நூல்: ‘இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்’
ஆசிரியர்: அப்சல்
வெளியீடு: இருவாட்சி
(இலக்கியத் துறைமுகம்),
41, கல்யாணசுந்தரம் தெரு,பெரம்பூர், சென்னை-11
அலைபேசி: 94446 40986
“இந்திய சினிமாக்கள், இந்திய முஸ்லிம்களை வன்முறையாளர்களாகவும், சகிப்புத் தன்மை அற்றவர்களாகவும் இந்திய தேசத்தின் மீது பற்றில்லாது பாகிஸ்தான் மீது பற்றுக் கொண்டவர்களாகவும் காட்டுகின்றன’’ என்று பேசும், நூலாசிரியர் அப்சல் அவர்களின், “இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்’’ எனும் இந்நூல் ‘முஸ்லிம்கள்’ பற்றிய, சினிமா உலகில் அவர்களுக்குள்ள இடம் – அவர்களது பங்களிப்பு பற்றிய விரிவான ஒரு பார்வையை வழங்குகிறது.
“கடவுளை மற – மனிதனை நினை’’ என்ற தந்தை பெரியாரின் பிரச்சாரத்தை, சிறப்பாக வெகு ஜனங்கள் மத்தியில் கொண்டு சென்ற ‘பீ.கே’ எனும் இந்திப் படத்தைப் பற்றியும், அதன் வெற்றியைப் பற்றியும் பேசும் நூலாசிரியர், அந்தப் படத்தைத் தயாரித்து நடித்த முஸ்லிம் அமீர்கான் பற்றி சிலாகிக்கிறார்.
மதங்களை வைத்து, மக்களைப் பிளவுபடுத்தி, “கடவுள் வியாபாரம்’’ செய்யும் சமூகத்தில் அமீர்கானின் ‘பீ.கே’ ஒரு பெரும் நம்பிக்கையை விதைக்கிறதென்றும் பாராட்டுகிறார்.
அதேபோல, ‘ஓ மை காட்’ எனப்படும் இந்திப் படத்தில் நாத்திகர் ஒருவர், புயல் மழை வெள்ளத்தில் சிக்கிச் சிதைந்துபோகும் கடவுள் சிலைகளை வைத்து எவ்வளவு நையாண்டி செய்திருக்கிறார் என்பதையும் அழகாக விவரிக்கிறார்.
அதேசமயம் இஸ்லாமியர்களை, ஆரம்ப கால சினிமாக்களில் வில்லன்களாகவும், தற்கால சினிமாக்களில் தீவிரவாதிகளாகவும் காட்டுவதைக் கண்டிக்கிறார் நூலாசிரியர் அப்சல். அதற்கு உதாரணமாக மணிரத்னத்தின் ‘ரோஜா’, ‘பம்பாய்’ படங்களைச் சொல்கிறார்.
கமல்ஹாசனின் ‘ஹேராம்’, ‘விஸ்வரூபம்’, ‘உன்னைப் போல் ஒருவன்’ போன்ற படங்களை ஃப்ரேம் வாரியாக பிய்த்துக் காட்டுவதும் பாராட்டத்தக்கது! இன்றைய சினிமாக்கள்தான் நாளைய தமிழ்நாட்டின் வரலாறாகவும் திகழக் கூடும். அப்போதைய, சினிமாக்களைப் பார்ப்போர் மனதில், தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் வாழவில்லையா? இந்துக்களோடு அவர்கள் இணைந்திருக்க வில்லையா? போன்ற கேள்விகள் எழாதா? என்று நூலாசிரியர் அப்சல் ஆதங்கப்படுவதில் நியாயம் உள்ளது.
அவரது ஆதங்கத்தை மெய்ப்பிக்கும் வகையில், இன்றைய தமிழில் இஸ்லாமியரை – அவர்களது வாழ்வை – மய்யமாகக் கொண்ட சினிமாக்கள் மிகக் குறைவு. இஸ்லாமிய தயாரிப்பாளர்கள் – எழுத்தாளர்கள் – கவிஞர்கள் – நடிகர்கள் – இயக்குநர்களும் மிக மிகக் குறைவு.
இப்போதும் ராஜ்கிரண், ஆர்யா, அப்பாஸ் போன்ற சில நடிகர்கள்! அமீர், ராஜ்கபூர் போன்ற சில இயக்குநர்கள்! இசைத்துறையில் ஏ.ஆர்.ரஹ்மான், மதம் மாறிய யுவன்ஷங்கர் ராஜா போன்ற சில இஸ்லாமியர் உள்ளனர். இவர்களிடமிருந்துதான் முஸ்லிம்களுக்கான படங்கள் வரவேண்டும் என்றில்லை. பிற மதத்தினரும் எடுக்கலாம், இயக்குநர் ஏ.பீம்சிங் ‘பாவ மன்னிப்பு’ எடுத்ததுபோல!
பிரசவம் குறித்து பெண்கள்தான் படம் எடுக்க வேண்டுமா என்ன? அதன் வலியறிந்த ஆண்களும் எடுக்கலாமே!
என்ன, மதம் கடந்த மனிதாபிமானமும் பக்குவமும் பகுத்தறிவும் சினிமா உலகில் பரிணமிக்க வேண்டும்!