பக்கீர் மஸ்தானின் அற்புத சித்தியும், மக்களின் பாமரத் தன்மையும்
(காலங்காலமாக சாமியார்கள் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றும் பழக்கம் இந்து மதத்தில் மட்டுமின்றி முஸ்லிம் மதத்திலும் உண்டு. இந்தச் சாமியார்கள் சிஷ்யர்களின் துணையோடு மக்களுக்கு உற்ற துன்பங்களைத் தங்களின் சித்திகளால் நீக்குவோம் எனக் கூறி ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் ஊதிக் கொடுக்கும் தீர்த்தம், மந்திரம் செய்துதரும் எலுமிச்சம்பழம் போன்றவைகள் புத்திர உற்பத்தி செய்யும் எனப் போதிக்கின்றனர். அப்படிப்பட்ட சாமியார்களில் ஒருவர்தான் இராமநாதபுரம் மாவட்டத்தில் நம்புதாளை எனப் பெயரிய கடற்கரையை அடுத்த ஒரு குடிசைக் கிராமத்தில் வாழும் சுமார் 30 வயதுடைய முஸ்லிம் வாலிபர் பக்கீர் மஸ்தானாகும். இப்பகற்கொள்ளைக் குழுவினரிடம் 18.08.1931 இல் திரு. முத்துசாமி என்பவர் தன் துணைவியாரோடு சென்று ஏமாந்த நிகழ்ச்சி சுவைபடக் கூறப்படுகிறது. இக்காலத்திலும் பிரேமானந்தாக்களும். நித்தியானந்தாக் களும் மக்களை ஏமாற்றிக் கோடிக் கோடியாக சொத்துச் சேர்க்கும்போது பாமரத்தனம் நிறைந்திருந்த அக்காலத்தில் இப்படிப்பட்ட சாமியார்களிடம் நம் பாமரமக்கள் ஏமாறுவது வியப்பன்று.)
திருப்பாலைக்கூடி சாமியார் எனப்படும் நம்புதாளைப் பக்கீர் மஸ்தானிடம் சென்ற 18.8.31இல் யானும் எனது துணைவியும் உறவினர் நண்பர் முதலாயவர்களுட்பட இருபதின்மர் நம்புதாளைச் சேர்ந்தோம்! மஸ்தானின் வரலாற்றினை விசாரித்துணர்ந்தபடியே சின்ன வண்ணான்குளம் எனப்படும் சேற்று நீர் குளத்தில் நீராடி ஆங்கு விற்கும் தகர டின்களை விலைக்கு வாங்கி பிறிதொரு குளத்தில் தீர்த்த மெடுத்து மஸ்தானின் இருப்பிடமாகிய கடற்கரை குடிசைப்புறம் சென்று அன்னவர் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம். அவ்வமயம் ஆங்கு மஸ்தானைக் காணவந்தவர்கள் ஆண் பெண் அடங்கலும் சுமார் 300 பேருக்குக் குறையாதிருக்கலாம். அதுகாலை மஸ்தான் கூட்டத்தைச் சார்ந்த முஸ்லிம் வாலிபர் ஒருவரால் ஒரு உபந்நியாசம் பழமையைத் தழுவிய முறையில் பக்கீர் மஸ்தான் பிறப்பு வளர்ப்பு வரலாற்றினை அரைமணி நேரமும், மக்களுக்குற்ற சகல நோய் நிவாரணியும் இஷ்டார்த்த சித்திகள் அளிக்கவல்லதென அவர் ஊதிக்கொடுக்கும் தீர்த்த விஷேடத்தைக் குறித்தும் அதனை உபயோகிக்கும் முறையினைப் பற்றியும் அரைமணி நேரமும், பின்னர் அம்மஸ்தானின் காரணமகிமைக் களஞ்சியம் என்ற புத்தகங்களையும், படங்களையும் பற்றிக்கூறுமுகத்தான் ஒரு மணிநேரமும் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படுகின்றது. வந்தார் மஸ்தான். தீர்த்தமோதிக் கொடுத்து 20, 30, 40 நாட்களென அதனை உபயோகிக்கும் கால அளவினை உடன் வரும் சிஷ்யர்களால் கூறப்படுகின்றது. பின்னர் திரும்பிப் பாராது வந்த வழியே சென்றிட வேண்டுமென்ற கட்டளை பிறக்கின்றது. இம்முறை பொதுவாக ரோகிகட்கும், குறிப்பாக ஆண்களுக்குமே. பிள்ளைவரம் வேண்டும் பெண்களுக்கு எலுமிச்சம் பழம் ஓதிக் கொடுத்தல் என்ற முறையொன்றுண்டு. அப்பழரசத்துடன் தீர்த்தமும் சேர்த்து ஏழு இரவு உபயோகிக்க புத்திர உற்பத்தியாகுமென்று போதிக்கப்படுகின்றது. மேற்கூறிய முறைகளின்படி சிறிதும் வழுவாது யானும் என்னுடன் சென்று வந்த ஆண், பெண் அனைவரும் குறிப்பிட்ட கால அளவுப்படி உபயோகித்ததில் கண்ட பலன் கானல் நீர் முயலின் கோடே. நோயாளர் நோய் நீங்கினார்களில்லை. மகளிர்கள் மக்கள் பேறடையுமார்க்கமுமில்லை. வஞ்சனையும், வயிற்றுப்பிழைப்பு நாடகமும், பகற்கொள்ளையுமே பக்கீர் மஸ்தானின் அற்புத சித்தியாமென்பதும் அறியாமையும், மூடநம்பிக்கையும் வைதீக மதக் கல்வியுமே நம்மிந்திய மக்களின் பாமரத் தன்மைக்குக் காரணம் என்பதிலும் சிறிதும் அய்யமில்லை.
குடிஅரசு-03.11.1931-பக்கம்:8
தகவல் – மு.நீ.சிவராசன்