பாரதியின் பிற மத வெறுப்பு
நேயன்
“இதனிடையே என்னுடைய மூன்று மனைவிகளால் நான் படும்பாடு சொல்லுந்தரமன்று. அதோ பார்த்தீர்களா? ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் முகம்மதிய ஸ்திரீகள் உட்கார்ந்திருக்கும் கூட்டம் தெரிகிறதன்றோ? நடுவேயிருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக்கொருத்தியாக முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மன ஒற்றுமை இல்லை என்பது பிரத்யக்ஷமாக விளங்கவில்லையா? இவர்களில் மூத்தவள் பெயர் ரோஷன். அவருக்கு வயது இருபத்திரண்டு. அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அவருக்கு வயது பத்தொன்பது. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி. வயது பதினாறு. ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறார். குலாப்பிடம் வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்கு சம்மதமில்லை’’ என்ற கற்பனைச் சித்திரத்தை 25.5.1920இல் எழுதினார்.
இதை ஓர் உண்மைச் சம்பவம் போலவே பாரதி எழுதியிருக்கவே, ஓர் இசுலாமியர் அதைப் படித்துவிட்டு, பாரதியிடம் வந்து, ‘ரெயில்வே ஸ்தானம்’ என்றொரு கதை எழுதியிருந்தீர்களே, அது மெய்யாக நடந்த விஷயமா? வெறும் கற்பனைக் கதைதானா?’’ என்றார். “வெறும் கற்பனை’’ என்று நான் சொன்னேன். “என்ன கருத்துடன் எழுதினீர்’’ என்று கேட்டார் வந்தவர்.
இந்த ‘ரெயில்வே ஸ்தானம்’ என்ற கதையிலும் ஒரு தர்மக் கொள்கை இருக்கத்தான் செய்கிறது. ஒருவன் பல மாதரை மணம் புரிந்து கொண்டால் அதனின்றும் அவனுக்குக் கஷ்டம்தான் விளையும் என்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பம் காண வேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்து கொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல் செலுத்துவதே உபாயமாகுமென்பதும் மேற்படிக் கதையினால் குறிப்பிடப்படும் உண்மைகளாகும் என்றேன். அப்போது அந்த முஸ்லிம் நண்பர் (‘அந்தக் கதையில் ஒரு பிழை இருக்கிறது’ என்றார். ‘என்ன பிழை?’ என்று கேட்டேன். அக்கதையில் ஒரு முகமதியப் பிரபு மூன்று சகோதரிகளை மணம் செய்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படி சகோதரமான மூன்று பெண் (பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடன் இருக்கும்போதே அவருடன் பிறந்த மற்ற ஸ்திரீயை ஒரு முஸ்லிம் மணம் புரிந்து கொள்ளக் கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின் கொள்கை என்று அந்த முகமதிய நண்பர் சொன்னார்.
இதைக் கேட்டவுடன் நான்: ‘சரிதான். எனக்கு அந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்களுக்குள்ளே உண்டாதலால் அதுபோல் முஹம்மதியர் களுக்குள்ளேயும் இருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதிவிட்டேன்.
எனவே, அந்தக் கதாநாயகனாகிய முகம்மதியப் பிரவுக்கு அவனுடைய சிற்றப்பன் தன் மூன்று குமாரத்திகளையும் மணம் புரிவித்தாரென்பதை மாற்றித் தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தாரென்று திருத்தி வாசிக்கும்படி ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் எழுதி விடுகிறேன் என்றேன்’ என்று பாரதி எழுதியுள்ளார். தன்னிடம் வந்தவரிடம் பாரதி, ‘உங்களுக்குள்ளே ஸ்திரீகளை அந்தப்புரத்தில் மறைத்து வைப்பதாகிய கோஷா வழக்கம் எக்காலத்தில் ஏற்பட்டது?’ என்று கேட்டார்.
அந்த முகமதிய நண்பர்: ‘முகம்மது நபி (ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்திற்கு நெடுங்காலம் முன்னே இந்த வழக்கம் அரேபியாவில் இருந்து இடையே மாறிப் போய்விட்டது. பிறகு முகமது நபி அதை மீளவும் விதியாக்கினார்’ என்றார்.
‘அதிலே திருத்தங்கள் செய்யக் கூடாதா?’ என்று பாரதி கேட்க, அந்த முஸ்லிம் நண்பர், ‘கூடாது. ஏனென்றால் முகமதுதான் கடைசி நபி. அவருடைய உத்தரவுகள் கடைசியான உத்தரவுகள். அவற்றை மாற்றுவதற்கு இடமில்லை’ என்றார்.
பாரதியார்: தென்ஜில்லாக்களிலே தமிழ் பேசும் முஸ்லிம் (ராவுத்தர்)களுக்குள்ளே கோஷா வழக்கம் காணப்படவில்லையே! என்று கேட்டார். இப்படிப் பேச்சு வார்த்தை நீண்டு கொண்டே சென்றது. பாரதி கடைசியாகத் துருக்கி தேசத்தில் ஸ்திரீகளுக்குள்ளே பிரமாண்டமான விடுதலைக் கிளர்ச்சி நடந்து வருவதைப் பற்றியும், ‘கோஷா’ வழக்கத்தை ஒழித்து விட்டு, கல்வி கேள்விகளில் தேர்ச்சியடைவதையும் கூறினார். வந்த முஸ்லிம் எனக்குத் தெரியாது என்று கூறிச் சென்று விட்டார்.
பாரதியார் அல்லாவைப் பற்றிப் பாடல் பாடியுள்ளாரே, அவரை எப்படி நீங்கள் குறை சொல்ல முடியும் எனச் சிலர் கேட்கலாம். 20.6.1920இல் பாரதி கடயத்தில் இருந்தபோது சில இசுலாமியர்கள் பாரதியை அழைத்து பொட்டல் புதூரில் இசுலாம் மார்க்கம் குறித்து ஒரு சொற்பொழிவு நிகழ்த்தக் கூறினார்கள். அப்போதுதான் பாரதியார் அல்லா, அல்லா என்ற பாடலைப் பாடினார். நபிகள் நாயகத்தின் வரலாற்றை மிக விரிவாகவும் சிறப்பாகவும் பேசி முடிக்கும் தறுவாயில், நபிகள் ஏன் ஏசு நாதனை ஒரு மகானாக, கடவுளின் அவதாரமாக ஏற்றுக் கொள்ளவில்லை? என்ற கேள்வியைக் கேட்டு விட்டுத்தான் வந்தார்.
இசுலாமியர்கள் தேசப்பற்று அற்றவர்கள் என்பது பாரதியின் கருத்து. இதை ‘இந்தியா’ ஏட்டில் ஒரு கருத்துப்படம் வெளியிட்டு பாரதி விளக்கியுள்ளார். மே 1, 1909இல் இப்படம் வெளியிடப்பட்டது. (திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார், பக்கம் 80-83)
அதேபோல் கிறித்துவ மதத்தையும், பாதிரியார்களையும் கடுமையாக எதிர்த்தார் பாரதியார்.
கிறித்துவ மதத்தையும் பாரதி கடுமையாக விமர்சனம் செய்கிறார். இந்து மதத்தைப் புகழும் பாதிரிகளை மிக நல்லவர்கள் என்கிறார். இந்து மதத்தைக் குறை கூறும் பாதிரிகளை மூடப் பாதிரிகள் என்கிறார்.
“சென்னை கிறித்து கலாசாலையில் டாக்டர் மில்லர் என்று ஒரு பாதிரி இருந்தார். அவர் நல்ல புத்திசாலி என்று பெயரெடுத்தவர். அவர் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுளின் அந்தர்யாமித் தன்மையை மற்ற எல்லா மதங்களைக் காட்டிலும் ஹிந்து மதத்திலேதான் தெளிவாகக் காட்டி யிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். சாதாரணப் பாதிரி கொஞ்சம் புத்திசாலியாகையால் இதைத் தெரிந்து கொண்டார்.
அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரச்சாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்து போய் மஹத்தான அநாகரிக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மதத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லு கிறார்கள். ஹிந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்திரீகளை (முக்கியமாக அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல் நடத்துகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களை எல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.’’
இன்னும் ஒரு படி மேலே போய் பாரதியார், “கிறிஸ்துவ விவிலிய நூலில் வரும் தேவகுமாரன் என்பது வேறு யாருமல்ல; நம்முடைய சுப்ரமணியன்தான்” என்கிறார். (திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்,
பக்கம் 83-84)
(தொடரும்…)