கவிதை : பேரறிஞர் அண்ணா!

பிப்ரவரி 01-15 2021

– கவிக்கோ அப்துல் ரகுமான்

அண்ணா!

அழுகின்றபோதும்

மேகம் போல் அழுதவன் நீ!

விழுகின்றபோதும்

விதையைப்போல் விழுந்தவன் நீ!

 

அண்ணா! உன் பெயரிலேயே நீ             

உறவு கொண்டு வந்தாய்!

 

பெரியாரோ, காட்டுத் தீ

நீயோ அந்தத் தீயிலே ஏற்றிய

ஒரு திருவிளக்கு!

 

வெறும் தலைகளை எண்ணிய தலைவர்களிடையே

இதயங்களை எண்ணியவன் நீ!

 

உன் எழுதுகோல்

தலை குனியும்போதெல்லாம்

தமிழ் தலை நிமிர்ந்தது.

 

தொண்டை புரிவதற்கே

தோன்றியவன் என்பதற்கோ

தொண்டை நாடு உன்னுடைய தொட்டில் நாடு ஆக்கி வந்தாய்?

 

(அண்ணாவின் மரணம்)

அன்று இறந்ததோ நாம்;

புதைத்ததோ உன்னை!

 

நம்மைப்போல்

பைத்தியக்காரர்கள் யார்?

உடல்களைப் புதைக்கும்

உலகத்தில்

அன்று நாம் ஓர்

உயிரைப் புதைத்தோம்!

 

கடற்கரையில் பேசுவாய்

கடலலையில் மீனாவோம்

கடற்கரையில் தூங்கிவிட்டாய்

கடற்கரையில் மீனானோம்.

 

இங்கே புதைக்கப்பட்டது

வெறும் மனித உடலல்ல;

எங்கள்

வரலாற்றுப் பேழை.

 

நீ மண்ணுக்குள் சென்றாலும்

வேராகத்தான் சென்றாய்.

அதனால்தான்

எங்கள் கிளைகளில்

இன்னும் பூக்கள்

மலர்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *