தலையங்கம் : என்று விடியும் இந்த மடமை? அடாடா என்ன அற்புதமான அரிய அறிவியல் கண்டுபிடிப்பு!

மே - 01-15 (2021)

 

திருமலை அஞ்சனாத்ரி மலைதான் அனுமன் பிறந்த திருத்தலம். ஆதாரங்களாக சில ஆவணங்களை வெளியிட்டு திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு.

அனுமன் பிறந்த இடம் குறித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்குவர, ஸ்ரீவெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழக துணைவேந்தர் சுதர்சன சர்மா தலைமையில், தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் முரளிதர் சர்மா, பேராசிரியர் சதாசிவ மூர்த்தி, இஸ்ரோ விஞ்ஞானி ரேமள்ள மூர்த்தி, ராமகிருஷ்ணா, மாநில தொல்பொருள் ஆராய்ச்சித் துறை இணை இயக்குநர் விஜய்குமார் ஆகியோர் தலைமையில் ஒரு கமிட்டியை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆ-ம் தேதி நியமனம் செய்தார்.

அனுமன் எங்கு பிறந்தார்? அவர் பிறந்ததற்கான ஆதாரங்கள் என்ன என்பது குறித்து புராண, இதிகாசங்கள், சாசனங்கள், கல்வெட்டுகள், மற்றும் ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களை மையமாக வைத்து, பூகோள ரீதியான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். அதன்படி, இக்குழுவினர் கடந்த 4 மாதங்களாக தகுந்த ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில், அஞ்சனா தேவியின் மைந்தனான அனுமன் பிறந்த இடம் திருமலைதான் என்பதை இக்குழுவினர் ஆதாரங்களாக சில ஆவணங்களுடன் தேவஸ்தான அதிகாரி ஜவஹர் ரெட்டியிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இந்த ஆதாரங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு ராம நவமி தினமான நேற்று திருமலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டது. தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் முரளிதர் சர்மா பேசுகையில், “வெங்கடேஸ்வர மகாத்மியம், வராக புராணம், கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல புராண, இதிகாசங்களில் அஞ்சனா தேவியின் மகனான அனுமன் அஞ்சனாத்ரியில் பிறந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அஞ்சனாத்ரி மலை திருமலையில் உள்ளது. சப்த மலைகளில் அஞ்சனாத்ரியும் ஒன்றாகும். இதனால்தான் மூலவர் ஏழுமலையான் என்றழைக்கப்படுகிறார். திரேதா யுகத்தில் மாதங்கி மகரிஷியின் அறிவுரையின்படி, அஞ்சனா தேவி, வெங்கடாசலத்திற்கு வருகிறார். பின்னர், இங்குள்ள புஷ்கரணியில் குளித்து, வராக சுவாமியை தரிசித்து விட்டு, ஆகாச கங்கை அருகே பிள்ளை வரம் வேண்டி கடும் தவம் புரிகிறார். பல ஆண்டுகள் தவத்தின் பலனாக வாயுபகவானின் அருளோடு அனுமன் அவதரிக்கிறார். அவர் பிறந்த இடம் திருமலையில் உள்ள ஜபாலி தீர்த்தமாகும். அங்குதான் அனுமன் பிறக்கிறார். இதனால்தான் இது அஞ்சனாத்ரி மலை என பெயர் பெற்றது. கம்பர், வால்மீகி, வேதாந்த தேசிகர் என பலர் அஞ்சனாத்ரி மலையில்தான் அனுமன் பிறந்தார் என குறிப்பிட்டுள்ளனர். மேலும், 1800ஆ-ம் ஆண்டு, திருமலை கோயில் குறித்து வட ஆற்காடு மாவட்டத்தின் முதல் ஆட்சியர் ஸ்டாடன் என்பவர் கூட, அஞ்சனாத்ரி மலை என்றே குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று திருமலையில் 1491ஆ-ம் ஆண்டு மற்றும் 1545ஆ-ம் ஆண்டு எழுதப்பட்ட கல்வெட்டுகளிலும் அனுமன் இங்குதான் பிறந்தார் என குறிப்பிட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு கல்வெட்டும் இதனையே குறிப்பிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் 20 செப்பேடுகளிலும் அனுமன் பிறந்த ஊர் அஞ்சனாத்ரி என்றே குறிப்பிடப்படுகிறது என்றார்.

தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி பேசுகையில், அனுமன் பிறந்த இடம் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் உள்ள ஜபாலி பகுதியில்தான் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. விரைவில், அங்குஅனுமனுக்கு கோயில் எழுப்பப்படும். இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவில் விவாதித்து, ஆந்திர அரசின் அனுமதியோடு ஜபாலி தீர்த்தம் விரிவாக்கம் செய்யப்படும்’’ என கூறினார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்ததோடு, ரங்கநாயக மண்டபத்தில், தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

– ‘தமிழ் இந்து’ – திசை – பக்கம் 11 (22.4.2021)

நாட்டில் கொரோனா இரண்டாம் அலை மக்கள் பலரையும் படாதபாடு படுத்துகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை _ கூடுதல் சப்ளை வேண்டுமென எங்கும் கூக்குரல்.

தடுப்பூசியும் பற்றாக்குறை ஏக்கம். சுடுகாடு இடுகாடுகளில் கொரோனா பிணங்களை எரிப்பதற்கும் புதைப்பதற்கும் கியூ வரிசை _ இடமில்லாத நிலை.

பல வட மாநிலங்களில் படுக்கைகளும் டாக்டர்களும் பற்றாக்குறை _ நிதிப் பற்றாக்குறை.

திருப்பதி அர்ச்சகர்கள் பலருக்கும் கொரோனா. சிலர் மரணமடைகின்ற சோகமான நிலை! நம் நாடு எங்கே போகிறது?

என்று விடியும் இந்த மடமை?

திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி எதற்குப் பயன்படும்? பகுத்தறிவு விஞ்ஞான அடிப்படையில் இந்த ஆய்வுகள் நிற்குமா?

மத்தியில் ஆர்.எஸ்.எஸ்., _ பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன், புராணத்தை வரலாற்று (History) உண்மையாகவும், மதக் கருத்துகளையும் கூற்றுகளையும் தத்துவம்  (Philosophy) ஆகவும், போலி விஞ்ஞானமான ஜோதிடம், வாஸ்து (pseudo science) போன்றவற்றை எல்லாம் விஞ்ஞானமாக scienceஆகவே மாற்றிடும் “ரசவாத முயற்சிகளை _ திரிபுவாதங்களைத் திட்டமிட்டே செய்துப் பாட புத்தகங்களில் நுழைத்து, மாணவர்களின் அறிவைப் பாழ்படுத்துகின்றன!

ஒரு மலைக்குப் பெயர் இருப்பதாலேயே அது ஆதாரமாகி விடுமா?

காற்றுக்குப் பிள்ளை பிறக்க முடியுமா?

காற்றுக்கும் கர்ப்பம் தரிப்பதற்கும் என்ன சம்பந்தம்?

ஆட்சி, அதிகாரம் இன்று தங்களிடம் சிக்கிக் கொண்ட ஒரே காரணத்தால், எப்படியெல்லாம் கூத்தடிக்கிறார்கள் பாருங்கள். இஸ்ரோ விஞ்ஞானிக்கு அனுமார் எங்கே பிறந்தார் என்பதைக் கண்டுபிடிப்பதா முக்கியம்? குரங்கு பிறப்பு உற்பத்திக்குச் செல்ல வேண்டுமா? சார்லஸ் டார்வின் சித்தாந்தம் _ கண்டுபிடிப்பை கேள்விக்குரியாக்கத்தானே இந்த விந்தையான வித்தைகள் _ நம்ப முடியுமா?

– கி.வீரமணி

                                                                     ஆசிரியர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *