எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (70) : இந்தி எதிர்ப்பில் இறுதியில் இணைந்தவரா தந்தை பெரியார்?

ஜனவரி 16-31, 2021

நேயன் 

கடவுள் மறுப்பாளர் பெரியார் ஒன்றும் புதிதாய் செய்யவில்லை. அது ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. வைக்கம் போராட்டமா, அதில் பெரியார் முதன்மையானவர் அல்ல, தமிழ்த் தேசியமா பெரியாரை விட அதற்குப் பாடுபட்டவர்கள் உள்ளனர் என்பன போன்ற கருத்துகளைக் கூறி பெரியாரின் அரிய பணிகளை எல்லாம் குறைத்துக் காட்டும் சதியை, எதிர்தரப்பு எத்தர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதைப் போல இந்தி எதிர்ப்புப் போரிலும் பெரியார் இடையில் வந்து சேர்ந்தவர் எனக் கூறி அவருடைய அரும்பணியை ஒதுக்கி வைக்கின்றனர். ‘துக்ளக்’ பத்திரிக்கைகூட  அண்மையில் அப்படி எழுதிவுள்ளது. எனவே, உண்மையான இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை ஆதாரத்தோடு எடுத்துக் காட்ட வேண்டி உள்ளது. 

26.6.2019 துக்ளக் ஏட்டில், “ஹிந்தி எதிர்ப்பு மேலும் சில உண்மைகள்’’ என்ற தலைப்பில் பெரியாரின் பெருமையை, பித்தலாட்டப் பிரச்சாரம் மூலம் குலைக்க துக்ளக் ஏடு முயன்றுள்ளது.

இந்தி எதிர்ப்பில் பெரியாரின் பங்கு பெரிதாய் ஒன்றும் இல்லை.

என்று பித்தலாட்டப் பிரச்சாரங்களை துக்ளக் செய்துள்ளது.

இந்தி எதிர்ப்புப் போரில் இறுதியில் இணைந்தவரா பெரியார்?

1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் சைவப் பெரியோர்களான தமிழ்ப் பண்டிதர்களே. இதில் ஈ.வெ.ரா.வும் அண்ணாதுரையும் கடைசிக் கட்டத்தில்தான் கலந்து கொண்டனர். 1938இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பெரியார்தான் துவக்கினார் என்பது தவறு.

1937 _ தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் வென்றது. ராஜாஜி, எல்லோரும் ஹிந்தியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். இதை சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், கி.ஆ.பெ.விஸ்வநாதன் போன்ற சைவத் தமிழ்ப் பெரியவர்கள் எதிர்த்தனர். இதில் பாரதியின் சீடரான பாரதிதாசனும் உண்டு. கி.ஆ.பெ.விஸ்வநாதன், முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டை திருச்சியில் நடத்தினார். இப்போது மொழிப் போர் தியாகிகள் என்று கூறப்படுகிற தாளமுத்துவும், நடராஜனும் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டனர். பின்னர் அதில் பெரியாரும் அண்ணாதுரையும் சேர்ந்தனர்.

1965இல் மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, ஈ.வெ.ரா. பெரியார் 3.3.1965 ‘விடுதலை’ இதழின் தலையங்கத்தில்…

இந்தி விஷயத்தில் நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகி விட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவுக் கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதி வருகிறார்கள். நேரிலும் கேட்டார்கள். எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் கெட்டு விடுமே என்கிற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு, தமிழில் எதுவும் இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்து விட்டார்கள் என்று எழுதியுள்ளார் என்கிறது துக்ளக் ஏடு.

மேலே கண்ட இரண்டு செய்திகளும் பித்தலாட்டத்தின் உச்சம். அப்படியானால் உண்மை என்ன?

மாநாடு நடத்தி இந்தியை முதலில் எதிர்த்தது யார்?

1937 ஆகஸ்ட் 27ஆம் நாள் திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில் தலைமை உரையாற்றிய அண்ணா, தமிழர்கள் தங்கள் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்க, இந்தியை எதிர்த்துப் போராட முன்வருமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால், திருச்சியில் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாடு 1937 திசம்பர் 26ஆம் நாள்.

இதில் சுயமரியாதை இயக்கம் நடத்திய மாநாடுதான் முதலில் நடந்தது. அதன்பின் 4 மாதங்கள் கழித்து திருச்சி மாநாடு நடைபெறுகிறது. அது மட்டுமல்ல; திருச்சி மாநாட்டில் பெரியார் கலந்துகொண்டு, இந்தியைத் தமிழ்நாட்டில் நுழையவிட மாட்டோம் என்று முழங்கினார்.

அது மட்டுமல்ல; இந்த இரண்டு மாநாடுகளுக்கும் இடையில் 1937 செப்டம்பர் 5ஆம் நாள் சென்னையில் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தி எதிர்ப்புக்கான காரணங்களை விளக்கி அண்ணாதான் பேசினார்.

1938 ஆகஸ்ட் முதல் நாள், சீருடை அணிந்த 100 தொண்டர்களைக் கொண்ட இந்தி எதிர்ப்புத் தமிழர் படை, தளபதி கே.வி.அழகிரிசாமி, மூவலூர் மூதாட்டி இராமாமிர்த்தத்தம்மாள், அய்.குமாரசாமி பிள்ளை ஆகியோர் தலைமையில், திருச்சி_உறையூரிலிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கியது. ஏறத்தாழ 400 கி.மீ தொலைவை 234 ஊர்களின் வழியே 42 நாள்களில் நடந்தே கடந்து வந்த இந்தத் தமிழர் படை, வழியில் 82 இடங்களில் கூட்டங்கள் நடத்தித் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் காக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிய வண்ணம் செப்டம்பர் 11ஆம் நாள் சென்னை வந்தடைந்தது. தமிழர் படைக்குத் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மறைமலையடிகள் தலைமையில்   நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் இந்தியை எதிர்த்து முழங்கினார்.

செப்டம்பர் 16ஆம் நாள் சென்னை ஜார்ஜ் நகரில் (George Town) இருந்த இந்து தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளி முன்பு நடைபெற்ற மறியலில் தமிழர் படைத் தொண்டர்கள் நாற்பது பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.

சென்னை மாநிலத்தில் உள்ள பல நகரங்களிலும் பல்வேறு நாள்களில் இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன. அக்காலத்தில் தஞ்சை மாவட்டம் திருவாரூரில் 14 வயதுச் சிறுவனாகப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மு.கருணாநிதி, கையில் தமிழ்க் கொடியை ஏந்தி, இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிய வண்ணம், தன்னுடைய பள்ளித் தோழர்களுடன் சேர்ந்து இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார். அதனால், மறுநாள் அவர் வகுப்புக்கு வந்த இந்தி ஆசிரியரிடம் அடிவாங்க நேரிட்டது. 1938 சூன் 10ஆம் நாள் சென்னை _ கதீட்ரல் சாலையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில், அரசின் ஆணைகளை மீறுமாறு மக்களைத் தூண்டிப் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டு, அண்ணா செப்டம்பர் 21ஆம் நாள் கைது செய்யப்பட்டார். அய்ந்து நாள்கள் நீதிமன்ற விசாரணைக்குப் பின், அவருக்கு நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *