நினைவு நாள்: ஜனவரி 15, 1981
மொழி உணர்வு, இன உணர்வு ஆகியவற்றின் கொள்கலன் அவர். ஆரியத்தின் கடும் எதிரி; அவர் எழுதிய ஒப்பியன் மொழி நூலின் முகவுரைப் பகுதி ஒன்று போதும் – ஆரியத்தின் ஆணிவேர் முதல் உச்சந்தலைவரை உறிஞ்சி எடுப்பதற்கு!
அதன் காரணமாகவே ஆரியப் பகைவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டவர்.
“திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே’’ என்னும் ஆய்வுக் கட்டுரை சாதாரணமானதல்ல! 23 மொழிகளைக் கற்றுத் துறைபோன மொழிக்கடல் அவர். மொழியியல், சொற் பிறப்பியல், சொல்லாக்கம், சொல்லாராய்ச்சி, மொழி ஒப்பீடு, வரலாறு, ஞால நூல், மாந்தரியல், சொற்றொடுப்பு, உரை வரைவு முதலிய துறைகளில் புலமைமிக்கவர்.
அவர் நிறுவியது மூன்று கொள்கைகள்;
1. உலக முதன் மொழி தமிழே!
2. திராவிட மொழிகளின் தாய்மொழி தமிழே!
3. ஆரிய மொழிக்கு மூலம் தமிழே!
ஆகியனவாகும்.
5ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் மதுரையில் கலந்துகொண்டு தமிழ் முழக்கம் செய்து கொண்டிருந்தபோதே நெஞ்சுவலிக்கு ஆளாகி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சில நாள்களில் மறைவுற்றார். (1981, ஜனவரி 16).
அவர் ஆக்கித் தந்த நூற் செல்வங்கள் என்றென்றைக்கும் தமிழ் உலகிற்கு நல்லொளி ஊட்டக் கூடியவை; பன்னூறு ஆய்வுகளுக்கு மூலப் பொருளாக விளங்கக் கூடியவை!
தமிழ் செம்மொழியே என்பதற்கு அவர் யாத்த நூல்கள் போதாதா?