மஞ்சை வசந்தன்
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்திய ஸ்பைவேர்தான் பெகாசஸ். `போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் குழுக்களைக் கண்டுபிடிக்க, இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களைக் கண்டறிய, ட்ரோன் தாக்குதலிலிருந்து வான் பரப்புகளைப் பாதுகாக்கத்தான் எங்கள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்கிறது என்.எஸ்.ஓ. ஆனால், அதைவிட உளவு வேலைகளுக்காகவே இந்த ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு ஆரம்பத்திலிருந்தே இருந்துவந்தது.
இது முக்கியமாக அய்போனின் (I-Phone) ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் குறிவைத்தே தயாரிக்கப்பட்டது. பிரபலங்களும் வி.அய்.பி.க்களும் அதிகம் உபயோகப்படுத்தும் iOS-இன் பாதுகாப்புக் கவசங்களை மீறி, அவர்களின் மொபைல்களை இந்த ஸ்பைவேர் ஆக்கிரமித்தது. பிறகு ஆண்ட்ராய்டிலும் இது செயல்பட்டது. வாட்ஸ்அப்பில் வரும் ஒரு மெசேஜ் மூலம் இந்த ஸ்பைவேர் உங்கள் மொபைலை ஆட்கொள்ளும். அதைவிட ஒருபடி மேலே, ஒரேயொரு வாட்ஸ்அப் மிஸ்டு கால் மூலமும் இது மொபலில் ஒளிந்துகொள்ளும்.
அந்த மிஸ்டு காலையும் உடனே அழித்துவிடும் என்பதால், இந்த ஸ்பைவேர் வந்ததே உங்களுக்குத் தெரியாது. ஒரு நபரின் அலைபேசி உரையாடல்கள், வாட்ஸ்அப் அழைப்புகள், வாட்ஸ்அப் செய்திகள், போட்டோ, ஃபைல், மெயில் என்று அனைத்தையும் இந்த ஸ்பைவேர் உளவு பார்க்கும். அதுவாகவே ஒரு மெசேஜையோ மொபைல் உரிமையாளுருக்குத் தெரியமாலேயே மெயிலையோ அனுப்பவும் முடியும் என்பதுதான் இந்த ஸ்பைவேரின் ஆபத்தான தொழில்நுட்பம்.
எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் என இந்திய ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராகச் செயல்படும் பலரின் போன்களில் பெகாசஸ் ஸ்பைவேர் இருந்ததாகவும், இவர்களின் உரையாடல் முதற்கொண்டு அனைத்தும் கண்காணிக்கப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’, ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, இங்கிலாந்தின் ‘கார்டியன்’, இந்தியாவின் ‘தி வயர்’ உள்ளிட்ட 16 பத்திரிகைகள் நடத்திய புலனாய்வில் இந்தச் செய்திகள் வெளிவந்து பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
இந்த விவகாரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்ததுதான். பெகாசஸ் என்ற ஸ்பைவேரைக் கொண்டு உலகம் முழுவதும் 121 இந்தியர்கள் உள்பட 1,400 நபர்களின் மொபைல்போன் உளவு பார்க்கப்படுவதாக கடந்த 2019-இல் செய்திகள் கசிந்தன. அதற்கு, நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அப்போதைய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது பெகாசஸ் விவகாரம்!
உளவு பார்க்கப்பட்ட நீதிபதிகள், தலைவர்கள்
தமிழ்நாட்டின் ‘மே17’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் போனும் உளவு பார்க்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது 2019இ-ல் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார் உச்ச நீதிமன்றப் பெண் ஊழியர் ஒருவர். அவர் உள்பட அவரின் குடும்பத்தினர் 11 பேரின் தொலைபேசிகள் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக ஊடக நிறுவனங்களின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப் பட்டவர்களின் உறவினர்கள், வழக்குரைஞர்களின் எண்களும் இந்த ஸ்பைவேரிலிருந்து தப்பவில்லை. உச்சபட்சமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டவர்களின் எண்களும் உளவு பார்க்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. “இது எதிர்பார்த்ததுதான். இதனால்தான், அய்ந்தாறு முறை என் எண்ணையும் போனையும் மாற்றினேன். அப்படியும் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது’’ என்கிறார் பிரசாந்த் கிஷோர்.
மொத்தம் 21 நாடுகளைச் சேர்ந்த 200 பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப் பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், என்.எஸ்.ஓ நிறுவனமோ, “இந்தத் தரவுகளெல்லாம் எங்கேயிருந்து கசிந்தன என்பதே நகைப்புக்குரியது. காரணம், எங்களின் எந்த கம்ப்யூட்டரிலும் இத்தத் தகவல்கள் சேமித்து வைக்கப்படவே இல்லை. எங்கள் நிறுவனத்தைச் சம்பந்தப்படுத்தி வெளியாகும் இந்தச் செய்திகள் குறித்து அவதூறு வழக்கு தொடர்வது குறித்துப் பரிசீலித்துவருகிறோம்’’ என்று அறிவித்திருக்கிறது.
தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் “இந்திய அரசு பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் யாரையும் உளவு பார்க்கவில்லை’’ என்று 19, ஜூலை அன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் மறுத்திருக்கிறார். தனிமனித தனிப்பட்ட (Right in Privacy) உரிமைகளை மீறுவது ஒரு நல்ல ஆட்சிக்கு அழகல்ல. ஆட்சியாளர்கள் தூண்டுதல் இல்லாமல் இது நடந்திருக்கிறது என்று அவர்கள் மறுக்கும்பட்சத்தில், இதன் உண்மைத் தன்மையைத் தாங்களாக முன்வந்து விசாரித்து வெளியிட வேண்டியது அரசின் கடமை!
உளவு பார்க்கப்பட்ட பத்திரிகையாளர்கள்
“அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அதிகாரத்தை எதிர்க்கும் குரல்வளைகளை அடக்க மட்டுமே இது உபயோகப்படும்’’ என்று சமூக ஆர்வலர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஜூலை 19 அன்று வெளியான பட்டியலின்படி, இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 பேரின் போனில் இந்த ஸ்பைவேர் செலுத்தப்பட்டுள்ளது. ‘தி வயர்’ பத்திரிகையின் நிறுவன ஆசிரியர்கள் இருவரின் பெயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ‘தி வயரின்’ ஆசிரியர்
மற்றும் பங்களிப்பாளரான பத்திரிகையாளர் ரோகிணி சிங்கின் அலைபேசித் தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
“அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் குறித்த என் கட்டுரைகளுக்குப் பிறகுதான் நான் குறிவைக்கப்பட்டிருக்கிறேன்’’ என்று அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார் ரோகிணி சிங். இதுபோலவே, ரஃபேல் போர் விமான விவகாரம் குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சமயத்தில், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்கின் போனில் இந்த ஸ்பைவேர் செலுத்தப்பட்டுள்ளது.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ரோனா வில்சன் என்பவரின் லேப்டாப்பும் இந்த ஸ்பைவேரால் ஹேக் செய்யப்பட்டு, அவர் அனுப்பியதுபோல போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக அமெரிக்காவின் டிஜிட்டல் தடயவியல் நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது. பிரதமரின் உயிருக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் மின்னஞ்சல்கள் அனுப்பியதாகத்தான் அவர் கைதுசெய்யப்பட்டார். இந்த ஸ்பைவேர் தகவல்கள் வெளியாகி, அவரது வழக்கே புனையப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
பெகாசஸ்
பெகாசஸ் ஸ்பைவேர் ஆப்பரேசன்ஸ் குறித்த முதல் அறிக்கைகள் 2016ஆம் ஆண்டு வெளிவரத் துவங்கியது. அமீரகத்தில் உள்ள மனித உரிமை செயல்பாட்டாளர் அஹமது மன்சூரின் அய்போன்-க்கு வந்த எஸ்.எம்.எஸ். லிங்க் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்தது. அந்த நேரத்தில் பெகாசஸ் டூல் ஸ்மார்ட்போனை கையகப்படுத்த ஆப்பிளின் iOSஇல் ஒரு மென்பொருள் லிங்கைப் பயன்படுத்தியது. உடனே ஆப்பிள் புதிய அப்டேட்டை வெளியிட்டு புதுப்பிக்குமாறு கூறியது.
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மங்க் ஸ்கூல் ஆஃப் சர்வதேச விவகாரங்கள், மற்றும் பொதுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிட்டிசன் லேப், பெகாசஸ் “தொலைபேசியில் பாதுகாப்பு அம்சங்களை ஊடுருவி, பயனீட்டாளரின் அறிவுக்கு அல்லது அனுமதிக்கு எட்டாமல் பெகாசஸை இன்ஸ்டால் செய்யும் ஜீரோ _ டே எக்ஸ்ப்ளாய்ட்ஸின் (zero-day exploits) தொடர் சங்கிலி நிகழ்வுகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கியது. சிட்டிசன் லேப் ஆராய்ச்சி முடிவுகள், அந்த சமயத்தில் சுமார் 45 நாடுகளில் பெகாசஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அறிவித்தது.
“zero-day exploits”- என்பது இதுவரை அறியப்படாத பாதிப்பு. இது பற்றி மென்பொருள் உற்பத்தியாளர்கள் கூட அறிந்திருக்கவில்லை. எனவே, இதனை சரி செய்ய எந்தவிதமான வழிகளும் இல்லை. ஆப்பிள் மற்றும் வாட்ஸ்ஆப் குறிப்பிட்ட நிகழ்வுகளில், இந்த பாதிப்புகள் குறித்து இரு நிறுவனங்களும் அறிந்திருக்கவில்லை. இவை அடிக்கடி மென்பொருளை சுரண்டுவதற்கும் சாதனத்தை முழுமையாக கைப்பற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டன.
ஒரு முறை வாட்ஸ்ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டால் என்ன நிகழும்?
பெகாசஸ், தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட டிவைஸில் உள்ள தனிநபர் தரவுகள், கடவுச் சொற்கள், தொடர்பில் இருப்பவர்களின் பட்டியல்கள், காலண்டர் நிகழ்வுகள், டெக்ஸ்ட் மெசேஜ்கள், பிரபலமான மொபைல் செயலிகள் பேசிய வாய்ஸ் கால் தகவல்கள் அனைத்தும் ஹேக் செய்யப்பட்ட நபருக்கு அனுப்பப்படும் என்று சிட்டிசன் லேப் போஸ்ட் ஒன்று கூறியுள்ளது.
தாக்குதலில் சிக்குண்ட மொபைல் போனின் கேமராக்கள், மைக்ரோபோன்கள் போன்றவை ஆன் செய்யப்பட்டு அவரைச் சுற்றி நிகழும் அனைத்து நிகழ்வுகளும் கண்காணிக்கப்பட்டு, கண்காணிப்பின் நோக்கம் விரிவுபடுத்தப்படும். தொழில்நுட்பக் காட்சியாக வாட்ஸ்அப் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஒரு பெகாசஸ் சிற்றேட்டில் (brochure) உள்ள கூற்றுப்படி, இந்த மல்வேர்கள் மின்னஞ்சல்கள், எஸ்.எம்.எஸ்.கள், லொகேசன்கள், நெட்வொர்க் தகவல்கள், டிவைஸ் செட்டிங்க்ஸ் மற்றும் ப்ரவுசிங் ஹிஸ்டரி டேட்டா போன்றவற்றையும் அணுகலாம் என்று கூறியுள்ளது. இவை அனைத்து பயனீட்டாளரின் அறிவுக்கு எட்டாமல் நிகழும் நிகழ்வுகள் ஆகும்.
ஒன்றிய அரசின் கடமை
“சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டே மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்போது இந்தத் தகவல் வெளியாகியிருப்பதாகவும், இது அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பான செய்தி என்றும், இந்தியர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்கவோ, ஹேக் செய்யவோ நமது அரசமைப்புச் சட்டப்படி பல்வேறு துறைகளின் அனுமதி பெற வேண்டும் என்பதால், அது எளிதாக நடந்திருக்க வாய்ப்பில்லை’’ எனவும் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.
“ஒன்றிய அரசு உளவு பார்க்கவில்லை, பெகாசஸை வாங்கவில்லை என்பது உண்மை என வைத்துக்கொண்டாலும் இந்திய ஒன்றிய அரசின் அமைச்சர்கள், தேர்தல் ஆணையர், நீதிபதிகள், தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களின் செல்போன்களை ஹேக் செய்து உளவு பார்த்தது யார் எனக் கண்டறிய உடனடியாக ஒரு குழுவை அமைக்க வேண்டும்’’ என எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்து ஒன்றிய அரசுக்கு தற்போது அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
தமிழர் தலைவர் அறிக்கை
“இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள குடி மக்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நிலைமையை ஏற்படுத்தியுள்ள பெகாசஸ் கணினி உளவுச் செயல் _- வெறும் பேச்சளவில் மட்டுமே மறுக்கப்படக் கூடியதல்ல. இதுகுறித்து உரியவர்களைக் கொண்ட தனி சிறப்பு விசாரணை உச்சநீதிமன்றத்தினுடைய கண்காணிப்பில் நடத்தி, உண்மைத் தன்மையை வெளியில் கொண்டுவரவேண்டும். நேரடிப் பார்வையில் உச்சநீதிமன்றத்தால் இந்த விசாரணை நடத்தப்படுவதே சரியானதாக இருக்கமுடியும். நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்கும் என்ற தகவல் வரவேற்கத்தக்கதே! தாமதிக்காமல் விரைந்து உண்மை நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டும்.
தேசப் பாதுகாப்பு, தேச நலனில் அந்நிய சக்திகளின் குறுக்கீடு கூடாது எனப் பலமாகக் கூறிவரும் ஒன்றிய பா.ஜ.க அரசு, இந்தியர்களின் அடிப்படை உரிமையிலேயே குறுக்கிட்டு அவர்கள் மீது பழிவாங்கும் வகையில் நடவடிக்கை எடுத்திட ஏதுவான பெகாசஸ் கணினி மென்பொருள் உளவுச் செயல் பற்றிய உண்மைகள் வெளிவரட்டும்!
இஸ்ரேல் நிறுவனம் இந்த மென்பொருளை தனியாருக்கு விற்பதில்லை என்று சொல்லும் நிலையில், இந்தியாவுக்குள் வந்தது எப்படி? அரசுதானே ஈடுபட்டு இருக்க முடியும்? என்ற வினா எழுகிறதா, இல்லையா? இது மிகவும் முக்கியமானதாகும். ஒன்றிய அரசு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நடந்து கொள்ளுமா?’’
எனவே, ஒன்றிய அரசு தனக்குத் தொடர்பு இல்லையென்று சொன்னாலும், உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலைப் பகுத்தாய்ந்து பார்க்கும்போது ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை நிறைவேற்றிக் கொள்ளத் தடையாக இருக்கக் கூடியவர்களைக் குறி வைப்பதாயும், தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெறும் நோக்குடையதாயும் அது இருப்பதால், ஒன்றிய அரசின் மீது எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள், சமூகப் போராளிகள் எழுப்புகின்ற அய்யத்தை ஒதுக்கிவிட முடியாது. எனவே, தன்னிடம் தப்பில்லை என்பது உண்மையென்றால், ஒன்றிய அரசு உச்சநீதிமன்றக் கண்காணிப்பில் உண்மைகளை வெளிக் கொணர வேண்டியது கட்டாயக் கடமையாகும்¢. அதுவே அரசின் மீதான நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தும்’’ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளார்.