சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்

ஜனவரி 01-15, 2021

நூல்:  ‘இதழாளர் பெரியார்’

ஆசிரியர்:  ‘பெரியார் பேருரையாளர்’ அ.இறையன் 

முகவரி:  உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்,

இரண்டாம் முதன்மைச் சாலை,

மய்யத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,               

தரமணி, சென்னை – 600 113.

பக்கங்கள்: 548                 விலை: ரூ.160/-

காலம் வென்ற ஞாலப் பெரியார்!

“மண்டைச் சுரப்பை உலகுதொழும்!’’ _ புரட்சிக் சுவிஞர் பாரதிதாசனின் தொலை முன்னோக்கில் வடிக்கப்பட்ட பா வரி இது. வாலறிவன் பெரியாரவர்களின் சாலப் பயன் குவிக்கும் சிந்தனையூற்றைச் குறித்துப் புரட்சிப் பாவலர் தம் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் இந்நான்கு சொற்களால் உரக்கக் கூவினார். அவரின் அன்றைய வரும்பொருள் அறிவிப்பு இன்று மெய்யான காட்சிகளாகத் தோன்றும் நிலை!

“நம் நாட்டில் உள்ள எல்லாப் பார்ப்பனராலும் வெறுக்கப்பட்டிருக்கிறேன். மேல் ஜாதியார் என்று பார்ப்பனரைப் போல் தங்களைக் கருதிக்கொண்டிருக்கும் எல்லாச் சைவர்களாலும் பெரிதும் வெறுக்கப்படுகிறேன். இவை மாத்திரமா? 100க்கு 90 கிறித்துவர்களாலும் வெறுக்கப்படுகிறேன். இஸ்லாமியர்களாலும் வெளிப்படையாய் வெறுக்கப்படவில்லை என்று தான் கருதுகிறேன். இவற்றுள் அதிசயமென்ன வென்றால் ஆதிதிராவிட மக்களுக்குள் சிலர் எதிரிகளாகவே _ அலட்சியப்படுத்துபவர்களாகவே ஆகிவிட்டார்கள்!’’ என்பதாகத் தந்தை பெரியார் நொந்த உள்ளத்துடன் ஒரு கட்டத்தில் கருத்து வெளியிட்டமை உண்மையே! (‘உண்மை’ – 1:1).

அத்தூற்றல் நிலவரம் முற்றிலும் மாற்றமுற்றது என்பதுவே வரலாறு. “எங்கட்கெல்லாம் தோன்றாக் கருத்துகள் பெரியாரின் இயற்கை அறிவில் ஊறிடக் காண்கிறேன்” எனும் தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரின் கூற்றுக்கேற்ப, பெரியாரின் இயற்கை அறிவு தமிழ்த் தரணியில் தாக்கம் படைத்தது; துணைக்கண்டத்தைத் துலங்கச் செய்தது. ஏன், இருநிலம் முழுவதையுமே இறும்பூதெய்தச் செய்தது!

இனவுணர்வற்ற ‘கோடரிக்காம்புகளால்’ பெரியார்தம் தொண்டறத்தின் அடிநாள்களில் பெருங்கொடுமைகளுக்கும் மானக்கேடுகளுக்கும் இலக்கானார் என்பது மெய்யே.

சொல்லால் மட்டும் கீழ்மக்கள் பெரியாரைத் தாக்கவில்லை. அப்பெருமகனைக் கல்லால் எறிந்தும் காயப்படுத்தினர் சிலர்.

“அவரை எப்படியெல்லாம் வரவேற்கிறோம் பாருங்கள்’’ எனக் கிண்டல் செய்யும் முறையில் பழஞ் செருப்பு முதலிய  காலணிகளையும்  விளக்குமாறு _ துடைப்பம் போன்ற  அருவருப்பூட்டும் பொருள்களையும் கயிற்றால் கட்டி, அவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட தெருக்களினூடே தொங்கவிட்டு, தோரண வரவேற்பு நல்கினார் நல்லுணர்வாளர் சிலர். சிந்தனையைத் துறந்துவிட்ட சிலர் தத்தம் கால்களில் மாட்டியிருந்த மிதியடிகளைக் சுழற்றி அவரின் மீதே, எறிந்து தங்களின் நாகரிக(?)ச் சிறப்பை வெளிச்சமிட்டுக் காட்டினர்!

சிலரோ பெரியார் உரையாற்றிக் கொண்டிருக்கையிலே பன்றிகளைக் கூட்டத்தினூடே ஓட்டி விட்டுத் தங்களின் தரத்தைப் பறை சாற்றிக் கொண்டனர்.

பாம்புகளைக் கொணர்ந்து தூக்கியெறிந்து கூட்டத்தைக் கலைத்து விட வேண்டுமென்று முயன்ற நல்லோரும் உண்டு! யாவற்றையும் விட அருவருப்பான முசுச்சுளிப்புக்குரிய _ இழி செயலும் சிலரால் வெட்கமில்லாமல் செய்யப்பட்டது. அதாவது மலத்தால் நிரப்பட்டப்பட்ட ஏனங்கள் அவரின் முகம் நோக்கி வீசப்பட்டன! அதையும் வழித்தெறிந்து விட்டு முகம் துடைத்துக் கொண்டு மக்கட்கு அறிவுரையாற்றிய அவரின் தண்ணளியையும் தன்னம்பிக்கையும் நாம் என்ன கூறி வியப்பது! எனினும் வியக்க வேண்டியன விளையவே செய்தன!

பெரியார் வாழ்ந்த தமிழ்நாட்டின் தமிழிதழ்களும் ஆங்கில ஏடுகளும் அவர் பற்றிய செய்திகளையும் திறனாய்வுக் கட்டுரைகளும் வெளியிட நேர்ந்தமை இயற்கையானதே. அவையன்றி இந்தியாவின் பிற பகுதிகளில் அச்சான இதழ்களும் பெரியார் குறித்த செய்திகளை நிறைய வெளியிட்டன என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Malayala Manorama, Mysindia. Deccan Herald, Times of India, Hindustan Times, Illustrated Weekly, Shankar’s Weekly, Blitz, Current Caravan, Pioneer, National Herald, Statesman, Advance, Mainstream, Modern Review, Link முதலிய ஆங்கில இதழ்களும்,  ஜியா சத், அல்ஜமயத் போன்ற உருது ஏடுகளும், தம்யுக் போன்ற இந்தி ஏடுகளும், Newyork Times, Free Thinker, New Humanist முதலிய அயல் நாட்டு இதழ்களும் பெரியாரின் கொள்கைகள் குறித்து மிகுந்த அளவில் எழுதின.

பெரியாரைத் தங்களின் இனப் பகைவராகக் கருதிய  வட்டாரத்தைச் சேர்ந்த பலரும் பெரியாரைப் பாராட்ட நேர்ந்தமை முரண்சுவை கொண்டதென்றுதான் குறிக்க வேண்டும்.

அவரை, அக்ரகாரத்து அதிசய மனிதர் என்பதாக அண்ணாவால் போற்றப்பட்ட எழுத்தாளர் வ.ராமசாமியவர்கள் 1933இல் ‘காந்தி’ இதழில்,

“நாயக்கர் அவர்கள் தமிழ்நாட்டின் வருங்காலப் பெருமைக்கு முன்னோடும் பிள்ளை _ தூதுவன்! மலைகளையும் மரங்களையும் வேரோடு பிடுங்கி யுத்தம் செய்த மாருதியைப் போல, அவர் தமிழ்நாட்டின் தேக்கமுற்ற வாழ்வோடு போர்புரியும் வகையைக் கண்டு, நாம் வியப்படையாமல் இருக்கு முடியாது. சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை அடி தெரியும்படி கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம் நாயக்கரைப் பெரிதும் சேர்ந்தது. அவர் இயற்கையின் புதல்வர். மண்ணை மணந்த மணாளர்! மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு அவரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம்!” (அவரது பவுராணிகச் சொற்களில் நான் உடன்பட்டவல்லன்).

புதினப் படைப்பில் புகழ் எய்திய ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி அவர்கள்:

“அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்றுமுணர்ந்த பேராசிரியர், என்பதில் சந்தேகமில்லை. பாமர ஜனங்களை வசப்படுத்தும் ஆற்றல் தமிழ்நாட்டில் வேறெவரையும் விட அவருக்கு அதிகம் உண்டு. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றவோ! தமிழ்நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியும் என்று தயங்காமல் கூறுவேன்’’ என ஒளிவுமறைவு செய்யாமல் 1931இல் ‘ஆனந்த விகடன்’ வழி உலகிற்குப் பறையறைந்தார்.

“பெண்ணுரிமை பற்றிச் சிந்திப்போர் _ பேசுவோர் _ எழுதுவோர் எவரும் பெரியார் அவர்களை விட்டுவிட்டு எவ்வகை முயற்சியிலும் ஈடுபடமுடியாது’’ எனவும், “பெரியாரின் பெண் விடுதலைக் கருத்துகளால் பாதிக்கப்பட்டுத்தான் முற்போக்காகச் சிந்தித்து எழுதத் தொடங்கினேன்’’ எனவும் எழுத்தாளர்கள் மாலன், உஷா சுப்பிரமணியம் போன்றவர்கள் ஊடகங்களின் வாயிலாக மெய்யுரைப்பதை நாம் காண்கிறோம்.

 ஏ.எஸ்.கே. அய்யங்கார் (பிற்காலத்தில் அய்யங்கார் எனும் ஜாதிப் பெயரை நீக்கிக் கொண்டவர்) என்பார் பெரியாரை முழுமையாகப் படம் பிடித்துக் காட்டும் வகையில், “பகுத்தறிவின்  சிகரம் பெரியார்’’ என்னும் பெயரில் நூலையே யாத்து வையத்திற்கு வழங்கினார்!

தமிழக மக்கள் மட்டும் அல்லர்; கிட்டத்தட்ட இந்திய மாநிலங்கள் அனைத்திலும் வாழ்ந்த பொது வாழ்வுத் தலைவர்களெல்லாரும் வாயாரப் பெரியாரைப் பாராட்டினர்; இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்கள் மனந்திறந்து புகழ்வதை நாம் நேரடியாகத் துய்த்துக் கொண்டிருக்கிறோம்.

பெரியாரின் ஒரு நாள் நடவடிக்கைகளைத் திரைப்படமாக்கும் நோக்குடன் கேரளப் படைப்பாளர் ராமுகாரியத் எனும் அறிஞர், ”பெரியார் வைக்கத்தில் நடத்தி வெற்றி பெற்ற போராட்டத்தின் பின் விளைவுதான் தீண்டத் தகாதோர் என ஒதுக்கி ஒடுக்கப்பட்ட ஈழவக் குடியில் பிறந்த நான் இன்று புகழ் தோய்ந்த கலைப் புலமையாளராகப் போற்றப்படும் சூழ்நிலை! அதன் பொருட்டு என் நன்றியுணர்வினை வெளிக்காட்டும் முறையிலேயே அவரின் ஒரு நாள் வாழ்க்கைப் படப்பிடிப்பு முயற்சி’’ எனச் செய்தியாளரிடையே அறிவித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

1970களில் மராட்டிய தலித் இயக்கத்தின் அடிநாள்களில், அவ்வியக்கத் தலைவர் செய்தியாளர்களிடம் அவ்வியக்கத்தின் கட்டுக்கோப்பான ஒற்றுமையுணர்வுக்கும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கும் அடிப்படைக் காரணமாகப் பெரியாரின் வடபுலச் சுற்றுப் பயணவுரைகளையும் அவர் நேருரையாக உணர்த்திய அறிவுரைகளையும் குறிப்பிட்டமை எத்துணை அரிய செய்தி!

கருநாடக மாநில முதல்வர் தேவராஜ் அர்ஸ், அமைச்சர் பசவலிங்கப்பா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிறீராமுலு, எஸ்.எம்.சந்திரசேகர், இதழாளர் வி.டி.இராஜசேகர், பல்கலைக்கழகப் பேராசிரியர் நரசிம்மையா போன்றோர் பெரியாரின் தொண்டறம் பற்றி _ அடடா, எவ்வாறெல்லாம் பாராட்டினர்!

பஞ்சாப் மாநிலச் சிந்தனையாளர் சந்த்ராம் என்பார் பெரியாரின் 1972ஆம் ஆண்டு பிறந்த நாளின் போது அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ”பெரியாரும் அண்ணாவும் எங்கள் கண்களிலேயே இருக்கிறார்கள். தாழ்ந்தோரின் ஏற்றத்திற்காகவும் பார்ப்பனியத்தின் வீழ்ச்சிக்காகவும் பாடுபடும் பெரியாரின் சேவை மகத்தான சேவையாகும் எனக் குறித்திருந்தார்.

                                                (‘விடுதலை’ 29.9.1972)

வங்கத்துச் சிந்தனையாளர் புகழ்தோய்ந்த எம்.என்.ராய் அவர்கள் கல்கத்தாவில் ஏற்பாடு செய்த மாநாட்டிற்குப் பெரியாரை அழைத்து, ”இவர் என்னுடைய நாத்திக ஆசான்’’ என மக்களிடம் அறிமுகம் செய்த நிகழ்ச்சி ஆழமான பொருள்  புதைந்த ஒன்றாகும்.

                                                (‘குடிஅரசு’ 27.12.1944)

கர்ப்பூரி தாகூர், லாலுபிரசாத், ராம்விலாஸ் பஸ்வான் போன்ற பீகார் மாநிலத் தலைவர்கள் பெரியாரின் இடஒதுக்கீட்டுக் கொள்கைதான் மக்களின் வாழ்க்கையை உயர்த்த வல்ல மாமருந்து என ஏற்றுப் போற்றியவர்கள்.

சரண்சிங், முலாயம்சிங், மாயாவதி, வி.பி.சிங் முதலிய உத்தரப்பிரதேசத் தலைவர்கள் பெரியாரின் நெறியே நாட்டைப் பிழைக்க வைக்க வல்லது என நம்பினர். அதை எவ்வகைத் தயக்கமுமில்லாமல் வெளிப்படுத்தவும் செய்தனர். அய்யாவின் ‘சமூகநீதி’க் கொள்கையை நடைமுறைப்படுத்த வி.பி.சிங் இந்திய அரசின் தலைமையமைச்சர் பொறுப்பையே துறக்கத் துணிந்தார்!

இந்தியப் பெருந்தலைவர்கள் – சிந்தை கவர்ந்த பெரியார்

ஹிரேன் முகர்ஜி, ஜெகஜீவன்ராம், அசோக் மேத்தா, ராம்மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன், பேராசிரியர் ரங்கா முதலிய முன்னோடித் தலைவர்களெல்லாம் பெரியார் தன்னலம் துறந்து ஆற்றிய மக்கள் தொண்டறம் பற்றி மிக உயர்ந்த சொற்களில் பாராட்டியவர்! இன்னும் மாண்புமிகு தீர்ப்பாளர்களாகப் பணியாற்றிய பலரும் பெரியாரின் பொதுநலத் தொண்டு பற்றி வியந்து புகழ்ந்தமை தனித்தன்மை வாய்ந்ததாகும்!

இந்திய நாடாளுமன்றத்திலேயே “பெரியார் ராமசாமி ஜிந்தாபாத்’’ என நாடாளுமன்ற உறுப்பினர்களே கூவும் விந்தை நடந்தது!

பெரியாரின் மறைவுக்குப் பின்னர், அவரின் நூற்றாண்டு விழாவின் போது இந்திய அரசு 50,00,000 (அய்ம்பது இலட்சம்) பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலைகள் அச்சிட்டுப் புழக்கத்தில் விட்டுப் பெருமைப்படுத்தியது!

பெரியார் மறைந்து பல ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையிலும் The Hindu எனும் பார்ப்பன நாளேடும் Indian Express எனும் பார்ப்பனியத் தாக்கத்திற்கு உட்பட்ட நாளேடும் இன்றளவுங்கூட நினைவுக் கட்டுரைகள் வெளியிடுகின்றன என்னும் நிலவரம், பெரியார் காலத்தை வென்று கருத்து நிலையில் மக்களிடையே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் எனும் பேருண்மையை உணர்த்தவல்லது.

வெளிநாட்டு இதழ்களாகிய Free Thinker, The New Humanist போன்றவை பெரியார் பற்றி கட்டுரைகள் வெளியிடுகின்றன என்னும் நடப்பு பெரியாரின் பேரறிவும் பெருந்தொண்டும் ஞாலத்தால் ஏற்றுப் போற்றப்படும் உண்மையை உறுதிப்படுத்துகின்றது. இன்றைக்குப் பெரியார் தொண்டறத்தின் பல்வேறு கூறுகளைத் தலைப்புகளக்கிக் கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் படைத்து, ஆய்வியல் நிறைஞர் (M.Phil), முனைவர் (Ph.D) ஆகிய பெருமைக்குரிய பட்டங்களை நூற்றுக்கணக்கான பேர் எய்தியுள்ளனர். இத்தகைய ஆய்வறிஞர்கள் இந்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் உருவாகியுள்ளனர் என்பது பெருமிதத்துடன் குறிப்பிட வேண்டிய செய்தி.

மேலும் பெரியாரின் கருத்துகளை மேற்கோளாகக் காட்டும் கணக்கற்ற நூல்கள் வெளியிடப்பட்டுள்ளமை -_ ஒப்பீட்டு முறையில் உயர்ந்த பொருள் படைத்தது!

யுனெஸ்கோ – உலக மன்றத்தின் பாராட்டு விருதுப் பட்டயம்

அமெரிக்க வரலாற்றறிஞர் ஜான் ரெய்லி என்பார் “கழிந்த இரண்டாயித்து அய்ந்நூறு ஆண்டுகளில் தென்னிந்தியாவில் ஒரு பெரும் சமுதாயப் புரட்சி  நிகழ்ந்துள்ளது. அதை நிறைவேற்றிக் காட்டியவர் பெரியார் இராமசாமி. இதுவே இந்நாட்டின் மூத்த பேராசிரியர்கள் அனைவரின் ஒட்டுமொத்த கருத்து’’ (“The one and only opinion of all the senior Professors of the United State of America”) என ‘ஆனந்த விகடன்’ துணையாசிரியர் மணியன் அவர்களிடம் நேருரை நிகழ்த்தியமை, எந்த அளவிற்குப் பெரியார் ஞாலப் புகழெய்தினார் என்பதற்கோர் அசைக்க வொண்ணாத சான்று.

இங்கிலாந்து நாட்டு ஃபிலிப்ஸ் ஸ்ப்ராட் என்னும் பயணப் பட்டறிவாளர், “பேரறிவாளர்கள் பெரும் புலவர்கள் என்போர் தோல்வியுற்ற இடத்தில் பெரியார் வெற்றி நாட்டினார். அதற்காக அவர் வற்புறுத்திய அடிப்படைக் கோட்பாடுகள் பகுத்தறிவு, தமிழினம் என்பவையாகும்’’ என அவர் அறுதியிட்டிருப்பது ஆழ்ந்த தீர்ப்பு என்றே கருதத்தக்கது.’’ (“The D.M.K. in power” by Philip Spratt.)

பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆழ்ந்த சிந்தனையாளர்கள் இவ்வாறு பெரியாரவர்களைப் படம் பிடித்துக் காட்டினர் என்றால், அனைத்து நாட்டு கல்வி _ அறிவியல்  _ பண்பாட்டுப் பேரவையை அணி செய்யும் (UNESCO) பல்துறைப் பெரும்புலவர்கள் பெரியாரைப் பாராட்டி வழங்கிய பட்டயம் என்ன பறைசாற்றியது, தெரியுமா?

“The Prophet of the New Age,

The Socrates of South East Asia;

Father of the Social Reform Movement –

And Arch enemy of ignorance, superstitions,

Meaningless customs and base manners”

(தமிழில்)

“புதியதோர் உலகின் தொலைநோக்கர்;

தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்;

மக்களாயச் சீர்திருத்த இயக்கத் தந்தை;

அறியாமை, மூடநம்பிக்கைகள், பொருளற்ற

மரபுகள், கீழ்த்தரப் பான்மைகள் ஆகியவற்றின் முதற் பகைவன்’’ (27.6.1970)

இப்பட்டம் பெரியாருக்கு வழங்கப்பட்ட போது, “ஏனைய பாராட்டுகளுக்கெல்லாம் நான் தகுதியுடையேன் அல்லன்; ஆனால், முதல் பகைவன் எனக் குறிப்பிட்டிருப்பதை ஒப்புக் கொள்ளுகிறேன்’’ என அவர் அறைந்தார் எனும் செய்தி நமக்கு மெய்ச்சிலிர்ப்பை விளைக்கிறதன்றோ?’’வாய்மைப் போருக்கென்றும் இளையார்’’ எனும் புரட்சிக்கவிஞரின் பாராட்டு வரி முழுக்கச் சரி என்பதை எவரும் ஏற்பர்.

‘ஞாலப் பெரியார்’ எனும் சொல்லாட்சி வெற்றுப் புகழ்ச்சி மொழியன்று. கோவையைச் சார்ந்த தமிழக அறிவியலாளர் முனைவர் சுந்தரராசுலு என்பரைத் தமிழினம் போதிய அளவிற்குத் தெரிந்து வைத்திருக்கவில்லை. அவர் ஓர் உயிரியல் புலவர். அவர் தனது ஆய்வுச் சுற்றுப் பயணங்களின்போது காண நேர்ந்த ஒருவகைப் புழு பற்றித் தன் உடன் ஆய்வுச் சுற்றத்தினருடன் கூடிக் கலந்தாய்வு நடத்தினார். இறுதியில் கூர்தலறக் கோட்பாட்டின் உயிரியல் வரலாற்று வளர்ச்சிப் படிகளின் வரைவின்படி முனைவர் சுந்தரராசுலு அவர்கள் கண்டுபிடித்த புழுவகையே உயிரியலின் மூலப் புழு வகையாக இருக்க  முடியும் என்பதாக அவ்வறிவியலாளர்ப் பெரும் புலவர்கள் அறுதியிட்டனர்.

அறிவியல் உலகே மலைக்கும் வண்ணம் ஓர் அருஞ்செயலைப் பூட்கைப் புலவர் முனைவர் சுந்தரராசுலு அவர்கள் நிறைவேற்றினார். அவர் கண்டுபிடித்த அந்தப் புகழார்ந்த புழுவிற்கு _ உயிரியல் கலைவல்லார் ஏற்றுக் கொண்ட அம்மூலப் புழுவிற்கு _ உயரெண்ணங்கள் மலருஞ் சோலை’யாம் பெரியாரின் பெயரைச் சூட்டிவிட்டார்!

ஆம்; உயிரியல் கலை நுண்ணறிவாளர்களால் ஏற்பிசைவு அளிக்கப்பட்டுள்ள அம்மூலப் புழுவின் அறிவியல் பெயர் ‘லோபோபோடஸ் பெரியார்’ (LOBO PODUS PERIYAR). அறிவியல் புலவர்களால் இன்று அப்புழு ‘பெரியார்’ என்றே அழைக்கப்படுகிறது. அம்முறையில் உயிரியல் எனும் கலை உலகெங்கும் பயிலப்படு மட்டும் ‘லோபோ போடஸ் பெரியார்’ எனும் பெயர் ஆய்வறிஞர்களாலும் மாணாக்கர்களாலும் பலுக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

இவ்வண்ணமாக _ நம் ‘இதழாளர் பெரியார்’ அவர்கள், ‘காலம் வென்ற ஞாலப் பெரியார்’ எனப் போற்றப்படுதற்குரியவரே எனும் கருத்துக்கு இரண்டாம் கருத்தோ அட்டியோ இருக்க முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *