கவிஞர்.கலி பூங்குன்றம்
“கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில், அவர் பிற இனத்தவரை மணந்து கொண்டால் வழங்கப்படும் நிதி உதவி 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு 5 கிராம் (22 கேரட்) தங்கம் வழங்கப்படும்’’ என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
குருமூர்த்தியின் ‘துக்ளக்’கும், ஆர்.எஸ்.எஸின் ‘விஜயபாரதமும்’, பார்ப்பனர் சங்கமும் அடேயப்பா… எவ்வளவுக் குதி குதிக்கிறார்கள் _ இடுப்பு வேட்டி அவிழ்ந்து கீழே விழாததுதான் பாக்கி.
குடும்பியும் பூணூலும் கோரத் தாண்டவம் ஆடித் தீர்க்கின்றன.
தி.மு.க.வைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதிய அறிவிப்பும் கிடையாது.
தி.மு.க. ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது, “அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்’’ என்ற பெயரில் நடைமுறையில் உள்ள திட்டம்தான். அந்தத் திட்டம் மேலும் செழுமைப்படுத்தப்படுகிறது _ அவ்வளவுதான்!.
தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், “இந்துக்கள் இந்துக்கள்; இந்துக்களே ஒன்று சேருங்கள்!’’ என்று தேவைப்படும் பொழுதெல்லாம் கூப்பாடு போடும் இந்தக் கும்பல் _ “ஜாதி மறுப்புக் கண்ணோட்டத்தில் ஒரு திட்டத்தை அறிவிக்கும்போது, ‘ஆகா, அருமையான திட்டம்’ எங்களுக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லை. நாம் எல்லோரும் இந்துக்களே, இந்துக்களே’’ என்று வீதிகளிலும் சந்து முனைகளிலும் கும்மாளம்போட வேண்டாமா?
‘எங்களைப் பார்த்து ஜாதிவெறியர்கள், மதவெறியர்கள் என்று மூர்க்கத்தனமாக கூப்பாடு போடும் நாஸ்திகக் கூட்டமே! கருப்புச் சட்டைக் கூட்டமே, ஈ.வெ.ரா.வின் சீடர்களே! இதோ பாருங்கள், தி.-மு.க. கூறும் ஜாதி ஒழிப்புத் திட்டத்தைப் பூணூல் சத்தியமாகக் கூறுகிறோம், ஆதரிக்கிறோம், ஆதரிக்கிறோம்’ என்று அண்டங்குலுங்க ஆர்ப்பரித்து வரவேற்க வேண்டாமா?
அப்படி எதிர்பார்க்க முடியாது -_ முடியவே முடியாது அவர்களிடம்; இந்து மதத்தின் ஆணிவேரே வர்ணதர்மம்தானே? ஜாதி தர்மம் தானே? ஜாதியிலேயே கை வைத்து விட்டால் நாங்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்போமா எனும் தோரணையில் பார்ப்பனர்கள் கூக்குரல் போட ஆரம்பித்துவிட்டனர்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ள ஜாதி ஒழிப்புத் திட்டமான கலப்பு மணம் செய்து கொள்ளும் இணையர்க்கு ரூ.60 ஆயிரமும் தங்கக் காசும் கொடுக்கும் தேர்தல் வாக்குறுதி குறித்து இவர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
“எச்சரிக்கை’’ எனும் தலைப்பின் கீழ் ‘துக்ளக்’ (31.3.2021 பக்கம் 3) என்ன எழுதுகிறது?
“இயற்கையான கலப்புத் திருமணங்களே பல்வகை ஜாதி அமைப்புள்ள சமுதாயத்தில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் சமயத்தில், ஊக்கத் தொகை கொடுத்து தூண்டப்படும் கலப்புத் திருமணங்கள் மேலும் ஜாதிப் பிரச்சினைகளைக் கிளறுமே தவிர, அதற்குத் தீர்வாகாது…’’
“பன்முக ஜாதிகள் உள்ள சமூகத்தில் இல்லாத விரோதங்களை ஏற்படுத்தும். இது மிகப் பெரிய தவறு. இதுபோன்ற ஊக்குவித்தல் மூலம் மற்ற ஜாதிகளுக்கும் பட்டியலிட்ட ஜாதிகளுக்கும் இடையே பிளவும், விரோதமும் அதிகரிக்குமே தவிர, குறையாது. தி.மு.க.வின் இந்த வாக்குறுதி ஓட்டு வாங்கக் கொடுக்கும் ஊக்கத் தொகையே தவிர, சமூகநீதித் திட்டம் அல்ல. இயற்கையாக வரும் மாற்றங்களே ஏற்கப்படும் மாற்றங்களாக இருக்கும்.’’
“காலத்தால் உருவாகாததும் கிடையாது, அழியாததும் கிடையாது. இதை சீர்திருத்தவாதிகளும் முற்போக்குவாதிகளும் உணர வேண்டும்’’
_ என்று திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் தன் பூணூல் முனையால் கிறுக்கித் தள்ளி இருக்கிறார்.
ஜாதி ஒழிப்பு என்றாலே பிளவும், விரோதமும் ஏற்படுத்துமாம். அப்படி என்றால் ஜாதி வேறுபாடுகள்தாம் சமூகத்தில் நேசத்தையும், பாசத்தையும் உண்டாக்கும் என்று பொருளா?
“ஜாதி ஒழிப்புக்காரர்களால்தான் ஜாதிக் கலவரம் ஏற்படுமாம். ஜாதி அமைப்பால் கலவரம் ஏற்படாதாம்.
அட ஆரியக் குலக்கொழுந்துகளே! உங்களுடைய வடகலை, தென்கலை சண்டை ஊர் சிரித்ததே _ சிரிக்கிறதே! சமீபத்தில்கூட காஞ்சிபுரத்தில் வடகலை, தென்கலைக் காரர்களின் சண்டை வீதிக்-கு வந்ததே!
2019ஆம் ஆண்டு காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் நிகழ்ச்சியின்போது, திருக்கச்சி நம்பித் தெருவில் உள்ள மண்டபத்தில் வேடு பரி என்ற நிகழ்வு நடந்தபோது, என்ன நடந்தது? அப்பொழுது அய்யங்கார்களின் தென்கலைப் பிரிவினர்கள் திருமங்கையாழ்வார் பாசுரம் பாட முயன்றபோது, வடகலைப் பார்ப்பனர்கள் நாலாயிரப் பிரபந்தத்தைத்தான் முதலில் பாட வேண்டும் என்று கூறி, ஒருவருக்கொருவர் குஸ்தி போடவில்லையா?
வடகலை தென்கலை இடையே 18 வித்தியாசங்களாம். வடகலை வைணவர்கள் திருமாலையும் லட்சுமி தேவியையும் சரிசமமான பூஜைக்கு உரியவர்களாகக் கருதுபவர்கள். வடமொழிக் கலாச்சாரம் அதிகம் இருக்கும். தென்கலை வைணவர்களும் லட்சுமி தேவியை வணங்குவார்கள்தாம். ஆனால், விஷ்ணுவாகிய திருமாலை மட்டுமே மூலக்கடவுளாக வழிபடும் கோட்பாடு உடையவர்கள். ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தம் வடகலை வைணவர்களுக்கு வேதவாக்கு.
இந்த முரண்பாட்டால் அடிக்கடி முண்டா தட்டுவார்கள். சாமி ஊர்வலத்தின்போது
காஞ்சிபுரத்தில் கட்டிப் புரண்டதும் உண்டே!
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டால் ஜாதிக் கலவரம் மூளும் என்று கூறும் குருமூர்த்திகள் இதற்கெல்லாம் என்ன பதில் வைத்துள்ளாராம்?
காஞ்சிபுரம் யானைக்கு _ வடகலை நாமம் போடுவதா? _ தென்கலை நாமம் போடுவதா? என்ற சண்டை வெள்ளைக்காரன் காலத்தில் பிரிவியூ கவுன்சில் வரை சென்று 150 ஆண்டுகள் வழக்கு நடந்தது உண்டே! அதற்குள் மூன்று யானைகளும் செத்தே போய்விட்டன. இவர்களின் கதையைத் தோண்டினால் பிண நாற்றம்தான்!
இயற்கையாக வரும் மாற்றங்களே ஏற்கப்படும் மாற்றங்களாக இருக்குமாம்.
அப்படியென்றால் ஜாதி என்பது இயற்கையாக வந்த ஒன்றா? திணிக்கப்பட்ட ஒன்றா? தமிழர் சமுதாயத்தில் ஜாதி உண்டா? ஜாதி என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்லவே! இயற்கையானதுதான் ஜாதி என்றால், அதற்கான அடையாளத்துடன்தான் பிறக்கிறான் என்பதற்கு அடையாளம் உண்டா?
பார்ப்பான் பிறக்கும்போதே முதுகில் மூன்றாவது கையுடன் பிறக்கிறானா? அல்லது பூணூலோடுதான் பிறக்கிறானா?
கபிலர் என்ன கருப்புச் சட்டைக்காரரா? நாக்கைப் பிடுங்குமாறு கேட்டாரே!
பார்ப்பன மாந்தர்காள்! பகர்வது கேண்மின்!
நால்வகைச் சாதியிந் நாட்டினில் நாட்டினீர்!
என்று பாடவில்லையா? நால்வகை ஜாதியையும் நாட்டியவன் பார்ப்பனன் என்று பகன்றானே! _ பதில் உண்டா?
பரிதிமாற்கலைஞர் என்று தன் பெயரை அருந்தமிழில் மாற்றிக் கொண்ட சூரியநாராயண சாஸ்திரி அவர்களால் எழுதப்பட்ட அரிய நூல் ”தமிழ்மொழியின் வரலாறு’’ என்பதாகும்.
“வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ்மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில்லாது போயிற்று. வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்ம நூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயு மிருந்தமை பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்லாதிருந்த ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்’ என்ற நால்வகைச் சாதி முறையை மெல்லமெல்ல நாட்டிவிட்டனர்.
“முற்கடைப் பலனில் வேறாகிய முறைமைசொல்
நால்வகைச் சாதியிந் நாட்டினில் நாட்டினீர்!’’
என்று ஆரியரை நோக்கி முழங்குங் கபிலரகவலையுங் காண்க. இன்னும் அவர்தம் புத்திநலங்காட்டித் தமிழர்களிடம் அமைச்சர் களெனவும், மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர். தமிழரிடத்திலிருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியு முன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.’’
(“தமிழ்மொழியின் வரலாறு’’ பக்கம் 26, 27)
இவ்வாறு எழுதியிருப்பவர் பார்ப்பனரான சூரியநாராயண சாஸ்திரிதான் என்பதை குருமூர்த்தி அய்யன்மார்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழர்களிடத்தில் இல்லாதிருந்த ஜாதியைப் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே என்று ஆணித்தரமாகவே அய்யர் அறைந்துள்ளாரே!
இந்த ஜாதியைத்தான் இயற்கையில் அமைந்தது என்று சாதிக்கப் பார்க்கிறார் இந்த ஜாதிவெறியர்.
இயற்கையாக வரும் மாற்றங்களே ஏற்கப்படும் என்று தம் வசதிக்கேற்ப வாய்பாடு கூறுகிறார். ஜாதியே இயற்கையானதல்ல என்று ஆகிவிட்ட பிறகு, இயற்கையானது என்பது எங்கு வந்து கூத்தாடுகிறது?
அவர் சொல்லும் வகையில் பார்த்தாலும் ஜாதியை எதிர்த்து மாற்றங்கள் வரவில்லையா?
ஜாதியின் அடிப்படையில் தொட்டால் தீட்டு என்ற தீண்டாமை இப்பொழுது சட்டப்படி குற்றமாகிவிட்டதே!
இதன்படி குற்றம் இழைத்தால் பிணையில் வர முடியாத தண்டனை உண்டே!
கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களும் நாடார்களும் உள்ளே நுழைய முடியாது என்று இருந்ததே! அது இப்பொழுது மாற்றப்பட்டு இருப்பது _ இது இயற்கையால் ஏற்பட்ட மாற்றமா? போராட்டத்தாலும் அதன் காரணமாக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டங்களால் ஏற்பட்ட மாற்றமா?
மனுவாதிக் கூட்டம் மரியாதையாகப் பதில் சொல்லித் தீர வேண்டிய இடம் இது. முடிந்தால் நழுவிவிடாமல் அறிவு நாணயத்துடன் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் பிற ஜாதியினரும் திருமணம் செய்து கொண்டால் பணமும், தங்கக் காசும் கொடுப்பது மகா குற்றமாம்.
கபிலர் கூறியது போல,
சேற்றில் பிறந்த செங்கழுநீர் போலப் பிரமற்குக்
கூத்தி வயிற்றில் பிறந்த வசிட்டரும், வசிட்டர்க்குச்
சண்டாளி வயிற்றில் பிறந்த சத்திரியரும், சத்திரியர்க்குப்
புலைச்சி தோள் சேர்ந்து பிறந்த பராசரும், பராசருக்கு மீன்
வாணிச்சி வயிற்றில் பிறந்த வியாசரும் இந்நால்வரும்
வேதங்கள் ஓதி மேன்மைப் பட்டு
மாதவராகி வயங்கினர் அன்றோ?
வசிஷ்டர் ஊர்வசிக்கும், வியாசர் செம்படவப் பெண்ணுக்கும் பிறந்தார்களே! வேதங்களை இயற்றினார்களே! கபிலர் கேட்கும் கேள்விக்கு என்ன பதில்?
இவர்களின் புராணங்களின்படி, நாரதர் வண்ணாத்திக்கும், மதங்கர் சக்கிலிப் பெண்ணுக்கும், சாங்கியர் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கும் பிறந்ததாகக் கூறப்படுகிறதே!
இதற்கெல்லாம் வழிவிடும் _ சாத்திர முலாம் பூசி சலாம் போடும் _ இந்த சங்கிகள், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கலப்பு மணத்திற்கு ஊக்கம் கொடுக்கும்போது கரடியாய்க் கத்துவானேன்? கலகம் ஏற்படும் என்று கதறுவானேன்?
அய்யங்கார்ப் பார்ப்பனரான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் பெண்ணை வைசியரான காந்தியாரின் மகனுக்கு விவாஹ சுபமுகூர்த்தம் செய்தபோது _ எங்கே போனது இப்பொழுது எகிறும் இந்தக் கூட்டம்?
‘துக்ளக்’ தான் தன் துஷ்டத் துதிக்கையைத் தூக்கி ‘தாம் தூம்’ என்ற குதிக்கிறது என்றால், ஆர்.எஸ்.எஸ். வார ஏடான ‘விஜயபாரதம்’ சும்மா இருக்குமா?
அதன் 2.4.2021 நாளைய இதழில் (பக்கம் 3) தலையங்கம் தீட்டி தடபுடலென்று தண்டால் எடுக்கிறது.
தலைப்பே தறிகெட்டு ஆடுகிறது. “அரசியல் வாதியே என்ன என்று நினைத்தாய் ஹிந்து சமுதாயத்தை’’ என்பதுதான் தலையங்கத்தின் தலைப்பு.
என்ன எழுதுகிறது?
“கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில், அவர் பிற இனத்தவரை மணந்துகொண்டால் வழங்கப்படும் நிதியுதவி 60,000 ரூபாயாக உயர்த்தப்படும். தாலிக்கு 8 கிராம் தங்கக் காசு வழங்கப்படும்’’ இது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 259ஆவது வாக்குறுதி வாசகம்.
“கலப்புத் திருமண மணமக்களில் ஒருவர் பட்டியல் இனத்தவராக இருந்தால், அவர்களைப் பாராட்டி 3 லட்ச ரூபாய் வழங்கப்படும்.’’ இது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதி வாசகம்.
இந்த இரண்டு கட்சிகளின் இத்தகைய மனப்பான்மை கண்டனத்துக்கு உரியது. இனிமேல் இவர்கள், “நாங்கள் ஹிந்து விரோதி அல்ல! என்று பசப்ப முடியாது. காரணம், இவர்கள் பிளக்க முயற்சிப்பது ஹிந்து சமுதாயத்தை!’’ என்கிறது ஆர்.எஸ்.எஸின் விஜயபாரத வார ஏடு.
பூனைக்குட்டி வெளியில் வந்தது என்று சொல்லுவார்களே – அது இதுதான். ஆம், இதுவேதான்.
ஜாதியை ஒழித்தால் – ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டால் இந்து சமூகத்தைப் பிளக்கும் முயற்சியாம்.
சமூகத்தைப் பிளப்பது ஜாதியில்லையாம். ஜாதியை ஒழிப்பதுதான் சமூகத்தைப் பிளப்பதாம்.
ஆம், இதற்குப் பெயர்தான் பார்ப்பனீயம் என்பது. இதற்குப் பெயர்தான் ஆரியம் என்பது. இதுதான் ஆர்.எஸ்.எஸின் கொள்கை. அவர்களின் குருவான எம்.எஸ்.கோல்வால்கர் இதைத்தான் கூறுகிறார். அவரது ‘ஞானகங்கை’ (ஙிuஸீநீலீ ஷீயீ ஜிலீஷீuரீலீts) என்னும் நூலில் கூறப்பட்டு இருப்பது என்ன?
‘வர்ண வியாவஸ்தா’ என்பது இழிவு என்று நினைக்கிறார்கள். அது தவறு. பிராமணர்கள் அறிவுத் திறத்தால் மேம்பட்டவர்கள். சத்திரியர்கள் எதிரிகளை அழிக்கும் ஆற்றலாளர்கள். வாணிபத்திலும், விவசாயத்திலும் சிறந்தவர்கள் வைசியர்கள், சமூகத்திற்குச் சேவை செய்வோர் சூத்திரர்கள் என்றாலும் இவர்களிடையே ஏற்றத்தாழ்வு கிடையாது’’ என்று சாதிக்கப் பார்க்கிறார்கள் இந்த ஜாதியின் பாதுகாவலர்கள்.
“நமது சமுதாயத்தின் ஒரு சாராருக்கு ஹரிஜனங்கள், ஷெட்யூல்டு ஜாதியினர், ஷெட்யூல்டு பழங்குடியினர் என்று பெயரிடப்பட்டு, அவர்களுக்கெனத் தனிச் சலுகைகள் வழங்கி, பணத்தாசை காட்டி, அவர்களை என்றுமே தங்களுக்கு அடிமைகளாக ஆக்கி விடுவதன் மூலம் நம் சமுதாயத்தில் பிரிவினை உணர்வையும், பொறாமையையும் சக்சரவுகளையும் தூண்டி விடுகிறார்கள்’’ என்கிறார் எம்.எஸ்.கோல்வால்கர்.
இவரைக் குருநாதராகக் கொண்ட குருமூர்த்திகள் கோணல் புத்தியோடுதானே சிந்திப்பார்கள் _ செயல்படுவார்கள்! அதனால்தான் ஜாதி ஒழிப்புக்கான திட்டத்தை தி.மு.க. சொல்லும்பொழுது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று கதறுகிறார்கள் _ பதறுகிறார்கள் _ குமுறுகிறார்கள்.
‘துக்ளக்கும்’ ‘விஜயபாரதமும்’ ஜாதி ஒழிப்புக்காக கலப்பு மணம் செய்வோருக்கு பணமும் தங்கக் காசும் கொடுக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்படுவது குறித்து, ‘விட்டேனா பார்!’ என்று துள்ளிக் குதிக்கிறார்கள்.
பார்ப்பனர்கள் சங்கம் சும்மா இருந்தால் எப்படி? இதோ ‘தினமலர்’ செய்தி:
கலப்புத் திருமண விவகாரம் :
தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டனம்!
சென்னை: “ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்து, ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, நாங்கள் ஜாதியற்ற தமிழகத்தை உருவாக்குவோம் என, தி.மு.க., விடும் கட்டுக்கதை இனி எடுபடாது,’’ என, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த, அவரது அறிக்கை:தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில், ஆதிதிராவிடர் ஒருவர் வேற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால், 60 ஆயிரம் ரூபாய்; ஒரு சவரன் தங்க காசு வழங்கப்படும் என, வாக்குறுதி அளித்துள்ளது.இதை, தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கிறோம் எனக் கூறிக் கொண்டு, தமிழகத்தில் ஜாதி கலவரத்தைத் தூண்டும் விதத்தில் செயல்படுவது, ஹிந்து விரோத போக்கை காட்டுகிறது.
மேலும், இது தேர்தல் விதிமுறைகளை மீறுவதுபோல உள்ளது.தி.மு.க.,விற்கு தைரியம் இருந்தால், கிறிஸ்துவ, இஸ்லாமிய பெண்களை சேர்த்துக் கூறிப் பார்க்கட்டுமே… மதச்சார்பின்மை, தீண்டாமை ஒழிப்பு என்று கூறிக் கொண்டு, எத்தனைக் காலம்தான் மக்களை ஏமாற்ற முடியும்! ஹிந்துக்கள் விழித்துக் கொண்டு விட்டனர். இவ்வாறு, பம்மல் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
– தினமலர் 27.3.2021, பக்கம் 5
புரிகிறதா? ஜாதி ஒழிப்பு இருக்கட்டும். தீண்டாமையை ஆதரிப்பவர்தானே இவர்களின் ஜெகத்குரு. “தீண்டாமை க்ஷேமகரமானது’ (ஸ்ரீஜெகத் குருவின் உபதேசங்கள், இரண்டாம் பாகம்) தீண்டாமையையே அழுத்தம் திருத்தமாக ஆதரிப்பவர்கள் ஜாதி ஒழிப்பை எப்படி ஏற்பார்கள்?
இந்து மதத்தின் அடிப்படையே வர்ண தர்மத்தை, ஜாதியைக் காப்பாற்றுவதுதானே? அதுதானே பார்ப்பனர்களைப் பிராமணர் ஆக்குகிறது. அதற்காகவே இந்த உலகம் படைக்கப்பட்டு இருப்பதாகக் கூறுகிறது. அரசன் தோன்றியதே ஜாதியைக் காப்பாற்றுவதற்கும் ஜாதிக் கலப்பைத் தடுப்பதற்கும்தானே.
இதைக்கூட நாம் சொல்லவில்லை. அவர்களின் மகாபாரதம், சாந்தி பருவம் சத்தியம் செய்கிறது.
“ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்காக, விஷ்ணு தன் மனத்திலிருந்து ஒரு மகனைத் தோற்றுவித்து உண்டாக்கினான் என்றும், ஆனால், அவன் பின்னோர்கள் உலகப் பற்று நீங்கினர் என்றும் அதனால் வேணனின் கொடுங்கோலாட்சி ஏற்பட்டதாயும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அரசனின் உயிருக்கு முனிவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர் என்றும் அவனுடைய வலது தொடையிலிருந்து பிருதுவை உண்டாக்கினர் என்றும் கூறப்படுகிறது. பிருது, விஷ்ணுவின் எட்டாவது சந்ததி. எந்த அடிப்படையில் பிருது, வைன்ய என்பவன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கலாம் என்பதை முனிவர்கள் தெளிவாக எழுதி வைத்தார்கள். (1) தண்ட நீதிக் கொள்கையின்படி அரசாள்வேன் (2) பிராமணர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்கப்பட மாட்டேன் (3) ஜாதிக் கலப்பு ஏற்படாதபடி உலகைக் காப்பாற்றுவேன் – என்று மூன்று உறுதிமொழிகளைச் சத்தியம் செய்து கொடுக்கும்படி முனிவர்கள் அவனை வேண்டினார்கள். மனிதர்களுக்குள் காளைகள் போன்று விளங்குவதால் பிராமணர்களைப் பெரிதும் மதித்து அவர்களை வணங்கி வழிபடுவதாக, பிருது, முனிவர்களிடம் கடவுள் சாட்சியாகச் சத்தியம் செய்தான். அரசாங்க இயலுக்கு ஏற்பவும் நியாயமாகவும் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்வதாக அவன் ஏற்கனவே உறுதிமொழி கொடுத்திருந்தான்.’’
(மகாபாரதம் – சாந்தி பருவம் – 59ஆம்
அதிகாரம் 94-99)
அன்று மகா பாதகமான மகாபாரதம் சொன்னதைத்தான் இந்துமகா பார்ப்பனர் சங்கமும் கறாராகக் கூறுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் தி.மு.க. குறிப்பிட்டுள்ள ஜாதி ஒழிப்புத் தொடர்பான அம்சம் பார்ப்பனர்களின் கண்களை உறுத்தியுள்ளது. கலப்பு மண இணையருக்கு நிதியும், தங்கக் காசும் அவர்களுக்கு குருதி கொதிப்பு ஏறச் செய்திருக்கிறது.
அதே நேரத்தில் பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலத்தில் என்ன நடக்கிறது?
பார்ப்பன அர்ச்சகர்களைத் திருமணம் செய்துகொள்ளும் பார்ப்பனப் பெண்களுக்கு ரூபாய் மூன்று இலட்சம் அளிக்கப்படும் என்றும், இதன்படி (அருந்ததி திட்டம்) 550 பார்ப்பனக் குடும்பங்களும், மைத்ரேயி திட்டத்தின்படி 25 பார்ப்பனக் குடும்பங்களும் பயனடைவர் என்று கூறப்படுகிறதே.
இதைப் பற்றி ‘துக்ளக்’, ‘விஜயபாரதம்’ வகையறாக்கள் வாயைத் திறக்காதது ஏன்? பார்ப்பனர்களுக்குப் பயன் என்றால்,
பஞ்சகச்சத்தை வரிந்து கட்டிக் கொண்டு பூணூலை முறுக்கிக் கொண்டு குதூகலம் அடைவதும், அதுவே தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று வரும்போது ‘ஹிந்துமதத்தை என்ன செய்ய உத்தேசம்’ என்ற பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டு நாங்கள் யார் தெரியுமா? வாஞ்சிநாதன் பரம்பரையினர் _ துப்பாக்கியைத் தூக்கத் தயாராக இருக்கக் கூடியவர்கள் (உபயம் திருப்பதி நாராயணன் _ தினமலர் 9.4.2021 பக்கம் 8) என்று திமிர் முறித்து எழுகிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
பார்ப்பனர்களைப் பற்றி இன்னுமா பழிக்க வேண்டும் _ பேச வேண்டும்? அவர்கள் திருந்தி வெகுகாலம் ஆகிவிட்டதே _ காஸ்மா பாலிட்டனாகி விட்டனர். முனியாண்டி ஓட்டலில் சாப்பிடுகிறார்கள் என்று கூறும் நம்மவர்களைப் பார்க்க முடிகிறது.
ஆனால், உண்மை நிலவரம் என்பது வேறுவிதமாகவே இருக்கிறது என்பதற்கு இவ்வளவு சான்றுகள் குவிந்து கிடக்கின்றனவே!
வெகு காலத்திற்கு முன்கூடப் போக வேண்டாம். இன்றைக்கும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம்தான் _ சாட்சியம்தான் _ தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஜாதி ஒழிப்புக்கான ஊக்கத் தொகையாக நிதியையும் தங்கத்தையும் கொடுப்பதாக அறிவித்திருப்பது கண்டு ‘அக்னிப் பிரவேசம்’ நடத்துகிறார்கள் _ துணியைப் போட்டுத் தாண்டுகிறார்கள்.
ஹிந்துக்கள் ஏமாளிகளா? என்று ஆத்திரப்படுகிறார்கள். ஜாதிக் கலவரம் ஏற்படும், ஜாக்கிரதை என்று மிரட்டுகிறார்கள், ‘சூத்திரர்களாகவும்’, ‘பஞ்சமர்களாகவும்’ ஆக்கப்பட்ட நம் மக்கள்தான் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதன் அவசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தந்தை பெரியார் ஏன் பார்ப்பன எதிர்ப்பாளர் ஆனார் என்ற அருமையை அறிந்து கொள்ள வேண்டும்.
தந்தை பெரியார் சொல்லுவதைக் கேளுங்கள்! கேளுங்கள்!!
“இந்தச் சமுதாயச் சீர்திருத்தம் என்பதற்கு முதற்படி பார்ப்பன ஆதிக்கத்திலிருக்கும் பதவி உத்தியோகங்களை விகிதாச்சாரம் கைப்பற்ற வேண்டியது என்பதைத்தான் கி, ஙி, சி, ஞி யாகக் கொண்டேன்.’’
“நான் அரசியலில் பல மாறுதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்றாலும் சமுதாயத் துறையில் பார்ப்பனீய வெறுப்புள்ளவன் நான். அதுதான் என்னைப் பகுத்தறிவுவாதியாக (நாஸ்திகனாக) ஆக்கியது.’’
ஆனதினாலேயேதான் நான் வகுப்புவாதி என்று சொல்லப்பட்டேன் என்பதல்லாமல் நான் வகுப்புவாத உருவமாகவே இருந்து வருகிறேன்’’ என்கிறார் தந்தை பெரியார். அவரின் அனுபவக் கடலின் அலைகள் அவரை இந்த எஃகு போன்ற எண்ணத்திற்கு வரச் செய்துள்ளன.
(‘விடுதலை’ 5.3.1969)
இதுதான் நம் வரலாறு.
புரிந்து கொள்வீர் பார்ப்பனர்களை _ அவர்களின் கோட்பாட்டை _ அவர்களின் வருணாசிரமத்தை _ அவர்களின் ஹிந்துக் கோட்பாட்டை!