தலையங்கம்: உச்சநீதிமன்றத்தின் இரண்டு மெச்சத்தகுந்த தீர்ப்புகள்!

ஏப்ரல் 1-15,2021

அண்மையில் உச்சநீதிமன்றத்தில் இரண்டு மெச்சத்தகுந்த தீர்ப்புகள் வெளிவந்துள்ளன!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புமிகு(Landmark Judgements) தீர்ப்புகள் அவைகள்!!

ஒன்று, பெண்ணுரிமை பற்றியது; மற்றொன்று தற்போதுள்ள மத்திய பா.ஜ.க. அரசின் யதேச்சதிகார கருத்துரிமை பறிப்பைத் தடுத்து, ஓங்கி அதன் தலையில் ‘குட்டு’ வைக்கும் தீர்ப்பு.

இராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகளில் உயர் பதவிப் பொறுப்புகளில் நிரந்தரப் பணி வழங்கும் நடைமுறைகளில் பாகுபாடு காட்டப்படுவதை எதிர்த்து அந்தப் பெண் அதிகாரிகள் தங்களுக்கு நீதி வழங்க வேண்டுமென்று நீதிமன்றங்களை அணுகி 18 ஆண்டுகாலமாக நடந்த சம உரிமைப் போருக்கு இத்தீர்ப்பு முற்றுப் புள்ளி வைத்து, சரியான நீதி வழங்கியுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.

இராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தீர்ப்பளித்தது. அதையடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு மேற்கொண்டது.

இந்நிலையில், தற்காலிகமாகப் பணியாற்றி வரும் பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்குவதற்கான நடைமுறைகளில் பாகுபாடு  (Discrimination) காட்டப்படுவதாக பெண் அதிகாரிகள் சிலர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு விரைவுப்படுத்தவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

(காரணம் வெளிப்படை; ஆர்.எஸ்.எஸ். கொள்கை, பெண்களை சமையலறை, குடும்ப நிருவாகத்தை முடக்கிவிடுவது மட்டுமே தேவை என்பதால்)

பெண்களுக்குச் சமவாய்ப்பு தரவேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டப்படி அவர்களுக்குள்ள பிறப்புரிமையே; பிச்சையோ சலுகையோ அல்ல.

மக்கள் தொகையில் சரி பகுதி சுமார் 65 கோடி மக்கள் சமுதாயம் பெண்கள் சமுதாயம். என்றாலும் அவர்கள் வேற்றுமைப் படுத்தப்படுகிறார்கள்.

ஒரே வேலையைச் செய்யும் ஆண் _ பெண் அதிகாரிகளிடையே எதற்கு இந்தப் பேதம்? (மனுதர்ம மனப்பான்மை அல்லாமல் வேறு என்ன?)

“இராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்குவதற்காக அவர்களிடம் வழங்கப்படும் ஒவ்வொரு ஆண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையில், நாட்டுக்காக அவர்கள் செய்த சாதனைகளைக் குறிப்பிடுவதற்கு எந்தவித வாய்ப்பும் வழங்கப்படவில்லை! அச்சாதனையைக் குறிப்பிடுவதற்கான இடம் அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற முறைகளில் பெண் அதிகாரிகளின் செயல்பாடுகளை மதிப்பிடுவது, கடந்த ஆண்டில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை செயல்படுத்துவதாக இல்லை! இது பெண் அதிகாரிகளை பாகுபடுத்தும் வகையில் உள்ளது. இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது.

நிரந்தரப் பணி மறுக்கப்பட்ட பெண் அதிகாரிகள் கருணை அடிப்படையில், பணிகளைக் கோரவில்லை. தங்களின் உரிமைகளையே அவர்கள் கோருகிறார்கள். அதற்காகவே நீதிமன்றத்தை அவர்கள் நாடியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பாகுபாடு ஏதுமின்றி நிரந்தரப் பணி வழங்க வேண்டும்.

நமது சமுதாயத்தின் கட்டமைப்பு, ஆண்களால் ஆண்களுக்காகவே ஏற்படுத்தப் பட்டது போல் உள்ளது. இத்தகைய சமூகத்தில் சமத்துவம் குறித்துப் பேசுவது நகைமுரணாக உள்ளது!

நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து, பெண்களுக்குச் சம வாய்ப்புகள் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது முற்போக்குச் சிந்தனை வெளிச்சத்தைக் காட்டும் தீர்ப்பாக ஒளிருகிறது.

தந்தை பெரியாரின் செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் _ பெண்களுக்கு இராணுவத்திலும் போலீசிலும் சம வாய்ப்புத் தரப்படுவது மிகவும் அவசியம் என்ற தொலைநோக்கு, இன்று 90 ஆண்டுகள் கழித்து எப்படி உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் பிரதிபலிக்கின்றன பார்த்தீர்களா?

தீர்ப்பு எழுதிய மாண்பமை நீதிபதிகள் ஜஸ்டிஸ் சந்திரசூட் அவர்கள் தலைமையில் அமைந்த அமர்வு, ‘பாலியல், சமூகநீதி, புரட்சிகரமான கருத்துகளை எடுத்துக்காட்டியுள்ளது. உச்சநீதிமன்றம் _ உயர்நீதிமன்றங்களில் இன்னமும் நியமனங்களில்கூட மகளிர் உரிமை சமவாய்ப்புடன் கூடியதாக இல்லையே!

இதேபோல் மற்றொரு தீர்ப்பு, கருத்துரையைப் போற்றிப் பாதுகாப்பு தரும் வகையில் அமைந்த தீர்ப்பு.

மேகாலயா மாநிலத்தில் உள்ள ‘ஷில்லாங் டைம்ஸ்’ என்ற பத்திரிகை ஆசிரியர் பாட்ரிகா முக்கிம் என்பவர் மீது, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசினார் என்று வழக்குப் போடப்பட்டது.

அப்பத்திரிகை ஆசிரியர் பாட்ரிக்கா முக்கிம், சமூக வலைத்தளத்தில் (முகநூலில்) முகமூடி அணிந்து வந்து, பழங்குடி அல்லாத இளைஞர்கள் ‘பாஸ்கட் பால்’ விளையாட்டு விளையாடும் மைதானத்தில் தாக்கப்பட்டனர். மேகாலய முதல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பேசினார் என்று கூறி இது வெறுப்புணர்வைத் தூண்டுவதாக அமைந்துள்ளது என்று அப்பத்திரிகையினர் மீது வழக்குப் போட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில், “அரசுக்கு எதிராக கருத்துக் கூறுவது, அரசு நடவடிக்கை எடுக்காததை குறைகூறி, நடக்க வற்புறுத்திடும் வகையில் எப்படி வெறுப்புணர்வைத் தூண்டல் ஆகும்?’’

சுதந்திரமான பேச்சுரிமை, சுதந்திரமான பயணங்களும் ஒவ்வொரு இந்தியருக்கும் உள்ள அடிப்படை உரிமை; சட்டம் ஒழுங்கைப் பாதித்தால் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ள நியாயம் உண்டு. எனவே, அந்தப் பத்திரிகை ஆசிரியை மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்கிறார் (Quash) என்று எழுதியுள்ளனர்!

மத்திய அரசு _ அண்மைக் காலத்தில் கருத்துரிமை, பேச்சுரிமை -_ பா.ஜ.க. அரசில் பல வழக்குகள் போடப்பட்டு பறிக்கப்படும் உரிமைகள் _ பறிப்புக்கு எதிரான உச்சநீதிமன்ற கருத்தாகவே இதனைக் கருத வேண்டும். பாடங் கற்க வேண்டியதும் கடமையாகும்!

– கி.வீரமணி,

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *