- தமிழகத்தின் கடந்த 6 மாத ஆட்சி நிர்வாகச் சீரழிவு தவிர வேறொன்றுமில்லை. ஒரு தனி நபர் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார். அய்.ஏ.எஸ். அதிகாரிகள் முதுகெலும்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இந்த நிலைமை இல்லை. இது இப்படியே போனால் தமிழகம் அதள பாதாளத்துக்குப் போகும்.
– எம்.ஜி.தேவசஹாயம், ஓய்வு பெற்ற மூத்த அய்.ஏ.எஸ்.அதிகாரி
- தற்போதுள்ள நீதி பரிபாலனை பாதிப்பில் உள்ளது. நீதி பரிபாலனை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது. ஏராளமான வழக்குகள் தேக்கத்தில் உள்ளன. வழக்குத் தொடர்ந்த மக்கள் நீதித்துறை மீது கோபத்தில் உள்ளனர். எப்போதும் சட்டத்தின் ஆட்சிதான் இருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி இல்லையென்றால் குடியாட்சித் தத்துவம் தோல்வியடைந்துவிடும்.
– அல் தாமஸ் கபீர், நீதிபதி, உச்ச நீதிமன்றம். - ஆரம்பத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் வருவாய் குறித்த கணக்கெடுப்புக்கெல்லாம் திட்டமிடப்படவில்லை. பின்னர்தான் அதைச் சேர்த்தனர். ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக டிராய் எந்த விதமான முடிவையும் எடுத்திருக்கவில்லை. மத்திய அமைச்சரவையும் அதே முடிவில்தான் இருந்தது. எனவே ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக் கெல்லாம் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று உத்தேசமாக கணக்கிடவும் முடியாது. என்னைப் பொறுத்த வரை ரூ. 2645 கோடி அளவுக்கே நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என திடமாக கருதுகிறேன். இந்த நிலையிலிருந்து எந்தவிதமான மாற்றமும் இல்லை. மேலும் சி.ஏ.ஜி.யின் முந்தைய அறிக்கையில் என்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர்.
– ஆர்.பி.சிங்., மத்திய தணிக்கைத் துறையின் (தொலைத் தொடர்பு) முன்னாள் இயக்குநர்
- பொதுவாழ்விலிருந்து ஓய்வு பெறும் நிலையில் நான் உள்ளேன். ஆனாலும், இன்னும் என்னைத் தீய சக்தியாகவே சீன அரசு கருதுகிறது. எனக்கு எதிராக சீன அரசு எதிர்ப்புத் தெரிவிப்பது வழக்கமான ஒன்றுதான்.
– தலாய் லாமா, புத்தமதத் தலைவர் - அய்ரோப்பிய மற்றும் சர்வதேச நிதியம் (அய்.எம்.எப்.) மற்றும் அமெரிக்காவின் கடன் பத்திரங்களைச் சீனா வாங்குவது அவற்றின் பாதுகாப்பு, உடனடியாக மாற்றக்கூடிய தன்மை மற்றும் சரியான லாபவிகிதம் இவற்றுக்காகத்தான்.
– பூ யிங், வெளியுறவுத் துறை அமைச்சர், சீனா
- சிறுதாவூரிலும், கொடநாட்டிலும் ஜெயலலிதா தனது பினாமிகள் பெயரால் நிலத்தை அபகரித்துக் கொண்டிருக்கிறாரே, அதன்மீது நடவடிக்கை எடுப்பீர்களா?
– மு.க.ஸ்டாலின், பொருளாளர், தி.மு.க.