பளீர்

டிசம்பர் 16-31

மனிதர்களுக்கு மட்டுமா உலகம்?

சிற்றுயிர்கள்தான் நம் வாழ்க்கையைச் சமநிலைப்படுத்துகின்றன. தேனீக்கள்தான் காட்டை விரிவு செய்கின்றன. தேனீக்கள் இல்லை என்றால் மகரந்தச் சேர்க்கையும் கிடையாது. காடுகளும் இல்லை. இத்தகைய சிற்றுயிர்கள் அழிந்துவிட்டால், இயற்கையின் பிணைப்பு அறுந்துவிடும். இயற்கையில் எங்கே தட்டினாலும் இன்னொரு பக்கம் அதிரும். உதாரணமாக, தலைப்பிரட்டையின் முக்கிய உணவு கொசு முட்டை. ஆனால், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் தலைப்பிரட்டைகள் அழிகின்றன. தலைப்பிரட்டைகள் அழிவதால் கொசுக்கள் அதிகரிக்கின்றன. நாமோ கொசுக்களை அழிப்பதற்குக் கொசு மருந்து அடித்து, மலேரியா பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த உலகம் வெறுமனே மனிதர்களுக்கு மட்டும் ஆனது இல்லை. பூச்சிகள், புழுக்கள், பாம்புகள் என எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது!

– தியோடர் பாஸ்கரன்,
சூழலியல் ஆய்வாளர்
நன்றி:ஆனந்த விகடன்(16-.11.2011)


 

பப்பாளி

பப்பாளி இலைச் சாற்றில் புற்று நோய்க் கிருமிகளை எதிர்க்கும் டி.எச்.1 வகை சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் இருக்கின்றன. இது புற்று நோயின் வேகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும் தன்மை கொண்டது என்ற கருத்து புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்பாளிப் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. மேலும், பல் தொடர்பான குறைபாடுகள், சிறுநீரகக் கற்களைக் கரைத்தல், ரத்த உற்பத்தியை அதிகரித்தல், நினைவாற்றலை அதிகப்படுத்துதல் போன்ற பல மருத்துவ குணங்களைக் கொண்ட பப்பாளிப் பழம் இயற்கையிலேயே விஷக் கிருமிகளைக் கொல்லும் தன்மையுடையது.


 

இந்து என்றால்…?

ஆறுமுகநாவலர் எழுதிய இந்து மத இணைப்பு விளக்கம் எனும் நூலை சமீபத்தில் படித்தேன். அறநிலையத்துறைப் பணிக்கு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் இந்தப் புத்தகத்திலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். அதில் இந்து மதம் பற்றி ஒரு விளக்கம். இந்து=இம்+து. அதாவது மற்ற உயிர்கள் இம்சிக்கப்படும் போது அதைத் தனக்கு வந்த துன்பமாக நினைத்துத் துக்கப்படுபவன் இந்துவாம். இது எந்த அளவுக்கு உண்மை? பல ஆயிரம் ஆண்டுகளாக சக மனிதனைத் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, தீண்டத்தகாதவன் என இம்சித்து வந்தவன் இந்துதானே? மிகப் பெரும் சமுதாயத்திற்குக் கல்வி கற்கும் உரிமையை மறுத்து வந்தவன் இந்துதானே? அவர்களுக்கு வழிபாட்டு உரிமையை மறுத்து வந்தவன் இந்துதானே? பெரியார், அம்பேத்கர் போன்ற சான்றோர் பலர் தலித்துகளை அழைத்துக் கொண்டு ஆலயப்பிரவேசம் செய்ய முற்பட்டபோது கத்தி, கம்பு, தடிகளுடன் தடுக்க முற்பட்டது இந்துதானே? பொட்டுக் கட்டுதல் எனும் கொடிய பழக்கத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பெண்களை விடுவிக்க வேண்டும் என இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் எனும் பெருமைக்குரிய முத்துலட்சுமி ரெட்டி தமிழக சட்டசபையில் பேசியபோது தீரர் எனும் அடைமொழி தாங்கிய சத்தியமூர்த்தி அதை எதிர்த்துப் பேசினாரே! அவர் ஒரு இந்துதானே? கணவன் இறந்து போனால் எரியும் அவனுடைய சிதையிலேயே மனைவியை உயிருடன் தள்ளி எரித்து மகிழ்ந்தது இந்துதானே? ஏன் சமீபத்தில்கூட திண்ணியம் என்ற ஊரில் தலித் ஒருவன் வாயில் மலத்தைக் கரைத்து ஊற்றியது இந்துதானே?

ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்ட போது அகம் மகிழ்ந்து பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டவர்கள் இந்துதானே? அந்தக் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருந்த சங்பரிவார் அமைப்புகள் இந்துக்கள்தானே? இப்படி யிருக்க எப்படி இந்து என்பதற்கு ஆறுமுகநாவலர் கொடுத்த விளக்கம் பொருந்தும்?

இந்து என்றால் பிறர் இம்சிக்கப்படும் போது அகம் மகிழ்ந்து துள்ளிக் குதிப்பவன் என்றே பொருள் கொள்ள வேண்டியதாகிறது.

– ராஜேஷ் தீனா


 

தமிழுக்கும் இடம்

பிரிட்டனின் தலைநகரமான லண்டனில் மிகப் பிரபலமான மொழிகளுள் முதல் 10 இடங்களுக்குள் தமிழ் மொழி இருப்பதாக லண்டன் மாநகர காவல்துறையினர் கூறியுள்ளனர்.

காவல் துறையினரை அழைக்கும் அவசர உதவி அழைப்புகளில் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் அவசர அழைப்புகளும், 12 ஆயிரம் அவசரம் சாராத அழைப்புகளும் தமிழ்மொழி பேசுபவர்கள் மூலமாக மேற்கொள்ளப் படுகின்றன.

மேலும், ஆங்கிலம் தவிர தமிழ் மொழியிலும் அவசர அழைப்புகளை அழைக்க முடியும் என அறிவித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் காவல் துறையினர் மேற்கொண்டனர்.

இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து பிரிட்டனுக்குச் சென்ற தமிழர்களின் மூலமாகவே தமிழ் மொழியின் பயன்பாடு முதல் 10 இடங்களுக்குள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *