பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் திராவிட இயக்கத்தின் பங்கும்!

ஜனவரி 16-31, 2021

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமிக்கப்பட்ட வரலாறும், அதற்கு நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும் செய்த பங்களிப்பையும் யாரும் எளிதில் புறம்தள்ள முடியாது. அதற்கு நம் கடந்த கால வரலாறும், இந்தக் காலத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையும் மற்றும் இடஒதுக்கீட்டையும் அறிந்து கொண்டால் நல்லது. 1898 முதல் 1930 வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட 9 ‘இந்திய’ நீதிபதிகளில் 8 பேர் பார்ப்பனர், ஒருவர் நாயர்.

தமிழர் ஒருவர்கூட இல்லாத நிலையில், 1948ஆம் ஆண்டுதான் முதன்முதலில் என்.சோமசுந்தரம் என்ற பார்ப்பனரல்லாத நீதிபதி, பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பை மீறி நியமிக்கப்பட்டார். அதற்கு முன் பார்ப்பனரல்லாத நீதிபதியே உயர்நீதிமன்றத்தில் கிடையாது. இதற்கு அடித்தளமிட்ட ஆட்சி நீதிக்கட்சி ஆட்சிதான். 1921ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை வழங்கியதும் நீதிக்கட்சிதான். இன்று பெண்கள் கல்வி, கலை, இலக்கியம், விஞ்ஞானம், நீதித்துறை,   ஆட்சிப்பணி என சிகரங்களைத் தொடுவதற்கு தந்தை பெரியாரின் வழிகாட்டுதலும், நீதிக்கட்சி ஆட்சியும், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளும்தான் காரணம்.

அதனை ஒட்டிய குறிப்புகள்:

பெண் நீதிபதிகள் அதிகம் உள்ள உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 பெண் நீதிபதிகள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே அதிக பெண் நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்றம் என்கிற பெருமை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கிடைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளின் பெயர்கள்: நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, வி.எம்.வேலுமணி, ஜெ.நிஷா பானு, அனிதா சுமந்த், வி.பவானி சுப்பராயன், ஆர்.தாரணி, டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.ஹேமலதா, பி.டி.ஆஷா, எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மா, ஆர்.என்.மஞ்சுளா, எஸ்.டி.தமிழ்ச்செல்வி ஆகியோர்.

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75. இவர்களில் 25 பேர் பெண் நீதிபதிகள் இருந்திருக்க வேண்டும். தற்போது 13 பெண் நீதிபதிகளே உள்ளனர்.

-மேக்சிமஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *