அய்யாவின் அடிச்சுவட்டில் …:இயக்க வரலாறான தன் வரலாறு(260) – பாவலரேறு பெருஞ்சித்திரனார் மறைவு!

ஜனவரி 16-31, 2021

கி.வீரமணி

10.5.1995 தஞ்சை மாவட்ட திராவிடர் கழகச் சார்பில் ஊருணிபுரத்தில் எழுச்சியுடன் ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியின் முடிவில் ‘தீ மிதி’ நிகழ்ச்சியும், வீதி நாடகமும் நிகழ்த்தப்பட்டது. முன்னதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் செல்வம் கொடியினை ஏற்றிவைத்து மாநாட்டைத் தொடங்கிவைத்தார். மாநாட்டு மேடையில் பசும்பொன் மாவட்டம் துவார் கிராமம் ந.தமிழரசன் _ த.சிகப்பி ஆகியோரின் மகள் லதாவுக்கும், செவ்வூர் கிராமம் பழனியப்பன் _சின்னம்மாள் ஆகியோரின் மகன் குமார் ஆகியோருக்கு வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினை கூறச்செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். மாநாட்டில் பேசுகையில், “ஜாதி தத்துவம் ஒழிய வேண்டும், சமூக நீதி மலரவேண்டும். மூடநம்பிக்கை ஒழிய வேண்டும் என்பதே நமது தத்துவம். ஜாதிப் பட்டத்தை ஒழியுங்கள், ஜாதிக்கு முட்டுக் கொடுக்கிற மதத்தினை, கடவுளை விட்டு ஒழிந்தாலொழிய நாம் தலைநிமிர்ந்து வாழமுடியாது. இளைஞர்களே, ஜாதி ஒழிப்புத் திருமணங்களை செய்து கொள்ளுங்கள். தமிழன் வீட்டுத் திருமணங்களுக்கு தமிழர்களையே அழைத்து நடத்துங்கள். பார்ப்பனர்களை அழைத்து உங்களை கீழ்ஜாதி என்று ஒத்துக் கொள்ளாதீர்கள்’’ என ஜாதியின் ஒடுக்குமுறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசினேன். மாநாட்டினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மாநில இளைஞரணியினரைப் பாராட்டிச் சிறப்பித்தேன். ஏராளமான தோழர்கள் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்தனர்.

14.5.1995 அன்று நெஞ்சு நடுக்குறும் வகையில் சேலம் அருகில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நடைபெற்றுள்ளது அறிய மிகுந்த வேதனையும் துன்பமும் அடைகிறோம்.

கொஞ்ச காலத்திற்கு முன்பு வாணியம்பாடியில் நடைபெற்ற விபத்துக்கு அடுத்து இதுவே பெரிய விபத்து. தமிழ்நாட்டில், உயிர் இழந்த பயணிகள் எண்ணிக்கை 50அய்த் தாண்டுகிறது. படுகாயம் உற்றோர் சுமார் 40 பேர் மற்றும் 25 பேர்களும் காயமுற்றோர். சடலங்கள் மீட்புப்பணி தொடரும் நிலையில் -_ இந்த ‘மனிதத் தவறு’க்கு மூலகாரணம் சரியாகக் கண்டறியப்பட்டு எதிர்காலத்தில் தவிர்க்கப்படும் வகையில் சரியான நடைமுறைகளை ரயில்வே அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் விழாவில் உரையாற்றும் ஆசிரியர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்

இறந்தவர்கள், காயமுற்றோர்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள உதவி மிக மிகச் சொற்பம். அதை உயர்த்திட வேண்டும். மருத்துவ சிகிச்சை செலவினங்களும் மற்றவர்களுக்கு _ விபத்தில் சிக்கியவர்களுக்கு _ தருதல் அவசியம்.

சேலம் கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழகத்தவர் உள்பட, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தக்க ஆறுதல்கூறி, தேவையான உதவி செய்தல் வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வெளியிட்டோம்.

14.5.1995 ஆந்திர மாநிலம் நெல்லூரில் ‘அம்பேத்கர் சந்தேசமு’ (மிஷன்) அண்ணலின் விழாவைக் கொண்டாடியது. புத்தர் ஞானம் பெற்ற நாளைக் கொண்டாடுவதாக அந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்விழாவில் ‘பகுத்தறிவும் _ பவுத்தமும் டாக்டர் அம்பேத்கரும்’ என்னும் தலைப்பில் உரையாற்றினேன். அவ்வுரையில் “புத்தர், பெரியார், அம்பேத்கர் ஆகிய மூவரும் மிகச் சிறந்த மனித நேயச் சிந்தனையாளர்கள்; ஆதிக்கத்திற்கு அறைகூவல் விட்டவர்கள்; புதிய செம்மையான உலகை நிறுவ  அமைப்புகளையும், இயக்கங்களையும் தோற்றுவித்தவர்கள். உடன் வாழ்ந்த மக்களை இவர்கள் மூவரும் என்றும் மறந்ததில்லை. தாழ்ந்து போகும் நிலையிலும் அவர்களைக் கைவிட்டதும் இல்லை.

புத்தர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய மூவரும் மனிதநேய மதிப்பீட்டைப் போற்றியதுடன், பகுத்தறிவுப் பார்வையையும் உடையவர்களாக இருந்தனர். 1936இல் நிகழ்த்தப்படாத அம்பேத்கரின் எழுத்துரையை “ஜாதியை ஒழிக்கும் வழி’’ எனத் தமிழில் அளித்தவர் தந்தை பெரியார். பொருளாதாரப் புரட்சிக்கு முன்னோடியாக, ஜாதி ஒழிப்புக்கான சமூகப் புரட்சி தேவை என்பதைப் பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் வலியுறுத்தினர். புத்தர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பெயரில் நாம் ஒன்றுபட வேண்டும். அவர்களின் கொள்கைகளைப் பரப்ப வேண்டும். அவர்கள் காட்டிச் சென்றுள்ள உயர்ந்த இலக்குகளை அடைவதற்காகக் கிளர்ச்சி செய்ய வேண்டும், தொண்டாற்ற வேண்டும்’’ எனப் பல கருத்துகளை ஒப்பிட்டுப் பேசினேன்.

முன்னதாக நெல்லூர் மாவட்ட ரயில் நிலையத்தில் அம்பேத்கர் ‘சந்தேசமு’ தலைவர் ஜி.சத்தர்மாவும், ‘பிரஜா பந்து’ இதழின் ஆசிரியர் டாக்டர் ஈ.வி.சின்னயா அவர்களும் தோழர்களுடன் வந்து வரவேற்றனர். விழாவிற்கு சிந்த சிறி ராமமூர்த்தி தலைமை ஏற்றார். பவுத்த சங்கத் தலைவர் ரமணய்யா, வெங்கய்யா, தொட்ல கவுசல்யம்மா, ஜெ.கே.ரெட்டி என முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சோலார்பேட்டை ஜாதி ஒழிப்பு மாநாட்டில் அறிவு ஆசான் தந்தை பெரியார் சிலையை திறந்து வைக்கும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர்.

20.5.1995 வேலூர் மாவட்ட கழக அமைப்பாளர் தி.கோ.சமரசம் _ பேபி ஆகியோரின் மகன் குமணன், குமரி மாவட்டம் ராதாகிருட்டினன் _ சுதாகுமார் ஆகியோரின் மகள் சுமா ஆகியோரின் மண விழாவினை தலைமை ஏற்று வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து நடத்தி வைத்தேன். திருமண விழாவில் பெரியார் பெருந்தொண்டர் சிங்கப்பூர் முருகு.சீனிவாசன், க.பார்வதி, அருணாசலம், அ.இறையன் ஆகிய முக்கியப் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றுகையில், “சமரசம் துணிச்சல் மிக்கவர். அரசுப் பணியில் இருந்தபோதும், அதைப்பற்றி யெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், தனது இரு சக்கர வாகனத்திலேயே ‘கடவுள் இல்லை’ என்று எழுதி வைத்திருக்கும் கொள்கை வீரர். இந்தக் குடும்பத்தின் வளர்ச்சியில், இன்ப _ துன்பங்களில் எங்களுக்கு மிகுந்த அக்கறையுண்டு எனப் பல்வேறு கருத்துகளைக் கூறினேன்.

20.5.1995 சோலையார்பேட்டை பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கூட்டமும், அறிவு ஆசான் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும் மாவட்ட பொறுப்பாளர்களால் சிறப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. தந்தை பெரியார் சிலையினை அதிர்வேட்டுகள் முழங்க, தோழர்களின் வாழ்த்தொலிவுடன் திறந்து வைத்தேன். கொட்டும்மழையினையும் பொருட்படுத்தாது  கழகத் தோழர்களும், ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர். பெரியார் பெருந்தொண்டர் டாக்டர் நாதமுனி அவர்களின் 75ஆம் பிறந்த நாளையொட்டி அவருக்கு சால்வை போர்த்தி சிறப்பு செய்தேன். சிலை அமைப்புக்காக அதிகமாக வசூல் செய்த தோழர்களைப் பாராட்டினேன். பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “சோலார்பேட்டை மண் சுயமரியாதை மண். இதை எராளமான கழகத் தோழர்கள் உழுது பண்படுத்தியிருக்கிறார்கள். சோலார்பேட்டை பார்த்தசாரதி அவர்கள் அய்யாவிற்கு மிக உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். புரட்சிகரமான செயல்களைச் செய்திருக்கிறார்கள். அதுபோல குயில்தாசன், தந்தையார் தங்கவேல், சின்னராசு, கருப்புக்கொடி குடும்பத்தினர் சமரசம் குடும்பத்தினர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். தந்தை பெரியாருக்கு சிலை திறப்பு ஏன்? வழிபடுவதற்காக அல்ல, அது ஒரு வரலாற்றுக் குறிப்பு. கடலூரில் அய்யா மீது செருப்பைத் தூக்கிப் போட்ட இடத்தில் அய்யா அவர்களுக்கு சிலை வைத்துள்ளோம். தந்தை பெரியாரின் கருத்துகளில் முதன்மையாக ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு போன்றவை காலத்தை வென்ற கருத்துகள். உலகளாவிய கருத்துகள். அதனை கிராமந்தோறும் பரப்ப வேண்டும்’’ என உரை நிகழ்த்தினேன்.

21.5.1995 வேலூர் மாவட்டக் கழகத் தலைவர் ஏ.டி.கோபால் இல்ல மணவிழா திருப்பத்தூர் டி.என்.டி. பெருந்தலைவர் காமராசர் திருமண அரங்கில் மாநாடு போல்   நடைபெற்றது. ஏராளமான பொதுமக்களும், கழகத்தினரும் கலந்து கொண்டனர். மணமக்களுக்கு கோ.கவிதா_கோ.கோபிநாத் ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினை கூறச் செய்து இணையேற்பு விழாவினை நடத்திவைத்தேன். அதனைத் தொடர்ந்து, குடியாத்தம் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கல்மடுகு அழகிரிதாசன், சோலையார்பேட்டை நகர செயலாளர் எம்.பெருமாளின் மகள் இந்திரா ஆகியோரின் மண விழாவினை ராகு காலத்தில் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினை கூறச் செய்து நடத்தி வைத்தேன். மணவிழாவில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.வரதராசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அங்கு ஜாதி ஒழிப்புத் திருமணம் செய்துகொண்ட மணமக்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினேன்.

அன்று மாலை வேலூர் மாவட்டக் கழகத்தினர் சார்பில் ஜாதி ஒழிப்பு மாநாடும் நடத்தப்பட்டது. கொட்டும் மழையில் நடைபெற்ற மாநாட்டில் வீதி நாடகமும், பகுத்தறிவுப் பாடல்களும் பாடப்பட்டு சிறப்புற நடைபெற்றது. நிறைவாக ஆற்றிய சிறப்புரையை கழகப் பொறுப்பாளர்களும், ஏராளமான மக்களும் இறுதிவரை இருந்து கேட்டுச் சென்றனர்.

மணமக்கள் டாக்டர் ப.காமராஜ் – இரா.அஞ்சுளாதேவி ஆகியோர்க்கு வாழ்க்கைத் துணை செய்விக்கும்
ஆசிரியர் உடன் வீரபாண்டி ஆறுமுகம்

22.5.1995 சேலம் மல்லூரில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பழனிச்சாமி மகன் பேராசிரியர் டாக்டர் ப.காமராஜ்_இரா.அஞ்சுளாதேவி ஆகியோர் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினை கூறச் செய்து நடத்தி வைத்தேன். மணவிழாவில் முன்னாள் அமைச்சர் சேலம் வீரபாண்டி ஆறுமுகம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

22.5.1995 விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் ஜாதி ஒழிப்பு மாநாடும், தந்தை பெரியார் சிலை திறப்பு நிகழ்ச்சியும் சிறப்புடன் நடைபெற்றது. மாநாட்டையொட்டி சித்தார்த்தன் குழுவினரின் வீதி நாடகமும், பகுத்தறிவுப் பாடல்களும் பாடப்பட்டது. கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை தலைமையில் தந்தை பெரியார் சிலையினை ஒலி முழக்கம் விண்ணதிர தோழர்களின் வாழ்த்தொலியோடு திறந்து வைத்தேன். தந்தை பெரியார் சிலையிலிருந்து மாநாட்டு மேடை வரை இருபுறம் கழகத் தோழர்கள் தீப்பந்தம் ஏந்தி வரவேற்றனர். இளைஞரணி செயலாளர் ராவணன் தலைமையில் விழுப்புரத்திலிருந்து 30 இளைஞரணித் தோழர்கள் மிதிவண்டி மூலம், ஜாதி ஒழிப்பு மாநாட்டினை விளக்கி சுடரேந்தி தொடர் ஓட்டம் மூலம் மாநாட்டு மேடையினை அடைந்து சுடரினை ஒப்படைத்தனர். மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற மாநாட்டு உரையில், “இளைஞர்கள் ஜாதி மறுப்புத் திருமணங்களை செய்ய முன் வர வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்து எழுச்சியுரையாற்றினேன்.

தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.பி.பாலு அவர்களின் மகன் பா.செந்தில்நாதன் – இரா.பவானி வாழ்க்கை
ஒப்பந்த விழாவை நடத்தி வைக்கும் ஆசிரியர்

25.5.1995 தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் எம்.பி.பாலு அவர்களின் மகன் பா.செந்தில்நாதன் _ இரா.பவானி வாழ்க்கை ஒப்பந்த விழாவினை தலைமையேற்று சைதாப்பேட்டை வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் நடத்தி வைத்தேன். மணமக்களை வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினை கூறச் செய்து விழாவினை சிறப்பாக நடத்தி வைத்தேன். அந்தப் பகுதி முழுவதும் வரவேற்புப் பதாகைகள் வைக்கப்படும். வரவேற்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுருந்தன. கழகத் தோழர்கள், முக்கிய பொறுப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

25.5.1995 சென்னை ராயபுரம் அறிவகத்தில் எம்.கே.டி.சுப்ரமணியம் அவர்களின் பேத்தி ஞானமலர் _ கண்ணன் வாழ்க்கைத் துணைநல விழாவினை தலைமையேற்று நடத்திவைத்தேன். அவ்விழாவில் பேசுகையில், “அரசியல்ரீதியாக அவர்கள் ஒரு சில நிலைகளை எடுத்திருந்தாலும்கூட அவர் ஆழமான சுயமரியாதைக்காரர். அதுவும் தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலே மற்றவர்களெல்லாம் நினைக்க முடியாத காலத்தில் எதைப் பேசினார்களோ அதை செய்தார்கள். அதுதான் சுயமரியாதைக்காரனுக்கே இலக்கணம் _ எதைச் செய்தார்களோ அதை மட்டும்தான் பேசினார்கள். அதுவே சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வின் அடித்தளமாகும்’’ என்பன போன்ற பல கருத்துகளை பேசினேன்.  

 டி.ஏ.கோபால்

26.5.1995 காஞ்சி நகர திராவிடர் கழக செயலாளரும் திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு உறுப்பினருமான பெரியார் பெருந்தொண்டர் காஞ்சி டி.ஏ.கோபால் மறைவுற்றார் என்கிற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

காஞ்சிபுரம், இயக்க வரலாற்றில் மிக முக்கியமான நகரம். அண்ணா பிறந்த ஊர் என்பது மட்டுமல்ல; துவக்கக் காலத்திலிருந்து அண்ணாவின் நண்பர்களாகவும், தொடர்ந்து இயக்கத்தில் அரும்பணியாற்றி வந்துள்ள பெருந்தகைகள் அவ்வூரில் உண்டு!

அவர்களுள் ஒருவர் நமது அருமை டி.ஏ.கோபால் அவர்கள். சி.பி.ஆர் என்று அனைத்துத் தரப்பினராலும் அன்போடு அழைக்கப்பட்ட சி.பி.இராசமாணிக்கம் மறைந்த நிலையில், டி.ஏ.ஜி. என்று அன்போடு அழைக்கப்படும் டி.ஏ.கோபால் அவர்கள், தொடர்ந்து தொய்வில்லாது இயக்கப் பணி ஆற்றி வந்தார்.

காஞ்சியில் உள்ள பெரியார் அறக்கட்டளைக்குச் சொந்தமான கழகக் கட்டடத்தைச் சீர்திருத்தி செப்பனிட்டு, அங்கு பெரியார் நூலகம் _ படிப்பகம் அமையும் வண்ணம் ஏற்பாடு செய்து திறப்பு விழாவுக்கும் என்னை அழைத்து, அதே நாளில் ஜாதி ஒழிப்பு மாநாட்டையும் சிறப்பாக நடத்திக் காட்டிய இயக்கச் செம்மல் அவர்!

இயக்கத் தோழர்களிடத்திலும், நண்பர்களிடத்திலும் அவரும், அவரின் குடும்பத்தாரும் காட்டும் விருந்தோம்பல் பண்பு என்பது தனிச் சிறப்பானது!

வயது 67 என்பது இந்தக் காலத்தில் பெரிய முதுமை என்றும் கூறிவிடமுடியாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே இருக்கக் கூடியவர். சில நாள்களுக்கு முன் உடல் நலம் திடீரென்று பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையும் அளிக்க அவரின் குடும்பத்தார் சிறந்த முறையில் ஏற்பாடுகளைச் செய்தனர். கழகத் தோழர்கள் குருதிக் கொடை வழங்கினார்கள். மருத்துவமனையில் நேரில் சென்ற பார்த்து வந்தேன்.

நம்மை விட்டுப் பிரிந்துவிட்டாரே டி.ஏ.ஜி! இயற்கையில் நிகழும் இந்தத் தன்மையை எண்ணி ஆறுதல் கொள்ளுமாறு அவரின் குடும்பத்தாரையும், தோழர்களையும் கேட்டுக் கொள்கிறேன். அவரின் அரிய தொண்டுக்கு இயக்கத்தின் சார்பில் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டோம்.

27.5.1995 சேலம் மாவட்டம் கவுதம பூபாலன் _சம்யுக்தராணி ஆகியோரின் மணவிழாவை தலைமையேற்று சுயமரியாதைத் திருமண முறையில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கூறச் செய்து மண விழாவினை நடத்தி வைத்தேன்.

சின்னாளப்பட்டி ஜாதி ஒழிப்பு மாநாட்டில் ஒலி நாடாவை ஆசிரியர் வெளியிட
பெற்றுக் கொள்ளும் பே.தேவசகாயம் அவர்கள்

2.6.1995 திண்டுக்கல் அண்ணா மாவட்டம் சின்னாளப்பட்டி நகரில் கழகத்தினரால் ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டினையொட்டி நடைபெற்ற பேரணியை கழக மாநில தொழிலாளரணிச் செயலாளர் கே.ஜி.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். வீதி நாடகமும், மந்திரமா? தந்திரமா? தலைவர்கள் படத்திறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. பல்வேறு கழகப் போராட்டங்களில் கலந்துகொண்ட 80 வயது பெரியார் பெருந்தொண்டர் அரிராம் அவருக்கு சால்வை போர்த்திப் பாராட்டினேன். மாநாட்டினை சிறப்புடன் நடத்திக் காட்டிய கழக இளைஞரணி, மாணவரணி, தொழிலாளரணி பொறுப்பாளர்களுக்கு சால்வை போர்த்தி பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டேன்.

பொள்ளாச்சி ஜாதி ஒழிப்பு மாநாட்டில்
உரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர்

3.6.1995 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. பேரணி தேரடி பூங்கா திடலிலிருந்து புறப்பட்டு ராசாமில் ரோடு வழியாக மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்தடைந்தது. 500க்கும் மேற்பட்ட கழகத் தோழர்களும், தோழியர்களும் பங்கேற்ற எழுச்சிமிக்க ஊர்வலத்தில் தோழர்கள் உடல் முழுவதும் எலுமிச்சைப் பழத்தை குத்தியவாறு கடவுள் இல்லை; கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை; தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! என முழக்கமிட்டு வந்தனர்.

மாநாட்டுக் கொடியை மகளிரணித் தோழியர் பத்மா கீசகன் ஏற்றினார். மேடையில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் படத்தை கழகப் பொறுப்பாளர்கள் திறந்து வைத்தனர்.

ஜாதி ஒழிப்புப் போரில் ஈடுபட்டு சிறையேகிய பெரியார் பெருந்தொண்டர் ஆனைமலை அனீபா, காளியப்பன், நஞ்சப்பன் ஆகியோரைப் பாராட்டி சான்றிதழ் வழங்கி, கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பித்தேன். ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட திருப்பூர் அன்பு _ராசாமணி, குமார் _ சகுந்தலா ஆகியோரையும் பாராட்டி சிறப்பித்தேன்.

ஊத்துக்குளி ஆறுச்சாமி_ருக்குமணி ஆகியோரின் பெண் மகவுக்கு மணியம்மை எனப் பெயர் சூட்டினேன். மாநாட்டிற்கு திருப்பூர், கணியூர், தாராபுரம், கோவை, பேரூர் ஆகிய ஊர்களிலிருந்து ஏராளமான பொதுமக்களும் கழகத்தினரும் வந்திருந்தனர். மாநாட்டு உரையில் ஜாதி ஒழிப்பின் அவசியத்தையும், அது மனிதர்களை பிரித்தாளும் சூழ்ச்சியையும் விளக்கிப் பேசினேன். மாநாட்டினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் கைத்தறி ஆடை அணிவித்துப் பாராட்டி நன்றி கூறினேன்.

இயக்க முன்னணி வீரர் ‘டார்பிடோ’ ஏ.பி.ஜனார்த்தனம் எம்.ஏ., அவர்களின் ‘என் வாழ்க்கை ஏடுகள்’ நூலை நாவலர் வெளியிட பெற்றுக் கொள்ளும் ஆசிரியர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்

6.6.1995 சென்னை பெரியார் திடலில் இயக்க முன்னணி வீரர் ‘டார்பிடோ’ ஏ.பி.ஜனார்த்தனம் எம்.ஏ., அவர்களின் ‘என் வாழ்க்கை ஏடுகள்’ நூல் வெளியீட்டு விழாவினை தலைமை ஏற்று நடத்தினேன். விழாவில் சிறப்பு அழைப்பாளராக நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். நூலினை நாவலர் வெளியிட நான் பெற்றுக்கொண்டேன். இவ்விழாவில் உரையாற்றுகையில், “1944ஆம் ஆண்டில் திருப்பாதிரிப்புலியூரில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டுக்கு தந்தை பெரியார் அவர்கள் வருகை தந்தார்கள். அப்பொழுதெல்லாம் என் ஆசான் திராவிடமணி அவர்கள் என்னை மேடைப் பேச்சுக்குத் தயாரித்திருந்த நேரம். தந்தை பெரியாரை அருகில் போய்ப் பார்க்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சி எனக்கு. தந்தை பெரியார் அவர்கள் தங்கி இருந்த இடத்திற்குச் சென்று, அவர்களுக்கு உணவு கொடுக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டு இருந்தது என் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்றாகும் என நினைவுகூர்ந்து ஏ.பி.ஜே. அவர்களைப் பற்றி விளக்கி உரையாற்றினேன்.

மணமக்கள் ந.பாஸ்கரன் – செ.கீதாராணி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை நடத்தி வைக்கும் ஆசிரியர்

7.6.1995 புதுவையில் மு.ந.நடராசன்_ நாகலெட்சுமி ஆகியோரின் மகன் பாஸ்கரன், சென்னை செல்வராசு _ நாகபூசணம் ஆகியோரின் மகள் கீதாராணி ஆகியோரின் மண விழாவினை தலைமையேற்று வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். தமிழன் வீட்டுத் திருமணங்களை தமிழில் நடத்த வேண்டும், தமிழ்ப் பண்பாட்டோடு நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உரையாற்றினேன்.

9.6.1995 மணிப்பூர் மாநிலத்தில் தமிழர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தோம். மாநிலத்தில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிட்டோம். அந்த அறிக்கையில், “மணிப்பூர் மாநிலத்தில் தமிழர்கள்  திட்டமிட்டுத் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த, பிரதமர் திரு.நரசிம்மராவ் அவர்கள் தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவதோடு, உள்துறை அமைச்சர் திரு.சவானை அம்மாநிலத்திற்கு உடனே அனுப்பி நிலைமையைக் கண்காணிக்கச் செய்ய வேண்டும்.

பிழைக்கப் போயுள்ள தமிழர்கள் அங்கு இரு இனத்தவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பலிகடாக்கள் ஆக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையாக ஒன்றாகும். மராத்திய மாநிலம், கர்நாடக மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டு மிக மோசமான சொல்லொணாத் துயரப்பட்டார்கள். எங்கே யார் மோதினாலும் பாதிக்கப்படுவது தமிழனாகவே இருப்பதா? அது தமிழ் இன உணர்வாளர்கள், மனிதநேய மாண்பாளர்கள் மத்தியில் எப்படிப்பட்ட உணர்வுகளை உருவாக்கும் என உணர வேண்டாமா? தமிழ்நாடு முதலமைச்சரும் பல கட்சித் தலைவர்களும் இதில் உடனடியாக குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழன் நாதியற்றவனா? இல்லை என்பதைக் காட்டியாக வேண்டும்’’ என அறிக்கையில் குறிப்பிட்டோம். இதன் சம்பந்தமாக பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கழகத்தின் சார்பில் தந்தியும் அனுப்பப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

11.6.1995 மொழிமான, இனமான மறவர் ‘தென்மொழி’ ஆசிரியர் _ தமிழ்ப் பேரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து திடுக்கிட்டேன்.

அணுகுமுறைகளில் பல நேரங்களில் நம்மோடு மாறுபாடுகள் ஏற்பட்டாலும் அடிப்படையில் மொழி மானம், இனமானக் கூறுகளில் பாவலரேறு அவர்களின் உணர்வுகள் பளிச்சென்று காணப்படக் கூடியவை _ அதில் பழுது ஒன்றையும் காண இயலாது!

தாம் ஏற்றுக்கொண்ட இந்தக் கொள்கைகளில் தமக்குத் தோன்றியவைகளை அவரது முறையில் வெளிப்படுத்தும்போது அதனால் ஏற்படும் இடர்பாடுகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாதவர்.

‘மிசா’, ‘தடா’க்களை எல்லாம் கண்டு வந்தவர்.

தந்தை பெரியார் அவர்களிடத்திலும், திராவிடர் கழகத்தினிடத்திலும் மதிப்பும் அக்கறையும் கொண்டவர். கழகம் நடத்திய பல்வேறு மாநாடுகளிலும் கலந்துகொண்டு இனமான உரை நிகழ்த்தியவர்; கழகம் நடத்திய மனுதர்ம எரிப்புப் போன்ற போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவர்.

அவரின் தனித்தன்மை வாய்ந்த தனித்தமிழ் எழுத்துகள் அரும்பெரும் நூல்களாக வெளிவந்து தமிழர்களுக்குக் கருவூலமாக அமைந்திருப்பவை! பிற மொழிக் கலப்பு இல்லாத அவரின் தனித்தமிழ் எழுத்தும், பேச்சும், மொழியுணர்வையும் _ இனவுணர்வையும் வளர்க்கக் கூடியவை.

மருத்துவ அறிவுலகம் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில், தமிழ்நாடு ஒரு தமிழ்ப் பேரறிஞரை இதற்குள் இழந்துவிட்டதே!

அவரின் பிரிவால் ஏற்பட்டுள்ள துயரத்தில் திராவிடர் கழகம் பங்கு கொள்கிறது.

இனவுணர்வு _ மொழியுணர்வுகளில் இரு பொருளுக்கு இடமின்றி பாடுபடுவதே மறைந்த தமிழ் மறவர் பாவலரேறு அவர்களுக்கு நாம் காட்டும் உண்மையான வீர வணக்கமாக இருக்க முடியும்!

வாழ்க பாவலரேறு பெருஞ்சித்திரனார்!

என்று இரங்கல் அறிக்கை வெளியிட்டோம்.

15.6.1995 திருச்சியில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளியின் புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். கல்வி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு அமெரிக்க புலனாய்வுத் துறையில் பணியாற்றும் டாக்டர் ராசேந்திரன் அவர்கள் தலைமை ஏற்றார். திருமதி பங்கஜம் ராசேந்திரன் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார்கள். டாக்டர் ராசேந்திரன் கட்டட வளர்ச்சிக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார். பெரியார் மகளிர் விடுதிக்காக புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கப்பட்டது. புதிய கட்டடத்திற்கான பணியை அவரும் நானும் துவக்கி வைத்தோம். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் திருமதி வஹிதாபேகம், கல்லூரி தாளாளர் ஞான.செபாஸ்தியான், முதல்வர் ஜெயகர், என்.ராமச்சந்திரன் மற்றும் பேராசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *