அந்தோணியார் கோவில் மணி ஓசை

டிசம்பர் 16-31

– மே.அ.கிருஷ்ணன்

விடிந்தால் நடிகை ரோசரி தேவி முனிராஜ் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு! நள்ளிரவு மணி இரண்டாகியும் புரண்டு படுத்த ரோசரிக்குத் தூக்கமே வரவில்லை. மனம் பட்டாம்பூச்சு போல அங்குமிங்கும் ஓடிக் கொண்டேயிருந்தது.

கடந்தகால நினைவுகள் சிலருக்கு மலரும் நினைவுகளாக அமையும். ஆனால், ரோசரிக்கோ புயல் நடுவே சிக்கிச் சீரழியும் கப்பலைப் போலவே அமைந்துவிட்டது. அவளுக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள இப்பொழுது சித்தி அந்தோணியம்மாள் தவிர யாருமே இல்லை.

பவானி ஆற்றங்கரையில் உள்ளது அந்தச் சின்னக் கிராமம். அவள் அப்பா ஆரோக்கியசாமி அந்த ஊரில் ஒரு தையல் கலைஞர். பாத்திமா ரோசரி அவருக்கு ஒரே மகள்.  +2 படிக்கும்போதே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். அம்மா கிரேஸி மேரி மிகவும் கெட்டிக்காரி. தையல் தொழிலைத் தொடர்ந்து செய்து மகளைக் கல்லூரி வரைப் படிக்க வைத்தாள்.

கல்லூரி ஆண்டு விழா! மாறுவேடப் போட்டியில் ரோசரி பைத்தியக்காரியாக நடித்து பெரும் பாராட்டும் பரிசும் பெற்றாள். ரோசரியின் துடிப்பான நடிப்பு, அழகான முகவெட்டு, கணீரென்ற குரல் வளம், தலைமை வகித்த படத்தயாரிப்பாளர் கணேஷை மிகவும் கவர்ந்தது! அப்போது அவர் தயாரிப்பில் இருந்த தாகம் என்ற படத்தில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்புத் தருவதாக மேடையிலேயே அறிவித்தார்.

ரோசரியின் மனம் துள்ளிக் குதித்தது. ஏழ்மையில் தவித்த ரோசரியின் குடும்பம் சென்னையில் குடியேறியது. தாகம் வெற்றிப் படமாக அமைந்ததால் தொடர்ந்து ஏழு படங்களில் ரோசரிக்கு நடிக்க வாய்ப்புகள் கிட்டியது. கார், பங்களா, வேலைக்காரர், உதவியாளர் என எல்லாம் ரோசரி குடும்பத்திற்கு அமைந்தன!

முற்றிலும் எதிர்பாராத சூழ்நிலையில் அம்மா கிரேஸி மேரி புற்று நோயால் பாதிக்கப்பட்டார். பிரபலமான மருத்துவமனைகளைத் தேடியலைந்து, அம்மாவைக் காப்பாற்ற தீவிரமாய்ப் போராடினாள். ஆண் துணையின்றித் தவித்த ரோசரிக்கு அப்போது முனிராஜ் என்ற மேக்கப் மேன் மிகவும் உதவியாகச் செயல்பட்டான். அந்த நெருக்கம் காதலாக மாறி அம்மாவின் மறைவுக்குப் பின், கல்யாணத்தில் முடிந்தது.

ஆறு மாதம் மட்டும் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக தவழ்ந்தது! முனிராஜ் ஏற்கெனவே திருநெல்வேலியில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, அவளை விட்டுவிட்டு ஓடி வந்தவர் என்பது பின்புதான் ரோசரிக்குத் தெரிந்தது. அதனால் குடும்பத்தில் ஓயாத குழப்பம். எந்த நேரமும் குடிப்பது, கண்ட கண்ட கழிசடைகளோடு சுற்றித் திரிவது சில வேளை வீட்டுக்கே கூட்டி வந்து மாடியில் கும்மாளம் போடுவது! தட்டிக் கேட்டால் அடி உதை! ஒரு சமயம் ஏ.டி.எம். கார்டைக் கொடுக்கச் சொல்லி குரல் வளையை நெறித்தான். இன்னொரு சமயம் கத்தியைக் காட்டி ஒரு லட்சத்திற்குக் காசோலையில் கையெழுத்துப் போட வைத்தான். மற்றொரு சமயம் மாருதி காரை விலை பேசி இந்தப் பேப்பரில் கையெழுத்துப் போடு இல்லை உன்னை ரேப் கேசிலே போலீசில் மாட்டி விடுவேன் என்று பயமுறுத்தினான்.

குதிரை குப்புறத் தள்ளியதுமல்லாமல் குழியும் பறித்த கதையாக அமைந்ததால், ரோசரி விழித்துக் கொண்டாள். விவாகரத்துக்கு ஏற்பாடு செய்ததோடு வழக்கு முடியும் வரை அவன் ரோசரி வீட்டுக்கு வரக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடையாணையும் பெற்றாள்.

காலை பத்துமணி! ரோசரியும் அவள் சித்தியும் காரிலிருந்து இறங்கி நீதிமன்றத்திற்குள் நுழைந்து அங்கு காலியாக இருந்த இருக்கையின் முன் பகுதியில் அமர்ந்து கொண்டனர். சரியாக பத்தரை மணி! அவளது வக்கீல் மகேந்திரன் வந்தார். அவரிடம் அய்ந்து நிமிடம் பேசிவிட்டு மீண்டும் சித்தி பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

குடும்ப நல நீதிமன்ற நீதிபதி வந்ததும்  எல்லாரும் எழுந்து நின்றனர். விவாகரத்து தொடர்பான எட்டுப் பக்க அறிக்கைகளை நிறுத்தி நிதானமாகப் படித்து, கடைசியாக முனிராஜ் – ரோசரி தேவி திருமணத்தை ரத்து செய்து இந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது என்று முடித்தார். ரோசரி தேவி மகிழ்ச்சியின் மிகுதியில் எழுந்து நீதிபதிக்குத் தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்தாள். வெளியே நிருபர்கள் அவளைப் புகைப்படம் எடுக்கவும், பேட்டி எடுக்கவும் தயாராக இருந்தனர். ஆனால், அவளும் சித்தியும் அவர்களை ஏமாற்றி காரில் ஏறி நேராக அந்தோணியார் கோவிலை அடைந்தனர்!

கெபியில் குடி கொண்டிருந்த மரியன்னையின் முன்பும், அவரது திருக்குமரன் இயேசுவின் முன்பும் மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்து அமைதியான அரங்கத்தில் முழந்தாளிட்டு மௌன ஜெபம் செய்தாள். ரோசரி வந்திருப்பதை அறிந்த பங்குத் தந்தை, தேவதாஸ் அவள் தலை மீது கைவைத்து ஆசி வழங்கி, புனித தீர்த்தம் தெளித்தார்.

பங்குத் தந்தையார் அழைப்பை ஏற்று இருவரும் அவரது அறையில் இருந்த ஷோபாவில் அமர்ந்தனர். அவர்களுக்கு உதவியாளர் டீ கொடுத்தான். ரோசரி வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொண்ட பங்குத் தந்தை ரோசரிக்கு ஞானோபதேச மொழிகளைக் கதைபோல வழங்கத் தொடங்கினார். நமது பாவங்களைப் போக்குவதற்காகத்தான் தேவ குமாரன் இம்மண்ணில் அவதரித்தார். அவர் நம்மைக் காக்கும் கடவுள்.

அந்தக் கடவுளுக்கு எதிராகச் செயல்படும் ஒரு தீய சக்தி ஒன்று உண்டு. அதுதான் சாத்தான்! தேவனின் ஆலயத்தை அணுகவிடாமல் தடுப்பவன்! ஆண்டவனின் அருளுக்குத் தடை போடுகின்றவன். பேராசை உணர்வைத் தூண்டி கர்த்தரின் கட்டளையைப் புறக்கணிக்கச் செய்பவன். அவன் மனிதனுக்குள் புகுந்து நிற்கும் பிசாசு, ஆவி. இவ்வாறு பல்வேறு கருத்துகளை அரை மணி நேரம் பொழிந்தார். இரண்டு பேரும் மிகவும் உன்னிப்பாகக் கேட்டனர்.

ரோசரி நீ கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தும் கடந்த காலத்தில் ஆண்டவனை மறந்தாய். அவர் ராஜ்யத்தில் அங்கம் வகிக்காமலே விலகி நின்றாய். அதனால் அவரது பரிசுத்த ஆவி உன்னை அணுகவில்லை. உன் வேதனைக்கும் தீராத் துன்பத்திதற்கும் இதுவே காரணம். ஃபாதர்! நமக்காக இயேசு பெருமான் இம்மண்ணில் அவதரித்தது போல், நீங்கள் எங்களுக்காக வேதக் கருத்துகளைப் படைத்தீர்கள். நீங்கள் ரோசரிக்குப் புனிதத் தந்தை மட்டுமல்ல, ஞானத் தந்தையும் ஆவீர்கள். உங்களைப் போல நல்ல வழிகாட்டி இல்லாத காரணத்தால்தான், ஒரு கட்டத்தில் ரோசரி தற்கொலை செய்து கொள்ளவும் முற்பட்டாள். சித்தி மிகவும் பணிவாக எடுத்துப் பேசினாள். அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ரோசரி! இப்போது மட்டுமல்ல, எப்போதும் இப்படியொரு முடிவை நீ எடுக்கவே கூடாது. யார் வாழ்க்கையில் துன்பம் இல்லாமல் உள்ளது. என் வாழ்க்கையில் நிகழ்ந்த வேதனையைக் கேட்டால் நீங்கள் திடுக்கிட்டுப் போவீர்கள் என்றார் ஃபாதர் பரபரப்புடன்.

ஃபாதர் உங்கள் வாழ்க்கையிலும் சோதனையா?. நான் இன்றைக்கு ரெவரெண்ட் ஃபாதர், அன்றைக்கு கல்லூரி மாணவன். என்னோடு படித்த பிளோமினாவை உயிருக்கு உயிராகக் காதலித்தேன். யாருக்கும் தெரியாமல் அவளுடன் பைக்கில் பெசண்ட் நகர் பீச்சுக்குப் போகும்போது லாரிமோதி விபத்துக்குள்ளானோம். பிளோமினா ஸ்பாட் அவுட்! என்னால்தான் அவள் வாழ்வு அழிந்தது என்று எண்ணி எல்.அய்.சி. மாடியிலிருந்து விழுந்து சாக முடிவு செய்தேன். ஃபாதர் சூசைநாதர் என்பவர்தான் அதைத் தடுத்து என்னை ஃபாதர் ஆக்கினார்.

ஃபாதர் எவ்வளவு பெரிய துயரத்திலிருந்து மீண்டுள்ளீர்கள். நீங்கள் எங்களுக்குக் கண் கண்ட தெய்வம். சித்தி ஃபாதரை மிக உயர்வாகப் போற்றினாள். வணக்கம் கூறி கிளம்ப முற்பட்டனர். ரோசரி! என் சொந்த வாழ்வைப் பேசி உனக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் விட்டுட்டேன். சொல்லுங்க ஃபாதர். நாளை மறுநாள் தவக்காலம் தொடங்குது, நீ அதை அனுசரிப்பாயா? கட்டாயம் அனுசரிப்பேன் ஃபாதர்.  நீ காலை ஆறு மணிக்கு ஆலய மணி ஒலித்தவுடன், சர்ச் ஹாலில் அமர்ந்து மனதால் ஜெபிக்க வேண்டும். நான் விசேஷ திருப்பலி செய்து தீர்த்தம் தெளித்து அனுப்பி வைக்கிறேன். உனக்காகத்தான் இந்தத் தனி ஏற்பாடு.

உம்….. உன்னை ஏன் ஆறு மணிக்கே வரச் சொல்றேன் தெரியுமா? தெரியும் ஃபாதர் எட்டுமணிக்கு மக்கள் கூட்டம் வந்துவிடும். என்னால் அமைதி கெடும் புரிந்து கொண்டாயே! புத்திசாலிப் பெண் என்று சொல்லி கைகுலுக்கி அனுப்பினார். தவக் காலம் பன்னிரெண்டாம் நாள்! வழக்கமாக விடியற் காலை ஆறு மணிக்கு அந்தோணியார் கோவில் ஆலய மணி ஒலிக்கும்போது ரோசரி காரில் ஏறி சர்ச்சுக்கு விரைவாள்.

அன்று மணியோசை கேட்டு ரோசரி படுக்கையிலேயே இருப்பது கண்டு சித்தி திடுக்கிட்டாள்! ரோசரி என்னாச்சு உனக்கு! உடம்புக்குச் சரியில்லையா? உடம்புக்கெல்லாம் சரியாத்தான் இருக்குது மனசுக்குத்தான் சரியில் லை பாத்தியா பழச நினைக்காதேன்னு உனக்கு எத்தனை முறை சொல்றது? பிரச்சினைகள் பழசிலே இல்லே சித்தி, புதுசிலே தான் என்றாள். நீ சொல்லறது ஒன்றும் புரியலையே நமக்கு ஞானோபதேசம் செய்த ஃபாதர் ராத்திரியிலே குடிப்பார் போலிருக்குது அவங்க சாமியாருங்க. எந்த நினைப்பும் இல்லாமே ராத்திரியில சரியாத் தூங்கணும் பாரு – அதுக்காக கொஞ்சம் குடிப்பாங்க…. நம்ம ஊரு லிவிங்ஸ்டன் சாமியாரும்கூட குடிப்பது உனக்குத் தெரியுமே…. அது அவங்க தனிப்பட்ட விவகாரம்…. அதைப் பத்தி நமக்கென்னம்மா?

நா சர்ச்சிலே மண்டியிட்டு ஜெபத்திலே இருக்கும்போதே திடீர்னு ஆசீர்வாதம் பண்ண தலையிலே ஃபாதர் கை வைக்கிறார்…. ரொம்ப நேரம் கையை எடுக்கிறதே இல்லை நா எழுந்திருக்கும்போதுதான் விலகுது. அவர் உனக்கு ஞானத் தந்தை. அவர் கை படறதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும். சித்தி சில சமயம் பக்கத்திலே உரசிக் கொண்டே நிற்கிறாரே. அவர் வயசென்ன? உன் வயசென்ன? அனிச்சையாக நடக்கிறதை யெல்லாம் தப்பா எடுக்கலாமா? சித்தி ரோசரியைச் சமாதானப்படுத்தினாள்.

முந்தா நாள், ரோசரி உன்னைப் பார்த்தா எனக்கு என் பிளோமினா ஞாபகம் வருதுன்னு எனது முதுகுப் புறத்தை வருடினாரு நா சிலிர்த்துப் போனேன்! பாவம்! அவர் அடி மனசிலே அவர் காதலி ஞாபகம் இருக்கும் போலிருக்கு. நேத்து நீ சிரிக்கும்போது உன் கன்னத்தில் குழி விழுது,. என் பிளோமினா வுக்கும் இதே மாதிரிதான் குழி விழும் என்றவர் திடீர்னு என் கன்னத்தைத் தட்டினார். எனக்கு ஒடம்பு படபடனு ஆயிடுச்சு. எனக்கென்னவோ இதெல்லாம் தப்பாவே படலே என்று சமாதானப்படுத்தினாள் சித்தி.

சித்தி! வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கிறே! வெள்ளை உள்ளம் உனக்கு ஆனால், இன்னிக்குப் பெண்களுக்குப் பாதகம் செய்வோர் மனித வடிவத்திலும் இருக்கிறாங்க துறவி வடிவத்திலும் இருக்கிறாங்க.

நேத்து மாலையில் வந்த இந்தப் பேப்பரைக் கொஞ்சம் படி.. கன்னியாஸ்திரிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலக்கிக் கொடுத்து, கற்பழித்த பாதிரியார் கைது அய்யோ விவிலியத்தைக் கையில் ஏந்தியவர்கள் இந்த அநியாயத்தைச் செய்யலாமா? கையிலிருந்த பத்திரிகையைப் பார்த்துப் புலம்பினாள் சித்தி!

அவங்க விவிலியத்தைக் கையிலேதானே ஏந்தினாங்க, மனதிலே ஏந்தலையே! பாவங்களைப் போக்க வேண்டிய ஃபாதர்களே பாதகம் செய்தால், அப்புறம் நாம் யாரிடம் போய் முறையிடுவது. என்னைக்கூட ஒவ்வொரு நாளும் அவரது ரூம்க்கு வந்து ஒரு ஜுஸ் குடித்துப் போலாமென்று ஃபாதர் சொல்வாரு. நான் அதைக் காதிலேயே போட்டுக்கலே.

ஒருகால் நானும் அந்த அறைக்குப் போயிருந்தால் இந்த சிஸ்டர் கதி எனக்கும் ஏன் ஏற்பட்டிருக்கக்கூடாது? உரத்த குரலில் முழங்கினாள் ரோசரி. சித்தி பதில் ஏதும் பேசாமல் கன்னத்தில் கை வைத்து முடிவில்லா கவலையில் மூழ்கிவிட்டாள்.

பதின்மூன்றாம் நாள் காலை ஆறு மணி, அந்தோணியார் கோவில் மணி அலறியது! அந்த ஓசை வா வா என்று அழைப்பது போலில்லை. வர வேண்டாம் வர வேண்டாம் என்று சொல்வதுபோல் தெரிந்தது ரோசரிக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *