்வில் ஈடுபட்டு, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் என்ற முப்பெரும் தலைவர்களுடனும் தொடக்க காலம் முதல் தொண்டாற்றி, கொள்கை பரப்பி, போராடி, வாகை சூடி வருபவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள். இன்றைக்கு எஞ்சி நிற்கும் ஒரே ஒளிக்கீற்று அவர் மட்டுமே! அதன் அருமை அறிந்ததால்தான், எனது திசைகாட்டி பெரியார் திடல் என்றார் முதல்வர் அவர்கள்!
முதல்வருக்கும், தி.மு.கழகத்திற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் அவரே வழிகாட்டும் ஒளிவிளக்கு! எனவே, தமிழினம் ஆசிரியரின் வழிகாட்டலில், தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பின்னே அணிவகுத்து, “சமத்துவ சமுதாயத்தை உருவாக்க, ஆதிக்க பாசிச சக்திகளை வீழ்த்துவோம்!’’ என்று உறுதியேற்பதே அண்ணா நினைவு நாளில் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையும், நன்றிக் கடனும் ஆகும்.