ஆறு.கலைச்செல்வன்
மருந்துக் கடையில் சில மருந்துகளை வாங்கிக் கொண்டு திரும்பிய கதிர்மதி எதிரே சாலையில் அவரது நண்பர் இரத்தினசாமி நடந்து வந்துகொண்டிருப்பதைப் பார்த்தார். இரத்தினசாமி முகக்கவசம் அணிந்திருக்க வில்லை. இதனால் அவரைப் பார்க்க விருப்பம் இல்லாதவராய் பார்க்காதது போல் செல்ல முயன்றார். ஆனாலும், இரத்தினசாமி விடுவதாக இல்லை. அவரைப் பார்த்து விட்டு, “கதிர்மதி’’ என உரக்க அழைத்தார்.
நின்று அவரைப் பார்த்த கதிர்மதி விடுவிடுவென மீண்டும் மருந்துக் கடைக்குச் சென்று ஒரு முகக் கவசத்தை வாங்கிக் கொண்டு இரத்தினசாமியிடம் வந்தார்.
“இரத்தினசாமி! முதலில் இந்த முகக் கவசத்தை போட்டுக்க. இப்படி முகக் கவசம் இல்லாம வெளியே வர்ரீயே! இது உனக்கே நல்லயிருக்கா?
நாட்டோட நிலைமை தெரியுமா தெரியாதா?’’ என்று கூறியபடியே முகக் கவசத்தை இரத்தினசாமியிடம் கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னார்.
“ஓ! நீ கொரோனா பரவலைச் சொல்றியா? கந்தர் கவசம் இருக்கையில் இந்த முகக் கவசம் எல்லாம் வேஸ்ட்’’ என்று கூறியபடியே கதிர்மதியைப் பார்த்தார்.
கதிர்மதி ஒன்றுக்கு இரண்டாக இரண்டு முகக் கவசங்களை அணிந்திருந்தார்.
“இரத்தினசாமி! பகுத்தறிவோடு நாம் எதையும் சிந்திக்க வேண்டும். கொரோனா என்ற கொடிய நோயின் இரண்டாவது அலை நம் நாட்டையே நிலைகுலைய வைச்சிகிட்டு இருக்கு. இப்படி பொறுப்பில்லாமல், முகக்கவசம் அணியாமல் வெளியே வர்ரது உனக்கே நல்லாயிருக்கா? நீ நான் கொடுத்த முகக் கவசத்தை அணியாவிட்டால் உன்னோடு நான் பேசப் போவதில்லை’’ என்று உறுதிபடக் கூறினார் கதிர்மதி.
“இதை போட்டுக்கிட்டா மட்டும் கொரோனா வராதாக்கும்’’ என்று கிண்டலாகக் கேட்டுக் கொண்டே கதிர்மதியின் வற்புறுத்தல் காரணமாக முகக் கவசத்தை அணிந்து கொண்டார்.
”இரத்தினசாமி, நீ முகக் கவசம் அணியா விட்டால் உனக்கு மட்டும் பாதகமில்லை, உன்னைச் சந்திக்கும், உன்னைக் கடந்து செல்லும் அனைவருக்கும் பாதிப்பை உண்டுபண்ணும். முகக் கவசம் நமக்கு உயிர்க் கவசம் போன்றது.’’
“எப்படி? எப்படி?’’
“நீ கை விரல்களில் மோதிரம் போட்டிருக்கே. கலர் கலரா கயிறுகளும் கட்டியிருக்கே. ஆனா, அதெல்லாம் பயனற்ற பொருள்கள்தான். முகக் கவசம் ஒன்றே நம்மைக் காக்கும். இல்லாட்டி ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதுதான். காரணம், எண்ணற்ற நோய்க் கிருமிகள் காற்றின் மூலம் பரவுகின்றன. அக்காற்றை நாம் சுவாசிக்கும்போது நமக்கு நோய் பரவும். கண்கள், மூக்கு, நுரையீரல் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. அதனால், முகக் கவசம் அணிவது முக்கியமானது.’’
“சும்மா பயம் காட்டாதே கதிர்மதி. நீ இப்படி பேசிக்கிட்டே இரு. முருகா, முருகா என்றாலே எந்த பாதிப்பும் எனக்கு வராது.’’
இதைக் கேட்டு மிகவும் எரிச்சல் அடைந்தார் கதிர்மதி.
“சரி, சரி. நீ எதையாவது நம்பிக்கொள். ஆனால், முகக் கவசத்தை அணிந்துகொண்டு நம்பு. அதுசரி, நீ தடுப்பூசி போட்டுக் கொண்டாயா? நான் இரண்டு முறையும் போட்டுக் கொண்டுவிட்டேன்.’’
“ஊசியெல்லாம் தேவையில்லை கதிர்மதி. அதெல்லாம் வேஸ்ட்.’’
“யார் சொன்னது?’’
“நேற்று ஒரு நாட்டு வைத்தியரிடம் பேசிக் கொண்டிருந்தேன் கதிர்மதி. அவர்தான் சொன்னார், ஊசியெல்லாம் ஒரு சதித்திட்டம். மருந்துக் கம்பெனிகளின் மாயவித்தை. வெளிநாட்டு மருந்து விற்பனையாளர்களின் கூட்டுச் சதிவலையில் நாம் வீழ்ந்துவிடக் கூடாது கதிர்மதி.’’
“அப்படியெல்லாம் முடிவு செய்துவிடாதே இரத்தினசாமி. அறிவியலை நாம் நம்ப வேண்டும். அறிவியல் முறைப்படி நாம் தடுப்பூசி போட்டுக் கொள்வதே நல்லது. இன்று காலரா, மலேரியா, பெரியம்மை, போலியோ போன்ற நோய்கள் உலகை விட்டு விரட்டப்பட்டுவிட்டன. அதற்கெல்லாம் காரணம் தடுப்பூசிகள்தாம். நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது நம்முடைய சராசரி ஆயுள் என்ன தெரியுமா?’’ என்று கேட்டார் கதிர்மதி.
“தெரியாது, நீதான் சொல்லேன் கதிர்மதி.’’
“சொல்கிறேன் கேள் இரத்தினசாமி. நூறு ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களின் ஆயுட்காலம் வெறும் 32 ஆண்டுகள்தான். ஆனால், 2020ஆம் ஆண்டில் இது 70.8 ஆக உயர்ந்துள்ளது. இதில் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடும் உள்ளது. ஆயுட்காலம் கூடியதற்குக் காரணம் மருத்துவ வசதிகளாலும், தடுப்பூசிகளாலும்தான். இதை மறந்துவிடாதே.’’
“எல்லாம் அவன் செயல் கதிர்மதி.’’
“அப்படின்னா கொரோனா யார் செயல் இரத்தினசாமி. அறிவியலுக்குப் புறம்பாக நாம் நடப்பதும் பேசுவதும் மிகவும் தவறு.
தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு நாம் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு மட்டுமல்ல, நம் குடும்பத்தாருக்கும், ஏன் இந்த சமுதாயத்திற்கும் நாம் தீங்கு செய்வதாக ஆகிவிடும்’’ என்று மீண்டும் மீண்டும் இரத்தினசாமிக்கு அறிவுரை கூறினார் கதிர்மதி.
ஆனாலும், இரத்தினசாமி எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
“அது சரி, இப்ப எதுக்காக வீட்டை விட்டு வெளியே வந்த?’’ என்று கேட்டார் கதிர்மதி.
“சும்மா ‘வாக்கிங்’ வந்தேன்’’ என்று அலட்சியமாகப் பதில் கூறினார் இரத்தினசாமி.
“இங்க பாருப்பா. இப்படியெல்லாம் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது’’ என புத்திமதி கூறிய கதிர்மதியை இடைமறித்த இரத்தினசாமி.
“அப்போ நீ மட்டும் ஏன் வந்தியாம்?’’ எனக் கேட்டார்.
“நான் முக்கியமான மருந்துகள் வாங்க வந்தேன். அதுவும் கைகளைக் கழுவி சுத்தம் செய்துவிட்டு, கிருமி நாசினியையும் கைகளில் பூசிக்கொண்டு, முகக் கவசமும் அணிந்துகொண்டு வந்துள்ளேன். ஆனால், நீயோ…!’’ என்ற அவரை இடைமறித்த இரத்தினசாமி.
“கந்தர் கவசம் இருக்கையில் இந்தக் கவசம் வேண்டவே வேண்டாம்’’ என்று கூறியபடியே கதிர்மதி கொடுத்த முகக் கவசத்தை கழற்றியபடி வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டார்.
சில நாள்கள் கடந்தன. ஒரு நாள் திடீரென இரத்தினசாமியின் மகன் கணபதி கதிர்மதியின் செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசினான்.
“அய்யா, அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லை’’ என்றான்.
“என்ன செய்யுது?’’ என்று பதறியபடி கேட்டார் கதிர்மதி.
“சாயந்திரம் ஆச்சுன்னா சுரம் வருது. வாசனையும், சுவையும் தெரியலையாம்’’
“கணபதி, இதெல்லாம் கொரோனாவின் அறிகுறிகள். உடனே அரசு மருத்துவமனைக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தொற்று இருந்தால் உடனே மருத்துவமனையில் சேரவேண்டும்.’’
“அதெல்லாம் வேண்டாம்னு அப்பா சொல்லிவிட்டார். நானும் அப்படித்தான் நெனைக்கிறேன். வீட்டில் தனியாத்தான் இருக்கார். காலையில் வீட்டைச் சுற்றி வேப்பிலை போட்டும், மாட்டுச் சாணி தெளித்தும் சுத்தம் செய்தோம். இதுவே போதும்னு நெனைக்கிறேன் அய்யா.’’
“உன் அப்பாவைத் தாண்டி நீயும் மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறியே கணபதி. இதெல்லாம் தவறு. உடனே மருத்துவமனைக்குச் செல். நாள் வளர்த்தாதே.’’
“அதெல்லாம் வேண்டாம் அய்யா. உங்களுக்குத் தகவல் சொன்னேன். அவ்வளவுதான்’’ என்று கூறியபடியே செல்போனை அணைத்துவிட்டான் கணபதி.
ஆனால், கதிர்மதி மீண்டும் கணபதியைத் தொடர்புகொண்டு அப்பாவைப் பேசச் சொன்னார்.
சிறிது நேரத்தில் இரத்தினசாமி, கதிர்மதியைத் தொடர்பு கொண்டு பேசினார்.
“ஒண்ணுமில்ல. தினம் சுரம் வருது. உடம்பெல்லாம் வலிக்குது. வாசனை, சுவை எதுவும் தெரியல. அவ்வளவுதான். மூச்சுவிடத்தான் கொஞ்சம் சிரமமாயிருக்கு. இன்னும் ரெண்டு நாளில் எல்லாம் சரியாயிடும்’’ என்றார்.
“நீ பேசறது தப்பு. இப்ப உனக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா தெரியுது. உடனே மருத்துவமனைக்குக் கிளம்பு. இல்லாட்டி நான் சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்கிறேன்’’ என்று சொன்னார் கதிர்மதி.
“அதெல்லாம் வேண்டாம். எல்லாம் சரியாயிடும். அதற்கான ஏற்பாடுகளையெல்லாம் நான் செய்ஞ்சிகிட்டு வர்ரேன்’’ என்றார் இரத்தினசாமி.
பிறகு அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.
“என்ன ஏற்பாடு செய்ஞ்சிருக்க இரத்தினசாமி?’’
“நீ வாட்ஸ்அப் பார்க்கலையா? என் நண்பர் ஒருத்தர் எனக்கு ஒரு மெஜேஜ் பார்வேர்ட் பண்ணியிருந்தார். நானும் அதை உனக்கு பார்வேர்ட் பண்ணியிருந்தேன். நீ பார்க்கலையா?’’
“நான் பார்க்கல. என்ன அது?’’
“கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவர் அவரது நண்பரின் ஆலோசனைப்படி மருத்துவமனைக்குப் போனாராம். அங்கு அவருக்கு தொற்று ரொம்ப நாளா சரியாகலையாம். உடனே, அவருக்கு, தான் கையோடு கொண்டு வந்திருந்த திருவாசகம் புத்தகம் ஞாபகத்திற்கு வந்ததாம். அதை எடுத்து பலமுறை படித்தாராம். தொற்று பறந்தோடி விட்டதாம். அதைப்போல் நானும் இப்ப திருவாசகம் படிக்க ஆரம்பித்துவிட்டேன். இனிமேல் கொரோனா என்னை விட்டு பறந்தோடிவிடும்.’’
“இரத்தினசாமி, உன் உயிரோடு விளையாடாதே. அறிவியலை நம்பு. மூடநம்பிக்கைகளை விட்டொழி. மருத்துவமனைக்குப் போ’’ என்று அறிவுரை கூறினார் கதிர்மதி.
“வேண்டாம், வேண்டாம்’’ என்ற முனகியபடியே பேசிய இரத்தினசாமி திடீரென பேச முடியாமல் செல்பேசியை நழுவ விட்டுவிட்டார் என்பதை உணர்ந்தார் கதிர்மதி.
உடனே சற்றும் தாமதிக்காமல் சுகாதாரத் துறைக்குத் தொடர்புகொண்டு இரத்தினசாமி பற்றி தகவல் கொடுத்தார் கதிர்மதி. சுகாதாரத் துறையினர் உடனே வந்து இரத்தினசாமி -குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அவருக்கும் அவர் மகன் கணபதிக்கும் தொற்று உறுதியானதையடுத்து இருவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இரத்தினசாமிக்கு நினைவு தடுமாறிய நிலையில் ஆக்சிசன் அளவு குறைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உயிருக்காகப் போராடினார்.
மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் பதினைந்து நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு இருவரும் உடல்நலம் தேறினர். மருத்துவமனையிலிருந்து வீடு வந்தனர்.
ஒருநாள் செல்பேசியில் கதிர்மதிக்கு அழைப்பு வந்தது. இரத்தினசாமிதான் தொடர்பு கொண்டார்.
“ரொம்ப நன்றி கதிர்மதி. எங்க உயிரை நீதான் காப்பாத்தினே. நீ சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுக்கலைன்னா நாங்க வீட்டிலேயே இருந்திருப்போம். நிலைமை மோசமாயிருக்கும். நீ எனக்குச் சொன்ன அறிவுரையெல்லாம் உண்மைதான். நான் அறிவியலை நம்புறேன். இப்ப கூட முகக் கவசம் போட்டுகிட்டுத்தான் பேசறேன். தடுப்பூசியும் போட்டுக்கிறேன்’’ என்று உணர்ச்சியுடன் பேசினார் இரத்தினசாமி.
“நல்லது இரத்தினசாமி. உனக்கு உடல்நலம் தேறிடுச்சி. அடிக்கடி உன்னை மருத்துவமனையில் விசாரிச்சுகிட்டுத்தான் இருந்தேன். மூடநம்பிக்கைகளை விட்டொழித்தால் நோயின்றி வாழலாம். இதை மற்றவர்களுக்கும் நாம் சொல்ல வேண்டும்’’ என்றார் கதிர்மதி.
“நிச்சயமாகச் சொல்வேன்’’ என்று உறுதியாகக் கூறினார் இரத்தினசாமி.