என் நெஞ்சைத் தொட்டஆசிரியரின் பதில்கள்!
பிப்ரவரி 1-15, 2021 இதழில் வெளிவந்த ‘உங்களுக்குத் தெரியுமா?’ என்ற செய்தி அன்று சிலருக்குத் தெரிந்த செய்தி. இன்று, உண்மை இதழால் அது பலருக்குத் தெரிந்த செய்தியானதில் மிக்க மகிழ்ச்சி! அன்று (3.2.1969) அண்ணா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் சாதாரண தொண்டர்களில் நானும் ஒருவனாகக் கலந்து கொண்டதை இன்று நினைத்தாலும் கண்கள் கலங்குகின்றன. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு, ஆணை மீண்டும் வரும் என்று மஞ்சை வசந்தன் தீட்டிய முகப்புக் கட்டுரை அருமை!
“பச்சை இலைகளின் பயன்பாடுகள்! அனைத்தும் மருத்துவ, மகத்துவம் நிறைந்ததாகவே அமைந்திருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய, “தங்கத்தின் காதலன்!’ சிறுகதை அருமை! சிறுகதையில் வரும் அத்துணை வரிகளும் தேன்துளிகள். ‘பேரறிஞர் அண்ணா!’ என்ற தலைப்பில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய கவிதை முத்தமிழின் இனிமை. முக்கனியின் சுவை! வாசகர்களின் 9 கேள்விகளுக்கு, ஆசிரியர் அளித்த பதில்கள் அனைத்தும் என் நெஞ்சைத் தொட்டன.
அன்புடன்,
– தி.பொ.சண்முகசுந்தரம்,
திட்டக்குடி 606 106
‘உண்மை’ சனவரி 16-31, 2021 படித்தேன். அதன் ஒவ்வொரு பக்கங்களும் அருமை. பகுத்தறிவோடு வரலாற்று ஆவணமாக வருகிறது.
ஒரு வரிச் செய்தி, முகப்புக் கட்டுரையில் அண்ணாவின் பொங்கல் பற்றிய கருத்து தமிழர்களின் உணர்வு, மாணவர் பகுதியில் உள்ள கண்ணைக் காத்திட, உடல்நலத்தில் – மோர் குடல் காக்கும் உண்மை. உலகில் முதன்முதலில் ஆண்டுக் கணக்கீட்டை சூரியன் இருப்பை வைத்துக் கணக்கிட்டவர் தமிழர். பின் இதனைப் பின்பற்றியே ஆங்கிலேயர் ஆங்கில ஆண்டை அமைத்தனர் என்பதனை பல்வேறு தரவுகளோடு ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி 624 705.