சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : சித்தர்களும் சமூகப் புரட்சியும்

பிப்ரவரி 01-15 2021

நூல்: சித்தர்களும் சமூகப் புரட்சியும்

ஆசிரியர்: வழக்குரைஞர் இரா.சி.தங்கசாமி

பதிப்பாளர்:  மொழிஞாயிறு பதிப்பகம்,

 பால்நகர், சங்கர்நகர் – 627 357.

 திருநெல்வேலி மாவட்டம்.

 அலைபேசி : 93603 58114

  பக்கங்கள்: 200 விலை: ரூ.500/-

 

தமிழக வரலாற்றுத் திரிபுகளிலிருந்து விடுதலை

(களப்பிரர் ஆட்சிக் காலம் பொற்காலம்)

கி.பி.20 ஆம் நூற்றாண்டு வரையில் மறைந்து போயிருந்த களப்பிரர் அரசரைப் பற்றின வரலாற்றுச் செய்தி பாண்டியருடைய செப்பேடுகள் கிடைத்த பிறகு அவைகளிலிருந்து தெரிய வந்தன. சில ஆண்டுகளுக்குப் பிறகு தளவாய்புரச் செப்பேடு கிடைத்ததும் இந்தச் செப்பேட்டிலிருந்தும் களப்பிர அரசரைப் பற்றி அறிகிறோம். களப்பிரர் பற்றிய விளக்கங்கள் வேள்விக்குடிச் செப்பேடுகளிலும் பல்லவர்கள் மற்றும் சாளுக்கியர் ஆகியோருடைய செப்பேடுகளிலும் கிடைத்துள்ளன. பாண்டியன் கடுங்கோன் பாண்டிய நாட்டைக் களப்பிரரிடமிருந்து மீட்டுக் கொண்ட போது ஏறக்குறைய அதே காலத்தில் தொண்டை நாட்டு அரசனான பல்லவ சிம்மவிஷ்ணு சோழ நாட்டைக் களப்பிரரிடமிருந்து கைப்பற்றிக் கொண்டான். இந்த வரலாற்றைப் பள்ளன் கோவில் செப்பேடும் வேலூர்பாளையம் செப்பேடும் கூறுகின்றன. ஏறத்தாழ கி.பி. 250 முதல் கி.பி. 575 வரை தமிழ்நாட்டைக் களப்பிரர் ஆண்டனர் என்று கருதுவது தவறாகாது என அறிஞர் மயிலை வேங்கடசாமி அவர்கள் கூறுகிறார். களப்பிரர் ஆட்சியின் கீழ் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, துளுநாடு, கொங்குநாடு, இரேணாடு, ஈழநாடு ஆகியவை அடங்கும்.

களப்பிரர் காலம் என அழைக்கப்படுகின்ற கி.பி. 250-550 வரை 300 ஆண்டுகள் இருண்ட காலம் எனவும், கலியரசர்களின் ஆட்சிக்காலம் எனவும், தமிழ் நாகரிகம் அழிக்கப்பட்ட பிறமொழி மன்னர்களின் காட்டாட்சிக்காலம் எனவும், தமிழக வரலாறெழுதிகளால் இதுவரை பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இக்கருத்தை வலியுறுத்தும் வரலாற்றாசிரியர்களில் சேக்கிழார், நீலகண்ட சாஸ்திரி, மு.அருணாசலம் பிள்ளை , அவ்வை துரைசாமிப் பிள்ளை , அ.சா.ஞானசம்பந்தன், கே.கே.பிள்ளை , குணா போன்றோர் அடங்குவர்.

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, சோழன் செங்கணான், சேரமான் கோக்கோதை மார்பன் கொங்குநாட்டு கணைக்கால் இரும்பொறை ஆகியோர் கடைச் சங்க காலத்தின் இறுதியில் இருந்த தமிழரசர்கள். இவர்களுக்குப் பிறகு ஏறத்தாழ கி.பி. 250 இல் களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றித் தங்கள் ஆட்சியை நிறுவினர்.

களப்பிரர் கலியரசர்கள் என்றும், அவர்களது ஆட்சிக்காலம் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்றும் கூறுவதற்கு அடிப்படையான காரணம் வேள்விக்குடிச் செப்பேடு தரும் செய்தியாகும். இச்செப்பேடு வடமொழியான சமற்கிருதம் தென்மொழியான தமிழ் இரண்டிலும் எழுதப்பட்டு பதினெட்டு பக்கங்களில் அடங்கியுள்ளது. ஆரியப் பிராமணர் தங்களுக்கும் தங்கள் ஆதிக்கத்திற்கும், பண்பாட்டிற்கும் கெடுதலை உண்டாக்கியவர்கள் கலியரசர்கள் எனக் கூறினர்.

களப்பிரர் காலத்தைப் பற்றி ஆய்வு செய்துள்ள பேராசிரியர் சத்தியநாதய்யர், டாக்டர் மா. இராசமாணிக்கனார், டாக்டர் க.ப.அறவாணன், மு. இராகவ அய்யங்கார் போன்ற ஆய்வறிஞர்கள் களப்பிரர் தமிழர்கள் என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர். சேர, சோழ, பாண்டியர் களப்பாளரைத் (களப்பிரரை) தமிழ்ச் செய்யுளில் பாடினபடியால் களப்பிரர் தமிழர்கள் என பி.டி.சீனிவாச அய்யங்கார் கூறுகிறார். எஸ்.கே.அய்யங்கார் களப்பிரரை திருப்பதி மலைப் பகுதியைச் சேர்ந்த களவர் என்கிறார். டி.என்.சுப்பிரமணியன் களப்பிரர் சங்கம் மருவிய கால ஜைனர்கள் எனக் கூறுகிறார்.

தமிழ் இலக்கியத்திலும், கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படுகிறவர்களும் வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர்களுமான களப்பாளர் என்பார் களப்பிரர் என்ற பெயரில் விளங்குகின்றனர் என்று சிலர் கருதுகின்றனர். தொண்டை நாட்டில் களந்தை என்னும் இடத்தில் கூற்றுவன் என்றொரு மன்னன் ஆண்டு வந்தனன் எனவும், அவனே கூற்றுவநாயனராகத் திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றான் எனவும் பெரிய புராணம் கூறும். இவன் களப்பிரர் குலத்தைச் சேர்ந்தவன் என்று சிலர் கருதுகின்றனர்.

பாண்டியனுடைய மீன் கொடியையும், சேரனுடைய வில் கொடியையும், சோழனுடைய புலிக் கொடியையும் களப்பிரர் தங்களுடைய கொடியாகக் கொண்டிருந்தனர் என்பதைக் “கெடலருமா முனிவர்’’ என்று தொடங்கும் செய்யுளால் அறிகிறோம். பாண்டியர் வரலாறு என்னும் தமது நூலில் காவேரி விளை நிலப்பகுதியை ஆண்ட களப்பாளர் என்பாரே களப்பிரர் ஆவார் என டி.வி.சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார். கன்னடப் பகுதியைச் சேர்ந்த களபப்பு நாடு பகுதியைச் சேர்ந்தவர்களே களப்பிரர் என அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி கூறுகிறார். மேலும் அவர் களப்பிரர் தமிழரல்லர் என்றும், கன்னட வடுகர் என்றும் அதே சமயம் அவர்கள் ஆரியருமல்ல வென்றும் கூறுகிறார். சந்திரகுப்த மவுரியர் துறவு பூண்டு தன் குரு பத்ரபாகு தலைமையில் வந்து தங்கியிருந்த கர்நாடக சிரவணபெலகொலா பகுதியே பழைய களபப்பு நாடாகும் என்றும், சமணத்துறவிகள் பலர் அங்கு தங்கியிருந்தனர் என்றும் மயிலையார் கூறுகிறார்.

தமிழ் இலக்கிய வரலாறு என்னும் தமது நூலில் கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே கன்னடமும் தெலுங்கும் வடிவம் கொண்டன எனக் கூறுகிறார், டாக்டர் மு.வரதராசனார். மு.வ. அவர்களின் கூற்றுப்படி கன்னடம், தெலுங்கு மொழிகளின் தோற்றத்திற்கு முன்பு அவற்றின் தாய்மொழியான தமிழ் மொழிதான் அப்பகுதிகளில் இருந்திருக்க முடியும். எனவே,  சமற்கிருதம் தாக்கமில்லாத அப்பகுதியைச் சேர்ந்த களப்பிரர் தமிழர்களே என்று கருதுவதில் தவறில்லை.

களப்பிரர் முதலில் பவுத்தர்களாக இருந்தனர். அதன் பின்பு தங்களை மாற்றிக் கொண்டனர். இவர்களது ஆட்சிக் காலத்தை இருண்ட காலம் என்று பார்ப்பனர் மற்றும் பார்ப்பனிய மயமாக்கப்பட்ட பார்ப்பனரல்லாத வரலாற்றாசிரியர்களும் இலக்கியவாதிகளும் செய்து விட்டனர். அவர்கள் அனைவரும் இன்றுவரை களப்பிரர் ஆட்சிக்காலம் யாருக்கு இருண்ட காலம் என்பதைக் கூற மறுத்து விட்டனர். பார்ப்பன சத்சூத்திரரான வேளாளப் பண்பாட்டைத் திட்டமிட்டுத் தமிழர் மீது திணித்து வரும் வரலாற்றாசிரியர்கள் மு. அருணாசலம் பிள்ளை, அவ்வை துரைசாமிப் பிள்ளை, அ.சா.ஞானசம்பன், கே.கே.பிள்ளை போன்றோர் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்ற முடிவுக்கு வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் வருமாறு.

1. தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

2. களப்பிரர் தங்கள் மொழியான பாலிமொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். (களப்பிரர் தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது).

3. களப்பிரர் தமிழ், தமிழ் பண்பாட்டு வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர். தமிழையும் தமிழ் பண்பாட்டையும் அழித்தவர்கள்.

4. வேள்விப் பாரம்பரியத்தையும் சைவப் பாரம்பரியத்தையும் அழித்தவர்கள்.

5. பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட்ட தானங்களை ஒழித்துக் கட்டியவர்கள்.

6. களப்பிரர் என்னும் கலியரசர்கள் ஆட்சியை அபகரித்துக் கொண்டனர்.

7. களப்பிரர் தமிழரல்லர்.

“களபரன் என்னும் கலி அரசன் தமிழகத்தைக் கைக்கொள்ள’’ என்று குறிப்பிடும் வேள்விக்குடிச் செப்பேடு பாண்டியன் நெடுஞ்செழியன் (பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி) பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுத்த வேள்விக்குடி என்னும் கிராமத்தை களப்பிர அரசன் பறித்துக் கொண்டான் என்ற செய்தியைக் கூறுகிறது. உண்மை என்னவெனில், யாகம் நடத்திய வகைக்கு மன்னன் அரசதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வேள்விக்குடி கிராமத்தை தமிழ் பழங்குடி மக்களிடமிருந்து பறித்து யாகப் புரோகிதனுக்கு தாரை வார்த்ததை களப்பிரர் அரசன் மீட்டி அம்மக்களுக்குத் திருப்பிக் கொடுத்து விட்டான்.         

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி :

தமிழகத்தில் அந்த 300 ஆண்டு காலத்தில் வரலாறு என்பதே இல்லை எனக்கூறி பிராமணர்கள் பாதிக்கப்பட்டதை பரிதாப உணர்வுடன் பார்ப்பது மட்டுமின்றி, தமிழக வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்.

மு.அருணாசலம் பிள்ளை

“களப்பிரர்கள் எந்தவொரு இராஜ பாரம்பரியத்திலும் வந்தவர்கள் அல்லர். பழங்காலத்தில் இராஜ பாரம்பரியத்தில் வந்தவர்களே ஆளுமை உடையவர்களாக இருந்தனர். இந்த இராஜ பாரம்பரிய ஆளுமை என்பது அக்காலக் கட்டத்தில் எல்லா இலக்கியங்கள், மத நிறுவனங்கள் போன்றவற்றில் தனது முத்திரையைப் பதித்திருந்தது. எனவே, இராஜ பாரம்பரியமற்ற களப்பிரர்கள் பழந்தமிழ்ப் பெருமையைக் கட்டிக் காப்பதற்கு சாத்தியமற்றவர்களாக இருந்தனர். மொழியையும், பண்பாட்டையும் அழித்த எதிர்மறை ஆட்சியாகவே அவர்களது ஆட்சி இருந்தது.’’

அவ்வை துரைசாமி பிள்ளை:

“களப்பிரர்கள் புகுதற்கு முன் தமிழகம், நாடு புகழும் நலஞ்சிறந்து விளங்கிற்று. அத்தகைய தமிழகம் கல்வி, வாணிபம், பொருள், அரசியல், சமயம் ஆகிய துறைகளில் களப்பிரர் வரவால் பெரு வீழ்ச்சியுற்றது. அவ்வத்துறைகளை விளக்கும் தமிழ் நூல்கள் அழிந்தது அக்காலத்தேயாகும். சுருங்கச் சொல்லுமிடத்து, தமிழர்களின் கல்வியைச் செல்வாக்கிழப்பித்து கடல் வாணிபத்தை உடலறக்கெடுத்துப் பொருள் விளக்கத்தை இருள்படுத்தி, அரசியலை அலைக்கழித்து, சமயத்தைக் குலைத்து நின்றது களப்பிரரது கடுங்கோலாட்சி என்பது அமையும். பாண்டிய நாட்டில் இடைக்காலத்தே தோன்றிய கடுங்கோன் முதலிய பாண்டியர்களால் அவர்கள் வேரோடு தொலைக்கப் பெற்றனர்.”

அ.சா.ஞானசம்பந்தன்

களப்பிரர்கள் கொள்ளைக் கூட்டத்தினர் என்றுதான் நினைக்க வேண்டியதிருக்கிறது.

கே.கே.பிள்ளை

“தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்“ என்னும் தமது நூலில், “தொண்டை மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் ஆகியவற்றில் ஒன்றேனும் இவர்களுடைய கொடுமையினின்று தப்பவில்லை. தமிழகத்துக்கு இவர்களால் ஏற்பட்ட குழப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள், கலியரசர்கள். இவர்களைப் பற்றிய விளக்கங்கள் வேள்விக்குடி செப்பேடுகளிலும் பல்லவர், சாளுக்கியர் ஆகியோருடைய செப்பேடுகளிலும் கிடைத்துள்ளன. கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஒருவனாலும், சிம்மவிஷ்ணு, முதலாம் நரசிம்மவர்மன் என்ற பல்லவ மன்னர்களாலும், முதலாம் விக்கிரமாதித்தன், இரண்டாம் விக்கிரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னர்களாலும் களப்பிரர்கள் அழிவுற்றனர் என அறிகின்றோம்’’ என்று கூறுகின்றார்.

முதுபெரும் தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி

களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழர் தமிழ்மொழியை புதியமுறையில் வளர்த்தார்கள். இந்த முயற்சியில் அக்காலத்து தமிழர் மதபேதம் பாராட்டாமல் ஒன்றாக இணைந்து தாய்மொழியை வளர்த்தனர். பவுத்த, சமண, சைவ, வைணவ சமயத்துத் தமிழ்ப்புலவர் அனைவரும் தமிழை வளர்த்தார்கள். புது வகையான பாக்களும் புது வகையான இலக்கியங்களும் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் உண்டாக்கப்பட்டன. பனை ஓலையும், எழுத்தாணியுமே அக்காலத்து எழுது கருவிகளாக இருந்தபடியால் களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பிராமி எழுத்தின் மாற்றமும் முழு மாற்றமாகிப் பையப் புதுவகையான எழுத்தாயிற்று. இப்புதுவகையான எழுத்து வட்டெழுத்து என்று பெயர் பெற்றது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் வட்டெழுத்து வழங்கியது என்பதில் அய்யமில்லை.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *