எனது நம்பிக்கை வெளியில்…

டிசம்பர் 16-31

– சிந்து நக்கீரன்
(அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஒருவரின் எண்ணங்கள்)

நான் நாத்திகக் கொள்கைக்கு மாறுவதற்கு முன் அடிக்கடி தொழுது கொண்டிருந்தேன்.  முதன் முதலாக எனது அய்ந்தாவது வயதில்  தொழத் தொடங்கிய  நிகழ்ச்சி  எனது நினைவில் உள்ளது. எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் மத விழா ஒன்றிற்கு என்னை என் குடும்பத்தினர் எடுத்துச் சென்றிருந்தனர். நாத்திகர்களால் வளர்க்கப்பட்டு வந்த எனக்கு உண்மையிலேயே மதத்தைப் பற்றி அதிகமாகத் தெரியாது. இந்த விழாவில் பொழுதுபோகாத தால், சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற  ஆவலால் அந்த வீட்டைச் சுற்றி வந்தபோது,  இந்துக் கடவுளான கிருஷ்ணர் ஓவியம் மாட்டப்பட்டிருந்த ஓர் அறைக்குச் சென்றேன். மெழுகுவர்த்திகள் மற்றும்  ஊதுவத்திகள் அதன்முன் ஏற்றப்பட்டிருந்தன. எனது உள்ளங்கைகளை ஒன்று சேர்த்து அப்படத்தின் முன் மண்டியிட்டு என்னால் முடிந்த அளவு தொழுதது எனது நினைவில் உள்ளது. அனைத்துக்கும் மேலாக நான் அறிவு நிறைந்தவளாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். கடவுளே! என்னை அறிவு நிறைந்த ஒரு குழந்தையாக ஆக்கு என்று வேண்டிக் கொண்டேன்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், 7 ஆவது வகுப்புப் படிக்கும்போது, மதத்தைப் பற்றிய சந்தேகம் என்னும் விதையை முதன்முதலாக என் மனதில் ஒரு புத்தகம் ஊன்றியது. அறிவியல் மற்றும் கற்பனைக் கதைகளைப் படிப்பதில்  நான் அதிக விருப்பம் கொண்டிருந்தேன். இந்தப் புத்தகங்களைப் படிப்பது இயற்கையை மீறிய ஒரு சக்தியைப் பற்றிய நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் என்பது போல் தோன்றினாலும், எனது அனுபவம் அதற்கு முற்றிலும் நேர் மாறானதாக இருந்தது.  அவரது இருண்ட பொருள்கள் His dark materials என்னும் தொடர்நூல்களை பிலிப் புல்மேன் என்பவர் எழுதி வந்தார். மத அமைப்புகளில் இருந்த ஆழ்ந்த தவறுகளையும், அவற்றின் சிந்தனை வழிகள் பற்றியும்  அவர்  குழந்தைகளுக்கான தனது புதினங்களில் வெளிப்படுத்தினார். பேரச்சம் மற்றும் அழிவிற்கு தேவாலயம் கூறும் பாவம் பற்றிய அச்சமே பெரிதும் காரணம் என்று புல்மேன் கூறினார். அவரது புத்தகங்களை நான் திரும்பத் திரும்பப் படித்தேன். ஒவ்வொரு முறை அவ்வாறு படிக்கும்போதும் ஒவ்வொரு புதுப்புது நாத்திகக் கோட்பாடு பற்றி எனக்குத் தெரிய வந்தது.

கடவுளைப் பற்றியும், மதத்தைப் பற்றியும் நுணுக்கமாக நான் மேலும் மேலும் சிந்திக்கத் தொடங்கியபோது, அதிக ஆற்றல் கொண்ட ஒரு சக்தி பற்றிய நம்பிக்கை கொள்வது சரியானதும் ஏற்புடையதுமாக எனக்குத் தோன்றவில்லை. என் வயதை ஒத்த அனைவருமே தங்களையும், தங்களது ஆற்றல்களையும் கடவுள்முன் சரணடையச் செய்துவிட்டனர் என்பதை நான் கண்டேன். அப்போது என்னுடன்  சிறந்த நட்புக் கொண்டிருந்த எனது தோழி ஒரு கிறித்துவர் ஆவார். சில நேரங்களில் அவரது தேவாலயத்துக்கு என்னையும் அவர் அழைத்துச் சென்றிருக்கிறார்.  அவரது சமூகம் ஏசு கிறித்து, சிலுவை, கடவுள் மற்றும் எனக்கு முற்றிலும் அந்நியமான இதர பொருள்களைப் பற்றிப் பேசுவதை நான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பேன். அவை அன்பானவை யாகவும்,  வரவேற்கத்தக்கவையாகவும் இருந்தாலும்,  அவற்றிடையே காணப்பட்ட முரண்பாடுகள் என்னைத் திகைப்படையச் செய்தன.

உயர்நிலைக் கல்வி முடித்த பிறகு எனது தந்தையுடன் நான் நாத்திகம் பற்றிப் பேசினேன். ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய The God Delusion நூலை அவர் எனக்குப் படிக்கக் கொடுத்தார். எனது சந்தேகங்களை உறுதிப்படுத்தும், தெளிவுபடுத்தும் அறிவியலைப் பற்றிப் புரிந்து கொள்ள அந்த நூலை நான் ஆழ்ந்து படிக்கத் தொடங்கினேன். அவரது ஒரே ஒரு கருத்தை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாத்திகர்கள் முடிந்த அளவு மற்றவர்களுக்கும் The God Delusion பற்றிக் கற்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். ஒருவர் நம்பிக்கைக்கு ஆதரவாகவோ எதிராகவோ நாம் நடந்து கொள்ளவேண்டி யதன் அவசியம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்களிடம் பைபிள் நூலின் பிரசுரங்களைக் கொடுத்துப் பிரசாரம் செய்யும் கிறித்துவர்களின் செயலைப் போன்று அது இருக்கும் அல்லவா? குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள நாத்திகர்கள் பொதுமக்களால் வெறுக்கப்படும் சிறுபான்மை யினர் என்பதைத் தெரிவிக்கும் புள்ளி விவரங்களை அறிந்த  நான் எது பற்றியும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.

இவ்வாறு எனது நாத்திகக் கருத்தைப் பெரும்பாலும் எனக்குள்ளாகவே வைத்திருந்தேன். ஆன்மிகத்தைப் பற்றி விவாதிக்க என்னுடன் நட்பாயிருந்த கல்லூரியின் பைபிள் குழுக் கூட்டம் ஒன்றுக்கு நான் சென்றிருந்தேன். என்னைப் பற்றி விசாரிக்கும் நண்பர்களிடம் மட்டும் மதம் மற்றும் அச்சம் பற்றிய எனது கருத்துகளை  நான் கூறுவேன். வாஷிங்டன் நகரில் ஓர் ஆய்வு மற்றும் பயிற்சித் திட்டத்தில் நான் பங்கெடுத்துக் கொண்டிருந்த ஒரே ஒரு சமயத்தின் போதுதான் நான் நாத்திகவாதி என்று அழைக்கப்பட்டேன். கத்தோலிக்க மதம் பற்றியும், தென் அமெரிக்காவில் அதன் முன்னேற்ற இயல்பு பற்றியும் ஒரு சிறப்பு விருந்தினர் ஆற்றிய உரையை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.  முன்வரிசையில் அமர்ந்திருந்த நான் எனது முகத்தில் திகைப்பை வெளிப்படுத்தி இருந்திருக்கக்கூடும். அதனால், பேச்சாளர் என்னை அழைத்து எனது கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்டார். ஒரு கணம் தயங்கிய நான், பின்னர் தயக்கத்தை உதறிவிட்டு, கத்தோலிக்க தேவாலயத்தின் செயல்திட்டங்கள் முற்போக்குத் தன்மை கொண்டவை அல்ல என்ற எனது கருத்தை வெளிப்படுத்தினேன். கத்தோலிக்க மதம் உண்மையில் தென் அமெரிக்காவில் அடக்குமுறையைத்தான் மேற்கொண்டது  என்பதை மட்டும்தான் நான் கற்றறிந்தவை எல்லாம் எனக்குக் கூறியது என்பதால், இந்தப் புதிய விளக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினேன்.

எனது நம்பிக்கைகள் என்ன என்று அந்தப் பேச்சாளர் வெளிப்படையாக என்னைக் கேட்டார். கத்தோலிக்க தேவாலயத்தின் முற்போக்குக் கருத்துகளுக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்பதை என்னால் சிந்தித்துக் காண முடியவில்லை. ஒரு சிறு தயக்கத்திற்குப் பின், எனது நாத்திகக் கோட்பாட்டினைத் துணிவுடன் நான் அறிவித்தேன். அந்தப் பேச்சாளர் நான் கூறியதை நம்பாதவர் போல, உண்மையிலேயே உனக்கு எதிலுமே நம்பிக்கை இல்லையா என்று கேட்டார்.

மக்களை நான் நம்புகிறேன் என்று  பதிலளித்தேன்.  கற்பனையான ஒரு கடவுளைவிட, பரிவு, கருணை, துணிவு, படைப்பாற்றல் ஆகியவை மக்களை மேலும் ஆற்றல் நிறைந்தவர்களாக ஆக்குகின்றன என்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன். அது மட்டுமே எனக்குப் போதுமானது; தேவையானது என்று கூறினேன்.

நான் கூறியதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவரது முகமே காட்டியது. தனது புருவங்களை நெரித்த அவர் தொடர்ந்து மேற்கொண்டு உரையாற்றினார். அன்றைய தினம் அந்த உரையைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களில் பலர் என்னை அணுகி எனது நம்பிக்கைகள் பற்றிக் கேட்டனர். அது பற்றி விளக்கமாகக் கூறுவது எனக்குப் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவே இருந்தது. ஆனால், ஒரே ஒரு மனிதர் எனக்கு ஆன்மிக நம்பிக்கை நடைமுறை பற்றி எதுவும் தெரியவில்லை என்று கூறினார். முஸ்லிம்கள்கூட என்னைவிட மேலானவர்கள் என்று அவர் கூறினார்.

அய்ந்து வயதில் என்னை அறிவு நிறைந்தவளாக ஆக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்த நிகழ்ச்சி பற்றி அடிக்கடி நான் நினைத்துக் கொள்வேன்.

நிச்சயமற்ற சில நேரங்களில் – நான் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறாதபோதோ – ஒரு வாதத்தில் நான் தோற்றுவிடும்போதோ – ஸ்டீவ் ஜாப்ஸ் அல்லது ஜே.கே. ரவுலிங் போன்றவர்களைப் போன்ற பேரரறிவாளர்களைப் பற்றிப் படித்து நான் பொறாமை கொள்ளும்போதோ – இந்த நினைவு எனது மனதில் மேலோங்கி நிற்கும். கடவுளிடம் இப்பொழுதெல்லாம் நான் பிரார்த்தனை செய்வதில்லை என்றாலும், நான் இன்னும் சிறந்தவளாக விளங்க வேண்டும் என்று இன்னமும் நான் விரும்பிக் கொண்டுதான் இருக்கிறேன். மேலும் மேலும் கேள்வி கேட்டு அறிந்து கொள்ள இயன்றவளாக, ஆற்றல்கள் நிறைந்தவளாக, உந்துதல் நிறைந்தவளாக இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கடினமாக பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். அய்ந்து வயதில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த எனக்கும், இன்றைய நிலையில் உள்ள எனக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், எனது நம்பிக்கை வெளியே உள்ள கடவுளைப் பற்றி அல்லாமல் என்னுள்ளே இருக்கும் ஆற்றலைப் பற்றியதாக இருக்கிறது என்பதுதான்.

(தமிழில்: த.க.பாலகிருட்டினன்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *