சேர, சோழன், பாண்டியன் வெங்காயம் எல்லாம் என்ன செய்தார்கள்? அதற்குப் பிறகு வெள்ளைக்காரர்கள்தான் ஆண்டார்களே, அவர்களால் பெரும் மாற்றத்தைச் செய்ய முடிந்ததா என்றால் இல்லையே! அண்ணா நேற்று செய்ததற்கு மாறாகத்தானே அவர்கள் செய்தார்கள். மக்களிடையே மூடநம்பிக்கைகளைப் புகுத்தி அந்தக் காரியங்களைப் பாதுகாப்பதுதான் அரசியல் ஆட்சியின் லட்சியம் என்று அல்லவா அவர்கள் காலத்தில் கருதப்பட்டது! மூவேந்தர்கள் செய்தது என்ன? கோவில்களைக் கட்டினார்கள். கடவுள்களை உற்பத்தி செய்தார்கள் பார்ப்பானுக்கு அரசர்கள் தன் மனைவிகளை விட்டுக் கொடுத்தாகிலும் புண்ணியம் சம்பாதிக்க வேண்டும் என்று நடந்து கொண்டார்கள். பார்ப்பன நலத்தைத்தான் கொள்கையாக கொண்டு இருந்தனர்.
பறையன் பறையனாகவும், சக்கிலி சக்கிலியாகவும், சூத்திரன் சூத்திரனாகவும் இருக்கத்தான் ஆட்சி பயன்பட்டது தவிர, மனுஷன் மனுஷனாக வாழ்கிறான் என்று பார்க்கப் பயன்படவே இல்லையே! முடியவில்லையே! தப்பித் தவறி ஒரு ஆட்சி அப்படித் திரும்ப முயற்சித்தாலும் ஒழித்திருப்பார்களே! முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள் என்றாலும், அவர்களும், பழைய இராஜாக்கள் காலத்து ஆட்சியைப் போல் கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம், சம்பிரதாயம் _ இவற்றில் கை வைக்காமல் ஆட்சி புரியும்படி பார்ப்பான் ஆக்கி வைத்துக் கொண்டானே! வெள்ளைக்காரன் சில மாற்றங்களைச் செய்ய ஆரம்பத்தில் முன்வந்தான் என்றாலும் மாற்றவிடாமல் மிரட்டி சரிப்படுத்திக் கொண்டார்கள். அவனும் நமக்கெதற்கு வம்பு, நமக்கு சிக்கியது வரை சரிதான் என்றல்லவா ஆண்டான்? அண்ணா அவர்கள் அமைத்த அரசாங்கம் தானே இவற்றில் துணிந்து கைவைக்கக்கூடிய அளவுக்கு பகுத்தறிவாளர் ஆட்சியாக உள்ளது.
(1970 பம்பாய் சுற்று பயணத்தின்போது தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து…)
(‘விடுதலை’ 12.4.1970)