திரைப்பார்வை – பாலை

டிசம்பர் 16-31 திரைப்பார்வை

தமிழ்த் திரைப்படம் ஒன்று முதல் முதலாக தமிழ்நாட்டின் தொன்மை நாகரிகத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.சங்க காலத் தமிழர் வாழ்க்கையை இலக்கியங்களில் மட்டுமே படித்துள்ள நமக்கு அதனை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் அறிமுக இயக்குநர் ம.செந்தமிழன். பாலை என்ற இந்தப் படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது எனலாம்.

தமிழ் மண்ணின் மைந்தர்களுக்கும் வந்தேறிகளுக்கும் இடையில் நடந்த போரே படத்தின் மய்யக் கரு. வளமான நிலப் பகுதியில் வாழ்ந்துவரும் முல்லைக்குடி மக்களை வந்தேறிகளான ஆய்க்குடியினர் விரட்டி அடித்து நிலத்தைக் கவர்ந்து விடுகின்றனர். தமது சொந்த மண்ணை இழந்த மக்கள் வறண்ட பாலை நிலத்திற்கு வேறு வழியின்றி குடிபெயர்கின்றனர். அங்கு நிலவும் வறட்சியால் கடும் துன்பம் அடையும் அவர்கள் மீண்டும் தம் மண்ணை மீட்கப் போராடுவதே படத்தின் கதை.

தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை மிக நுணுக்கமாகப் படமெங்கும் காட்சியாக்கியிருக் கிறார்கள். தொடக்கத்தில் தமிழர்களிடம் கடவுள் என்ற ஒன்று கிடையாது. அது பின்னாட்களில் நம்மீது திணிக்கப்பட்டது. அதனைச் சரியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதாவது கடவுள் குறித்தோ, கடவுள் நம்பிக்கை குறித்தோ  எந்தக் காட்சியும் படத்தில் இல்லை. இதற்காக முதலில் இயக்குநர் செந்தமிழனைப் பாராட்டவேண்டும். ஏனென்றால் தமிழர் வாழ்வில் இல்லாத கடவுளால்தான் இன்று மதங்களும். ஜாதிகளும் தமிழனைப் பிரித்து வைத்து நமக்குள்ளே மோதிக்கொள்ளும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. நம் சமூகத்தில் கடவுள் இல்லை என்பதைச் சொல்லவேண்டியது தமிழர் சமூக வரலாறு குறித்து எழுதுபவர்கள், பேசுபவர்கள், படம் எடுப்பவர்களின் கடமை. அதனைச் சொன்னதற்காகத்தான் இந்தப் பாராட்டு.

மாறாக அந்நாளைய தமிழரின் அனுபவ அறிவை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு வானத்தைப் பார்த்து மழைக்குறி சொல்லும் காட்சியைச் சொல்லலாம். இக்காட்சியைப் பார்த்தபோது நம் ஊர்களில் வயதில் மூத்த அனுபவம் பெற்ற பெரியவர்கள் மழை வருவதைக் கணித்துச் சொன்னது நம் நினைவுக்கு வருகிறது.

தோல்வியில் இருந்து பாடம் கற்றல், அனுபவ சாலிகளின் அறிவுரை கேட்டல், மணவாழ்க்கைக்கு முந்தைய உடன்போக்கு, அனைவரும் கூடி அமர்ந்து கள் உண்ணுதல் உள்ளிட்ட அன்றைய சமூகக் கூறுகளும், ஒற்றைக் காலடித் தடத்திலேயே ஊரார் அனைவரும் ஒருவர் பின் ஒருவராகக் கால்வைத்து நடந்து தப்பிச் செல்லுதல், மீன் பிடிக்க வலை அமைத்தல், வண்டிகள் தொலைவில் வருவதை அறிதல் போன்ற உத்திகளும் காட்சிகளாக விரிந்தது அருமை.

படத்தின் உரையாடல் நிகழ்கால ஈழச்சிக்கல் குறித்த நினைவை நமக்குள் கொண்டுவருகிறது.

நடிகர்கள் அனைவரும் மிக நேர்த்தியாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவு சில இடங்களில் வெளிச்சக் குறைவாக இருந்தாலும் பல காட்சிகள் இயல்பு மாறாமல் அந்நாளையத் தமிழகத்தைப் பார்த்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இன்னும் கூடுதலான நடிகர்களை நடிக்கவைத்து ஊரார்களாகக் காட்டியிருந்தால் படம் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும். ஊரில் மிகக் குறைவானவர்களே இருப்பது நிஜ நாடகம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. .சண்டைக் காட்சிகளில் யார் யாரைத் தாக்குகிறார்கள் என்ற குழப்பம் சில இடங்களில் ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்திருக்கலாம். உரையாடலில் ஒரு இடத்தில் வந்தேறிகளின் மொழி புரியவில்லை என்று சொல்லப்பட்டாலும் வந்தேறிகளும் தமிழிலேயே பேசுவது பார்வையாளர்களைக் குழப்புகிறது. மேலும் அவர்களும் தமிழர்களின் நிறத்திலேயே இருப்பதுடன், முக அமைப்பிலும் தமிழர்களைப் போலவே இருக்கிறார்கள். இதனால் வந்தேறிகள் என்று இயக்குநர் யாரைச் சொல்கிறார் என்ற கேள்வி எழுகிறது. இதுபோன்ற சில குறைபாடுகள் இருந்தாலும் பாலை அவசியம் தமிழர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய படம்.

  • அன்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *