பேரறிஞர் அண்ணா
“என்னுடைய ஜாதி எங்கே தெரிகிறது? காதலரே! நீர் என் கண்களிலே ஏதோ உமது உள்ளத்தை உருக்கும் ஒளியைக் காண்பதாகச் சொல்கிறீர். என் உதட்டைக் கோவைக்கனி எனக் கூறுகிறீர். பவளவாய்! முத்துப் பற்கள்! பசும்பொன் மேனி! சிங்கார நடை! கோகில குரல்! கோமளவல்லி! என்று கொஞ்சுகிறீர். அப்போது என் ஜாதி எங்கேயாவது உமது கண்களில் தென்பட்டதா? என் அழகும் அதைவிட என் இளமையும் உன் கண்களுக்குப் பட்டதே தவிர, என் ஜாதி எங்கே தெரிந்தது. நீர் என்னைக் காதலித்தீர். நான் அந்தக் கட்டிலே அகப்பட்டேன். ஏதேதோ படித்தவர்! ஆகவே, உமது காதலை ரசமாகப் பேசினீர், எனக்குப் படிப்பு அவ்வளவாக இல்லை. ஆகவே, நான் உம்மை எவ்வளவு காதலிக்கிறேன் என்பதை எடுத்துக் கூறவில்லை.’’
“ஆம்; நான் பேசவில்லையே தவிர, என் கண் பார்வை அதை விளக்கவில்லையா! உம்மை நோக்கும்போது அந்தக் கண்கள் எவ்வளவு பசியோடு உம்மைப் பார்த்தன. உம்மைக் கண்டவுடன் பசி எவ்வளவு விரைவில் தீர்ந்து விட்டது. நீர் என் மீது காட்டிய பிரேமையைக் காணும்போது என் நெஞ்சு எவ்வளவு துடித்தது! என் மார்பு எவ்வளவு படபடவென அடித்துக் கொண்டது.
உமது புன்னகை எனக்கொரு பூந்தோப்பாகவன்றோ இருந்தது! உமது மொழி எனக்குக் கற்கண்டாக இருந்தது. உமது ஸ்பரிசம் என்னைக் களிப்புக் கடலில் கொண்டு போயல்லவா ஆழ்த்திற்று. காதல் எனும் சுவையை எனக்களித்த கண்ணாளா! நீயே எனக்குக் காதலையும் தருகிறாய், என்னைத் தழுவிய கரங்கள் இனி என் பிணத்தைத்தான் தழுவும். அதுவும் ஊரார் அனுமதித்தால் என்னைக் கட்டில் மீது தூக்கிப் போட்டு கலகலவென நகைத்த நீர், இனி என்னைச் சவக்குழியில் தள்ளி, சரசரவென மண்ணைத் தூவ வேண்டும்.
உம்மால்தான் உலகைக் கண்டேன். உம்மாலேயே உலகை இழக்கிறேன்.
இப்படிக்கு உமது காதலியாகவே கடைசிவரை இருந்த, இறந்த,
தங்கம்.
கடிதத்தைப் பொன்னம்பலம், சரியாகக்கூடப் படித்து முடிக்கவில்லை. அவன் கண்களிலே நீர்த் துளிகள் ஆடின. நெற்றியிலே வியர்வை! நெஞ்சிலே பதை பதைப்பு! நிலை கலங்கினான் இளைஞன். நாற்காலியோடு கீழே சாய்ந்தான். மயக்கமானான்.
அவனுக்கு அன்றுதான் மணமாயிற்று. பெரியகுடிப் பெண், கொஞ்சம் அழகும்கூட. அதைவிட அதிகமான செல்வம்! அவனை சீமைப் படிப்புக்கு அனுப்ப, பணம் தரப் பெண் வீட்டார் முன்வந்தனர். பொன்னம்பலம் பி.ஏ. இனி மிஸ்டர் பொன்னம்பலம் அய்.சி.எஸ். ஆக வேண்டும் என்பதும், கந்தசாமி பிள்ளையின் மகள் ‘கதம்பம்‘ கலெக்டரின் மனைவியாக வேண்டும் என்பதும் பெண் வீட்டாரின் எண்ணம். அவர்களுக்குப் பொன்னம்பலம், தங்கம் என்ற உபாத்தியாயினிடம் நேசமாய் இருந்தது தெரியும். தங்கம், கதம்பத்தைக் காட்டிலும் அழகி என்பது தெரியும். பொன்னம்பலம் யார் என்ன சொன்னாலும், தங்கத்தைத் தான் மணம் செய்து கொள்வான் என்று அவர்கள் பயந்த காலம் உண்டு. தங்கம் இவர்கள் ஜாதி அல்ல; அவள் ஓர் அபலை. யாரோ பெற்றார்கள்; யாரோ வளர்த்தார்கள். எப்படியோ ஏழை விடுதியில் சேர்ந்து படித்து உபாத்தியாயினி ஆனாள். ஏனோ ஆண்டவன் அவளுக்கு அவ்வளவு அழகை, – பொன் போன்ற குணம் படைத்த பொன்னம்பலத்தைக்கூட மயக்கிவிடக் கூடிய அவ்வளவு அழகைக் கொடுத்தான்.
பொன்னம்பலம் காலம் சென்ற தாண்டவராயபிள்ளையின் ஒரே மகன். மிராசுதாரர். ஊர் பூராவிற்கும் அவர் வீடு சத்திரம் போல் இருந்தது. பொன்னம்பலம் படித்துக் கொண்டிருக்கையில், பருவத்தின் சேட்டைகளில் ஈடுபடாமல்தான் இருந்தான். உணர்ச்சியோ, சந்தர்ப்பமோ இல்லாததால் அல்ல! ஊரார் தம்மிடம் வைத்திருக்கும் மதிப்பு’ கெட்டுவிடுமே என்பதற்காக உணர்ச்சியைக்கூட அடக்கிக் கொண்டு இருந்தான். ஏதாவது மனதை மயக்கும் காட்சிகள் காண நேரிட்டாலும் ‘சேலை கட்டிய மாதரை நம்பலாகாது’ என்ற பாட்டை உச்சரித்துக் கொண்டே தன் வழியே போய்விடுவான்.
இவனுடைய பி.ஏ. வகுப்பின் போதுதான் தங்கம், அந்த ஊர் பள்ளியில் ஆசிரியராக வந்தது. எப்படியோ இருவரும் சந்திக்க நேரிட்டது. அன்று என்னமோ பொன்னம்பலத்திற்கு வழக்கமாக வரும் பாட்டு வரவில்லை. அவன் தங்கத்தைப் பார்த்தான். அவள் கண்களைக் கண்டான்! ஏதோ ஒருவித உணர்ச்சி மயக்கம் வந்தது. தங்கம் தன் வழி சென்றாள் பயத்துடன். அவளுக்கு பொன்னம்பலத்தைத் தெரியும். ஆகவேதான், ஊரார் என்ன சொல்வார்களோ என்ற அச்சம். பள்ளிக்கூடத்திலேயே, ஆசிரியைகள் அதற்குள் தங்கத்தைப் பற்றிப் பொறாமை கொண்டிருந்தார்கள்.
“தங்கம் தளுக்குக்காரி! கூந்தலைப் பார், எத்தனை கோணல்!’’ என்பாள் ஓர் ஆசிரியை.
“கோணல் அல்லடி கோமளம்! கர்ல்ஸ் (Curls) மாடர்ன் பேஷன் (Modern Fashion)’’ என்பாள் பிறிதொரு மாது. உண்மையில் அது கர்ல்லுமல்ல, பேஷனுமல்ல! இயற்கையாக வளர்ந்து, கருத்து, மினுக்கி, சுருண்டு, அடர்ந்த கூந்தல் தங்கத்துக்கு! அதைக் கண்டு மற்ற பெண்கள் கண்ணாடி முன் நின்று கொண்டு கைவலிக்க சீவித்தான் பார்த்தார்கள்! அந்த ‘சுருள் அழகு’ அவர்களுக்கு வரவில்லை; அந்த வயிற்றெரிச்சலால் வம்பு பேசலாயினர்.
தங்கமும் இவற்றை நன்கு அறிவாள். தன் அழகை பரிமளிக்கச் செய்ய பணம் இல்லை என்பதும், தன்னைச் சமூகத்தில் அறிமுகப்படுத்தி வைக்க ‘நல்ல ஜாதி’ தனக்கு இல்லை என்பதும் தெரியும். ஆகவே, தங்கம் சற்று ஒதுங்கியே வாழ்ந்து வந்தாள். மாதம் முப்பது ரூபாய் கிடைத்தது பள்ளியில். முனியம்மா என்ற மூதாட்டி வீட்டுக் காரியங்களை கவனித்துக் கொண்டாள்.
தங்கத்தின் ‘பொல்லாத வேளையோ, என்னமோ’ இதே முனியம்மாள்தான் பொன்னம்பலத்தைத் தூக்கி வளர்த்து வந்தாள் அந்தக் காலத்தில். அவள் சொல்லித்தான் தங்கத்திற்குப் பொன்னம்பலத்தைப் பற்றித் தெரியும்.
“ஆயா, நான் பெண் ஜாதி’’ என்று தங்கம் கூறுவாள். ‘யாருக்கு – பொன்னம்பலத்திற்கா?’ என்று குத்தலாகக் கிழவி கேட்பாள். கேட்டதும் அவளுடைய பொக்கை வாயைப் பிடித்து இடிப்பாள் தங்கம், புன்சிரிப்புடன்.
ஒருமுறை சந்தித்து பிறகு, பலமுறை சந்தித்தாகி விட்டது இருவரும். புன்னகைகள் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் போய் போய் வந்தன. கண்கள் தமது கடமையை குறைவறச் செய்துவிட்டன. காதல் முற்றிவிட்டது. மனம் உண்டானால் மார்க்கமா உண்டாகாது? தங்கத்தின் அழகு, பொன்னம்பலத்திற்குப் பாதையைக் காட்டிவிட்டது. இருவரும் வீணையும் நாதமும் ஆயினர். கரையில்லா களிப்பு! எல்லையில்லா இன்பம்! ஈடில்லா மகிழ்ச்சி! தங்கமும் – பொன்னும் ஒன்றுதானே! இருவரும் ஒருவராயினர்.
ஊர் ஒன்று இருக்கிறதே, வம்பளக்க! “என்ன சார், நம்ம பொன்னம்பலம், அந்த வாத்தியார் பெண் இருக்காளே, அந்த வீதி வழியாக அடிக்கடி போகிறாள்’’ என்று ஆரம்பமான வம்பளப்பு, “யார் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறானாம். தங்கத்தைத் தீண்டிய கையால் இன்னொருவளைத் தொடமாட்டானாமே! அவள் கர்ப்பங் கூடவாம்!!’’ என்று வந்து முடிந்தது.
உள்ளபடி பொன்னம்பலத்திற்கு உறுதி அவ்வளவு இருந்தது. காதல் உலகில் குடியேறி இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதே இல்லை என்ற முடிவிற்குத்தான் வந்தனர். அவர்களின் காதல் கனிந்தது. தங்கம் கர்ப்பவதியானாள். இன்னும் ஒரு மாதத்தில் காதலின் விளைவு, களிப்பின் உருவம் பிறக்கப் போகிறது. அந்த நிலையில்தான் பொன்னம்பலத்திற்கு, பெண் கொடுக்க வந்து சேர்ந்தார் கந்தசாமிப் பிள்ளை. அவர் பொன்னம்பலத்தின் மாமன்! குடும்பத்தின் ஆண் திக்கு!
பொன்னம்பலம் ஏதேதோ சொன்னான்; முறைத்தான்; மிடுக்கினான்! தங்கம் கர்ப்பவதி என்பதைக்கூட சொல்லி விட்டான். கந்தசாமிப் பிள்ளை ஒன்றைக்கூட காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
“ஏதோ நடந்தது நடந்து விட்டது. நீ ரொம்ப நல்ல பிள்ளை என்றுதான் நான் எண்ணியிருந்தேன். எப்படியோ அந்தப் பெண் உன்னை மயக்கி விட்டாள். போகட்டும். அவளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விடுகிறேன். அடுத்த ஊர் பள்ளிக்கு மாற்றி விடுகிறேன்” என்று கந்தசாமிப் பிள்ளை கூறினார்.
‘முடியாது’ என்றான் பொன்னம்பலம். மாமன் தன் மீசையை முறுக்கினான். ஒரு சிரிப்பு சிரித்துக்கொண்டே ஒரு கடிதத்தை நீட்டினான் பொன்னம்பலத்திடம். வாங்கிப் படித்ததும், பொன்னம்பலத்தின் முகம் கருத்து விட்டது. பயங்கரமான நடுக்கம் ஏற்பட்டது. பேச நா எழவில்லை. மாமனை நோக்கியபடியே நின்றான்.
“என்ன சொல்லுகிறாய்? சம்மதந்தானே!’’ என்று மாமா கேட்டார். ஆமெனத் தலையசைத்தான், ஆபத்தில் சிக்கிய பொன்னம்பலம்.
மணம் நடந்தது. தங்கமும் அன்றுதான் ஒரு பெண் மகவைப் பெற்றாள். அது தங்கத்தின் வயிற்றில் உதித்த “‘வைடூரியமா’கப் பிரகாசித்தது. ஒரு கடிதத்தை எழுதி, முனியம்மா மூலம் பொன்னம்பலத்திற்கு அனுப்பினாள் தங்கம். அந்தக் கடிதந்தான் மேலே தீட்டப்பட்டது. அதைப் படித்த பொன்னம்பலம் மூர்ச்சையாகிக் கீழே விழுந்தான். கடிதத்தைத் தந்துவிட்டுச் சென்றாள் கிழவி. தங்கம் பிணமாகத் தொங்குவதைக் கண்டாள். ஒரு முழக் கயிறு, தங்கத்தின் அழகை, இளமையை, வாழ்க்கையை அப்படியே பாழாக்கிவிட்டது. பாழாய்ப் போன கயிற்றுக்குக் கண்ணில்லை _ தங்கத்தின் அழகையும், இளமையையும் நோக்க! அந்தோ இறந்தாளே இளமங்கை! காதல் பாதையில் சென்றவள், சாதல் எனும் குழியில் விழுந்தாள்.
“லேடிஸ் அண்டு ஜென்டில்மேன்! இன்றைய தினம் நாம் இந்த ஊரில் எதற்காகக் கூடியிருக்கிறோம்? இந்த விபசார தடைச் சட்டத்தைச் சரியானபடி அமல் நடத்த வேண்டும் என்பதற்காகவும், அதைப் பொது மக்கள், பிரபலஸ்தர்கள் படித்தவர்கள் ஒரு கமிட்டியாக இருந்து, தமது கடமையைச் செய்ய வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் (கைதட்டல்) கைதட்டி விட்டால் மட்டும் போதாது. நாம் காரியத்தில் காட்ட வேண்டும்’’ என்று கலெக்டர் பொன்னம்பலம் அழகாகப் பிரசங்கம் செய்தார். கூட்டத்திற்கு வந்திருந்த ஜரிகைத் தலைப்பாகைகள் எல்லாம், கலெக்டர் தங்களைப் பார்க்கும்போது கைதட்ட வேண்டும் என்பதற்காகத் தயாராகக் கைகளைச் சேர்த்து வைத்துக் கொண்டபடியே இருந்தனர்.
இது இருபது வருஷங்களுக்குப் பிறகு! பொன்னம்பலம் இடையில் சீமைக்குப் போய் அய்.சி.எஸ். தேறி, பல இடங்களில் கலெக்டராக இருந்துவிட்டுத் தலைமயிர் கூட சற்று நரைத்து விட்டு, தஞ்சாவூரில் கலெக்டராக வந்த சமயத்தில், விபசார சட்டத்தை அமலுக்குக் கொண்டுவர, நகர பிரமுகர்களைக் கொண்ட ஒரு கமிட்டி நிறுவப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தலைமை வகித்துதான் கலெக்டர் பொன்னம்பலம் இதைப் பேசினார்.
விபசாரத்தால் வரும் கேடு, சமூகத்தில் அதனால் விளையும் ஆபத்து என்பதைப் பற்றிப் பலர் பேசினர்.
அவர்களிலே அநேகர் அன்றிரவே தமது வைப்பாட்டிமாரிடம் விபசாரத்தின் கேட்டைப் பற்றியும், அதைத் தாங்கள் ஒழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டதைப் பற்றியும் பேசுவார்கள் என்பதென்னமோ நிச்சயம்.
பலர் பேசி முடிந்த பிறகு, ஓர் இளமங்கை எழுந்தாள். அவள் அழகாக இருந்ததுடன் சற்று அவசரக்காரி போலவும் தோன்றினாள். ஆங்கிலம் படித்த மாது என்பதும், சற்று நல்ல நிலையில் இருப்பவள் என்பதும், நடையிலும் உடையிலும் விளங்கின.
“தலைவர் அவர்களே! பெரியோர்களே! விபசாரம் ஏன் ஏற்பட்டது என்பதைப் பற்றி யோசித்து ஆராய்ந்தாலன்றி அதனை ஒழிக்க முடியாது. விபசாரம் நடக்கும் இடத்தை மட்டும்தான் மாற்ற முடியும். விபசாரம் உண்டாவதற்குக் காரணம் ஏழ்மை முதலாவது. ஆனால், அது மட்டும்தான் என்று எண்ண வேண்டாம். பண ஆசைகூட விபசாரம் செய்யும்படித் தூண்டும். அத்தோடு, ஆடவரின் ஆணவச் சேட்டைகள்தான் விபசார உற்பத்திக்கே காரணம். இதைக் கூறும்போது மற்றவர்களுக்கு வருவதைவிட, தலைவர் அவர்களுக்கு அதிக கோபம் வரலாம். ஆமாம்! சும்மா என்னை விறைத்துப் பார்க்காதீர்கள். காதல் மணங்கள் நிகழ்ந்து, ஜோடிகள் சரியாக அமைந்து, காதலுக்கு ஜாதியோ – பீதியோ _ மற்ற ஏதோ தடையாய் இல்லாதிருப்பின், உள்ளபடி நாட்டில் விபசாரம் வளராது.
மணம் செய்து கொள்வது மாடு பிடிப்பது போல இருக்கும்வரை, வாழ்க்கையில் பூரா இன்பத்தையும் நுகர முடியாது. அதனால் காதல் இன்பம் சுவைத்தறியாத ஆடவரும், பெண்டிரும், காமச் சேற்றில் புரள்கிறார்கள். அதில் விளையும் முட்புதரே விபசாரம்.
ஜாதிச் சனியனைக் கண்டு மிரண்ட எத்தனையோ பேர் தமக்கு உகந்தவரை மணம் புரிந்து கொள்ளாது, அவர்கள் வாழ்வைக் கெடுத்து, அவர்களை விபசாரிகளாக்கினர். தலைவர் அவர்களே! உமது தங்கத்தின் மகள் அப்படியே ஒரு விபசாரியானாள், என் செய்வாள் அந்த அபலை? உம்மால் காதலிக்கப்பட்டு மணம் செய்து கொள்ளாது பிணமாக்கப்பட்ட தங்கத்தின் மகள், நீர் சீமை சென்று நாட்டை ஆளும் வித்தையைக் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஒரு விபசாரியிடம் வளர்ந்தாள். ஆடல், பாடல் கற்றாள். அவளை ஒரு பிரமுகர் காதலித்துக் கலந்து வாழ்கிறார். அவளை மணக்க மறுக்கிறார். போகம் வேண்டுமாம் அவருக்கு! பொறுப்பு மட்டும் கூடாதாம்; இன்று நீர் போடும் கமிட்டி ஜரூராக வேலை செய்தாலும் அவளை அசைக்க முடியாது. ஏன்? சுந்தரி எனும் அந்த மங்கையை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டிருப்பது, நீர் நிறுவியுள்ள கமிட்டியின் தலைவர் திருமலைசாமிதான்! ஆகவேதான், அவள் அகப்படமாட்டாள். உமக்கு அந்த நாள் கவனம் வருகிறது போலும்! தங்கம் என்ன ஜாதியோ என்பதால், மருண்டு யார் பேச்சையோ கேட்டு மயங்கி தங்கத்தைப் பிணமாக்கினீர். ஆம்! இன்று நீர் பேசுகிறீர், பொன்போன்ற மொழிகளை!’’ என்று ஆத்திரத்துடன் அந்தப் பெண் பேசினாள்.
“அம்மா! என்னைக் கொல்லாதே! நான் பாதகன். என் தங்கத்தை இழந்தேன். ஆனால் ஜாதியைப்பற்றிக் கவலைப்படவில்லை. என் மாமன் காட்டிய பீதிக்குத்தான் பயந்தேன்’’ என்றார் கலெக்டர். “தெரியுமே எனக்கு அதுவும். தங்கம் ஒரு கிறிஸ்துவ மாது. அவளை மணம் செய்து கொண்டால் குடும்பச் சொத்தில் காலணாவும் பெற முடியாதபடி உமது தகப்பனார் உயில் எழுதி வைத்தார். அதைக் காட்டித்தானே உமது மாமன் உன்னை மிரட்டினார்? சொத்து போய்விடும் என்ற உடனே நீர் சோர்ந்து விட்டீரே! தங்கம் உமக்குச் சொத்தாகத் தெரியவில்லையோ’’ என்றாள் அந்த மங்கை.
“மாதே! என்னை மீண்டும் கொல்லாதே. நான் அன்று ஜாதிப்பேயிடம் சிக்கினேன். அதனாலேயே என் இன்பத்தை இழந்தேன்’’ என்று கூறிய கலெக்டர், “தங்கத்தைப் பற்றியும், என்னைப் பற்றியும் இவ்வளவு தெரிந்து கொண்டுள்ள நீ யார்?’’ என்று கேட்டார்.
“நான்தான் சுந்தரி!’’ என்றாள் அம்மங்கை. “ஆ! என் மகளே! தங்கம் தந்த மணியே! உன் தாய் எனக்கு இன்பம் தந்தாள். நீ எனக்கு அறிவு தந்தாய்’’ என்று கூறி, மகளை அருகில் அழைத்து உட்கார வைத்துக் கொண்டார், கலெக்டர் பொன்னம்பலம். அடுத்த வாரத்தில் மிஸ். சுந்தரிக்கும், மிஸ்டர் திருமலைசாமிக்கும், கலெக்டர் பொன்னம்பலம் சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைத்தார்.
(1939, ‘குடிஅரசு’)