பெரியாரால் மனம்மாறிய வாஜ்பேயி!
கி.வீரமணி
பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியின் வளர்ச்சிக்காக கல்வித் திட்டப் பயணம் ஒன்றைச் செயல்படுத்த 18.6.95 அன்று கனடாவுக்குப் பயணம் செய்தேன். முதல்வர் பேராசிரியர் ச.இராசசேகரன் இப்பயணத்தில் எங்களோடு வந்தார். விமான நிலையத்தில் திராவிடர் கழகப் பொறுப்பாளர்களும் மற்றும் ஏராளமான தோழர்களும் வந்து வழியனுப்பி வைத்தனர்.
கனடாவிற்கு பயணம் செல்லும் ஆசிரியரை வாழ்த்தி வழியனுப்பும் கழகப் பொறுப்பாளர்கள்
லண்டன் ஈத்துரு விமான நிலையத்தில் நண்பர்கள் செல்வநாயகம் ‘தமிழோசை’ சங்கரமூர்த்தி, ஜெயம் ஆகியோர் வரவேற்றனர்.
கனடாவில் மெமோரியல் யுனிவர்சிட்டியின் எஞ்சினீயரிங் கல்லூரிக்கு 20.6.1995 அன்று செல்கையில் டீன் பேராசிரியை சேஷாத்திரி, பேராசிரியர் வெங்கடேசன், அடிஷனல் டீன் டாக்டர் மூர் முதலியவர்கள் வரவேற்றனர்.
எஞ்சினீயரிங் கல்லூரி கல்வி பற்றியும், எவ்வகையில் பயன்படுத்துகிறது என்பதையும் பேராசிரியர்கள் விளக்கினர். மதியம், ‘கேபோட் காலேஜ் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு கல்லூரித் தலைவரும், பதிவாளரும், பேராசிரியர்களும் அழைத்தனர். அவ்விழாவில், நியூ பவுண்ட்லேண்ட் மாநில முதலமைச்சர் கிளைட் வெல்ஸ் கலந்துகொண்டார். பட்டமளிப்பு விழாவிற்கான உடையை அணிவித்து, ஆட்சிக்குழு ஊர்வலத்தில் பங்கேற்கச் செய்து தனி மரியாதை தந்தனர்.
மாநில முதலமைச்சர் திரு.கிளைட் வெல்ஸ் அவர்களுடன் உரையாடும் ஆசிரியர்
கல்லூரி முதல்வர் எலைன் ஆன் அவர்கள் மாநில முதலமைச்சர் திரு. கிளைட் வெல்ஸ் அவர்களிடம் அறிமுகப்படுத்தினர். பெரியார் அறக்கட்டளை நற்பணிகளைக் குறிப்பிட்டனர். முதல்வர் வெல்ஸ்க்கு தந்தை பெரியார் உருவம் பொறித்த தட்டு மற்றும் ஆங்கிலப் புத்தகங்களையும் பரிசளித்தேன். அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார். வரவேற்புரையில் கல்லூரித் தலைவர் பேராசிரியர்கள், மாணவர்கள் கூடியிருந்த அவையில் கழகத்தின் நற்பணிகளையும், தந்தை பெரியாரின் சிந்தனைகளையும் எடுத்துக் கூறினார்.
அடுத்த நிகழ்வாக கனடா பயணத்தில் 26.6.1995 ‘கேபோட் காலேஜ்’க்கு சென்றேன். அங்கு பேராசிரியர் ஃசாபே (கல்லூரி நிருவாக துணைத் தலைவர்) மாணவர்கள் சர்வீஸ் டீன் பேராசிரியர் பால்ஃபேசி, டீன் பொரைல்டு ஜி.ஈல், பார்மசி மற்றும் மருத்துவத் துறையின் டீன் திருமதி ஹென்சன், கிறிஸ்டியன் மற்றும் முக்கியமானோர் கூடி வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கேபோட் கல்லூரியின் தலைவர் திருமதி. எட்னா டர்ப்பிள் டவுனி மற்றும் நியூ பவுண்ட்லேண்ட் மாநில முதல்வர் திரு.கிளைட் வெல்ஸ்
அவர்களுடன் உரையாடும் ஆசிரியர்
பல ஆண்டுகளுக்கு முன்பு வல்லம் வந்த திரு.பால்ஃபேசி (Paul Face) பெரியார் அறக்கட்டளை நடத்தும் கல்லூரிகளையும், அவை தமிழ்நாட்டில் நடத்திவரும் சிறப்பான புரட்சிகளையும் வெகுவாக மற்றவர்களுக்கு விளக்கிக் கூறினார். அவர்களுடன் பேசுகையில் தந்தை பெரியாரின் சமுதாயப் பணி, சமுதாய மாற்றத்திற்காக அவரது இயக்கத்தின் தொண்டு பற்றியும், கல்விப் பணியில் செய்து வரும் புதிய மாற்றத்தையும் எடுத்துக் கூறினேன். அனைவரும் வியந்து கேட்டனர்.
பிற்பகல் கல்லூரியின் குவாலிட்டி கண்ட்ரோல் துறை பேராசிரியையும், கல்லூரி தலைவர் திருமதி. எட்னா டர்ப்பிள் டவுனி (முன்னாள் கல்வித் துறை அமைச்சர்) ஆகியோர் வரவேற்றனர். அவர்கள் பெரியார் அறக்கட்டளைகளின் பணியை வெகுவாகப் பாராட்டினார்கள். அவர்களுக்கு அய்யா உருவம் பொறித்த தட்டு, பெரியார் பற்றிய ஆங்கில நூல்களை பரிசளித்தேன். சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம், பணிகள், சாதனைகள், அதனால் மகளிருக்கு விளைந்த நன்மைகளை விளக்கிக் கூறினேன். அதனைக் கேட்டு அவர்கள் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர்.
இரவு, கல்லூரியின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டின் முலாய், முதல்வர் மற்றும் பேராசிரியர்களும் கலந்துகொண்டு விருந்தளித்தனர்.
கனடா நாட்டின் நியூ பவுண்ட்லாண்ட் மாநிலத்தின் தலைநகரான செயின்ட் ஜான்ஸ் நகரில் உள்ள பிரபல தொழில்நுட்பக் கல்லூரியான கேபோட் (Cabot) கல்லூரியும், தஞ்சை_வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்கும் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டு, மூன்று ஆண்டுகள், பேராசிரியர்கள், நிபுணர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்பத் திறன் மற்றும் மாணவ _ மாணவிகள் பரிவர்த்தனை (Exchange) நடத்திட வாய்ப்புகளைத் தருவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கேபோட் கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவர் டாக்டர் திருமதி. எட்னா டர்ப்பிள் டவுனி அவர்களும், பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் ஆட்சிமன்றக் குழுத் தலைவர் என்கின்ற முறையில் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்களான எலைன்ஆன், கிறிஸ்டின் முலாய் முன்னிலையில் கையொப்பம் இட்டேன்.
கேபோட் கல்லூரி, தொழில்நுட்பத் துறையில் கல்வி தருவதுடன், தொடர் கல்வித் துறையிலும், பல துறைகளிலும் கல்விப் பயிற்சி தருகிறது. சுமார் 12 ஆயிரம் மாணவ _ மாணவிகள் அதில் பயிலுகின்றனர்.
தமிழ்நாட்டிலுள்ள 140 பாலிடெக்னிக்குகளில் தனியார் பாலிடெக்னிக் ஒன்று நேரடியாக கனடா நாட்டில் உள்ள கல்லூரி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துகொள்வது என்ற தனித்த பெருமையை பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் பெற்றது.
கனடா, அமெரிக்க நாடுகளின் சுற்றுப் பயணத்தின் போது வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ்நாடு அறக்கட்டளையின் 20ம் ஆண்டு விழா 1.7.1995இல் நடைபெற அதில் கலந்து கொண்டேன். அமெரிக்க ஒகையோ மாநிலத்தில் போலிடோ நகரில் வடஅமெரிக்கத் தமிழ் இளைஞர் கூட்டணியால் மூன்று நாள்கள் விழா நடைபெற்றது. அதில் இரண்டாம் நாள் விழாவில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழி நடைபெற்றன. “உலக வணிக புதிய தடை நீக்கங்களும், தமிழ்நாடும்’’ என்னும் தலைப்பில் இந்தியன் வங்கித் தலைவர் கோபாலகிருட்டினன் உரையாற்றினார். மாலை நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் உரையாற்றுகையில், “நடிப்பே சிவாஜி, சிவாஜியே நடிப்பு’’ என்றும், செவாலியர் விருது விழாவில் நடிகர் திலகம் தந்தை பெரியார் அவர்களை நினைவு கூர்ந்தது குறித்தும் குறிப்பிட்டு தமிழர்கள் நன்றியுள்ளவர்கள் என்றும் கூறி வாழ்த்தினேன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
சிவாஜிக்கு டொலிடோ மேயர் சிறப்பு விருது அளிக்க, அமெரிக்கத் தமிழர்கள் சார்பில் சிறப்புப் செய்யப்பட்டது. ஏற்புரையாற்றி நடிகர் திலகம் சிவாஜி நன்றியுடனும் பெருமையுடனும் உரையாற்றினார். விழாவில் கவிஞர் வைரமுத்து, பாரதிராசா, பஞ்சு பிரபாகரன், டாக்டர் ஜவகர் பழனியப்பன் போன்ற பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அறக்கட்டளையின் மூன்றாம் நாள் விழாவில் மாநாட்டு சிறப்பு நிகழ்ச்சியாக -_ தமிழ்நாடு அறக்கட்டளையின் அந்த ஆண்டுக்கான சிறப்புப் பரிசை நினைவில் நிற்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு வழங்கி, என்னை தலைமை ஏற்றுக்கொள்ள அழைத்தனர். பரிசினை ஏற்றுக்கொண்டு உரையாற்றுகையில், மிகுந்த உணர்ச்சி வசத்துடன், “அடிகளாரின் இனமானம் எவ்வளவு சிறப்புடையது. தந்தை பெரியார் அவர்களும் அடிகளாரும் ஒருவருக்கொருவர் எவ்வளவு மரியாதையுடனும் தமிழின ஈடுபாட்டுடனும் நடந்து கொண்டார்கள் என்பதை விளக்கினேன். கருப்பாகவும், காவியாகவும் வண்ணங்கள் வேறாக இருந்தாலும், எண்ணங்கள் எப்படி தமிழினம், தமிழ்ச் சமுதாயம் என்று ஒன்றாக இருந்தது’’ என்பதைப் போன்ற பல கருத்துகளை எடுத்துரைத்தேன்.
மாநாட்டில் “உலகளாவிய தமிழர்கள்’’ என்னும் தலைப்பில் பெரும் உரையொன்றை நிகழ்த்தினேன். ஏராளமான தமிழ் உணர்வாளர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அறக்கட்டளையின் புதிய தலைவர் திரு.சி.கே.மோகனம் அவர்கள் புதிய பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தினார். தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இவ்விழா பெருமை மிக்கதாக இருந்தது. சென்ற இடமெல்லாம் தமிழர்களின் அன்பிலும், அவர்களது கருத்துப் பரிமாற்றங்களிலும் திளைத்தபடி பயணம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் நடக்கும் மனிதநேயமற்ற இனப் படுகொலைகளைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் முதல் கட்டமாக இலங்கை தூதரகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டி கனடாவிலிருந்து 12.7.1995 அன்று அறிக்கை வாயிலாக கழகத்தினருக்கு வேண்டுகோள் விடுத்தேன். அந்த அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் புறநகர் பகுதியில், சிங்கள அரசின் விமானப்படை குண்டு வீச்சினை, சிறிதும் மனிதாபிமானம் அற்ற முறையில் பொதுமக்கள் _ சிவிலியன்கள் வாழும் பகுதியில் நடத்தியுள்ள தாக்குதல் கேட்டு வேதனை அடைந்தேன். தமிழினத்தை முற்றாக அழிப்பதற்கு முனைப்புடன் போரில் இறங்கிவிட்டதை உணர முடிகிறது.
வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு விட்டதால்தான், விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தையில் மீண்டும் கலந்துகொள்ள மறத்தனர். அவர்கள் இயக்கம்தான் சமாதானத்தைக் குலைக்கிறது என்று ஒரு தவறான பிரச்சாரத்தினை திட்டமிட்டுப் பரப்பிடும் பணியில் பன்னாட்டுப் பத்திரிகை உலகினையும், செய்தி நிறுவனங்களையும் ஏவி விட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் மட்டுமல்ல, உண்மைகளும் களத்தில் பலியாகிக் கிடக்கின்றனர்.
நெஞ்சு பிளக்கும் இந்தக் கொடுமைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை முதல் கட்டமாக வரும் 17.7.1995 அன்று காலை சென்னையில் உள்ள இலங்கை துணைக் கமிஷன் அலுவலகம் முன்பு திராவிடர் கழகம் முன்னின்று நடத்தும். இதற்கு ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சியினர், அமைப்புகளைச் சார்ந்தோர் ஒன்று திரண்டு மிகவும் வலிமையுடன் இதனை அறப்போராட்டமாகக் கருதி கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டோம். தமிழ்நாடு அரசும் இந்தக் கொடுமையை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறி அழுத்தம் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டோம்.
திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழக ஜாதி ஒழிப்பு மாநாடு 15.7.1995 அன்று செய்யாறு பேருந்து நிலையம் அருகாமையில் நடைபெற்றது.
மத்திய நிருவாகக் குழு உறுப்பினர் பெரியார் பெருந்தொண்டர் வேல்.சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.
தெற்குநத்தம் சித்தார்த்தன், பெரியார் நேசன், எழிலரசன், இரா.மதியழகன், ஒக்கநாடு தமிழமுதன், கவிஞர் காளிதாசு ஆகியோர் கொண்ட வீதி நாடகக் குழுவினர் ஒப்பனை ஏதுமின்றி, ஆரியர் வருகை, கபடி, விளம்பர மோசடி, பெண்ணடிமை, யார் பைத்தியம்? என்பன போன்ற குறு நாடகங்களை நடத்தி மக்களின் சிந்தனையைத் தூண்டினர்.
மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருவண்ணாமலை பழனி கழகக் கொடியை ஒலி முழக்கங்களுக்கிடையில் ஏற்றிவைத்தார்.
போளூர் நகர திராவிடர் கழகத் தலைவர் ப.பழனி _ மாவட்ட மகளிரணி அமைப்பாளர் உண்ணாமலை தம்பதியர் அடிமைச் சின்னமான தாலியை கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கிடையில் அகற்றினர்.
ஈழத்திலே தமிழர்கள் சிங்கள ராணுவத்தின் முப்படையாலும் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டித்து 17.7.1995 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் எழுச்சிமிகு கண்டனப் பேரணியை நடத்தினர். தோழர்களுக்கு கனடாவில் கல்விச் சுற்றுப் பயணத்திலிருந்து விடுத்த அறிக்கையை ஏற்றுத் திரண்டனர். தமிழர் தேசிய இயக்கம் உள்பட பல்வேறு தமிழர் உரிமை அமைப்புகள் பேரணியில் கலந்துகொண்டன. பேரணி பெரியார் திடலிலிருந்து கழகத் தோழர்கள் கழகக் கொடியையும் கருப்புக் கொடியினையும் கையிலேந்தி மகளிரணியினர் முன்னே செல்ல இருவர் இருவராக அணிவகுத்துச் சென்றனர்.
தூதரகம் முன்பாக கண்டன முழக்கமிட்டு, பின்னர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், துரை.சக்கரவர்த்தி, அ.இறையன், ஆனூர் ஜெகதீசன், எஸ்.துரைசாமி ஆகியோர் உரையாற்றிய பின்னர், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கருத்துரையாற்றினார். கோ.சாமிதுரை நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்கள் இலங்கை தூதரக துணை உயர் ஆணையாளரைச் சந்தித்து மனு அளித்தனர்.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து திராவிடர் கழகத்தினர் நடத்திய பேரணியின் முடிவில் இலங்கை துணைக் கமிஷனரிடம்
மனுக் கொடுக்கும் கழகத்தினர்
தமிழ் ஈழ விடுதலை உணர்வாளர்கள் பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டதை கழகப் பொறுப்பாளர்கள் தொலைபேசி வாயிலாகக் கூறினர். இந்த அறப்போராட்டம் கட்டுக் கோப்பாக நடைபெற முன்னின்ற அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துப் பாராட்டினேன்.
இலங்கையில் தமிழர் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து கழகம் நடத்திய கண்டனப் பேரணியையும், இலங்கை தூதரக ஆணையரிடம் மனு கொடுத்ததைப் பாராட்டியும் நன்றி தெரிவித்தும், இலங்கையில் உள்ள ‘புரோடெக்’ அமைப்பின் தலைவர் சா.செ.சந்திரகாசன் நன்றி தெரிவித்துக் கடிதம் ஒன்றை 21.7.95 அன்று எழுதினார். அதில்,
பெருமதிப்பிற்குரிய அய்யா,
வணக்கம். “எமது ஈழத் தமிழ் மக்களுக்கு இடுக்கண் வந்த போதெல்லாம் தாங்களும், திராவிடர் கழகமும் அதைக் களைய எடுத்த நடவடிக்கைகள் எம்மால் என்றுமே மறக்க முடியாதவை.
அம்முறையில், மீண்டும் போர் தொடங்கி, சிறீலங்கா சிங்கள இனவாத முப்படைகளால் ஈழத் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க, 17.7.1995 அன்று சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் முன்பு பேரணியாகச் சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தங்கள் கழகத்தின் நடவடிக்கையை மனதாரப் பாராட்டுகிறோம்.
தமிழகத்திலுள்ள ஏனைய ஒத்த கருத்துள்ளவர்களையும் இணைத்துக் கொண்டு, ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக திராவிடர் கழகம் எடுத்துவரும் நன்முயற்சிகள் _ இன்னலில் தவிக்கும் ஈழத் தமிழ் நெஞ்சங்களுக்கு ஆறுதல் தருபவையாகும். அகதிகள் பிரச்சினையானாலும், அன்னை நாட்டுப் பிரச்சினையானாலும் உடனுக்குடன் குரல் கொடுக்கும் உங்கள் கழகத்தின் செயற்பாடுகள் ஊக்கமூட்டுபவையாகும்.
எமது ஈழத் தமிழ் மக்கள் முழு விடிவைக் காணும் வரை உங்கள் தளரா முயற்சிகள் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
எம் சார்பிலும், எமது ஈழத் தமிழ் மக்கள் சார்பிலும், தமிழ்நாட்டில் தஞ்சமடைமந்துள்ள ஈழ ஏதிலியர் சார்பில் உளமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்கள் அன்புள்ள,
(சா.செ.சந்திரகாசன்)
என அந்தக் கடிதத்தில் கழகத்தின் முயற்சியை வரவேற்றார்.
கனடா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளில் நமது தொழில்நுட்பக் கல்லூரிகளுடன் இணைப்பு ஏற்படுத்தும் திட்டங்கள் வெற்றிகரமான வகையில் நிறைவேறின என்ற மகிழ்ச்சியோடு தாயகம் திரும்பினோம்.
குருசாமி
சென்னை விமான நிலையத்திலிருந்து நாங்கள் திரும்பியபோது, ஏராளமான கழகக் குடும்பத்தினரின் பாசமழையில் நனைந்தேன் என்றாலும், 23.7.1995 அன்று நண்பர் குருசாமி மறைவு என்கிற பேரிடி தலையில் விழுந்தது!
நேரே அங்கு சென்று இறுதி மரியாதை செலுத்திக் கொண்டிருந்தபோதே, மற்றொரு மின்னல்தாக்கி நம் கண்களைப் பறித்ததுபோல, வார்த்தைகளால் வடிக்க முடியாத சோக நிகழ்ச்சியை ஓடிவந்து கூறினார்கள்.
விமான நிலையத்தில் நம்மை வரவேற்றுவிட்டு, தனது இரண்டு சக்கர வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த அயன்புரம் கழகத் தலைவர் அசோக்குமார் விபத்துக்குள்ளாகி சாவின் கோரப் பிடிக்கு ஆளானார் என்கிற செய்தி ஆயிரம் ஆயிரம் சம்மட்டிகளால் நம் இதயத்தைத் தாக்கி சுக்கல் நூறாக்கியது போன்ற நிலைக்கு ஆளானேன்.
அசோக்குமார்
அவரது குடும்பமே திராவிட இயக்க குடும்பம். அவரது தந்தையார் அப்பகுதி தி.மு.கழகத்தில் முக்கியப் பொறுப்பாளர்களில் ஒருவர். அவரது திருமணத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நடத்தி வைத்தேன் என்ற நினைவு என்னை மேலும் துன்பத் தீயில் தள்ளியது!
கொள்கை ஆர்வத்தில் என்றும் குறையாத ஆர்வம் படைத்தவர். ஏன், வெறிபிடித்த வேங்கைபோல் எப்போதும் இருப்பார். கழகப் பணிகளை பம்பரமாகச் சுழன்று செய்வார். கட்டுப்பாட்டில் ஒப்பற்ற ஓர் இராணுவ வீரர்! போராட்டங்களில் ஈடுபட்டுப் பூரித்தவர்!
அவரது இழப்பு என்னை வாட்டுகிறது வதைக்கிறது!
இரண்டு பெரும் இழப்புகள் _ அதுவும் ஒரே நேரத்தில். அவரது அன்பு வாழ்க்கைத் துணைவியார், அவரது பெற்றோர்கள், உடன்பிறந்தோர், உற்றார் உறவினர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது!
இதற்கு மேலும் என்னால் எழுத முடியவில்லை. வீர வணக்கம்! வீர வணக்கம்! குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ‘விடுதலை’யில் அறிக்கை வெளியிட்டோம். அந்த அறிக்கையில்,
நமது பெரியார் கலையகத்தின் இயக்குநரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சுயமரியாதைக் கொள்கையிலும், உணர்விலும் சொக்கத்தங்கமாகத் திகழ்ந்தவரும், சுமார் 38 ஆண்டுகாலமாக நம்மிடம் மாறாத நட்புக் கொண்டவரும், பிரபல ஓவியர் _ புகைப்பட வல்லுநருமான தோழர் மா.குருசாமி அவர்கள் மாரடைப்பால், 23.7.1995 அன்று விடியற்காலை சுமார் 3:00 மணி அளவில் இயற்கை எய்தினார் என்கிற தகவல் அறிவிக்கப்பட்டபோது. நெருப்பில் விழுந்த நிலை எனக்கு ஏற்பட்டது! துன்ப துயரச் சூறாவளி என்னைத் தாக்கியது!
1957இல் எனது திருமணத்தை அய்யா அவர்கள் உறுதிப்படுத்திய காலகட்டத்தில் எனது சுற்றுப் பயணத்தின்போது, நன்னிலம் வட்டம் ஏனங்குடியில் முதன்முதலாக தோழர் குருசாமி அவர்களை நண்பர்கள் தங்கவேலு, திருவேங்கடம் ஆகியோருடன் சந்தித்தேன்.
அன்று முதல் அவரது நட்பு வளர்பிறையானது; அவரது மூச்சு, பேச்செல்லாம் கழகம்! பிறகு அவர் குடும்ப நலத்துறையில் அரசு தலைமை ஓவியராக (Chief Artist) பணியில் சேர்ந்த நிலையிலும், அஞ்சாது _ அயராது தான் ஒரு கருப்புச் சட்டைக்காரர் என்பதைக் காட்டத் தவறியதே இல்லை.
நமது அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் _ அன்னை மணியம்மையார் அவர்களால் பெரிதும் விரும்பப்பட்ட தோழர், படப்பிடிப்பாளர். இயக்கத்தின் தலைமைக்கு அவர் இறுதிவரை விசுவாசி. கடமை தவறாத கருஞ்சட்டை இராணுவ வீரன்.
ஒவ்வொரு ‘விடுதலை’ மலரும், நாள்காட்டி, கழக டைரிகளும் அவரது ஆற்றலின் சான்றுகள்! சென்னை அய்யா நினைவகம் அவரது கடும் உழைப்பால் உருவானது!
புகைப்படக் காட்சிமூலம் உலகம் முழுவதும் அய்யாவின் பெருமையைப் பறைசாற்ற வேண்டுமென்றே உழைத்தவர்.
எனது எண்ணங்களை அவரிடம் கூறுவேன். அதற்கு வண்ணங்கள் கொடுத்து வெற்றியடையச் செய்யும் விற்பன்னர், அம்மேதை!
அவரைக் கடந்த சில ஆண்டுகள் இருதய நோய் தாக்கிய நிலையில்கூட, அவர் பெரியார் திடலில் வந்து தனது கடமையை அமைதி வழியில் ஆற்ற அவர் என்றும் தவறாதவர்.
அரசுப் பணியில் எத்தனையோ சோதனைகள் அவருக்கு! அய்யாவுக்குப் படம் எடுத்தார் என்று நெருக்கடி காலத்தில் குற்றம் சாட்டப்பட்டபோது மறுக்கவில்லை.
அவர் சிறப்பு இயக்குநராகி, பெரியார் திடலில் ‘பெரியார் கலையகம்’ கண்டார்! கடுமையாக உழைத்தே கண்மூடினார்!
கழகப் பொறுப்பாளர்கள் அனைவருடனும் அன்பு பூண்டவர். பாசப் பிணைப்புடன் செயல்பட்டவர். விமானத்திலிருந்து இறங்கிய உடனே என் கண்கள் குளமாகின! நேரே அவர் இல்லம் சென்று கருப்பு மெழுகுவத்திக்கு இறுதி மரியாதை, வீர வணக்கத்தைச் செலுத்தினேன். மயான பூமிவரை சென்றேன். அவர் உடல் எரிந்தது _ நம் அனைவர் உள்ளங்களைப் போல. அவரது துணைவியார் _ சகோதரி மாஸ்கோ _ சுயமரியாதைக் குடும்பமானதால் அந்தக் காலத்திலேயே ‘மாஸ்கோ’ என்று பெயர் சூட்டப்பட்டவர். மகன்கள் நெப்போலியன், கவுதமன், மைத்துனர் எழிலன், அவருடைய தொண்ணூறு வயதைத் தாண்டிய மாமியார் ஆகியோரைக் கண்டு ஆறுதல் கூற முடியாமல் தவித்தேன்!
என் செய்வது! பகுத்தறிவுவாதிகள் எதனையும் ஏற்றே பழக்கப்பட வேண்டியவர்கள்தானே!
நண்பர் குருசாமி, பெரியார் திடலில், பெரியார் கலையகத்தின் மூலம் நிரந்தரமாக வாழ்வார் என்பது தானே நம் எல்லோருக்கும் ஒரே ஆறுதல்! வீரவணக்கம்! குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று அறிக்கை வெளியிட்டோம்.
ஈழத்தில் தமிழர் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரி ஆகஸ்ட் முதல் தேதி முதல் கையெழுத்து இயக்கத்தை தொடங்குவதை முன்னிட்டு திராவிடர் கழகத்தின் சார்பில் 28.7.1995 அன்று செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்தச் சந்திப்புக் கூட்டத்தில், “ஈழத்திலே தமிழர்கள் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்; சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு நாட்டின் ராணுவம் விமானத்தின் மூலம் குண்டு வீசித் தாக்குவது உலகிலேயே எங்கும் இல்லாத கொடுமையாகும். இதை எதிர்த்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அய்.நா.வின் பிரகடனமே இனப் படுகொலையைத் கண்டிக்கிறது. இனப் படுகொலை செய்யும் நாடுகளைக் கண்டிக்க வேண்டும் என்று அய்.நா.வின் மனித உரிமைக் கோட்பாடுகள் கூறுகின்றன! எனவே, இனப் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாட்டில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி அய்.நா.வின் மனித உரிமை கமிஷனுக்கு அனுப்ப இருக்கிறோம். இரண்டு மாதத்தில் இந்தப் பணி முடிவடையும்; இதன் நகல் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்படும். மேலும் இந்தக் காலகட்டத்தில் மாநில அரசு எடுக்க வேண்டிய முக்கிய பணியினையும் எடுத்துக் கூறினேன்.
கன்சிராம்
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோ நகரில் தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழா 29.7.1995 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. உத்தரப்பிரதேச மாநில முதல்வரான மாயாவதி அரசு நிறுவிய பெரியாரின் சிலையை ஆளும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான கன்சிராம் திறந்து வைத்தார். திரு.கன்சிராம் அவர்கள் பெரியாரின் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பெரியாரின் கொள்கைகள் வட இந்தியாவிலும் பரவ வேண்டும். அப்போதுதான் அங்குள்ள தாழ்த்தப்பட்ட -_ பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அகலும் என்ற ஆழமான கருத்தை கொண்டவர். முன்னதாக சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் விழாவில் உத்தரப்பிரதேசத்தில் தந்தை பெரியார் சிலையை அமைப்போம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாயாவதி
அதன்படி லக்னோ நகரின் பரிவர்த்தன் சதுக்கத்தில் பெரியார் சிலையை அரசு சார்பில் முதல்வர் மாயாவதி நிறுவினார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பேயிடம் இதைப் பற்றி கேள்வி எழுப்புகையில் “பெரியார் தீவிரமான கொள்கை கொண்டவர். பெரியாருடைய சேவையைப் பார்த்த பிறகு நாடு முழுவதும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக நான் என்னுடைய இந்து மத கொள்கைகளில் சிலவற்றை குறைத்துக் கொண்டேன்’’ எனவும் பதில் அளித்தார். இதற்கெல்லாம் மாயாவதி அரசு எங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என வாஜ்பேயி கூறினார்.
தந்தை பெரியார் சிலையை உத்தரப்பிரதேச அரசு நிறுவியதைப் பாராட்டி வாழ்த்துத் தந்தி ஒன்றை அனுப்பினேன். அதில்,
“மிகச் சிறந்த சமுதாயப் புரட்சி வீரரான தந்தை பெரியார் சிலையை லக்னோவில் திறந்ததன் மூலம் _ பாராட்டத்தக்க சாதனையைச் செய்துள்ளீர்கள். உளம் நிறைந்த பாராட்டுகளையும், உணர்வுபூர்வமான மகிழ்ச்சியையும் _ நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என மனம் மகிழ்ந்து செய்தி அனுப்பினேன்.
(நினைவுகள் நீளும்…)