பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன்
செங்கதிரோன் நல்லாட்சி உலகம் எங்கும்
சீராக நடக்கின்ற மாட்சி என்னே!
எங்கும்வாழ் செந்தமிழர் மகிழ்ச்சி கொண்டே
இன்பமுடன் கொண்டாடும் திருநாள் பொங்கல்!
மங்காத புகழ்வாய்ந்த தமிழர் மாண்பு
மன்பதைக்கே உணர்த்துகிற நன்னாள் இந்நாள் !
வெங்கொடுமை இழைக்கின்ற கொடியர் ஆட்சி
வீழ்த்திடஇத் திருநாளில் உறுதி ஏற்போம்!
பகுத்தறிவுப் பகலவனாம் பெரியார்; ஞாலம்
பாராட்டும் பேரறிஞர் அண்ணா; மக்கள்
அகம்வென்ற முத்தமிழின் ஆற்றல் பெற்ற
ஆளுமையின் இலக்கணமாம் கலைஞர்; நாளும்
மிகுவுழைப்பால் போராட்டக் களத்தில் நிற்கும்
மேன்மைமிகு தளபதியார்; தமிழர்க் கெல்லாம்
பகுத்தறிவைப் பயிற்றுவிக்கும் பண்பு மிக்கார்
பாசமிகு ஆசிரியர் வழியில் செல்வோம் !
உழவர்தம் உழைப்புக்கு நன்றி சொல்வோம் ;
உதவாத மதவெறியர் கூட்டம், இந்நாள்
உழவர்தம் வயிற்றினிலே மண்ணைப் போடும்
ஒழுங்கற்ற போக்காலே உலக மக்கள்
சழக்கர்க்குச் சாட்டையடி கொடுக்கின் றார்கள்;
சமத்துவத்தைக் குழிதோண்டிப் புதைப்ப தற்கே
இழிசெயல்கள் தொடர்கின்ற காவிக் கூட்டம்
எதிர்ப்பினையே முறியடித்து வெற்றி கொள்வோம் !
செங்கரும்பு மஞ்சளுடன் வாழை இஞ்சி
செந்நெல்லும் விளைந்திருக்கும் கழனி எங்கும் ;
பொங்கிவரும் புத்துணர்வால் மக்கள் வீட்டில்
புத்தரிசிப் பொங்கலிட்டு மகிழ்ச்சி கொள்வர்;