முகப்பு கட்டுரை:மக்கள் விரோத பா.ஜ.க.வின் மனுதர்மத் தேர்தல் அறிக்கை

ஏப்ரல் 1-15,2021

கவிஞர் கலி.பூங்குன்றன்

தமிழ்நாடு 16ஆம் சட்டப் பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய பா.ஜ.க.வும் தமிழ்நாட்டுக்காக ஒரு தனித் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள சமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற மூன்றையும் காலில் போட்டு மிதிக்கும் அறிக்கையாக அது அமைந்தது.

மதச்சார்பின்மைக்கு மரண அடி!

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் முக்கியமாக பாரம்பரியம் மற்றும் பண்பாடு எனும் தலைப்பில் (10) மதச் சுதந்திரச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.

“வழிபாட்டு உரிமை என்பது கட்டாயமாக மதம் மாற்றுகிற உரிமையானது, ஆசை வார்த்தை காட்டி மற்றும் அச்சுறுத்தி மதம் மாற்றுவது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டு மதமாற்றத் தடை சட்டம் கொண்டுவரப்படும்’’ என்று கூறப்படுகிறது. இதுபற்றி நாம் கூறுவதைவிட இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று ஏற்றுமதி செய்ததாகப் புகழ் பாடும் விவேகானந்தரை விட்டுப் பேச வைத்தால் -_ சரியான பதிலடியாக அமையும். இதோ விவேகானந்தர்:

பார்ப்பனர்கள்பற்றி விவேகானந்தரின் கருத்துகள்

“ஒவ்வொரு மனிதனுக்கும் உரியதைக் கொடு என்கின்ற பழைய ஆங்கிலப் பழமொழியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, என் நண்பர்களே வெவ்வேறு ஜாதியர்களுக்கிடையே சண்டையால் பலன் ஒன்றும் இல்லை. இத்தகைய சண்டைகள் நம்மை மேலும் பலவீனப்படுத்தும். ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு என்று இருந்த தனி உரிமைகள் மற்றும் சலுகைகள் போய்விட்டன. என்றென்றைக்குமாக இந்திய மண்ணிலிருந்து போய்விட்டன. இது பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்பட்ட நல்ல பலன்களில் ஒன்றாகும் (பார்ப்பனர்களை சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார்) ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் என்று இருந்த உரிமைகளை உடைத்ததற்காக முஸ்லிம் ஆட்சிக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிம் ஆட்சியானது முழுதும் கெட்டது என்று சொல்ல முடியாது; எதுவுமே முழுதும் கெட்டதாக இருப்பதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் இந்தியாவில் ஏற்பட்ட முஸ்லிம் ஆட்சி விடுதலை வழங்கியது (பார்ப்பனிய கொடுமைகளிலிருந்து) எனவேதான் (வடஇந்திய மக்களில்) அய்ந்தில் ஒரு பங்கு மக்கள் முஸ்லிம்களாயினர். வாள்தான் இந்த மதமாற்றத்தை முழுதும் ஏற்படுத்தியது என்பது சரியல்ல. வாளும், நெருப்புமே இத்தனை பேரையும் மாற்றியது என்று கூறுவது பயித்தியக்காரத்தனத்தின் உச்சநிலையாகும். 20 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடு சென்னை மாகாண மக்கள் கிறிஸ்துவ மதத்தை தழுவி விடுவார்கள். நீங்கள் அவர்களது குறைகளைக் களையவில்லையானால், நான் மலபாரில் பார்ர்ததைவிட மட்டமான ஒரு விஷயத்தை உலகில் எங்கேனும் யாரேனும் பார்த்திருக்க முடியுமா? உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் செல்லும் தெரு வழியே ஏழைப் பறையன் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அதே ஏழைப் பறையன் ஒரு விசித்திரமான ஓர் ஆங்கில கிறிஸ்தவப் பெயரை தனக்குச் சூட்டிக் கொண்டால் பின்னர் அவன் உயர் ஜாதியினர் செல்லும் தெரு வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறான். அல்லது ஒரு முஸ்லிம் பெயரை தனக்குத்தானே சூட்டிக் கொண்டாலும் செல்ல அனுமதிக்கப்படுகிறான். இந்த நடைமுறையிலிருந்து இந்த உயர்ஜாதி மலபார் மக்கள் அனைவரும் பயித்தியக்காரர்கள் என்றும் அவர்கள் இல்லங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயித்தியக்கார விடுதி என்றும் தெரியவில்லையா? இத்தகைய உயர்ஜாதி மலபார் மக்கள் திருந்துவது வரை இந்தியாவைச் சேர்ந்த அனைத்து இன மக்களும் இவர்களை (உயர் ஜாதியினரை) கண்டிக்க வேண்டாமா? இத்தகைய வழக்கங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளது என்பதற்காக இந்த உயர்ஜாதியினர் வெட்கித் தலைகுனிய வேண்டும். தங்கள் மதத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பட்டினியால் மடிவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இச்சிறுவர்கள் வேறு மதத்திற்குச் சென்றால் உணவு கொடுக்கப்படுகிறது.

“சூத்திரன்’’ வேதம் ஓதுவதைக் கேட்டால் அவன் காதில் ஈயத்தை ஊற்று, கேட்டதில் ஒரு வரியை ஞாபகத்தில் வைத்து விட்டானென்றால் அவனது நாக்கை வெட்டு என்பன போன்ற கடுமையான வாசகங்கள் உள்ள புத்தகங்கள் உள்ளன. இது மிகவும் மட்டமான காட்டுமிராண்டித்தனம். சந்தேகமே இல்லை. இத்தகைய காரியங்களைச் செய்த பேய்கள் முன்காலங்களில் இருந்திருக்கின்றனர்.’’

“அதிகாரங்களை கெட்ட விஷயங்களில் பயன்படுத்தினால் தகுந்த கேடு விளைகிறது. அதிகாரங்களை நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்திய ரிஷிகள் சேர்த்து வைத்த பொக்கிஷங்களை, இவற்றுக்கு டிரஸ்டியாக நியமிக்கப்பட்ட பிராமணன், ஏனைய மக்களுக்கு பகுத்து வழங்காததால்தான் முஸ்லிம் படையெடுப்பு (வட) இந்தியாவில் வெற்றி அடைந்தது. டிரஸ்டியாக நியமிக்கப்பட்ட பார்ப்பனன் கருவூலத்தைத் திறந்து பொக்கிஷத்தை (நல்ல கருத்துகள்) ஆரம்பத்திலிருந்தே அனைத்து மக்களுக்கும் வழங்காததால்தான் இந்தியர்களுக்கு தங்கள் மதத்தின் மீது ஈடுபாடு ஏற்படவில்லை. எந்த மதத்தினரும் சிறிது படையுடன் இந்தியாவிற்குள் நுழைந்தாலும் அவர்களுக்கெல்லாம் நாம் 1000 வருடங்களாக அடிமைப்பட்டோம். ஏன் என்றால் நம்மிடம் ஒற்றுமை இருக்கவில்லை. வங்காளத்தில் ஒரு பழைய மூடநம்பிக்கை உள்ளது. நல்ல பாம்பு ஒருவனைக் கடித்து பின்னர் அந்தப் பாம்பே தனது விஷத்தை கடிபட்டவனிடமிருந்து திரும்ப உறிஞ்சி எடுத்துவிட்டால் அவன் பிழைத்துக் கொள்வான் என்பதே இந்த நம்பிக்கை. இதேபோன்று பார்ப்பான் இந்து மதத்திற்குள்தான் செலுத்திய விஷத்தை திரும்ப எடுக்க வேண்டும்’’ (திருச்சி மாவட்டம் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் 1983இல் வெளியிட்ட  The Man Making Message of Vivekananda for the USE of  College Students என்கிற புத்தகம் பக்கங்கள் 150, 151, 152, 155, 156)

விவேகானந்தர் தெரிவித்துள்ள இந்தக் கருத்து _ பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கைக்குப் பதிலாக அமையும்.

ஒன்றை இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமானது. சமணர்களைச் சைவ மதத்துக்கு மாற்றிய வரலாறு எல்லாம் உண்டே. திருஞானசம்பந்தர் வரலாற்றைப் படித்துப் பார்க்கட்டும். வாதத்தில் தோற்றதாகக் கூறி எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொடூரமாகக் கொன்றவர்கள் யார்?

 ‘நீட்’ கட்டாயமாம்!

‘நீட்’ தேர்வு -மருத்துவக் கல்வியில் மட்டுமல்ல +2 படித்துவிட்டு கலைக் கல்லூரிகளில் காலடி வைக்க விரும்பும் முதல் தலைமுறையாகக் கல்லூரியில் நுழைய ஆசைப்படும் ஒடுக்கப்பட்ட, கிராமப்புற பஞ்சைப் பராரிக் குடும்பத்தைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்கும் புதிய வகை நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமாம்.

சமூகநீதி, இடஒதுக்கீடு காரணமாகத் தலைதூக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் மண்டையில் மரண அடி கொடுக்கும் ‘கொலைப்பாதக’ செயல் அல்லவா இது.

‘நீட்’டினால் யாருக்குப் பயன்?

2016ஆம் ஆண்டின் நிலை என்ன?

திறந்த போட்டியில்

பிற்படுத்தப்பட்டோர் _ 599

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் _ 159

முசுலிம் _ 32

தாழ்த்தப்பட்டோர் _ 23

மலைவாழ் மக்கள் _ 01

உயர்ஜாதி _ 68

‘நீட் இல்லாதபோது 2016இல் தமிழ்நாடு அரசு மேனிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெற்ற இடங்கள் _ 30

‘நீட்’ வந்த பிறகு _ 5

2016இல் சி.பி.எஸ்.இ.யில் படித்தவர்கள் பெற்ற இடங்கள் _ 62

‘நீட்’ வந்த பிறகு _ 1220 (20 மடங்கு அதிகம்)

தமிழ் வழியில் படித்தவர்கள்

‘நீட்’டுக்கு முன்

2015 _ 2016இல் _ 510 இடங்கள்

2016 _ 2017இல் _ 537 இடங்கள்

‘நீட்’ வந்த பிறகு

2017 _ 2018இல் _ 52

2018 _ 2019இல் _ 106

நன்றாகப் படித்து 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்குக் கூட மருத்துவக் கல்வி மறுக்கப்பட்டதால் இதுவரை 15க்கும் மேற்பட்ட மாணவ _ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரே பிரச்சினைக்காக இதுவரை 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட பிறகும் அதை ஆய்வு செய்ய மறுக்கும் ஆணவம் அரசுக்கு உள்ளது.

இந்துக் கோயில்களுக்குத் தனி வாரியமாம்

இந்துக் கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இயங்கி வருகின்றன. அவற்றை ஒரு தனி வாரியத்தின் கீழ்க் கொண்டுவரப்படும் என்கிறது பா.ஜ.க. தேர்தல் அறிக்கை.

ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் முன் வைக்கும் ஒன்றை பா.ஜ.க. ஏற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த ஆசாமியே கோவையில் யானைகள் நடமாட்ட மலைப் பகுதிகளை வளைத்துப் போட்டு, பெரிய கட்டடங்களை உருவாக்கிய மலை விழுங்கிய மகாதேவன் ஆயிற்றே! இவர்களின் கைகளில் கோயில்கள் சென்றால் நிலை என்னவாகும்?

இதன் உண்மை நிலை என்ன? இந்துக் கோயில்கள் தனியார் வசம் இருந்தபோது, அவை பார்ப்பனப் பண்ணையமாக ஆக்கப்பட்டன. அவர்கள் அடித்த கொள்ளைக்கு அளவே கிடையாது.

‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’  இதழில் (3.9.1972) இந்து மல்ஹோத்ரா  எழுதிய சிறப்புக் கட்டுரையில் கோயில்களில் நடந்த கொள்ளைகள் பற்றி வண்டி வண்டியாக உள்ளன.

தனியார்க் கொள்ளை மயமான இந்துக் கோயில்கள் ஆனதன் அடிப்படையில்தான் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பானகல் அரசர் சென்னை மாநில பிரதமராக இருந்தபோதுதான், கோயில்களை இந்து அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரும் சட்டம் இயற்றப்பட்டது.

பின் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் சென்னை மாநில பிரதமராக இருந்தபோது, அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அவர்கள் இருவரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்லர்.

நாத்திகர்கள் ஆட்சிக்கு வந்ததால்தான் கோயில்கள் அரசின் கீழ்க் கொண்டு செல்லப்பட்டன என்பது அப்பழுக்கற்ற பொய்யும், அபாண்டமும் ஆகும். அரசு சார்பில் சர்.சி.பி.இராமசாமி அய்யர் தலைமையில் அளிக்கப்பட்டஆணையம் (1960_62) என்ன சொல்லுகிறது?

கோயில்கள் பற்றி சர்.சி.பி.கமிஷன்

அரசாங்கத்திடம் அளிக்கப்பட்ட இந்து அற நிலையக் கமிஷனின் அறிக்கை பல திடுக்கிடக்கூடிய சேதிகளைக் கொண்டதாக இருக்கிறது! பூஜித்து வணங்கப்பட வேண்டிய இடங்கள் லஞ்சத்திற்கு _ மோசடிக்குப் பிறப்பிடமாக இருந்து வருவதை இந்து சமூகமும், அரசாங்கமும் எப்படி சகித்துக் கொண்டுள்ளன என்பது நமக்கு அதிசயமாகவே இருக்கிறது!

எந்த நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் பரப்புவதற்காக இந்த மடங்களும், கோயில்களும் ஆரம்பத்தில் நிறுவப்பட்டனவோ, அதற்கு இவை பயன்படுவதே இல்லை என்றே தோன்றுகிறது! இந்தப் பணிகளை செம்மையாக நடத்தி மேலும் உயர்த்த வேண்டிய நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களே, பூசை செய்வோரிடமிருந்து காசு வசூலிப்பதிலும், அதைத் தங்கள் சொந்தக் காரியங்களுக்காகச் செலவழிப்பதிலும்தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

கமிஷன் கூறும் குற்றச்சாட்டு

“தீய வழக்கங்கள் எல்லாம் இந்த அமைப்புகளின் உள்ளே நுழைந்துவிட்டன’’ என்று கமிஷன் குறிப்பிட்டுள்ளது மிகவும் சரியானதேயாகும்.

அவ்வுயர்ந்த பதவிகள் வகிப்பதற்குரிய எந்தத் தகுதியும் இல்லாத அந்த அயோக்கியர்கள் கையில் இவற்றின் நிர்வாகம் சிக்கிக் கொண்டதே காரணமாகும்.

பக்தி நெறியின் காவலர்கள் எனக் கருதப்படும் பூசாரிகளும் மடத் தலைவர்களும் தர்மகர்த்தாக்களும் பெரும்பாலும் தற்குறிகளாகவும் ஒழுக்கங்கெட்டவர்களாகவுமே இருக்கின்றார்கள்.

அதில் பல பேர்கள் ஆடம்பரமான சுகபோக வாழ்வு வாழ்வதோடு அறநிலையங்களின் சொத்துகளையும் நிதியையும் கையாடல் செய்பவர்களாகவே இருக்கின்றார்கள். இந்தக் கமிஷன் (டாக்டர் சி.பி.இராமசாமி அய்யர் கமிஷன்) இத்தகைய ஆசாமிகள் மீது பலவித குற்றச்சாட்டுகளை கூறி அதற்கு பல உதாரணங்களையும் கூடக் காட்டியுள்ளது.

ஓர் இடத்தில் கோயில் சொத்துகள் மிக மிக குறைந்த விலைக்கு (Nominal Price) விற்கப்பட்டுள்ளன; இன்னொரு இடத்தில் சில பாட்டில் சாராயத்திற்காகச் சில சொத்துகள் விற்கப்பட்டுள்ளன.

மற்றொரு கோயில் ஒன்றில் அதன் தலைவராக உள்ள ஓர் ஆசாமி கோயிலிலுள்ள மூல விக்கிரகத்தைவிட நான் பெரியவன் என்று வெளிப்படையாகவே கூறினாராம்.

சமூகமும் – அரசுமே பொறுப்பு

இந்தக் கேவல நிலையில் மத ஸ்தாபனங்கள் உள்ளதற்குச் சமூகம் பொறுப்பேற்காமல் தட்டிக் கழித்துவிட முடியாது. சகிக்க முடியாத இத்தகைய தீய வழக்கங்களை சகித்துக் கொண்டதோடு பண்டாக்கள், பூசாரிகள், மதத் தலைவர்கள் ஆகியோர்களது இத்தகு வெட்கப்படத்தக்க காரியங்களுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் தருவதை நிறுத்தாததின் மூலம் உற்சாகப் படுத்தியதாகவே ஆகும்.

இத்தகைய பொது ஸ்தாபனங்களில் உள்ள கேடுகளை ஒழித்து தக்க நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காததின் மூலம் அது தன் கடமையிலிருந்து நிச்சயமாகத் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

மத ஸ்தாபனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமில்லாத ராஜ்யங்களும் உண்டு கட்டுப்படுத்த சட்டமுள்ள ராஜ்யங்களும்கூட அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ள மேற்பார்வை அதிகாரம் போதாததாகத்தான் இருக்கிறது.

பண்டாக்கள், பூசாரிகள், மகந்துக்கள், தர்மகர்த்தாக்கள் இவர்களுக்குள் இருக்கும் முக்கிய தகராறு எல்லாம் கோயிலுக்கு வரும் வருமானம் யாருக்குச் சொந்தம் என்பது பற்றியேயாகும்.

லட்சியம் என்ன?

எந்த லட்சியத்திற்காக எந்த ஸ்தாபனம் தோற்றுவிக்கப்பட்டதோ அதுவும், கடவுளும்தான் முக்கிய குறிக்கோளே ஒழிய பூசாரிகளோ, அதன் ஸ்தாபன நிர்வாகிகளைப் பற்றியோ அல்ல. எனவே, அத்தகையோரது உரிமை பற்றிய கேள்வி எழுவதற்கு இடந்தரவே கூடாது.

கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது போலவே அரசியல் சட்டம் திருத்தப்பட்டாவது ஸ்தாபன நிதிகளும், சொத்துகளும் தகராறுகளுக்கு அப்பாற்பட்டதாக வைக்கப்பட வேண்டும்.

(23.9.1962 அன்று வெளிவந்த “சண்டே ஸ்டேண்டர்டு’’ பத்திரிகையின் தலையங்கத்தின் தமிழாக்கம்)

மறுபடியும் இந்த நிலைக்குத்

தள்ளப்பட வேண்டுமா?

அர்ச்சகர்கள் பற்றியும் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை பேசுகிறது. அதே நேரத்தில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர்களைப் பற்றி மூச்சுவிடவில்லையே ஏன்?

காரணம் பா.ஜ.க. என்பது உயர்ஜாதி பார்ப்பன ஜனதா என்பதே உண்மையாகும்.

பசுவதைத் தடை சட்டம்

நரேந்திர மோடி பிரதமர் ஆனவுடனேயே பசுவதை தடைச் சட்டத்தை நாடெங்கும் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தையும், தாக்குதல்களையும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் வட மாநிலங்களில் பரவலாக கட்டவிழ்த்துவிட்டன. பசுரக்ஷாதள் என்ற புதிய அமைப்பு உருவாகி நாடெங்கும் குறிப்பாக அரியானா, உ.பி., ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் பசுவைக் கடத்தினார்கள் என்று கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்யவில்லையா?

சமூக வலைத்தளங்களில் அதிகம் வெளியாகி உள்ளது

ஆர்.எஸ்.எஸ். நேரடியாகத் தலையிடாமல், ‘பசுரக்ஷா தள்’ போன்ற இந்துத்துவா அமைப்புகளை உருவாக்கி, அதன் மூலம் தனது திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இவர்கள்தான் மாட்டிறைச்சித் தொடர்பான கொலைகளைச் செய்து வருகின்றனர். 2016 முதல் 2019ஆம் ஆண்டுவரை 460 மாட்டிறைச்சிப் படுகொலைகள் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

“பசுவைக் கொல்லுபவர்களைக் கொன்று போடுவோம்’’ என அறிவித்து, இமாச்சலப் பிரதேசத்தில் நோமன் அக்தரைப் படுகொலை செய்தது; காஷ்மீர்_உதம்பூரில் ஜாஹித் அகமதுவை எரித்துக் கொன்றது; ஜம்மு_காஷ்மீர் மாநில சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரான இன்ஜினீயர் ரஷீதின் முகத்தில் மையையும், ஆயிலையும் பூசியது; மாட்டுக் கறி விருந்தில் கலந்துகொண்ட கன்னட எழுத்தாளரும் நடிகையுமான சேத்னா தீரித்தஹள்ளியைப் பாலியல் பலாத்காரம் செய்து, முகத்தில் ஆசிட் வீசப் போவதாக மிரட்டியது, குஜராத் உனாவில் தாழ்த்தப்பட்ட நபர்களை இறந்த மாட்டின் தோலை உரித்த காரணத்திற்காக இரும்புக் கம்பி, வயர்களால் அடித்து சாலையில் இழுத்துச் சென்றது போன்ற மோசமான செயல்களைச் செய்தவர்கள் தற்போது தமிழக தேர்தல் அறிக்கையில் பசு பாதுகாப்பு பற்றி குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாட்டின் சுமூகச் சமூகச் சூழலைக் குலைத்து வன்முறைக்குக் கத்தியைத் தீட்டும் ஆபத்து இதற்குள் இருக்கிறது.

முந்தைய காங்கிரசு ஆட்சியைவிட, மோடியின் ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதி இன்னும் அதிகரித்திருக்கிறது. காங்கிரசு ஆட்சியில் பசு மாட்டிறைச்சிதான் ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூசாமல் குற்றஞ்சுமத்திய மோடி, தனது ஆட்சியில் எருமை மாட்டிறைச்சி மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறி, தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது.

இதுவொருபுறமிருக்க, பசுவின் பாதுகாவலனாகத் (பா.ஜ.க.)  தன்னை முன்னிறுத்தி வரும் உ.பி. சட்டமன்ற உறுப்பினரான சங்கீத் சோம், அல் துவா  என்ற மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தின் முதலாளிகளுள் ஒருவர் என்பதும் இன்றும் இணையதளங்களில் உள்ளது.

பசு மாடாக இருந்தாலும் சரி, காளை, எருமைக் கறியாக இருந்தாலும் சரி தனி மனிதனின் உரிமைப் பிரச்சினை. அதில் தலையிட அரசுக்கு உரிமை கிடையாது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இத்தகு தடைகளும் கிடையாது. ஏன், இந்தியாவில்கூட பா.ஜ.க. ஆளும் கோவாவில் தடை கிடையாதே! வடகிழக்கு மாநிலங்களில் இந்தப் பிரச்சினை பற்றிப் பேசக்கூட முடியுமா?

பசுவைக் கோமாதாவாகக் கும்பிடும் இந்திய நாட்டுப் பசுக்கள் பாலைக் கறக்கின்றனவா? நம்மிடமிருந்து பணத்தைக் கறக்கின்றனவா என்பதுதான் முக்கியக் கேள்வி.

அமெரிக்கா 77.26 கிலோ, கனடா 69 கிலோ, நெதர்லாந்து 63.10 கிலோ, தெ.ஆப்பிரிக்கா 62.79 கிலோ, ஸ்பெயின் 61.82 கிலோ, ஜெர்மனி 67.17 கிலோ, டென்மார்க் 55.16 கிலோ, பிரிட்டன் 52.10 கிலோ. ஆனால், கோமாதாவாகிய ஓர் இந்தியப் பசுவின் சராசரி பால் கறவு 2.29 கிலோ.

அதிக பால் கறக்கும் அந்நிய நாட்டுப் பசுக்களை அந்நாட்டுக்காரர்கள் கோமாதா குலமாதா என்று போற்றவில்லை. ஆனால், வெறும் 2.29 கிலோ பாலைக் கறக்கும் பசு பாதுகாப்புக்காக சட்டம் போடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *