நீண்ட நெடிய வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் அங்கு பிளாட்டோ, அரிஸ்ட்டாட்டில், சாக்ரடீஸ், கலிலியோ, நியூட்டன் என்று ஏகப்பட்ட அறிஞர்கள் தென்படுகிறார்கள். அந்த வரிசையில் பெண் ஒருவரும் உள்ளார். அவரது சாதனைகளைப் பார்க்கும்போது இவர் சாதாரணப் பெண்மணியல்ல; மகத்தான பெண்மணி என்பதை அறிய முடிகிறது. இவரது சாதனைகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை நம் மனதை பதறச் செய்கிறது.
இந்தப் பெண்ணைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் 1600 ஆண்டுகள் பின்னோக்கிப் போகவேண்டும். அந்தப் பெண்ணின் பெயர் ஹைபேஷா. கி.பி.4ஆம் நூற்றாண்டில் எகிப்தின் தலைநகராக இருந்த அலெக்சாண்ட்ரியாதான் அவர் பிறந்த இடம். அந்தக் காலத்தில் கல்வி, அறிவியல், அரசியல் என்று எல்லாவற்றிலும் இந்த நகரம் சிறந்து விளங்கியது.
மிகப் பெரிய நூலகமும் அங்கு இருந்தது. புத்தகங்கள் மிகக் குறைவாக இருந்த அந்தக் காலத்திலேயே 5 லட்சம் புத்தகங்கள் அந்த நூலகத்தில் இருந்தன. அங்கு ஓர் ஆராய்ச்சிக் கூடமும் இருந்தது. அந்த நூலகத்தின் நிருவாகியாகவும் முதன்மை ஆசிரியராகவும் இருந்தவர் தியோன்… இவரின் மகள்தான் ஹைபேஷா. புத்தகங்கள் இருந்த இடத்தில் பிறந்ததாலோ என்னவோ பருவ வயதை அடைவதற்குள்ளாகவே தத்துவம், கணிதம், வானவியல், இலக்கியம் என பல துறைகளிலும் மற்றவர்களோடு விவாதிக்கும் அளவுக்கு அறிவுத் திறன் பெற்றிருந்தார்.
பள்ளிப் படிப்பை முடித்தவுடன் உயர் கல்விக்காக கிரேக்கம், இத்தாலி, மத்திய தரைக்கடல் நாடுகளுக்குச் சென்றார். பல நாட்டுக் கல்வி, பலவிதமான மனிதர்கள் என ஏகப்பட்ட அனுபவம் பெற்றார். ஏராளமான அறிவுச் செல்வத்துடன் மீண்டும் அலெக்சாண்ட்ரியாவுக்குத் திரும்பினார். கிரேக்க தத்துவப் பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்தார். இருந்தாலும், தான் பல துறைகளில் பெற்றிருந்த அறிவுத் திறன் காரணமாக மிக முக்கியமான பெண்ணாக வலம் வந்தார்.
பல நாட்டு மன்னர்களும், அறிஞர்களும், செல்வந்தர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஹைபேஷாதான் கல்வி கற்றுத்தர வேண்டும் என்று அவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். தான் எங்கு வெளியே செல்வதாக இருந்தாலும் தனது தேரை தானே ஓட்டினார். அதற்காக தேரோட்டியைத் தேடவில்லை. குதிரைகளை தானே தேரில் பூட்டி அதனை ஓட்டிச் சென்றார். ஆண்கள் மட்டுமே தேரோட்டும் அந்தக் காலத்தில் ஒரு பெண் தேரோட்டியது பெரும் புரட்சியாக இருந்தது. இந்த நிலையில் அலெக்சாண்ட்ரியாவின் மதகுருவால் கொடூர சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின. ஹைபேஷாவின் கல்வியின் மீதும், ஆளுநர் ஒரிஸ்டஸ் மீதும் மதகுருவின் பார்வை திரும்பியது. இவர்கள் இருவரும் கல்வி என்கிற பெயரில் மதங்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதினார். இருவரையும் கொடூரமாகக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார். வழக்கம்போலவே அன்றும் மாணவர்களுக்கு கற்பித்துவிட்டு தனியே தேரைச் செலுத்திக்கொண்டு வந்தார், ஹைபேஷா. வரும் வழியில் மத குருவின் தலைமையில் வந்த கூட்டம், ஹைபேஷாவை இழுத்துக் கீழே தள்ளி, சித்ரவதை செய்து அவரை உயிருடன் எரித்துக் கொன்ற கொடூரம் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.