பெண்ணால் முடியும் : பயிற்சியும் முயற்சியுமே வெற்றிக்கான வழிகள்!

பிப்ரவரி 01-15 2021

பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய திறமையைப் பெற்று உள்ளனர். கல்வி மட்டுமின்றி விளையாட்டுத் துறையில் அதுவும் தனி மனித விளையாட்டுகளில் பெரிய சாதனைகளை, சிறிய கிராமத்திலிருந்து குறைந்த வசதிகளிலேயே செய்வது என்பது ஆண்களும் நினைத்துப் பார்க்கக் கூடியதல்ல. அப்படி தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பெண்ணைப் பற்றிப் பார்ப்போம்.

தடகள விளையாட்டுகளில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு (வட்டு) எறிதல் உள்ளிட்ட விளையாட்டுகள் உள்ளன. கபடி, கிரிக்கெட், கூடைப்பந்து உள்ளிட்டவை குழு விளையாட்டுகள் ஆகும். இந்தக் குழு விளையாட்டில் களத்தில் இருக்கும் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடினால்தான் வெற்றி பெற முடியும். ஆனால், தடகளத்தில் தனி நபர் முயற்சியே வெற்றியைத் தீர்மானிக்கும். எனவே, தடகளத்தில் சாதிப்பவர்கள், அதிகமான பயிற்சி பெற வேண்டும். மேலும் ஆர்வத்துடன் விளையாட்டில் வெற்றி பெற வேண்டும். தடகள விளையாட்டுகளில் ஒன்றான தட்டு எறிதலில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மு.நாகமுத்துமாரி கோவாவில் நடைபெற்ற போட்டியில் தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இந்த வெற்றி குறித்துக் கூறுகையில்,

“நான் இங்குள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் போது, பள்ளியில் தடகள விளையாட்டுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் எனக்கு தட்டு எறிதல் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. தட்டு எறிதல் விளையாட்டில் தனித்தன்மை, திறமை வெளிப்படுவதோடு, தட்டு அதிக தூரம் செல்ல வேண்டும் என்கிற முனைப்பும் இருக்க வேண்டும்.

10-ஆம் வகுப்பு படிக்கும்போது, மண்டல அளவில் விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றேன். இந்த வெற்றி எனக்கு மிகவும் ஊக்கத்தைத் தந்தது. தொடர்ந்து மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு, 20க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றேன். பல போட்டிகளில் வெற்றி பெற்றதால் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில், “யூத் ரூரல் கேம்ஸ்’  மற்றும் “ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா’ சார்பில் கோவாவில் தேசிய அளவில் தடகளம் மற்றும் கபடி போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதில் நான் 19-வயதுக்குட்பட்டோர் பிரிவில் தட்டு எறிதலில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்றேன். இதில் ஆந்திரபிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொள்ள வந்திருப்பவர்களைப் பார்த்து தொடக்கத்தில் சற்று பயம் ஏற்பட்டது. எனினும் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற வேண்டும் என என்னுள் சபதம் எடுத்துக் கொண்டேன்.

தட்டு எறிதலில் கை மற்றும் உடல் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அதற்கு தொடர் பயிற்சி அவசியம். இதனால் அங்கு சென்றும் சும்மா இருக்காமல் பயிற்சி செய்து கொண்டே இருந்தேன். பின்னர், போட்டியில் களம் இறங்கி எனது முழு பலத்தையும் பயன்படுத்தி தட்டை வீசினேன். அது 20.8 மீட்டர் தூரம் சென்று எனக்கு தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த மாணவி 20.5 மீட்டர் தட்டு எறிந்து இரண்டாமிடம் பெற்றார். இந்த தங்கப்பதக்கம் பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இன்னும் சாதிக்க வேண்டும் என்கிற உந்துதலையும் கொடுத்துள்ளது. இந்தியாவுக்காக உலக அளவில் விளையாடி வெற்றி பெற்று, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக வைத்துள்ளேன். எதிர்காலத்தில் அய்.ஏ.எஸ்., படித்து நாட்டிற்கு பணி செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளேன்’’ என்றார் நாகமுத்துமாரி.

(தகவல் : சந்தோஷ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *