பெண்ணால் முடியும்

ஜனவரி 16-31, 2021

கோவை கே.எம்.சி.எச். மருத்துவக் கல்லூரிக்கு ஏழை மாணவி சவுமியா மருத்துவப் படிப்பிற்குத் தேர்வாகி அனைவருக்கும் முன் மாதிரியாகத் திகழ்கிறார். மிகவும் பின்தங்கிய சமூகமான லம்பாடி சமூகத்திலிருந்து தேர்வாகி உள்ள முதல் மாணவி இவர்தான்.

அவரின் இலட்சியப் பயணத்தைப் பற்றிக் கூறுகையில்,  “எனக்குப் படிப்பு நன்றாக வரும். 10ஆம் வகுப்பில் 461 மதிப்பெண்களும் +2வில் 410 மதிப்பெண் கிடைத்தது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் +2 வரை படித்தேன்.

ரொம்ப சின்ன வயதில் எனக்கு டாக்டர் கனவு இருந்தது. பத்தாம் வகுப்பு படித்தபோது திருவண்ணாமலை மருத்துவமனை ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கிருந்த இளம் பெண் மருத்துவர் ஒருவரைப் பார்த்த கணத்தில் மீண்டும் ஸ்டெத்தெஸ்கோப்பும் வொயிட் கோட்டுமாக என் மருத்துவர் கனவு விழித்துக்கொள்ள, நானும் டாக்டராவேன் என்பதை உறுதியாய் நம்பத் தொடங்கினேன். அரசு நடத்தும் ‘நீட்’ பயிற்சியில் இணைந்து படித்ததில் முதல் முயற்சி தோல்வியானது.

அப்பா என்னை பி.எஸ்.ஸி நர்ஸிங் சேர்த்துவிட, மனம் அதில் ஒட்டாமல், மருத்துவராவதே என் இலக்கு என தீர்க்கமாய் முடிவு செய்தேன். மீண்டும் அப்பாவிடம் பேசி, இரண்டாவது முறை ‘நீட்’ தேர்வைச் சந்திக்க, கோவையில் இருக்கும் பயிற்சி மய்யம் ஒன்றில் மிகமிகத் தாமதமாக நவம்பர் மாதத்தில் இணைந்தேன். எதிர்பாராமல் மார்ச்சில் வந்த கொரோனா ஊரடங்கில் வீட்டுக்கே திரும்ப வேண்டிய நிலை. வீட்டில் இருந்தே பயிற்சிகளை மேற்கொண்டதில், இரண்டாவது முறை எனக்கு 184 மதிப்பெண்கள் கிடைத்துத் தேர்வானேன். ஆனால், மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய இந்த மதிப்பெண்கள் பத்தாது.

விடாமல் மீண்டும் ‘நீட்’ எழுத முயற்சித்தபோதுதான், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டில் கோவை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், கல்லூரியில் கட்டச் சொல்லும் 2 லட்சத்திற்கு என்ன செய்வது என பெற்றோர் விழிபிதுங்கி நிற்க… என் மருத்துவப் படிப்பு கானல் நீர்தான் என்றானது. ஆனால், என் பள்ளித் தலைமை ஆசிரியர், பணம் குறித்து பிறகு யோசிக்கலாம், முதலில் கிடைத்த வாய்ப்பை விடாமல் உறுதி செய்துவிடுங்கள் என்றார். பணம் கட்ட ஒரு வாரம் அனுமதி பெற்றுத் திரும்பினோம்.

சரியான நேரத்தில் சரியான ஆலோசனையை என் தலைமை ஆசிரியர் எனக்கு வழங்கினார். கல்லூரி தொடங்குவது 2021 பிப்ரவரி. டாக்டர் படிப்பை வெற்றிகரமாக முடித்து என் சமூகத்து மக்களுக்கான முன்மாதிரியாக வெளியில் வருவேன்’’ எனப் புன்னகையோடு விடைபெற்றார். லம்பாடி சமூகத்தில் இருந்து ஒரு பெண் மருத்துவராக வருவது இமாலய சாதனை என, சவுமியா படித்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சதாசிவம்,  “எங்கள் பள்ளி அதிகமாகப் பெண்கள் படிக்கும் பள்ளி. 865 மாணவர்களில் 411 பேர் பெண்கள். அதிலும் அதிகமாக லம்பாடி சமூகத்துக் குழந்தைகள்தான் இங்கே படிக்கிறார்கள் எனப் பெருமையாகச் சொல்கிறார்.

சவுமியாவின் கண்களில் எப்போதும் ஒரு ஃபயர் இருக்கும். எப்போதும் அவர் தைரியமாகவும் துடுக்காகவும் இருப்பார். பள்ளியில் அவர்தான் பள்ளி மாணவர் தலைவர். சவுமியாவின் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பும் தெளிவாக இருக்கும். அவர் சார்ந்த சமூகத்துக் குழந்தைகளுக்கு அறிவுத் திறன் அதிகமாகவே இருக்கும். வாய்ப்புகள் இவர்களுக்குச் சரியாக அமைந்தால் வெளிச்சத்திற்கு வருவார்கள்’’ என விடைகொடுத்தார்.

“அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு மற்றும் கல்விக் கட்டணம் முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்’’ போன்ற அறிவிப்புகளால் சவுமியாவின் கனவு மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் வாழ்க்கையே மாறப்போகிறது என்கிறபோது, ‘நீட்’ தேர்வு இல்லையென்றால் எத்தனையோ ஏழை மாணவ, மாணவிகள் டாக்டராக மாறுவார்கள் என எண்ணத் தோன்றுகிறது.

இன்னும் எத்தனையோ ஏழை மாணவர்கள் பயிற்சி மய்யத்தின் வாசலைக்கூட எட்ட முடியாமல் தங்களின் கனவுகளை மனதோடு புதைத்து விட்டனர். வருங்காலத்தில் ஆட்சி மாற்றத்தோடு அவர்களின் கனவுகள் நனவாக வாழ்த்துவோம்.

தகவல் : சந்தோஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *