சிந்தனை : பழியைப் பிறர் மீது போடுவது பா.ஜ.க.வுக்குப் பரம்பரைப் பார்ப்பனக் குணம்!

பிப்ரவரி 01-15 2021

கவிஞர் கலி.பூங்குன்றன்

மதக் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் லாபக் குளிர் காய்வது பா.ஜ.க.வுக்கே உரித்தான தனி வழிமுறை.

குஜராத்தில் அதுதானே நடந்தது! நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் உத்தரப்பிரதேசத்திலும் முசாபர்கூர் மதக் கலவரம் பா.ஜ.க. சங் பரிவாரால் தூண்டப்பட்டது. அதில் வழிந்தோடிய மனிதக் குருதி வெற்றி மாலையை பா.ஜ.க.வின் கழுத்தில் சூட்டியது  நினைவில் இருக்கிறதா?

இப்பொழுது ஆந்திராவிலும் தன் கை வரிசையைக் காட்டிவிட்டது. இதில் கெட்ட வாய்ப்பு – பா.ஜ.க.வோடு தெலுங்கு தேசமும் சேர்ந்ததுதான். எதிர்க்கட்சியின் ஆட்சியைக் கவிழ்க்க – மதவெறியைத் தூண்டி மக்களின் வாக்கு வங்கியைத் தன் பக்கம் ஈர்ப்பது அவர்களுக்கே உரித்தான தனிக் கலை!

ஆந்திராவில் இந்துக் கோவில்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தப் படுவதாகவும், கிறிஸ்துவரான ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக இருப்பதால், இது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் பா.ஜ.க. தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டது. இதே குற்றச்சாட்டை முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் சுமத்தி வருகிறார். இந்நிலையில் இதுகுறித்து வழக்குகள் பதிவு செய்து, ஆந்திர போலீசார் விசாரணை நடத்திய நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குற்றம் சாட்டியவர்களே குற்றவாளிகள் என்பது அம்பலமாகிவிட்டது.

தெலுங்கு தேசம், பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள், மதப் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், திட்டமிட்டு இது போன்ற செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான வழக்கில் தெலுங்கு தேசம், பா.ஜ.க.வைச் சேர்ந்த சுமார் 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவரான மதுசூதன் ரெட்டி, 2 ஆண்டுகளுக்கு முன்பு குண்டூரில் கோவில் சேதமடைந்த பழைய புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, தற்போது, கோவில் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

டிசம்பர் 5ஆம் தேதி தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சுப்பாரெட்டி என்பவர் அனுமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு விட்டு, அதனை பிற மதத்தினர் போட்டதாக நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

டிசம்பர் 30ஆம் தேதியன்று, கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மின் இணைப்புப் பணிகள் நடைபெற்றபோது, எலெக்ட்ரீசியன் ஒருவர் சாமிசிலை மீது விழுந்ததில், சாமி சிலை சேதம் அடைந்துள்ளது. இதனைப் புகைப்படம் எடுத்த கோவில் நிருவாகி விஸ்வநாத ரெட்டி, மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தியதாகப் புகார் எழுப்பினார். விசாரணையில், அவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர் என்றும், ஜெகன் மோகன் ரெட்டி மீது அவதூறு பரப்ப அவ்வாறு செய்ததும் தெரியவந்தது.

இதே போல் நரசிம்மா கோவில் மற்றும் லட்சுமி கோவில்களில் பராமரிப்பின்றி சேதமடைந்த சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து விட்டதாக தவறான செய்தி வெளியிட்டு, பா.ஜ.க. ஆதரவு பத்திரிகையாளர்கள் 6 பேர் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர்.

இதே போல் விசாகப்பட்டினத்தில் நீண்ட நாள்களுக்கு முன்பு உடைந்த சாமி சிலையை மர்ம நபர்கள் உடைத்து விட்டதாக வதந்தி பரப்பிய தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதே போல் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமக் கோவிலில் அனுமன் சிலையை மர்ம நபர்கள் உடைத்து விட்டதாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய பா.ஜ.க. மண்டலத் தலைவர் ரவிக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், புயல் காரணமாக அந்தச் சிலை நீண்ட நாள்களுக்கு முன் சேதமடைந்த நிலையில், திட்டமிட்டு, மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்டதாகக் கூறி போலீசார் பா.ஜ.க. நிருவாகியைக் கைது செய்தனர்.

இவ்வாறு மாநிலம் முழுவதும் பல இடங்களில் கடவுள் சிலைகளை வைத்து, அரசியல் செய்வதாகவும், மதக் கலவரங்களைத் தூண்டுவதாகவும் கூறி, தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. பிரமுகர்களை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர முதலமைச்சராக ராஜசேகர ரெட்டி இருந்த போது, மக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் விபத்தில் இறந்த போது, அதிர்ச்சியிலும், தற்கொலை செய்தும் சுமார் 344 பேர் உயிரிழந்தனர். தற்கொலைக்கு முயன்ற 14 பேர் காப்பாற்றப்பட்டனர். அந்த அளவிற்கு மக்கள் அவர் மீது உயிரையே வைத்திருந்தனர்.

அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை முதலமைச்சராக்க வேண்டும் என்பது ஆந்திர மக்களின் விருப்பமாக இருந்தது. ஆனால், காங்கிரஸ் தலைமை அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் தனிக்கட்சி தொடங்கிய ஜெகன்மோகன் ரெட்டி, சி.பி.அய். வழக்குகளால் காங்கிரஸ் அரசால் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் விடுதலையாகி, தேர்தலைச் சந்தித்த அவர், இமாலய வெற்றிபெற்று, அவரது தந்தையின் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்நிலையில், ஜெகன் ஆட்சி மீது வேறு எந்தக் குறைகளையும் சொல்ல முடியாத சந்திரபாபு நாயுடு, மதவாத குற்றச்சாட்டை ஜெகன் மீது சுமத்துவதாக அரசியல் நோக்கர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பா.ஜ.க. வழக்கமாக பிற கட்சிகள் மீது இந்தக் குற்றச்சாட்டை சுமத்தும் நிலையில், இதனை தற்போது, சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை அந்த மாநில பா.ஜ.க.வும் வழிமொழிந்து வருகிறது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது.

– “மாலை முரசு’’ இணையம், 17.1.2021

பா.ஜ.க. சங் பரிவார்களின் பழைய கோப்பைப் புரட்டினால் அதன் சூழ்ச்சியும் சதியும் எத்தகையது என்பது விளங்கும்.

1.            தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்னும் ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது.

ஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினரின் புத்திசாலித்தனமான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால், அவ்வூர் இந்து முன்னணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17) மற்றும் செல்வக்குமார் (வயது 23) ஆகியோர்.

தாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இருவரும் ஒப்புக் கொண்டனர். திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது பழியைப் போடுவதுதான் அவர்களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது. (‘தி இந்து’, 18.2.2002)

2.            அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். 2006 ஜனவரி 24இல் இது நடந்தது.

இந்து – முசுலிம் மதக் கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்ற பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்தனர்.

தென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார்பாண்டியன் என்பவர், முன் விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டார். இதில் மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர். மதக் கலவரம் ஏற்பட்டு, முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

நோக்கம் மதக் கலவரத்தைத் தூண்டுவதே!

இதன் பின்னணியில் தென்காசியில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டுவெடித்தது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அத்தனைப் பேரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்.

குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்ட போது பெரிய அளவில் மதக் கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து அதன் மூலம் பெரிய அளவு கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.

கடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்கிற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆவார். இவர் கேரளாவில் கல்குவாரியில் வேலை செய்தவர். பாறைகளை உடைக்கப் பயன்படும் அமோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயாரிப்பதற்காக இவர் கொடுத்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கான்பூரில் நடந்தது என்ன?

3.            உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 2008 பிப்ரவரி 24இல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் சங் பரிவார் கும்பல் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையையே நடத்திவரும் சங்கதி வெளியில் வந்தது.

பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபீந்தர் சிங் ஆகியோர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக அவை வெடித்து உடல் சிதறிப் போனார்கள்.

மிகப் பெரிய தொடர் குண்டுவெடிப்பு வன்முறைக்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. கான்பூர் காவல்துறை அய்.ஜி., எஸ்.என்.சிங் செய்தியாளர்களிடம் இதுபற்றி விளக்கினார்.

வெடிகுண்டு தயாரிப்புக்குத் தேவையான ஏராளமான பொருள்களும் கைப்பற்றப்பட்டன.  

இராணுவத்தில் பயன்படுத்தப்படக் கூடிய குண்டுகளுக்கு ஒப்பானவை அவை!

வரைபடங்களும், நாள்குறிப்பு, தாக்கப்பட வேண்டிய முசுலிம்களுக்குச் சொந்தமான முக்கிய இடங்கள் பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைத்தன.

4.            மகாராட்டிரத்தில் நந்தித் எனும் இடத்தில் இதேபோல, குண்டுகளைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, வெடித்துத் சிதறியதால் பஜ்ரங்தள் தீவிரவாதிகளான நரேஷ்ராஜ் மற்றும் ஹிமான் ஷீ பான்சே ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். (4.5.2006)

5.            மகாராட்டிர மாநிலம் மலேகானில் ‘சிமி’ அலுவலகம் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்க்கப்பட்டது (29.9.2008). ஆறு இசுலாமியத் தோழர்கள் பலியானார்கள்; 90 பேர் படுகாயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை எடுத்துவந்து வெடிக்கச் செய்திருப்பது புலன் விசாரணையில் தெரிய வந்தது. ‘டைமர்’ கருவி பொருத்தப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு இருந்தது.

தொடக்கத்தில் இஸ்லாமியர்கள் மீது பழி போடப்பட்டு சிலர் கைதும் செய்யப்பட்டனர். இஸ்லாமியர்கள் அல்ல – சங் பரிவார்கள்தான் என்பதையும் கண்டுபிடித்த ஹேமந்த் தாக்கரே, விஜய் சலாஸ்கர், அசோக் காம்டே ஆகிய உயர் போலீஸ் அதிகாரிகள் மர்மமான முறையில் கொல்லப்படவில்லையா?

புலன் விசாரணையில் பெண் சாமியார் பிரக்யாசிங் பாரதி தாக்கூர்(வயது 38) என்பவர் இதன் பின்னணியில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டுவிட்டார் – சிறையிலும் இருந்தார்.  பிணையில் வெளிவந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆகிவிட்டார்.

படிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாணவர்ப் பிரிவான ஏபிவிபியில் (கிஙிக்ஷிறி) தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். துர்காவாகினி, ஜாக்ரான் மஞ்ச் இவைகளில் தீவிர உறுப்பினராக இருந்திருக்கிறார் இந்தப் பெண் சாமியார்!

பா.ஜ.க. தலைவராக இருந்த ராஜ்நாத்சிங், மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரிடம் நெருக்கமாக இருந்தார் இந்தப் பெண் சாமியார். மேடைகளில் இந்து வெறித்தன நெருப்பைக் கக்கும் பேச்சாளர். இவரோடு மேலும் மூவர் இராணுவத்தில் பணியாற்றிய அதிகாரிகள். இருவர் கைது செய்யப்பட்டனர்.

குல்கர்னி, உபாத்யா ஆகிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆவார்கள். நாசிக் அருகே இராணுவப் பயிற்சி மய்யம் ஒன்றினை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டுகளைத் தயார் செய்வது எப்படி? அவற்றைக் கையாளுவது எப்படி என்கிற பயிற்சிகளையெல்லாம் சங் பரிவார் கும்பலுக்கு இவர்கள் கற்றுத் தந்துள்ளனர்.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்திலும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை நுழைத்தனர். விமானப் படைத் தளபதி விஷ்ணு பகவத் இதனை அப்பொழுதே வெளிப்படுத்தியதுண்டு.

பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டது ஏன் என்பது மகாராட்டிரத்தில் _ வெடிகுண்டு வழக்கில் இராணுவ அதிகாரிகள் மூவர் சம்பந்தப்பட்டதிலிருந்து தெரிந்துகொள்ளலாமே!

மகாராட்டிர மாநிலம் மலேகானில் குண்டுவெடித்த அதே நாளில் குஜராத் மாநிலம் மாடேகாவிலும் குண்டு வெடித்தது. இரண்டும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதற்குமுன் நடைபெற்ற அனைத்துக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சங் பரிவார் கும்பல் பெரும்பாலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.

இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சி நிலையங்களையும், தொழிற்சாலைகளையும் வைத்து திட்டமிட்ட வகையில் இந்தக் கும்பல் செயல்பட்டதைப் பார்க்கும்பொழுது இந்த அபாயகரமானவர்கள் நாடு முழுவதும் வெடிகுண்டு வேலையை அரங்கேற்றுபவர்கள் என்பது எளிதில் விளங்கி விடும். வன்முறை, சதிச் செயல், அடுத்தவர் மீது பழி போடுவது என்பன போன்றவை சங் பரிவார் கூட்டத்திற்குக் கைவந்த கலைகள் என்பது நினைவில் இருக்கட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *