கவிஞர் நந்தலாலா
இப்போது வெளிவந்து பரபரப்பாய்ப் பேசப்படும் படம் சார்பட்டா பரம்பரை. அந்தப் படத்தில், கபிலனும் வேம்புலியும் ஆக்ரோஷமாக மோதி, கபிலன் ஜெயிக்கப் போகும்போது போலீஸ் உள்ளே வரும். குத்துச்சண்டை வாத்தியாரான ரங்கனிடம் (பசுபதி) தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது; உங்களைக் கைது செய்ய வந்துள்ளோம் என்று போலீஸ் சொல்ல, கலவரம் உருவாக்கப்படும். பாக்ஸ்சிங் தடைபடும்.
தி.மு.க.காரரான வாத்தியார் ரங்கன் கைதாவார். அவசரநிலை காலத்தில் கலைஞரின் அரசு கலைக்கப்பட்ட வரலாற்றை கதையின் முக்கிய திருப்பத்துக்கு ரஞ்சித் ‘சார்பட்டா’ படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். உண்மையான தமிழ்நாட்டின் வரலாற்றிலும் கலைஞரின் ஆட்சிக் கலைப்பு பல திருப்பங்களையும் சரிவுகளையும் உண்டாக்கவே செய்தது. கலைஞர் என்னும் ஒரு கட்சியின் தலைவரை சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எல்லோரும் ஓர் இந்தியாவுக்கான தலைவராக உணர்ந்த தருணம் அது.
பல முதல்வர்கள் ஒரு கம்பெனியின் வேலைக்காரர்கள் போல நடந்துகொண்ட கதை நாம் அறிந்ததுதான். ஆனால், கலைஞர் எப்போதும் தான் ஓர் அரசியல் ஆளுமை என்பதை உணர்த்திக்கொண்டே இருந்தார். அவசரநிலை காலத்தில் அவர் கொஞ்சம் ‘அட்ஜஸ்ட்’ செய்துகொண்டு போயிருந்தால் ஆட்சி, கட்சி இரண்டுமே எந்தத் துன்பத்தையும் சந்தித்திருக்காது.
அவருக்கும் அது மற்றவரைவிட தெளிவாகத் தெரியும்.
ஆனாலும், அவர் தந்தை பெரியாரால் வளர்க்கப்பட்ட அண்ணாவின் தம்பி. அதனால் ஆட்சியை விட அரசியல் உறுதியும், கோட்பாட்டு நெறியும்தான் முக்கியம் என்பதால் அவசரநிலையை எதிர்த்த போரில் படையின் தளபதியாக இந்தியாவையே வழிநடத்தினார்.
இந்த சுயநலமற்ற நெறி சார்ந்த அரசியலே அவரை மிகப்பெரிய தலைவராக உயர்த்தியது. “இங்குதான் மூச்சு விடுகிறேன். காரணம், கருணாநிதிதான்’’ என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்களுக்கே குளிர்தரும் நிழலாக கலைஞரே இருந்தார்.
ஒரு தனிமனிதனோ தலைவரோ தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது அவர்கள் விட்டுச்செல்லும் தடங்கள் காலத்தால் அழியக்கூடாது. மேலும், எதிர்காலத் தலைமுறை தங்களுக்கான பாதையை உருவாக்கும்போது, அந்தத் தலைவனின் காலத்தால் அழியாத தடங்களைச் சேகரித்து பயன்படுத்திக் கொள்ளும் தகுதி படைத்ததாய் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டுத் தலைவர்களில் இப்படியான தடங்களை விட்டுச் சென்றவர் சிலரே. அவர்களுள் கலைஞர் தனியானவர், தகுதியானவர். பொருளாதார வகை கோட்பாடுகள் பற்றிப் பேசும் போது மார்க்ஸியம், காந்தியம் என்று பேசுகிறோம். ஆனால், அண்மைக் காலமாகத்தான், திராவிடப் பொருளாதாரம் என்ற கோட்பாட்டை முன்வைத்த உரையாடல் நடக்கிறது.
அதுவும் இந்தக் கொரோனா காலத்தில் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. அமர்த்தியா சென் போன்ற மேதைகள் தமிழ்நாட்டின் தனித்த இடத்தை, மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு எழுதியபோது தான், இந்தத் திராவிட பொருளாதாரம் என்ற சிந்தனை உருக்கொள்கிறது. ஆனால், இந்தக் கோட்பாட்டுக்குக் காரணமான பல காரியங்களை, திட்டங்களை உருவாக்கியவர் கலைஞர். அவர் பெற்றார்; நாம் பெயர் வைத்தோம். அவ்வளவுதான்.
பொருளாதாரத் தளத்தில் மட்டுமல்ல; சமூக அரசியலிலும் அவர் நுட்பமானவர். இந்தியாவின் தென்முனையில் இந்துத்துவா சக்திகள் விவேகானந்தரை நிற்க வைத்து, வடக்கே இருந்து தெற்கே முடிய நாங்கள்தான் என்று கள்ளச் சிரிப்பு சிரித்தபோது, அந்தச் சிரிப்பின் விஷத்தை முறிக்க அதே தென் முனையில் நம் வள்ளுவரை அதைவிட கம்பீரமாக நிற்க வைத்த நுட்பம் கலைஞருக்கு மட்டுமே உரிய அரச தந்திரம். அதுவும் வடக்கே வள்ளுவரைப் பார்க்க வைத்ததன் மூலம், எங்கள் பார்வையால் உங்களைப் பார்க்கிறோம் என்ற திராவிடப் பார்வை கலைஞருக்கு மட்டுமே சொந்தம்.
அவர் எழுப்பிய வள்ளுவர் கோட்டமும் அப்படியே. கீதையைப் புனிதம் என்றும், வாழ்வியல் நூல் என்றும் தத்துவச் சாறு என்றும் பொய்யால் எழுப்பப்பட்ட பார்ப்பனியக் கோட்டையைத் தகர்க்க அவர் சொன்ன பதிலே வள்ளுவர் கோட்டம். தமிழர்களின் வயிற்றுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் உணவு கொடுத்த கலைஞரை மறக்க முடியுமா?
தமிழர்களின் கலைகளான நாட்டியம் ஓவியம், சிற்பம், இசை பற்றிய சிலப்பதிகாரம் தரும் குறிப்புகளே இன்றளவும் தமிழ் நாகரிகத்தின் பெருமை பேச நமக்கு கிடைத்த சிறந்த சான்றாகும்.
மேடையின் அளவும் திரைச்சீலையின் வகைகளையும்கூட இளங்கோ பதிந்துள்ளதைப் பார்க்கும்போது ஒரு கலை ஆவணமாகவே சிலம்பை தொலை நோக்கோடு படைத்துள்ளது புரிகிறது. இவ்வளவு சிறந்த தமிழ்ப் புதையலைக் கொண்டாடாமல் ராமாயணத்தை, பாரதத்தை தலையில் வைத்து வைதிகம் கொண்டாடியது.
இந்தச் சூழ்ச்சியைத் தகர்க்கவே கலைஞர் சிலப்பதிகாரத்தை பூம்புகார் என்று உரைநடை நாடகமாக எழுதினார். எளிய மக்களைச் சென்றடைய பிறகு திரைப்படமாகவும் எடுத்தார்.
ஆட்சிக்கு வந்த பிறகு சிலம்பு சொன்ன காவிரிப் பூம்பட்டினத்தை மக்கள் பார்க்கும் விதமாக மண்ணில் எழுப்பினார். இதுதான் வைதிகத்தை கலைஞர் எதிர்கொண்ட விதம். அதனால்தான் அவர் பெயரைச் சொன்னாலே பார்ப்பனர்கள் விஷம் கக்க காரணம். அவர் மீது ஒரு மோசமான பிம்பத்தை தங்கள் ஊடகச் செல்வாக்கால் அவர்கள் கட்டி எழுப்பியதும் இதனால்தான்.
தமிழுக்குச் செம்மொழித் தகுதியை தன் அரசியல் செல்வாக்கால் அவர் ஒன்றிய அரசை ஏற்கவைத்தார். அந்த செம்மொழித் தகுதியை தமிழ் பெற்ற பின்னால்தான் சமஸ்கிருதத்தை செம்மொழியாக ஒன்றிய அரசு அறிவித்தது. உலக அரங்கில் தமிழ் செம்மாந்து நடைபோட செம்மொழித் தகுதியே காரணம். அதற்காக கலைஞர் காலம் அறிந்து எடுத்த முன்னெடுப்பை நாம் உணர வேண்டும்.
இந்திய அரசியல் தலைவர்களிலேயே தன் தாய்மொழியில் கலைஞர் அளவுக்கு ஊறித் திளைத்த தலைவர்கள் வேறு யாரும் இலர். படைப்பிலக்கியம் தெரிந்த பலருக்கு பண்டைய இலக்கிய வளம் தெரியாது.
பழைய இலக்கியத்தில் கரைகண்ட சிலருக்கோ படைக்கவே தெரியாது. ஆனால், இந்தியத் தலைவர்களில் பண்டைய இலக்கியப் பேரறிவும், படைப்பிலக்கிய லாவகமும் தெரிந்தவர் கலைஞர் மட்டுமே. தகவல் தொழில் நுட்ப கொள்கை அறிவிக்கப்பட்டவுடன், உலக அரங்கில் அதன் செல்வாக்கை உணர்ந்து நம் மாநிலத்தில் அதை உடனே நடைமுறைப்படுத்தி டைடல் பார்க் என்னும் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை உருவாக்கினார். எல்லா நிறுவனங்களும் இங்கு வர இதுவே காரணம்.
தொல்காப்பியப் பூங்காவா! கலைஞர்தான். தகவல் பூங்காவா! அதுவும் கலைஞர்தான். இப்படி பழமை புதுமை இரண்டையும் அறிந்த தலைமை கலைஞர். ‘கற்க கசடற’ என்ற குறளுக்கு உரை மட்டும் எழுதவில்லை அவர். அப்படியே வாழ்ந்தார். நான் என் கண்களால் பார்த்தேன்.
கோவையில் அவர் பங்கேற்ற பெரிய விழா. தொடக்கத்தில் எங்கள் பட்டிமன்றம். அவர் அமர்ந்து கேட்க வேண்டிய தேவையே இல்லை. அவர் பேச்சும் – வீச்சும் உலகறியும். ஆனால், ஏன் கேட்டார்? தொடர்ந்து மக்களிடம் பேசும் இவர்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமே அது.
இப்படி தாம் வாழ்ந்த காலம் முழுதும், மானமும் அறிவும்; துணிச்சலும் செயலுமாக வாழ்ந்தவர் கலைஞர். உரிமை மீட்புப் போரில் அவரே நமக்கு என்றும் போர்வாள்.