முகப்புக் கட்டுரை : கரோனா இரண்டாம் அலை எச்சரிக்கை!

ஏப்ரல் 16-31,2021

சந்தோஷ்

கரோனாவின் கோரப்பிடியிலிருந்து மீண்டுவிட்டதாக நம்பி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கிய சில மாதங்களுக்குள், கரோனாவின் இரண்டாம் அலை பரவியுள்ளது. 2020 அக்டோபர் வரை கரோனா வைரஸ் எவ்வளவு வேகமாகப் பரவியதோ, அதைவிட இப்போது மிக வேகமாகப் பரவிவருகிறது. அந்தக் காலகட்டத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர 32 நாள்கள் தேவைப்பட்டன. ஆனால், இரண்டாவது அலைக் காலத்தில் 17 நாள்களில் இதே அளவை எட்டிப் பிடித்திருக்கிறது கரோனா பரவல்.

முதல் அலையின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டதுபோல் தெரியவில்லை. நிலைமையின் தீவிரம் புரிந்த பின்னரும், தொடரும் அரசின் மெத்தனப் போக்கு கவலையளிக்கிறது.  .  முதல் அலை ஏற்பட்டபோது, பெரும்பாலான மாநிலங்களில் ஒரே மாதிரியான பாதிப்பு இருந்தது. இந்த முறை 8 மாநிலங்களில் மட்டும் 84 சதவிகிதம் தொற்று பதிவாகியிருக்கிறது. இந்தப் பட்டியலில் தமிழகமும் அடங்கும். தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலும் திருவிழா காலமும் நோய்ப் பரவலை மேலும் அதிகரித்துள்ளது. வேற்றுருவ வைரஸ் பரவல், முந்தைய வைரஸ் பரவலைவிட அதிக வேகத்தில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

அண்டை மாநிலமான கேரளம், இந்த நோயைக் கட்டுப்படுத்தும் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையுடன் அறிவியல் பூர்வமாகவும் அணுகுமுறையை வெளிப்படுத்தி, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடனும் அறிவியல் பூர்வமாகவும் செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு, தொடக்கத்திலிருந்து இருந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு சரிசெய்ய முடியாத ஒன்றாகவே இன்றுவரை தொடர்கிறது.

இரண்டாம் அலைக்கு காரணம் என்ன?

இந்தியாவின் இரண்டாவது அலை மக்கள் குறைந்த எச்சரிக்கையுடன் இருப்பதாலும், அரசாங்கத்தின் தெளிவற்ற கட்டுப்பாடுகளினாலும் தூண்டப்படுகிறது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஏறக்குறைய ஓராண்டாக தங்கள் வீடுகளில் முடங்கிய பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் கூட்டங்கள், திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்களில் மக்கள் திரளாக ஒன்றுகூடத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த மூத்த அரசு அதிகாரி ஒருவர், “இந்தியா கடுமையான, தீவிரமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது, முழு நாடும் ஆபத்தில் உள்ளது’’ என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, கடந்த சில வாரங்களில், மதக் கூட்டங்கள், திருவிழாக்கள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கின்றன. இவற்றில் பங்கேற்கும் பெரும்பாலானோர் முகக் கவசம் அணிவதில்லை.

“சில மாதங்களுக்கு முன்புவரை அதிக அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த மக்கள், தற்போது அவற்றை காற்றில் வீசியுள்ளது என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது’’ என்கிறார் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உயிரியக்கவியல் மற்றும் தொற்றுநோயியல் பேராசிரியர் பிரமார் முகர்ஜி. ஆனால், இவை மட்டும் பிரச்சினைக்கு முழுமையான காரணமாக இருக்க முடியாது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னால் அந்த வைரஸின் புதிய வகை திரிபுகள் இருக்கக்கூடும் என்று வல்லுநர்கள் நம்பினாலும் அதை அரசு இதுவரை ஏற்கவில்லை.

“தற்போது அதிகளவில் பரவி வருவது கரோனா வைரஸின் புதிய திரிபா என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில், அவை இதற்கு முன்பிருந்த திரிபை விட அதிவேகமாகப் பரவக்கூடியதாகவும், முந்தைய நோய்த் தொற்றுக்குப் பிறகு ஒருவரது உடலில் உருவான நோயெதிர்ப்புத் திறனை மீறி செயல்படக்கூடியதாகவும் இருக்கலாம்’’ என்று மருத்துவர் பனாஜி கூறுகிறார்.

இந்தியா செய்ய வேண்டியது என்ன?

கொரோனா வைரஸ் மென்மேலும் பரவாமல் தடுக்க நாடுமுழுவதும் வைரஸின் புதிய திரிபு பரவலை கண்டறியும் பணிகளை முடுக்கிவிடுவதுடன், நோய்த்தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் மற்றும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், முதலாம் அலையின்போது அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகமாக உள்ள பகுதிகளில், அதை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு சுகாதாரக் கட்டமைப்பு தள்ளப்பட்டால், அங்கு பொது முடக்கத்தை அமல்படுத்த பரிசீலனை செய்யலாம்.

“கரோனா வைரஸ் பரவல் மிகவும் குறைவாக இருந்தபோது, இந்தியா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தாததை எண்ணி நான் விரக்தி அடைகிறேன்” என்று மருத்துவர் முகர்ஜி கூறுகிறார்.

“நோய்த்தொற்று பரவல் உச்சத்தில் இல்லாதபோது தடுப்பூசி செலுத்துவதைச் செயல்படுத்துவது எளிமையாக இருக்கும். ஆனால், தற்போது சுகாதார அமைப்புகள், தடுப்பூசி பணிகள் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல் என இருவேறு அறைகூவல்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது.”

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

———-கரோனாவைத் தடுத்திட தடுப்பூசி அவசியம். மிகவிரைவாக, குறுகிய காலத்தில், குறைந்த பட்சம் 70 விழுக்காடு மக்களுக்காவது தடுப்பூசியை வழங்கிட வேண்டும். அப்பொழுதுதான் தடுப்பூசிகள் மூலம் கரோனா பரவலைத் தடுக்க முடியும். இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறுகையில்,

¨           கரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ளத் தேவையான முகக் கவசம், பாதுகாப்புக் கவச உடைகள், கிருமி நாசினி, கை சுத்திகரிப்பான், வெப்பமானி, ஆக்சிஜன் அளவைமானி(pulse oxy meter) போன்றவற்றையும், ரெம்டிசிவிர், எனாக்சபிரின் போன்ற முக்கிய மருந்துகள் பதுக்கப்படுவதைத் தடுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப் பொருள்களின் விலை அதிகரிக்காமலும், தரமான பொருள்கள் தட்டுப்பாடின்றி எளிதில் கிடைக்கவும் மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும்.

¨           கரோனாவைத் தடுத்திட தடுப்பூசி அவசியம். மிகவிரைவாக, குறுகிய காலத்தில், குறைந்த பட்சம் 70 விழுக்காடு மக்களுக்காவது தடுப்பூசியை வழங்கிட வேண்டும். அதை முற்றிலும் இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

¨           கரோனா முதியவர்களையும், இணை நோயர்களையும் அதிகம் பாதிக்கிறது. இரண்டாவது அலை இளம் வயதினரையும், இணை நோயற்றவர்களையும் கூட பாதிக்கிறது. இந்த இளம் வயதினர் வேலை நிமித்தமாக வீடுகளுக்கு வெளியே அதிக நேரம் இருக்கின்றனர். இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவும் ஆபத்தும் அதிகம். எனவே 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும்.

¨           அறிவியலுக்கு எதிராகவும் தடுப்பூசிகளுக்கு எதிராகவும் தவறான கருத்துகளை மக்களிடம் பரப்புபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

¨           கரோனா தொற்றின் அறிகுறிகள், தற்பொழுது அது உருவாக்கும் புதிய அறிகுறிகள், தடுப்பூசியின் பயன்கள், தடுப்பூசி போடப்படும் இடங்கள் போன்றவை பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

¨           திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் செயல்பாட்டை முற்றிலும் தற்காலிகமாக தடை செய்ய வேண்டும். மதுக் கடைகள் மூடப்பட வேண்டும்.

¨           ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கருவிகளின் அடக்க விலை 200 ரூபாய் அளவிற்கு குறைந்துவிட்ட நிலையில், பரிசோதனைக்கான கட்டணம் 1500 ரூபாய் வரை தமிழகத்தில் உள்ளது. அதை பிற மாநிலங்களைப் போல 400 ரூபாய் வரை குறைத்திட வேண்டும்.

¨         Complete Blood Count, C Reactive Protein    போன்ற எளிதில் எல்லா இடங்களிலும் செய்யக்கூடிய, கட்டணமும் குறைவான இரத்தப் பரிசோதனைகளை அடிப்படையாக கொண்டு கரோனா நோயாளிகளை வகைப்படுத்த வேண்டும். அப்பரிசோதனைகளை 2 நாள்களுக்கு ஒருமுறை செய்வதன் மூலம் நோய் தீவிரமடைகிறதா அல்லது குறைகிறதா என்பதை அறிய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *