நெஞ்சு வலி என்பது பலருக்கு ஏற்படக் கூடிய ஒன்று. மார்புப் பகுதியில் உள்ள விலா எலும்பு இடைத் தசைகளில் (Intercostal Muscles) பிடிப்பு இருந்தால் வலி ஏற்படும். ஆனால், இது தொடர்ச்சியான வலியாக இருக்கும். விட்டு, விட்டு வராது. வலி மாத்திரைகளும் (NSAID), தசை இளக்கி (Muscle Relaxants) மருந்துகளும் இவ்வலியை முழுமையாகச் சீர்மைப்படுத்தும்.
இரைப்பை அழற்சியால் ஏற்படும் நெஞ்செரிச்சல், பல நேரங்களில், மாரடைப்பால் ஏற்படும் வலியை ஒத்திருக்கும். இது பல நேரங்களில் நோயாளிக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும். அச்சத்தையும் ஏற்படுத்தும். பல நேரங்களில் மாரடைப்பால் ஏற்படும் வலியை, இரைப்பை அழற்சியால் ஏற்படும் வலி என்று பல நோயாளிகள் ஏமாறும் நிலை உண்டு. இதனால் உயிரே போகும் ஆபத்தும் ஏற்படக் கூடும். பல பேர் இவ்வாறு நிகழ்வில் மரணமடைந்ததும் உண்டு. அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் தேவையான ஒன்று. மார்பு வலி ஏற்படும் வேளைகளில், தீவிர ஆய்வுகளை மேற்கொள்வது தேவையான ஒன்று. இரைப்பை அழற்சிக்கான மருத்துவம் வேறு; மாரடைப்புக்கான மருத்துவம் வேறு. தக்க ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே நெஞ்சு வலி எதனால் வருகிறது என அறிய முடியும்.
மருத்துவர் அறிவுரையின் படியே ஆய்வுகளை மேற்கொண்டு, மருந்துகளையும் எடுக்க வேண்டும். நெஞ்சு வலி சாதாரண நெஞ்சு வலி என்றோ, இரைப்பை அழற்சியினால் ஏற்படும் நெஞ்சு வலிதான் என நினைத்தோ அசட்டையாக இருந்து விடக் கூடாது. எச்சரிக்கையாக இருத்தல் கட்டாயத் தேவை!