ஆசிரியர் பதில்கள் : ஆபத்தான பொது எதிரி பா.ஜ.க.

பிப்ரவரி 01-15 2021

கே:       குருமூர்த்தியின் சாக்கடை உதாரணம், ஆணவத்தாலா? அதிகார மமதையாலா?

                – பவித்ரன், மதுரை

ப:          ஆரிய ஆணவத்தாலும் அறிவு சூன்யத்தாலும் ‘துக்ளக்’ ஏட்டின் அட்டைப்படத்தில் கழுதைகள் அடிக்கடி வரும். அதன் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சாக்கடை உதாரணம்தான் தெரியும். சந்தனம் தெரியாது! இன்னும் சில மாதங்களில் வாய்க்கொழுப்பு வக்கணை தானே அடங்கும்!

கே:       பெண்கள் பாதுகாப்பாக இருக்க ஆறு மணிக்கு மேல் வெளியே செல்லாமலிருப்பது நல்லது என தேசிய மகளிர் ஆணைய தலைவி சந்திரமுகி கூறுவது அறியாமையாலா? _ பிற்போக்குத் தனத்தாலா?

                – மகிழ், சென்னை

ப:          தகுதியற்றவர்கள் பதவியில் இருந்தால் எப்படி துணிவில்லாமல் உளறுவார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்! பா.ஜ.க. அரசு எப்படிப்பட்டவர்களிடம் பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறது பார்த்தீர்களா?

கே:       மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு அகிலேஷ் யாதவின் ஆதரவு மற்றவர்கள் பின்பற்றத்தக்க வழிகாட்டுதல்தானே? பி.ஜே.பி.க்கு எதிராக வலுவான அணி அமைக்க, இத்தகைய உணர்வாளர்களை ஒருங்கிணைக்க இப்போதே முயற்சித்தால் என்ன?

                – அன்புச்செழியன், சேலம்

ப:          காங்கிரசும் கம்யூனிஸ்ட்களும் ஒரு தனி அணி அமைத்தால் பா.ஜ.க.வுக்கே லாபம் _ மேற்கு வங்கத்தில். மிகவும் ஆபத்தான பொது எதிரி பா.ஜ.க. என்பதை அந்தக் கட்சிகள் உணர்ந்து, கூட்டணியாக இல்லாமல் தொகுதி உடன்பாடாகக்கூட சேர்ந்து, பா.ஜ.க.வை மேற்கு வங்கத்தில் வரவிடாமல், மம்தா வருவதற்கு ஒத்துழைத்து, பிறகு எதிர்க்கட்சியாகவும்கூட இருக்கலாம்!

கே:       பி.ஜே.பி. ஆட்சியில் தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையின் பாதிப்பு இல்லை என்று சங்கிகள் பெருமை பேசி வரும் நிலையில், மீனவ படகுகளைக் கவிழ்ப்பதும் மீனவர்களைக் கொல்வதுமான கொடுமைக்கு என்ன பதில் கூறுவார்கள்?

– அகமது, மாதவரம்

ப:          தொடர்ந்து தமிழக மீனவர்கள் பா.ஜ.க. (மோடி) ஆட்சியில் வஞ்சிக்கப்படுவதன் உச்ச கட்டம் இது! கொடுமை! கொடுமையோ கொடுமை!!

கே:       தலைவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வந்தாலே ‘வாரிசு அரசியல்’ என்பது எப்படி சரியாகும்? மற்ற தொண்டர்களைப் போல அவர்களும் பொறுப்புக்கு வருவது சரிதானே?

                – சரவணன், புதுவை

ப:          குடும்பம் குடும்பமாக திராவிடர் இயக்கத்தில் இருப்பதும் உழைப்பதும், தகுதி இல்லையா? காங்கிரஸ் போன்ற அகில இந்தியக் கட்சியில் பாட்டி, தந்தை உயிர்த்தியாகம் செய்துள்ளனரே! அதை ஏன் மறைக்கிறார்கள்?

கே:       அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யினர் வெறுப்பைக் கக்குவது ஏன்?

                – முத்துக்குமார், காஞ்சி

ப:          ‘அவாள்’ -_ இவாள் உறவு டிரம்பிசத்துடன்தானே! அதனால்தான்! மோடி பெரிய நீண்ட வரவேற்பு கைத்தட்டலுடன் செய்ததால் பைடன் எதிரி என்று எண்ணுகிறார்கள் போலும்! அவர் மதவெறி அரசியல் செய்யாதவர். அதனாலும் வெறுக்கக் கூடும்!

கே:       குருமூர்த்திகளுக்கெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வராதா?

                – மகேந்திரன், சென்னை

ப:          பொறுத்திருந்து பாருங்கள்! ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதை காலம் காட்டும்; கற்றும் கொடுக்கும்!

கே:       இலவசத் திட்டங்கள், கடன் தள்ளுபடி போன்றவற்றை ஏழைகளுக்கு மட்டும் செயல்படுத்துவதுதானே சரியாகும்? வசதி படைத்தவர்களுக்கும் கொடுப்பது வீண் விரயமல்லவா?

                – செல்வம், கோவை

ப:          ‘ஆமென்!’ _ பசித்தவர்களுக்கு தான் பந்தி _ புளியேப்பக்காரர்களுக்கல்ல!

 

 

 

 

 

 

 

கே:       மக்கள் எழுச்சி, மனுதர்ம ஆட்சியை மண்டியிடச் செய்யும் என்பதை விவசாயப் போராட்டம் காட்டியுள்ளதாகக் கொள்ளலாமா?

                – பிரபு, கள்ளக்குறிச்சி

ப:          நிச்சயமாக! _ இது வரலாறு காணாத அளவில் இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து, பல லட்சம் குடும்பங்கள் கட்டுப்பாடாக அறவழியில் போராட்டம் _ உலகம் கண்டிராத ஒன்று! _ பலனில்லாமல் போகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *