இளைஞர் நலம் : இளைய தலைமுறையே இனிதே வருக!

பிப்ரவரி 01-15 2021

பொதுவெளியில் நன்றி நலம் பேணுவோம்!

 வீ.குமரேசன்

மனித சமுதாய வளர்ச்சி என்பது ஒவ்வொரு தலைமுறையைச் சார்ந்தவர்கள் ஆற்றிய பொதுப் பங்களிப்பின் மொத்தமே. தலைமுறை இடைவெளியின்றி மனித சமுதாயம் முன்னேறிக் கொண்டு வளர்த்திருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையின் பங்களிப்பு அதற்கு முந்தைய தலைமுறைகளின் பங்களிப்பினின்றும் மாறி மாறி வளர்த்துள்ளது. மாறி வரும் முன்னேற்றத்தின் தன்மை, அளவு ஒரு தலைமுறையைப் போல அடுத்த தலைமுறையில் அமைவதில்லை. ஆனாலும் ஒரு வகையான முன்னேற்றம், மனித சமுதாயம் மேம்பாடு அடைவதற்கான அடித்தளத்தைக் கட்டமைக்கும் போக்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதைவிட, நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ‘நிகழ்ந்து கொண்டு’ இருப்பது இயல்பான ஒன்று. ‘நிகழ்த்தப்பட்டுக் கொண்டு’ என்பதில் ஒருவித மனித முயற்சி, சாதனை, பொதுநலப்போக்கு நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு தலைமுறை சமுதாயமும் அதற்கு முந்தைய சமுதாயத்தை விட ஏதேனும் ஒரு வகையில் மேம்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. இந்நிலை நடப்பு தலைமுறையிலும், வருங்காலத் தலைமுறையிலும் தொடரத்தான் செய்யும். இதுதான் மானுடம் முன்னேற்றம் பெறும் என்பதன் மீதான அழுத்தமான நம்பிக்கை ஆகும். ஒவ்வொரு தலைமுறை மனிதரிடமும், தான் பார்ப்பதுதான் மனித சமுதாயத்தின் நிலைத்த நிலைமை என நினைத்துவிடும் மனப்போக்கு உள்ளதை பொதுவெளியில் மறுத்துவிட முடியாது.

தான் பார்ப்பதுதான் நிலைத்த நிலைமை. தான் உணர்வதுதான் உண்மையான நிலை; சரியான நிலை எனக் கருதிடும் போக்கும் பெரும்பாலான மனிதர்களிடையே நிலவி வருகிறது. தனக்கு ஒன்று புதிதாகத் தெரியத் தொடங்கும்பொழுது, அது தனக்கு ஏற்பட்ட நிலை என்பதைவிட, பெரும்பாலான மனிதருக்கும் அப்பொழுதுதான் அது தெரியத் தொடங்குகிறது எனக் கருதும் போக்கு பரவலாக இருக்கிறது. மேலும், பொது நிலையிலும் பொது வெளியிலும் நடப்பு தலைமுறை மக்கள் அனுபவித்து வரும் வசதி வாய்ப்புகள் ஏதோ தனது குடும்பத்தைச் சார்ந்த மூத்தோர்களின் பங்களிப்பால், தமது முயற்சியால், உழைப்பால் கிடைத்தவை எனக் கருதும் போக்கும் நிலவி வருகிறது. மேலும் தனது தலைமுறையில் ஏற்பட்ட முயற்சிகளின் மூலம் மட்டுமே பெறப்பட்டவை என நினைத்திடும் மனநிலையும் உள்ளது. தனிமனித, குடும்ப முன்னேற்றம் – வசதி   வாய்ப்புகளுக்கு தனிநபர், அவர்தம் குடும்பத்தினர் பங்களிப்பு இருந்தாலும் அந்த வசதிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு என்பது முன்னர் வாழ்ந்த பல தலைமுறையினரின் முயற்சி, உழைப்பால் ஏற்பட்டவை என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. வாங்கும் சக்தி இருப்பதால்தான் பொருள் வாங்க முடியும் என்பது முதல்நிலையாக இருந்தாலும் அதுவே முழுமையான நிலைமை அல்ல. ஒருவர் வாங்க நினைத்தாலும், வாங்கும் வசதி வாய்ப்பு இருந்தாலும், பொருள் கிடைக்கக் கூடிய சூழலை, பின்புலத்தைப் பலர் நினைத்துப் பார்ப்பதில்லை. சில தலைமுறைகளுக்கும் முன்னர் பிறந்திருந்தால் அந்த வசதி வாய்ப்புகள் கிடைத்திருக்குமா? அப்படிப்பட்ட வசதி வாய்ப்புகள் பற்றிய நினைப்பானது தோன்றியிருக்குமா? 40 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஊரிலிருந்து மற்ற ஊரில் உள்ள ஒருவரிடம் பேசிட அன்று இருந்த ஒரே தொலைதொடர்புக் கருவி தொலைபேசிதான். அந்தத் தொலைபேசியானது மேலான வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்திடும் கருவியாக இருந்தது. பணவசதி இருந்தாலும் அனைவருக்கும் உடனே தொலைபேசித் தொடர்பு வசதி வழங்கப்பட முடியாத குறையே நிலவியது. ஊர் விட்டு ஊர் பேசிட அழைப்பைப் பதிவு செய்து, பல நேரம் காத்திருந்து பேசிடும் (Trunk call) வசதியில் மனித இயக்கமே முடங்கிப் போயிருந்தது. முடங்கிப் போன நிலைமையும் அன்று தெரியவில்லை. இன்றுதான் முடங்கிப் போடப்பட்ட முழு நிலைமையை, நினைத்துப் பார்க்கும்பொழுது வியப்பச்சம் கூடிய (தொலைபேசி மூலம் பேசுவதற்கு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டுமா?) மனநிலையினை உணரமுடியும்.

பேசிடும் கருவி நிலையான இடத்தில் இருந்து (Telephone) பேசும் நபர் அந்த இடத்திற்குச் சென்று பயன்படுத்துகின்ற பெரும் வசதிக் குறைவான நிலையிலிருந்து, பேசும் நபர் செல்லுகின்ற இடங்களுக்கெல்லாம் அவருக்குப் பயன்படுகின்ற வகையில் பேசும் கருவி நகர்கின்ற (Mobile phone)  மாற்றம் பயன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றமானது தனிநபர் நலம் மட்டும் சார்ந்த தனிநபர் முயற்சியால் நடைபெற்றதல்ல. பொதுநலம், பொதுப் பயன்பாடு சார்ந்து தனி நபர் – சில நேரங்களில் கூட்டு முயற்சியால் ஏற்பட்ட அறிவியல் விந்தைகளாக உருவானவை.

முந்தைய தலைமுறையினர் பொதுவெளிப் பயன்பாட்டுக்கு ஆற்றிய அறிவியல் தொண்டறத்திற்கு இன்றைய தலைமுறை குறிப்பாக இளைய தலைமுறை நன்றி செலுத்த வேண்டும். எப்படி நன்றி செலுத்த முடியும்? தொண்டறம் புரிந்த செம்மல்கள் இன்று உயிருடன் இல்லையே! எப்படி நன்றி செலுத்துவது எனும் நினைப்பு எழலாம்! நன்றி  கூறுவது என்பது தனி நபர்கள் சார்ந்த செயல் என்னும் எண்ணமே நெஞ்சில் மேலோங்கியிருக்கிறது. முன்பின் பார்த்திராத, முன்பின் பழகிடாத மனிதர்களுக்கும் நன்றி செலுத்திடும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். எப்படிக் கடைப்பிடிப்பது? தொண்டறத்தின் மூலம் பெற்ற பயன்களை அதன் மதிப்பறிந்து பயன்படுத்துவது; சிக்கனமாகப் பயன்படுத்துவது; பரவலாக பெரும்பாலானவர்களுக்கும் கிடைக்கின்ற வகையில் பயன்படுத்துவது என்ற வழிகளில் நினைத்துப் பார்த்து செயல்பட முனைந்தால் அதுவே இயல்பான பழக்கமாகி விடும். இது நன்றி நலம் பேணுவதில் முதல் கட்டம். முதல் கட்டத்தைக் கடப்பது ஒருநிலையில் இயல்பாகி விடும். அடுத்த கட்டத்தை சற்று முயற்சி எடுத்துதான், கடும் உழைப்பின் மூலம், பொதுநல சிந்தனைகளைப் பெருக்கிக் கொண்டு செயல்படுத்துவதின் மூலம்தான் கடந்திட முடியும்.

இன்றைய தலைமுறையினர் _ இளைய தலைமுறையினர் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகளுக்கான காரணிகளுக்கு அவர்கள் எப்படி உரிமை கொண்டாட முடியாதோ அதைப்போல வருங்காலத் தலைமுறையினர் வசதி வாய்ப்புகளைப் பெருக்குகின்ற வகையில் அடுத்த தலைமுறையினர் அதற்கு உரிமை கொண்டாட முடியாத வகையில் பொதுவெளியில் குறிப்பிடத்தக்க (Significant) சாதனை நடைபெற வேண்டும். நன்றி நலம் பேணுவதில் – சமுதாயத்திற்கு பொறுப்புடன் கடமை ஆற்றுவதில் இன்றைய தலைமுறையினர் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினர் முனைந்திட வேண்டும். இளைய தலைமுறையினருக்கு வாழ்நாள் காலம் ஒப்பீட்டளவில் அதிகமே. பொதுவெளிச் சாதனை என்பது ஓரிரு நாளில் நிகழ்வது. பல ஆண்டுகள், தனி மனித வாழ்வு ஈகங்களை (தியாகங்களை) உள்ளடக்கியதாகும். இளைய தலைமுறையினர் அப்படிப்பட்ட பங்களிப்பின் மூலம்தான் பொது வெளியில் நன்றி நலத்தை முழுமையாக வெளிக்காட்ட முடியும். மனித சமுதாயத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தம்மால் ஆனதை வழங்கிட முடியும். இப்படிப்பட்ட பொதுவெளியில் நலம் பயக்கும் பங்களிப்பின் பலனை பார்த்திட ‘நாம் இருக்கப் போகிறோமா?’ எனும் எதிர்பார்ப்பு, ஏக்கம், சலிப்பு இளைய தலைமுறையினர் மனதில் எழலாம்! எப்படி அதை எதிர்கொள்வது?

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *