கேள்வி : மின்சாரக் கட்டணத்தைத் தயவுதாட்சண்ய மின்றி உயர்த்தும் ஜெ.அரசு, மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய முன்நடவடிக்கை ஏதேனும் எடுத்துள்ளதா? – தி.க.கூத்தன், சிங்கிபுரம்
பதில் : பழைய தி.மு.க அரசின்மீது பழிபோட்டதைத் தவிர, வேறு ஆக்கரீதியான பணிகள்-மின் தட்டுப்பாட்டைப்போக்க ஏதும் செய்யாத தால் இப்போது மின்வெட்டு அறிவிக்கப் பட்டது. எல்லாம் சேர்ந்து 7 மணி நேரம் ஆனதுதான் சாதனை… அந்தோ வாக்களித்த மக்களே……!
கேள்வி : உயர்ந்த பதவிகளை வகிக்கும் அடித்தட்டு மக்கள் தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தாமல் கடவுள்களுக்குக் காணிக்கை செலுத்துவது ஏன்?
– அகவலன், சென்னை-78
பதில் : தமிழர்களின் புத்தி ஆரியத்திற்கு அடகு வைக்கப்பட்டதன் அப்பட்ட விளைவு இது. அதை அய்யாவும், டாக்டர் நாவலர் நெடுஞ்செழியனும்கூட மேடைகளில் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளனரே!
கேள்வி : இந்தியாவிலேயே குஜராத்தில் மட்டும்தான் நல்லாட்சி நடக்கிறது, இதற்கு நரேந்திர மோடிதான் காரணம் என்று அத்வானி கூறியுள்ளாரே….!
– சி.சுவாமிநாதன், ஊற்றங்கரை
பதில் : வேலிக்கு ஓணான் சாட்சி என்ற கிராமியப் பழமொழியை நினைவுபடுத்துகிறது இது. அதுகூட உதட்டளவிலிருந்துதான் – அத்வானி உள்ளத்திலிருந்து அல்ல.
கேள்வி : கூடங்குளம் அணுமின் திட்டம் குறித்து அப்துல்கலாம் கூறிய கருத்து சரியா-தவறா? – தி.பொ. சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில் : சரியானதுதான்_அணுமின் நிலையமே இல்லாமல் இனி வருங்காலத்தில் எந்த நாடும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது. ஆனால் மக்களின் நியாயமான பாதுகாப்புக்கு முன்னுரிமை தேவை! தேவை!!
கேள்வி : முதியவர்களை இளையவர்கள் வாழ்த்து வதற்கு வயது ஒரு தடையாக இருக்கிறதே-…? பி.சுந்தரம், மயிலாடுதுறை
பதில் : வாழ்த்த வயதில்லை என்று சில இளையர்கள் கூறுவது சரியான கருத்தல்ல. வாழ்த்த வயது தேவை அல்ல; மனம்தான் தேவை. அது இருந்தால் யாரும் வாழ்த்தலாமே!
கேள்வி : ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதா கொண்டுவரப் போராடும் ஹசாரே, மகளிர் மசோதாவிற்காகப் போராடுவாரா? தி. இரமணன், தண்டையார்பேட்டை
பதில் : நல்ல நெற்றியடிக் கேள்வி. அவருக்கு விளம்பரம் அதில் அதிகம் கிடைக்கும் என்றால் அதற்கும் பிறகு எதற்கும்கூட அவர் போராடக்கூடும்! பா.ஜ. க.வின் முகமூடி அவர் என்பதை நாடு மெல்ல மெல்ல ஆனால் உறுதியாகக் கண்டு வருகிறது.
கேள்வி : ஈழத்தில் எப்படி தமிழரின் அடையாளங்கள் மறைக்கப்பட்டனவோ அதே பாணியில் ஆரிய மங்கை ஜெயலலிதா தமிழ்நாட்டில் செய்து கொண்டிருப்பதை இங்குள்ள மற(ர)த் தமிழர்கள் எப்போது உணரப் போகிறார்கள்? – காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில் : காலம் பல இனங்களின் கண்களைத் திறக்கத் தவறவில்லை. தமிழனின் கண்களும் கடைசியாகத் திறக்கும் என்று நம்புவோமாக!
கேள்வி : கோடி கோடியாகச் செலவு செய்து கோவில் கோவிலாகச் சுற்றிய எடியூரப்பா சிறைக்குச் சென்றதுபற்றி? – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : கடவுளை நம்பினோர் கைவிடப்ப(ட்)டார்! என்று கேள்விப்பட்டதைப் புரிந்து கொண்டுதான் சிறையில் வந்தபின் – ஜாமீனும் பகவான் அருளினால்தானே!
கேள்வி : இந்து அறநிலையத் துறையில்தான் அதிக அளவில் ஊழல் நடைபெறுகிறது என்று இராம.கோபாலன் கூறியுள்ளாரே, இதுதான் இந்திய ஆன்மீகத்தின் லட்சணமா? ஜே.அய்.காந்தி, எரும்பி
பதில் : ஆன்மீகம் என்பதே புரட்டு. மதவாதிகளுக்கு எதிர்க்கடைச் சண்டைகள் இப்படி வெடிக்கின்றன. முதல் அமைச்சர் விசாரணைக் கமிசன் அமைப்பாரா? இராமகோபாலய்யர் போடுவாரா அதற்கும்?
கேள்வி : ஒரு சூத்திரரால் வரி போடாமல், பணி நீக்கம் செய்யாமல், கட்டண உயர்வு இல்லாமல் திறமையாக ஆட்சி நடத்தும்போது, தானே அறிவு ஜீவி என்று தம்பட்டம் அடித்துக் கொள்வோரால் அது முடியாமல் போனது எதனைக் காட்டுகிறது? க. ராசன், நெய்வேலி
பதில் : சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்! விளம்பரப் பலூன் வெடிக்கத் துவங்கிவிட்டது.. புரிந்து கொள்ளுங்கள்..