பகுத்தறிவு : மூடநம்பிக்கைக்கு எதிராக பாராட்டத்தக்க மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு!

ஜனவரி 16-31, 2021

தொலைக்காட்சிகள் மூலம் ஈர்க்கும் விளம்பரங்களால் பொருள்களை விற்பனை செய்வது மிகவும் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக அனைத்து மொழிகளிலும் அனைத்து அலைவரிசைகளிலும் தாயத்து   உள்ளிட்ட மூடத்தனப் பொருள்களை விற்பனை செய்வது மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது.  இதனால் மூட நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன.

இதையொட்டி இந்த விற்பனைகளைத் தடை செய்யக் கோரி பொதுநல வழக்கு ஒன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.  அந்த வழக்கில் 5.1.2021 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் இந்த விற்பனையைத் தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், “எந்த ஒரு பொருளையும் அதிசயமானது மற்றும் இயற்கைக்கு எதிரான சக்திகளைக் கொண்டது எனத் தொலைக்காட்சிகள் மூலம் விற்பனை செய்வதை’’ நீதிமன்றம் சட்டவிரோதம் என அறிவித்துள்ளது.

இது போன்ற தயாரிப்புகளை இவ்வாறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் விற்பனை செய்வதில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்யலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது. மந்திரம், பில்லி, சூனியம், குறளிவித்தை, சாத்தான் ஏவுதல் போன்றவை முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும் வேலை ஆகும். இது தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வுப் பரப்புரைகள், பகுத்தறிவு அமைப்புகள், அறிவியலாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள், மனநல மருத்துவர்கள் போன்றவர்களால் மேற்கொள்ளப் பட்டுவருகின்றன.

அதே நேரத்தில் மதநம்பிக்கை என்கிற பெயரில் இவற்றை நம்புகிறவர்களும் உள்ளனர் என்பதால், நம்புகிறவர்களை வைத்துப் பணம் பறிக்கும் _ சுருட்டும் நோக்கில் பலர் ஏமாற்றுவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு ஏமாற்றுபவர்கள் ஊடகங்களின் மூலமும் விளம்பரம் செய்து வருகின்றனர். பிரபலமான தொலைக்காட்சிகள், நாளிதழ்கள் போன்றவற்றில் விளம்பரம் வரும் போது அது ஒரு நம்பகத் தன்மையை உருவாக்கி விடுகிறது.

இதுமட்டுமல்லாமல், மந்திர தந்திரம் என்கிற பெயரில் ஏமாற்றுபவர்கள் சில சட்டவிரோதச் செயல்களைச் செய்யத் தூண்டுகின்றனர். குழந்தைகளைக் கொலை செய்வது, பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்வது என பல கொடூரங்களை மந்திர தந்திரங்கள் மூலம் செய்து பலன் அடையலாம் என்று கூறி நம்ப வைக்கின்றனர்.

 உத்தரப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் சிறுமி ஒருவரை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். உடற்கூறு ஆய்வில் கல்லீரல், இதயம் மற்றும் ஈரல் காணாமல் போயிருந்தன. இந்தக் கொடூரக் கொலை தொடர்பான விசாரணையில் அப்பகுதியில் உள்ள குழந்தையில்லாத தம்பதியினருக்கு அங்குள்ள கோவிலில் உள்ள பூசாரி, சிறுமி ஒருவரின் இதயம் மற்றும் ஈரலைக் கடவுளுக்குப் படைத்து, அதைச் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்று கூறியதன் விளைவாக இந்தக் கொடூர நிகழ்வு நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் ஏற்கெனவே பில்லி, சூனியம் மற்றும் மந்திர தந்திரம் போன்றவற்றைச் செய்பவர்களுக்குத் தண்டனை தரும் சட்டம் உள்ளது. இந்த நிலையில் தகடு யந்திரம், குபேரன் சாவி, லட்சுமி யந்திரம், ராமர் பாதம் என்று ஏமாற்றி 40 _ 50 ரூபாய்கள்கூட மதிப்பில்லாத பொருள்களை தொலைக்காட்சி மூலம் விளம்பரம் செய்து ஆயிரக்கணக்கில் பறிக்கின்றனர். இவ்வாறு விளம்பரங்களைச் செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில் இவ்வாறு செய்வது மதச் சுதந்திரம் என்று கூட கருத்துக் கூறும் நீதிபதிகளும் உண்டு. இந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் இது போன்ற விளம்பரங்களுக்குத் தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த விளம்பரங்களில் பிரபல இந்தி நடிகர்கள் மற்றும் நடிகைகள் கூட நடித்துவருகின்றனர் என்பது வேதனைக்குரியது_வெட்கத்துக்குரியது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51கிலீ என்னும் பகுதி _ மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால், அமைச்சர்களேகூட தங்கள் கைகளில் வண்ண வண்ணங்களில் கத்தைக் கத்தையாகக் கயிறுகளைக் கட்டிக்கொள்ளும் மூடத்தனமும் உள்ளதே! மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகாவது புத்தி வந்தால் சரி!

“பக்தி வந்தால் புத்தி போய்விடும் புத்தி வந்தால் பக்தி போய்விடும்’’ என்பது உண்மையிலும் உண்மைதானே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *