இந்தியத் தடகள அரங்கில் நமக்குக் கிடைத்திருக்கும் புதிய நம்பிக்கைக் கீற்றாய், திருச்சியின் வயல்வெளிகளில் ஓடிக் கொண்டிருந்த கால்கள் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 24ஆவது தேசிய பெடரேஷன் கோப்பைக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு பெண்கள் பிரிவு 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தச் சாதனையின் சிறப்பான விஷயம் தனலட்சுமியை இந்திய ஒலிம்பிக் அமைப்பினரையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அது, 100 மீட்டர் பந்தய தூரத்தை 11.39 விநாடிகளில் கடந்தார். 200 மீட்டர் ஓட்டத்தில் 23.26 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய சாதனை படைத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்ததுதான். இந்தியாவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீராங்கனைகளான ஹீமாதாஸ், மூட்டிசந்த் ஆகிய இருவரின் சாதனையையும் முறியடித்ததுடன், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் 23 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சாதனையை முறியடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். தற்சமயம் இந்தியாவின் அதிவேகப் பெண்ணாகியுள்ள தனலட்சுமி, தான் தடகளப் பாதைக்கு வந்தது பற்றிக் கூறுகையில்,
“எனக்கு அம்மா மட்டும்தான். என் சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட்டார். எனக்கு ஒரு சகோதரி இருக்கிறார். அம்மா வயலில் வேலை செய்துதான் எங்களை வளர்த்தார். எங்களை வளர்த்து சாதனை செய்ய வைப்பதற்காக அம்மா நிறைய கஷ்டங்களை மனதோடு போட்டுக் கொண்டு எங்களை வளர்த்தார். வெளியே ஒரு போட்டிக்குப் போக வேண்டுமென்றால் குறைந்தது 5000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை செலவாகும். அதற்காக, தன் நகையை அடகு வைத்து இழந்துள்ளார். வட்டிக்கு வாங்கியும் காப்பாற்றினார்.
ஆரம்பத்தில் பள்ளியில் ‘கோ கோ’தான் விளையாடத் தொடங்கினேன். அதன் பிறகு தடகளம் மீதான ஆர்வம் கொண்டு, நான்கு ஆண்டுகளாகக் கடுமையான பயிற்சி மேற்கொண்டேன்.
பெண்கள் மட்டுமே இருக்கும் வீட்டில் ஒரு பிள்ளையை விளையாட்டுத் துறைக்கு அனுப்ப வேண்டுமா என்று பலரும் கேட்பார்கள். ஆனால், அதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் அம்மா என்னை அனுமதித்தார். அதற்கு அசாத்திய நம்பிக்கை வேண்டும். அவரது நம்பிக்கையைக் காப்பாற்ற கடுமையாக உழைத்தேன். அம்மாவின் கனவும் நனவானது. வரும் காலங்களில் இன்னும் கடினமாக உழைத்து, ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்றேன். இந்தியாவுக்கு ஒரு தங்கப் பதக்கம் வென்று தருவதே லட்சியமாகக் கொண்டுள்ளேன்.
இந்த வெற்றிக்கு எனது பயிற்சியாளர் மணிகண்ட ஆறுமுகம் அவர்களின் பங்களிப்பும் முக்கியமானது. என்னை மாநில அளவிலான போட்டிகளிலிருந்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற ஊக்கப்படுத்தி அதற்கான சிறப்புப் பயிற்சியையும் கொடுத்தார். பொருளாதாரரீதியாகப் பல நெருக்கடிகள் இருந்தன. நண்பர்களும், உறவினர்களும் அவர்களால் முடிந்த உதவிகளையும் செய்துள்ளனர்.
வெற்றிப் பதக்கங்களுடன் திருச்சிக்கு வந்த எனக்கு சகவீரர்கள், வீராங்கனைகள், பொதுமக்கள் அளித்த வரவேற்பும் பாராட்டும் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன். அதுவே என் லட்சியம்’’ என்கிறார் நம்பிக்கையுடன். உலக தடகளரி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது பெருமைப்பட வேண்டிய செய்தியாகும். கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சாதிக்க முடியும் என்னும் தைரியத்தை நமக்கு வெளிக்காட்டும் தனலட்சுமியை நாமும் வாழ்த்துவோம்!
(தகவல் : சந்தோஷ்)