உலகப் பகுத்தறிவாளர் – எபிகூரஸ் – 3

டிசம்பர் 16-31

மாறுதலுக்கு அடிப்படை

– சு.அறிவுக்கரசு

கிறித்துவத்தின் எதிர்ப்பு

யேசு கிறித்துவின் சீடர்களால் உருவாக்கப்பட்ட கிறித்துவ மதம், யேசுவின் இறப்புக்குப்பின் உயிரோடு எழுந்த கதையின் அற்புதத்தை வியந்து போற்றும் மதமாகும். சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட யேசு உண்மையில் செத்துப் போனாரா? அவர் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தபோது கல்லறையிலிருந்து தப்பிக்க உதவிய ரோமானியப் படைத்தலைவன் பிற்காலத்தில் கல்பாடோசியா எனும் ஊரில் கிறித்து மதகுரு ஆக்கப்பட்டவன். இத்தகைய கிறித்துவ மதத்தினர் எபிகூரசின் தத்துவங்களை எதிர்த்தனர். கிறித்துவ மறை நூல் பைபிளில் வரும் பல கதைகளின் மெய்த்தன்மையை எபிகூரனியம் எள்ளி நகையாடியது. யேசுவைக் கடவுளின் மகன் அல்ல என்றும் ரோமானியப் படை வீரனின் மகன் என்பதையும் செல்சஸ் என்பவர் தமது உண்மைப் பேச்சு (A TRUE DISCOURSE) எனும் நூலில் பதிவு செய்துள்ளார். உண்மையில் இச்செய்தி டால்முட் மற்றும் யூத நூல்களில் உள்ளவைதான். எபிகூரனியக் கொள்கைக்காரரான செல்சஸ் இதை எழுதியதால் எபிகூரஸ் எதிரியாகிறார்.

இன்பம் எங்கே?

உலகம், உயிர்கள் ஆகியவற்றின் தோற்றம், உருவாக்கம் ஆகியவற்றின் பின்னால், கருத்து ஏதும் கிடையாது எனும் பொருள்முதல்வாதம் எபிகூரனியம். கருத்துமுதல்வாதக் கொள்கை கொண்ட கிறித்துவம் இதனை எதிர்க்கிறது.

சாத்தானின் தூண்டுதலினால், இன்பம் அனுபவிக்க விரும்பிய ஏவாளும் ஆதாமும் கர்த்தரின் கட்டளையை மீறிப் போனார்கள் எனும்போது, அதே இன்பத்தைச் சொர்க்கம் அளிக்கிறது என்றால் விரும்பலாமா? என்ற கேள்வியை அம்புரோஸ் என்பவர் கேட்டார். இவரும் எபிகூரனியரே.

என்றாலும் பைசான்டியப் பேரரசு, ரோமப் பேரரசு ஆகியவற்றின் ஆதரவால், அதிகாரம், பணம் முதலிய செல்வாக்குப் பெற்றிருந்த கிறித்துவம் எதிர்க் கருத்துகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மத எதேச்சாதிகாரத்தின் விளைவாக எபிகூரனியம் வீறுநடை போட இயலாமல் நொண்டிச் செல்ல வேண்டியதாயிற்று. நாளடைவில் நலிந்து, நசிந்து போக நேரிட்டது.

அணுவைப் பற்றி…

மதவாதியான நிக்கோலஸ் என்பவர், எபிகூரசின் அணு பற்றிய கோட்பாடுகளைப் பற்றிச் சிறப்பாக எழுதினார் என்பதற்காக அவரைப் போதகர் பதவியிலிருந்து நீக்கி அவரது எழுத்துகளை அவரே எரித்துவிட வேண்டும் என்று தண்டனை விதித்தது மதம். அவரும் 25.11.1349 அவ்வாறே எரித்துவிட்டார்.

அறிவுக்கு எதிராக மதம் செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏற்கெனவே இல்லாத ஒன்றிலிருந்து மற்றொன்றை உருவாக்க முடியாது. சூன்யத்திலிருந்து கடவுள் உலகைப் படைத்தது, உயிர்களை உருவாக்கியது என்பதை ஏற்க மறுத்ததுதான் எபிகூரஸ் செய்த பாவமோ?

மதம், கடவுள், படைப்பு, மறு உலகம், சொர்க்கம், நரகம் போன்றவற்றை மறுத்தார் என்ற குற்றச்சாற்றைக் கூறுபவர்கள் அவர் கூறிய அறிவியல் கருத்துகளை இன்றளவும் ஏற்று வருகிறார்கள். அணுக்களால் ஆனதுதான் இயற்கை உருவாக்கங்களும் மற்றவையும் என்பது அவரின் கொள்கை. எபிகூரசுக்குப் பல ஆண்டுகள் முன்பிருந்த டெமாக்ரிடஸ் என்பாரின் கொள்கையும் அதுவே. ஆனால், டெமாக்ரிடஸின் கருத்தை அரிஸ்டாட்டில் போன்ற சிலர் மறுத்துக் குறை கூறினர். அணுக்கள் அனைத்தும் தத்தித்தத்திச் செல்கின்றன என்றும், அனைத்தும் ஒரே மாதிரியாக ஒரே வேகத்தில் நகர்கின்றன என்றும் கருதினர். எபிகூரசோ, அணு போன்ற மிக மிக நுண்ணிய பொருள்கள் மிக வேகமாகவோ ஒரே மாதிரியாகவோ அசைவதில்லை என்றார். அவை திசைமாறி அசைகின்றன என்றும் அண்டை அணுக்களின் அசைவைப் பொறுத்து அணுக்கள் இங்கும் அங்குமாக அசைகின்றன என்றார். அவை இயங்குவதைக் குறைத்துக் கொள்வதோ நிறுத்திக் கொள்வதோ இல்லை என்பதால் அண்டம் ஒருபோதும் நின்றுவிடாது – உலகச் சுழற்சி நின்றுபோகாது – எனக் கூறினார். இன்றைய அறிவியல் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது என்பது வியப்பாக இருக்கும்.

அண்டத்தின் வியப்புகள்

வேறு எந்தப் பொருளோடும் ஒப்புவமை காட்டக்கூடிய வகையில் அமைந்துள்ள அண்டம் எல்லையில்லாதது, பரந்து விரிந்துள்ளது. அணுக்களின் பெருக்கத்தைப் போலவே அவற்றிற்கான இடைவெளியும் அதிகமே. எனவே, அண்டத்தின் (நாம் இருக்கும்) இப்பகுதியில் உயிர்களும் தாவரங்களும் இருப்பதைப்போலவே, வேறு பகுதிகளிலும் இருக்காது என ஒருவரும் கூறமுடியாது என்றார்.

எபிகூரசின் அறிவியல் கருத்துகளை முழுவதும் ஏற்று எண்பித்துக் காட்டியவர் பியரி காகென்டி எனும் 17ஆம் நூற்றாண்டினர். கோபர்நிகசின் உலகம் சூரியனைச் சுற்றி வருகிறது எனும் கொள்கையைக் கூறிய கலிலியோவுடன் தொடர்பு வைத்திருந்தவர். எபிகூரசின் அறிவியல் கொள்கைகளை இவர் ஆதரித்ததை ஏற்றுக் கொண்டவர்கள் ஜான் லோக்கி, அய்சக் நியூட்டன், ராபர்ட் பாய்ல், ராபர்ட் ஹுக் போன்றோர் ஆவர். பூமியின் ஈர்ப்பு விசைபற்றி ஆய்வு செய்த அய்சக் நியூட்டன், எபிகூரசின் அணுக் கொள்கையால் கவரப்பட்டார். என்றாலும், பழுத்த ஆத்திகரான நியூட்டன் எபிகூரசின் நாத்திகக் கருத்துகளிலிருந்து விலகிச் சென்றார். கடவுளின் பங்கை நுழைத்து அறிவியல் பேசினார்.

தனது ஆத்திகக் கருத்துகளை அறிவியலில் புகுத்திய நியூட்டனின் அபத்தம் எதில் முடிந்தது என்றால் ரசவாதத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. மண்ணைப் பொன்னாக்கலாம், இரும்பைத் தங்கமாக்கலாம் என்கிற பைத்தியக்கார நம்பிக்கையை உண்டு பண்ணியது.

அறிவொளியின் ஆரம்பம்

அமெரிக்காவின் அதிபராக இருந்த தாமஸ் ஜெபர்சனின் கொள்கைகளை உருவாக்கிட எபிகூரனியம் பெரிதும் உதவியது. மத எதிர்ப்பு, விடுதலை உணர்வு, அடிமைகளின்பால் அவர் காட்டிய அன்பான பரிவு முதலியவற்றிற்கு அவையே அடிப்படை. பியரி காகென்டியின் காலம் முதல் தாமஸ் ஜெபர்சன் காலம் வரையிலான பருவம் அறிவொளிக் காலம்   (ENLIGHTENMENT)”  எனப்படுகிறது. இந்தக் காலத்தில் அறிவியலுக்குப் பொருந்தாத ஜோசியம், ரசவாதம் போன்றவை புறந்தள்ளப்பட்டன. இத்தகைய மாறுதல்களுக்கு அடித்தளம் அமைத்தவை எபிகூரசின் தத்துவங்களே.

எபிகூரசின் தத்துவங்கள் அவர் காலத்திய அரசியலாளர்களால் எதிர்க்கப்பட்டன. பின்னர், கிறித்துவர்களால் எதிர்க்கப்பட்டன.  எபிகூரனியத் தத்துவங்களைப் பயின்று ஏற்றுக் கொண்டவர் எவரும் மாற்றுத் தத்துவங்களை மறுதலித்தனர்; ஏற்க மறுத்தனர். ஆனால், மாற்றுத் தத்துவங்களை ஏற்றவர்கள், பின்னர் எபிகூரனியத்தை ஏற்றனர். ஏன்? ஓர் ஆணை அலியாக்கலாம். ஆனால், ஓர் அலியை ஆணாக்க முடியாது என்பதைப்போல, எபிகூரனியம் அமைந்துள்ளது என்பார்கள்.

அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கும் சிலர் அவரின் தத்துவங்களை சிற்றின்பம் என ஒதுக்க முற்படுகின்றனர். மறுஉலகில் அதே இன்பத்தைப் பெறுவதற்காக இம்மெய்யுலகில் வெறுப்பதுபோல் நடிக்கும் வேடதாரிகள்! அவ்வளவே! அறிவுலகம் அவரை ஏற்றிப் போற்றும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *