நமது உடல் நலத்திற்கு அதிகமான நன்மை செய்யக்கூடிய உணவு முறையில் பச்சை இலைகளுக்கு சிறந்த பங்குண்டு. ஒவ்வொரு இலையும் நமது உடம்புக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதோடு, எளிமையான அதன் சாற்றில் ஏராளமான நன்மைகளும் நமக்கு இயற்கையாகக் கிடைக்கின்றன. அவை செரிமானக் கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்களுக்குச் சிறந்தவை. இரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்றித் தூய்மை செய்கின்றது.
வில்வம்: மஞ்சள் கமாலை, சீதபேதி, காய்ச்சல், இரத்த சோகை(அனீமியா) போன்ற நோய்களுக்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாகவும் செயல்படுகிறது.
அருகம்புல்: எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க சிறந்ததுதான் அருகம்புல்தான். இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்கவல்லது.
அரசஇலை: ஏழைகளின் டானிக் அரச இலை. நல்ல மலமிளக்கி, உடலை குளிர்ச்சி அடையச் செய்யும். காம உணர்ச்சிகளைத் தூண்டும். கர்ப்பப் பைக் கோளாறுகள் மறையும். மலட்டுத் தன்மையை நீக்கவல்லது.
பூவரசு: தீக்காயங்கள், புண்கள், தோல் வியாதிகள், தொழுநோய் எல்லாவற்றுக்கும் இந்த இலையை அரைத்துப் பூசலாம். உடலின் வெளியே ஏற்படும் காயங்களை உடனே சரிசெய்யக் கூடிய தன்மை உடையது.
கல்யாண முருங்கை(முள்முருங்கை): அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. மலமிளக்கி, மாதவிடாய்த் தொல்லையை நீக்கும். கிருமிகளை வெளியேற்றும்.
கொத்தமல்லி: பசியைத் தூண்டும். பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றைக் குணமாக்கும்.
கறிவேப்பிலை: காய்ச்சல், ஈரல், எரிச்சல் கோளாறுகள் மறையும்.
புதினா: செரிமானக் கோளாறு, வெப்ப நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி.
கற்பூரவள்ளி(ஓமவல்லி): மிகச் சிறந்த இருமல் மருந்து, மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும்.
வல்லாரை: இரைப்பை குடல் புண், தொழுநோய், யானைக்கால் நோய், நரம்புத்தளர்ச்சி நோய்களைக் குணமாக்கும். ஞாபகச் சக்தி அளிப்பதில் சிறந்தது.
கண்டங்கத்திரி: பக்கவாதம், கல்லீரல் நோய்கள், தொழுநோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா(மூச்சிரைப்பு), நுரையீரல்சளி முதலியவற்றிற்குச் சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் மட்டும் போதும்.
தூதுவேளை: குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்தியை வளர்ப்பதற்கும் சிறந்த டானிக் போன்றது. காது மந்தம், உடல் இளைப்பு, தோல் வியாதிக்கும் நல்லது.
மஞ்சள் கரிசலாங்கண்ணி: காமாலை, கண் கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றிற்கு சிறந்தது.
செம்பருத்தி: மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சினைகளையும் குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளைப் (mucus membranes) பாதுகாக்கிறது. இதய நோய்களுக்கு சிறந்த குடிநீர் பானமாகச் செயல்படுகிறது.
தும்பை: பக்கவாதம், சளி, இருமல், தலைவலி, மூட்டுவாதம் ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது. பாம்புக்கடிக்கு தும்பை இலைச்சாறுடன் வாழைத்தண்டு சாறு கலந்து கொடுக்க வேண்டும்.