சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் பெண்ணடிமைக் கருத்துகள்!
திலகர், சங்கராச்சாரியார் உள்பட இதே கருத்துதான்.
நமது மகளிரணியினர் பிரச்சாரம் நடத்திடுக!
மாணவிகள், மகளிர் புயலெனக் கண்டனக் குரல் எழுப்புவீர்!
சி.பி.எஸ்.இ. என்ற ஒன்றிய அரசின் கல்வி அமைப்பு முழுவதும், காவிச் சிந்தனையாளர்களைக் கொண்டும், ஒன்றிய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசின் கொள்கைகளை கல்வியில் _ நஞ்சைத் தேனில் குழைத்துத் தருவதுபோலத் தடவித் தரும் வகையில் பாடத் திட்டங்களை அமைப்பதும், பல கல்வித் திட்டங்களை மாணவர்கள்மீது திணிப்பது, சமஸ்கிருதம், சனாதனத்திற்கே முழு இடம் தருவது, உண்மையான அரசமைப்புச் சட்டப் பிரிவு 51-ஏ(எச்) கூறும் அடிப்படைக் கடமையான – கேள்வி கேட்கும் அறிவியல் மனப்பாங்கை மாணவர்களிடையே துளிர்க்க விடாமல் கிள்ளி எறிதல் போன்றவற்றைச் செய்வதுமான வேலைகள் ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன.
சி.பி.எஸ்.இ. பாடத்தில் பெண்கள் குறித்த மோசமான பதிவு
அண்மையில் பாடத் திட்டத்தில், குடும்பங்களில் குழப்பங்கள் நிகழ்வதற்கு மூல காரணம் பெண்களுக்குச் சுதந்திரம் அளித்ததன் விளைவுதான்.
படித்த பெண்கள் கணவனுக்கு அடங்கி நடக்காதவர்களாக இருப்பதால், பிள்ளைகள் கெட்டுப் போகிறார்கள் என்பது போன்ற மனுதர்மக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பாடத் திட்டம் -_ தேர்வுத் தாள் _- கேள்விகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அறியும்போது, நாடெங்கும் அது முற்போக்காளர்களிடம் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது!
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் (எதிர்க்கட்சி) அதிகாரபூர்வமற்ற தலைவர் திருமதி. சோனியா காந்தி, தி.மு.க. உள்பட பலரும் கண்டித்ததால், பின்வாங்கப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள ஆண் _- பெண் பாலின சமத்துவம், முற்போக்குக் கருத்துகளுக்கு எதிரானவற்றை பாடத் திட்டங்களில் இடம்பெற அனுமதிக்கலாமா? இதுபற்றி முழு விசாரணை நடத்திடுவது அவசியம்.
மனுவாத சாம்ராஜ்ஜியத்தின் போக்கு
மனுவாதிகள் சாம்ராஜ்ஜியம் தங்கு தடையில்லாமல் நடைபெறுவதால், கேள்விகளைக் குறித்த இந்தத் தைரியம் காவிக் கல்வி அறிஞர்களுக்கு வந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆணுக்குப் பெண் நிகர் அல்ல என்று திட்டமிட்டே சொல்லும் பகுதியாக அது உள்ளது.
மோசமான பிற்போக்குத்தனம்
தலைவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடப்பதன் மூலமாகவே, குழந்தைகளையும், வீட்டில் வேலை செய்பவர்களையும் கீழ்ப்படிய வைக்க முடியும். மனைவியின் விடுதலை (பெண் விடுதலை) குழந்தைகளின்மீதான பெற்றோரின் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கிறது. குடும்பத்திற்குள் உயர்ந்த பீடத்தில் இருந்த ஆணை கீழே இறக்குவதன்மூலம் மனைவி-யாகவும், தாயாகவும் இருப்பவர், குழந்தைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இழக்கிறார் என்று பாடத் திட்டத்தில் இடம்பெறுவது என்பது, எவ்வளவு மோசமான பிற்போக்குத்-தனம் பார்த்தீர்களா? ஹிந்துத்துவ கருத்து இது!
திலகர், சங்கராச்சாரியார்களின் பெண்ணடிமைக் கருத்துகள்
மகாராட்டிரத்து தேசபக்த திலகர் கூறிய கருத்து இதைவிட மோசம்.
“பெண்களைப் படிக்க வைக்கவே கூடாது; படித்தால், அவள் அடங்கமாட்டாள்; வேறு ஒருவருடன் ஓடிப் போய் விடுவாள்!’’
இவர்தான் பெரிய சுயராஜ்ய முழக்கம் செய்த சொக்கத்தங்கம் _- தேசியத் தலைவர்கள் பார்வையில்!
இதைவிட பத்தாம்பசலி பிற்போக்குக் காட்டுமிராண்டிக் கருத்து வேறு உண்டா?
காஞ்சி சங்கராச்சாரியார், மஹா பெரியவா சந்திரசேகரேந்திரர் கூறிய கருத்து:
“பெண்களுக்குச் சொத்துரிமை வராமல் தடுக்க வேண்டும்; சொத்துக் கொடுத்தா, அவா வேறு ஒருத்தனோடு ஓடிப் போய்விடுவா!’’
(ஆதாரம்: இந்து மதம் எங்கே போகிறது? – அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்)
இதே கொள்கையைத்தான், ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை கர்த்தாவான கோல்வால்கர் – ஞானகங்கையிலும் (இதுதான் அவாளின் ஞானமும், கங்கைப் பிரவாகமும் போலும்!) எழுதியுள்ளார்.
இதுதான் இப்போது சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
புயலென மகளிர் பொங்கி எழுக!
இதுபற்றி நமது மகளிரணியினர் நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை நடத்திட வேண்டும்; குறிப்பாக, இளம் மாணவிகள், மகளிர் கல்லூரி மாணவிகள், பெண்கள் ஆகியோர் இதுபற்றிய கண்டனத்தைத் தெரிவிக்க உடனே புயலாகக் கிளம்பிட வேண்டும்.
பொறுத்தது போதும் மகளிர் தோழர்களே!
பொல்லாங்கைப் பொசுக்கிட பிரச்சாரக் களம் காணுவீர்!
– கி.வீரமணி,
ஆசிரியர்