கவிஞர் கலி.பூங்குன்றன்
உலக மகளிர் நாளான மார்ச்சு 8ஆம் தேதியன்று (2021) திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பாக சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களின் தலைமையில் மகளிர் உரிமைக் கிளர்ச்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அந்தப் போராட்டம் ஏன்? எதற்கு? என்ன அவசியம்? – உள்ளே நுழையலாம்!
நம்புங்கள் _ இது பாரதப் புண்ணிய பூமி. பாரதம் அல்ல; பாரத மாதா! நாடு என்று நவின்றால் போதாது _ தாய் நாடு என்று சொல்ல வேண்டும்! வெறும் மொழி என்று விளம்பிடக் கூடாது. தாய்மொழி என்றே சொல்ல வேண்டும்.
மும்மூர்த்திகள் மட்டுமல்ல; மூன்று தேவிகளும் கடவுள் பட்டியலில் உண்டு.
இவ்வளவும் இருக்கிறது _ ஆம், இருக்கவே செய்கிறது! இப்படியெல்லாம் வார்த்தைகளை வழங்கும்பொழுதெல்லாம் தேன்தான் சொட்டுச் சொட்டாகத்தான் சொட்டுகிறது.
ஆமாம். தாய்க் குலத்திற்கு _ மகளிர் குலத்திற்குச் சூட்டும் மாண்புகள் சாதாரணமானவையல்ல _ ஆம்! அந்த அளவுக்குப் பெண் குலத்தைப் போற்றுகிறார்களாம் _ போற்றிப் பா பாடுகிறார்களாம்!
ஆனால், மனுதர்மமும் கீதையும், மகாபாரதங்களும் பெண்களை குறைந்தபட்சம் ஓர் உயிராகவாவது மதிப்பதுண்டா?
தாய் இல்லாமல் நாம் எங்கிருந்து குதித்தோம் என்று ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்த்ததுண்டா?
எந்தச் காலத்திலோ பெண்கள் விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று மனுதர்மம் (அத்தியாயம் 9, சுலோகம் 19) கூறியிருக்கலாம்.
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று கீதை எந்தக் காலத்திலோ எழுதி இருக்கலாம். (அத்தியாயம் 9, சுலோகம் 32)
இந்தக் காலத்திலும், ‘தினமணிகளும்’, ‘தினமலர்களும்’, குருமூர்த்திகளின் ‘துக்ளக்குகளும்’ மனுதர்மத்தை மார்பில் போட்டுத் தாலாட்டி வருவதை நாம் பார்க்கவில்லையா?
கீதை உபதேசங்கள் நாள்தோறும் நடைபெறுவது ‘டுடேஸ் என்கேஜ்மெண்ட்’ கலத்தில் ஆங்கில ஏடுகளில் படிக்கவில்லையா?
அவ்வளவு தூரம் போவானேன்? உச்சநீதிமன்ற நீதிபதிகளில் நெஞ்சிலும் கீதையும் மனுதர்மமும் உல்லாசமாகக் குடிகொண்டு இருக்கிறதே!
அவர்களின் தீர்ப்புகளிலும், உரையாடல்களிலும் அவை மின்னித் தெறிக்கின்றனவே! _ மறுக்க முடியுமா?
அபாண்டமாகப் பேசாதீர்கள் _ எழுதாதீர்கள் _ எடுத்துக்காட்டுகள் கூற முடியுமா என்று கேட்கும் அதிகப் பிரசங்கிகளின் வாயை அடைக்க _ அவர்களின் துர்நாற்றம் வீசும் வாய்களை அமிலம் கொண்டு அலச இதோ சில எடுத்துக்காட்டுகளும் தரவுகளும்.
கடந்த நூற்றாண்டுச் செய்திகளோ, தரவுகளோ அல்ல; இதோ எடுத்துக்காட்டுக்குச் சில _ சமீப காலத்தில்,
டிசம்பர்_16, 2012: டெல்லியில் மருத்துவ மாணவி, ‘நிர்பயா’ நண்பருடன் இரவில், தனியார் பேருந்தில் பயணம் செய்தபோது, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். நண்பரும் தாக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நீண்ட சிகிச்சைக்குப் பிறகு நிர்பயா மேல் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
டிசம்பர்_29: சிகிச்சை பலனின்றி நிர்பயா, அதிகாலை 2:15 மணிக்கு உயிரிழந்தார்.
இதனால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டம் வலுவாக்கப்பட்டு, 2013இல் நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டது.
நீண்ட ஆண்டுகள் நடந்த இவ்வழக்கில் கருணை மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு, 20.3.2020 அதிகாலை 5:30 மணி, குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
பிரம்ம குமாரிகள் மாநாட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா கூறியது என்ன?
Women should go back to their homes and not think of competing with men on everything. Since the lady is more capable of building the home, what is necessary that there must be a switch over from office to home.
(பிரம்மகுமாரிகள் மாநாட்டில், 8.11.1996)
பெண்கள் வீட்டுக்குத் திரும்பட்டும். வீட்டை நிருவகிப்பதில் அவர்கள் விற்பன்னர்கள் என்று சொன்னவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாச்சே!
மருமகளை மாமியார் எட்டி உதைத்தால், அது ஒன்றும் குற்றமல்ல; என் மகன் உடனே விவாகரத்து செய்து விடுவான் என்று மாமியார் மிரட்டுவதும் குற்றமல்ல. இது குற்றவியல் பிரிவு 498இன் கீழ் தண்டனைக் குற்றமல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா, சிரியாக் ஜோசப் தீர்ப்பு. (22.7.2008)
21.2.2014 அன்று உத்தரப்பிரதேசத்தில் கூடிய இந்து மகா சபா, “இந்த நாட்டில் உள்ள பெண்கள் ஜீன்ஸ், டீசர்ட் மற்றும் மேலைநாட்டு ஆடைகளை அணியக்கூடாது. அப்படி அணிந்தால் அவர்களுக்கு ஏற்படும் நிலைக்கு அவர்களே பொறுப்பாவார்கள்’’ என்று தீர்மானம் நிறைவேற்றியது.
உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி எஸ்.ஏ.பாப்டே
முதல் கேள்வி: “நீங்கள் அவரைத் திருமணம் செய்துகொள்வீர்களா?”
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தலைமை தாங்கிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதியான எஸ்.ஏ.பாப்டே, ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த 23 வயது நபரைப் பார்த்து, “அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா?’’ எனக் கேட்டார்.
“அவரை (பெண்ணை) திருமணம் செய்து கொள்ள விரும்பினால் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும், இல்லை எனில் நீங்கள் உங்கள் வேலையை இழப்பீர்கள் அதோடு சிறைக்கும் செல்வீர்கள்” என்றார் பாப்டே.
இந்த வார்த்தைகள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இத்தனைக்கும் 2014_15இ-ல் அந்தப் பெண் 16 வயதில், தன் உறவினர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொந்தரவு கொடுக்கும் விதத்தில் பெண்ணைப் பின் தொடர்வது, பள்ளிக்குச் செல்லும் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது, பெட்ரோலை ஊற்றி எரித்துவிடுவேன் என மிரட்டியது, அமிலத்தை முகத்தில் எரிந்துவிடுவேன் என மிரட்டியது, பெண்ணின் சகோதரரைக் கொன்றுவிடுவேன் என மிரட்டியது என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.
பள்ளிக்குச் செல்லும் அப்பெண் தற்கொலைக்கு முயன்றபோதுதான் இந்த விவகாரம் வெளியே வந்தது.
பாதிக்கப்பட்ட பெண் சட்ட ரீதியாக மேஜரான பிறகு திருமணம் செய்து வைப்பதாக, குற்றம்சுமத்தப்பட்ட ஆணின் குடும்பத்தினர், பெண்ணின் குடும்பத்தினருக்கு வாக்கு கொடுத்திருந்ததால் காவல் துறையிடம் அப்போது இந்த விவகாரத்தைக் கொண்டு செல்லவில்லை என அப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள்.
புஷ்பா கணேடிவாலா
“சிறுமிகளின் கைகளைப் பிடிப்பதும், பேன்ட் ஜிப்பை கழற்றுவதும், போக்ஸோ சட்டத்தின் கீழ் ‘பாலியல் வன்கொடுமை’ என்று கூற முடியாது’’ என்று மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கணேடிவாலா கூறுகின்றார்.
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 50 வயது நபருக்கு மும்பை அமர்வு நீதிமன்றம் அந்த நபரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து, போக்ஸோ சட்டத்தின் 10 வது பிரிவின் கீழ் “மோசமான பாலியல் வன்கொடுமை” என்று என்று தெரிவித்த நீதிமன்றம், அவருக்கு அய்ந்து ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், ரூ .25,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இந்தத் தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி புஷ்பா கணேடிவாலாவின் தனிநபர் நீதிபதி அமர்வு விசாரித்து வந்தது. அப்போது பாதிக்கப்பட்டவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாகவும், காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் அந்தக் குற்றவாளி தனது பேண்ட் ஜிப்பை கழற்றி, மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தார் எனவும், தனது ஆண்குறியை பேண்டிலிருந்து அகற்றிவிட்டு, படுக்கைக்கு வரும்படி அழைத்ததாக தனது மகள் தெரிவித்ததாகவும் அந்த தாய் சாட்சியமளித்தார்.
இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு, நீதிபதி கணேடிவாலா,‘POCSO’ இன் பிரிவு 7இன் கீழ் “பாலியல் தாக்குதல்” என்பதன் வரையறையைக் குறிப்பிட்டார், “பாலியல் நோக்கத்துடன் குழந்தையின் பெண்ணுறுப்பு, ஆசனவாய் அல்லது மார்பகத்தைத் தொடுதல் அல்லது உடல் ரீதியான தொடர்பை உள்ளடக்கிய பாலியல் நோக்கத்துடன் வேறு எந்தச் செயலும் பாலியல் வன்கொடுமை என்று கூறப்படுகிறது”
ஆனால், இந்த வழக்கில் குழந்தையின் உடலின் தனிப்பட்ட பாகங்களைத் தொடவில்லை என்பதால், இந்த செயல் பாலியல் குற்றத்தின் ஒரு பகுதியாகும். சிறுமிகளின் கைகளைப் பிடிப்பதும், பேன்ட் ஜிப்பை கழற்றுவதும், போக்ஸோ சட்டத்தின் கீழ் ‘பாலியல் வன்கொடுமை’ என்று கூற முடியாது” என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் நீதிபதி புஷ்பா கணேடிவாலா, குற்றவாளிக்கு அமர்வு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்ததுடன், போக்ஸோ சட்டத்தில் இருந்து, இந்திய தண்டனை சட்டப்பிரிவுக்கும் குற்றவாளியை மாற்றினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பன்வாரி தேவி என்ற பெண், மாநில அரசின் சமூக மேம்பாட்டுத் துறையில் பணியாற்றிவந்தார். தனது பணியின் அங்கமாக, ஒன்பது மாதப் பெண் குழந்தைக்கு நடைபெறவிருந்த திருமணத்தைச் சட்டத்தின் உதவியுடன் தடுத்து நிறுத்தினார். இதனால் கோபமுற்ற அந்தப் பகுதி உயர்சாதி ஆண்கள் அய்வர் பன்வாரி தேவியை அவளது கணவன் கண்ணெதிரே கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்தனர். வழக்கு உள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட அய்ந்து பேரையும் மாவட்ட அமர்வு நீதிபதி விடுதலை செய்தார். தீர்ப்பில் அவர் குறிப்பிட்டிருந்த வாசகம் நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஜாதிய மூடத்தனத்தைப் பிரதிபலித்தது. “உயர்ஜாதி ஆண்கள் கீழ்ஜாதிப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்தனர் என்ற வாதத்தை ஏற்க முடியவில்லை’’ என்ற அவரது கூற்று புயலைக் கிளப்பியது.
* * *
2019இ-ல் வெளியான தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் பணி செய்யும் இடத்தில் பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டதாக மிக அதிகமாக வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றின் எண்ணிக்கை 5,830. இதற்கு அடுத்த நிலையில் மத்தியப் பிரதேசத்தில் 2,985 வழக்குகளும், அடுத்த நிலையில் மஹாராஷ்டிரத்தில் 2,910 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களின் எண்ணிக்கை குறித்த வரைபடத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஸா, டெல்லி, ஜம்மு_-காஷ்மீர், அஸாம், தெலங்கானா, கேரளம் ஆகிய பிரதேசங்கள் சிவப்பு வண்ணத்தில் அச்சுறுத்துகின்றன. தமிழ்நாட்டின் நிலை அவ்வளவு மோசமில்லை என்பது சற்றே ஆறுதல்!
இந்திய அளவில் 2019 கணக்குப்படி 1,45,000 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதிப்புக்கு ஆளானவர்களில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை 15%. இதற்கிடையில் பாலியல் குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை விதிப்பு குறித்த விவரங்கள் மனச்சோர்வையே அளிக்கின்றன: 2006-இல் குற்றம்சாட்டப்பட்ட வர்களில் 20% மட்டுமே தண்டிக்கப்பட்டனர். 2016இ-ல் இது 40% ஆக உயர்ந்தது. 2019இ-ல் இது 29.9% என இறங்குமுகமானது. பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை உயர்வதற்கு குற்றம்சாட்டப்பட்டவர்களின் தண்டிக்கப்படுவதன் எண்ணிக்கை குறைவதும் ஒரு முக்கிய காரணம் என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.