பூமியைப் போன்ற சுற்றுச் சூழல் அமைந்த, உயிரினங்கள் வாழ்வதற்கு இயலும் புதிய கோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவியலார்கள் கூறுகின்றனர்.
கிலிஸ் 581ஜி என்று அழைக்கப்படும் இந்தக் கோள், பூமியில் இருந்து 123 டிரில்லியன் மைல் தொலைவில் இருப்பதாகும். கோல்டிலாக் மண்டலம் அல்லது உயிரினம் வாழும் மண்டலத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்தை இந்தக் கோள் சுற்றி வருகிறது.
விண்இயல்பியல் பத்திரிகையில் வெளியாகி உள்ள கட்டுரை ஒன்றில், இந்தக் கோளில் திரவ வடிவில் தண்ணீர் அதன் மேற்பரப்பில் இருக்கக்கூடும் என்றும், அதனால் பூமியைப் போன்றே பெரிதும் இருக்கும் கோள்கள், சந்திரன்கள் கூட்டத்தில் இந்தக் கோள் முதல் இடத்தைப் பெறுகிறது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு கோளைக் கண்டுபிடித்துள்ளோம் என்பதற்கான பலமான காரணங்கள் உள்ளன என்று தலைமை ஆய்வாளர் ஸ்டீவன் வோக்ட் கூறுகிறார். இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வானயியல் மற்றும், விண்இயல்பியல் பேராசிரியர் ஆவார்.
இவ்வளவு விரைவில், மிக அருகில் உள்ள இந்தக் கோளை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது என்ற உண்மை, இதனைப் போன்ற கோள்கள் உண்மையில் சாதாரணமாகக் காணப்பட இயன்றவை என்பதை நமக்குத் தெரிவிக்கிறது என்று வோக்ட் கூறுகிறார்.
அருகில் இருக்கும் சிவப்பு நிற கிலிஸ் 581 கோளை கடந்த 11 ஆண்டு காலமாக கவனித்து வந்ததன் அடிப்படையில் இந்தப் புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கிலிஸ் 581யைச் சுற்றி இரண்டு புதிய கோள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தக் குழு தெரிவித்துள்ளது.
இந்த நட்சத்திரத்தைச் சுற்றி உள்ள கோள்களில் நாம் அறிந்துள்ளவற்றின் எண்ணிக்கை இந்தப் புதிய கோளுடன் சேர்த்து ஆறாக உயர்கிறது. சூரிய மண்டலத்திற்கு வெளியே எந்த ஒரு மண்டலத்திலும் அதிகமான கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த மண்டலத்தில்தான். கிலிஸ் 581 கோளைச் சுற்றிவரும் கோள்கள், நமது சூரிய மண்டலத்தைப் போன்றே வட்டப் பாதைகளில் சுற்றி வருவதாக இந்தக் குழு தெரிவித்துள்ளது.
இந்த கிலிஸ் 581ஜி கோள் நமது பூமியைப் போன்று 3-லிருந்து 4 மடங்கு பெரியது என்பதும், தனது நட்சத்திரத்தை அது 37 நாட்களில் சுற்றி வருகிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடர்த்தியில் இருந்து, கற்பாறைகள் கொண்ட உறுதியான மேற்பரப்பைக் கொண்டதாக இருக்கலாம் என்றும், விண்வெளியில் நிலை பெற்றிருக்கத் தேவையான ஈர்ப்பு சக்தியைப் பெற்றிருக்கலாம் என்றும் அதன் அடர்த்தி சுட்டிக் காட்டுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.