கவிதை :பெரியார் ஏன் சிலையாய் நின்றார்

நவம்பர் 1-15,2021

வா.செ.குழந்தைசாமி

தென்னகத்தின் ஒருதலைவர்; ஒருநூ றாண்டு

               திராவிடத்தின் வளர்ச்சிக்கே தன்னைத் தந்த

தன்னிகரி லாத்தமிழர்; இந்த மண்ணின்

               சரிதையிலோர் புதுமனிதர்; இருண்ட வானில்

மின்னலெனத் துவங்கியவர்; வளர்ந்து யாங்கும்

               விரிகின்ற சுடரான வேந்தர்; சூழும்

தன்னலத்தின் கோட்டையெலாம் ஒருங்கு வீழச்

               சாய்த்திட்ட பெரியாரேன் சிலையாய் நின்றார்?

 

கல்லாத பெருமக்கள் பழக்கம் என்ற

               காரணத்தால் சாதிவழி நிற்பர்; கல்வி

வல்லாரும், அரசினரும், மேடையேறி

               வகுப்பற்ற சமுதாய மாண்பு பேசும்

சொல்லாரும், திரைமறைவில் சாதி கூட்டித்

               தொடர்பேற்றுச் செயலாற்றும் கொடுமை சூழ்ந்த

பொல்லாத நிலைகண்டு சீர்தி ருத்தப்

               போர்ப்பெரியார் நெஞ்சொடிந்து சிலையா னாரோ!

 

முற்பட்ட குலங்கண்டார்; தாழ்த்தப் பட்ட

               முதுகுடியின் இனங்கண்டார்; சமுதாயத்தின்

பிற்பட்ட குலங்கண்டார்; உயர்வு தாழ்வுப்

               பேதங்கள் நீக்குவதற் காள வந்தார்

கற்பித்த பிரிவிவற்றின் அடியில், சாதி

               காலூன்றி வேரூன்றிப் புதுமை பெற்று

நிற்கின்ற நிலைகண்டார்; தமிழன் என்ற

               நிறைகாணார், நெஞ்சொடிந்து சிலையா னாரோ!

 

சீர்திருத்தக் கொள்கையினர், நுணுகி ஆய்ந்து

               தெளிகின்ற பகுத்தறிவின் திறங்கள் கூறிப்

பார்திருத்தும் பண்பாளர், ஈரோட் டில்தன்

               பாசறையில் வளர்ந்தவர்கள், தாழ்வு நீங்கப்

போர்தொடுத்த பெருவீரர் பலரிந் நாட்டின்

               பொறுப்பான பதவிகளில் அமர்ந்து, யாவும்

நேர்நிறுத்த முயல்கின்ற நிலைமை கண்டு

               நிறைமனதோ டோய்வுபெறச் சிலையா னாரோ!

 

– 1968, (குலோத்துங்கன் கவிதைத் தொகுப்பிலிருந்து…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *