முனைவர். வா.நேரு
2020ஆம் ஆண்டைக் கடந்து 2021-ஆம் ஆண்டில் நுழைகின்றோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2020-ஆம் ஆண்டு உலகை அச்சுறுத்திய, அச்சுறுத்தும் கொரோனா என்னும் கொடுந்தொற்று பரவிய ஆண்டு. பலரைப் பாதிப்புக்கு உள்ளாக்கிய ஆண்டு. மன அளவில் பல மனிதர்களை முடக்கிய ஆண்டு. இதன் கொடுமையை உலகம் முழுவதும் மக்கள் உணர்ந்திருக்கின்றனர். கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்துக் கொண்டுள்ளனர். தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொரோனாவை விடக்கொடியது ஆரியம் என்று குறிப்பிட்டார்கள். கொரோனாவின் கொடுமை பலருக்கும் தெரிகிறது. ஆனால் ஆரியத்தின் கொடுமை அனைவருக்கும் புரிவதில்லை. தந்தை பெரியாரின் ஈரோட்டுக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்த்தால்தான் எளிதில் புரியும்.
திசம்பர் மாதக் குளிர் மதுரையிலேயே நம்மை நடுங்க வைக்கிறது. இரவில் போர்வையைத் தேடித் தேடி போர்த்திக் கொள்ளத் தூண்டுகிறது. மதுரையிலேயே இப்படி என்றால் இந்தியாவின் தலைநகர் டில்லியில் குளிரும் பனியும் எத்தனை மடங்கு அதிகம்… சென்றவர்கள் அறிவார்கள். உறைய வைக்கும் அந்தக் குளிரில், பனியில் இலட்சக்கணக்கான இந்திய விவசாயிகள் திரண்டு இருக்கிறார்கள். டெல்லிக்குச் செல்லும் சாலைகளில் அமர்ந்து இருக்கிறார்கள். உணர்வு மயமாக ஒன்றாக நின்று போராடுகிறார்கள். தில்லியைச் சுற்றி இருக்கும் சாலைகள் எல்லாம் விவசாயிகளின் தலைகளாக இருக்கின்றன. பிரித்தாளும் எண்ணம்கொண்ட மத்திய அரசின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு விவசாயிகள் ஒன்றாக நின்று போராடுகின்றனர்.மற்ற நாடுகளில் இருக்கும் ஊடகங்கள் எல்லாம் இந்தப் போராட்டச் செய்தியை மிக விரிவாக வெளியிடுகிறார்கள். ஆனால், இந்தியாவில்?.. ஊடகங்கள் மவுனம் காக்கின்றன… ஏன்?
கொரோனாவைப் புரிந்து கொள்வது போல இந்தியாவின் இன்றைய ஆட்சியைப் புரிந்து கொள்ளவேண்டும். பார்ப்பனர்களைப் புரிந்து கொள்ளவேண்டும். பார்ப்பனர்களுக்கு உழவு என்றாலும், உழவுத்தொழில் என்றாலும் மனதளவில் வெறுப்புதான், கசப்புதான். ஏன்? அவாளின் சாஸ்திரமான மனு சாஸ்திரம் உழவுத்தொழில் செய்வது பாவம் என்று எழுதியிருக்கிறது. “விவசாயம் செய்வது உயர்ந்த தொழில் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், நல்லோர் இதை ஏற்கவில்லை. கலப்பை, மண்வெட்டி போன்றவற்றால் பூமியை வெட்டுவதாலும் பூமியில் உள்ள உயிரினங்கள் சாவதாலும் இது உயர்ந்த தொழில் அல்ல”. சுலோகம் (10:7). பசுவையும் குதிரையையும் துடிக்கத் துடிக்க வெட்டி யாக குண்டத்தில் போட்டு அதனை சுவைத்து சாப்பிட்ட பார்ப்பனர்கள், நிலத்திற்குள் கலப்பையை, மண்வெட்டியை விடுவதால் உயிரினங்கள் சாகின்றன. அதனால் உழவுத்தொழில் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் உழவுத்தொழிலில் பார்ப்பனர்கள் யாரும் அன்று முதல் இன்றுவரை ஈடுபடுவதில்லை. நெற்றி வியர்வை நிலத்தில் விழ அவர்கள் யாரும் நிலத்தில் உழைப்பவர்கள் இல்லை.
தில்லியின் எல்லையில் நின்று போராடும் விவசாயிகள், தங்களின் போராட்டத்தில் ஒரு பகுதியாக கார்பரேட் நிறுவனங்களான அம்பானி, அதானி குழுமங்களின் பொருட்களை பயன்படுத்தாதீர்கள், புறக்கணியுங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்போன் சிம்கார்டை பலரும் மாற்றி மற்ற நிறுவனத்திற்கு மாறுகின்றார்கள். விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் ஏன் இப்படி ஒரு கோரிக்கையை வைக்கின்றார்கள். அவர்கள் வைத்திருக்கும் இந்தக் கோரிக்கை சரிதானா? செய்தித் தாள்களின் பின்னோட்டங்களில் இதனை ஒட்டி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
“உலகத் தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள். நீங்கள் இழப்பதற்கு கைவிலங்குகளைத் தவிர வேறில்லை, பெறுவதற்குப் பொன்னான உலகம் இருக்கிறது” என்றார் பொதுவுடைமை தத்துவத்தை எடுத்துரைத்த காரல்மார்க்ஸ் அவர்கள். உலகம் முழுவதும் இருக்கும் உழைக்கும் தொழிலாளர்கள் ஒன்றிணைவார்கள், புரட்சி செய்வார்கள். அதன் மூலம் மாற்றம் வரும் என்று நம்பினார். உலகில் உள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைவார்கள் என்ற காரல் மார்க்ஸ் அவர்களின் எண்ணத்திற்கு மாற்றாக உலகில் உள்ள முதலாளிகள் ஒன்றிணைந்திருக்கிறார்கள். அதுவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று சொல்லக்கூடிய பெரு நிறுவனங்கள் தங்கள் தங்கள் நாட்டில் ஆட்சி யார் நடத்த வேண்டும், யார் நடத்தக் கூடாது என்று தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள், அப்படிப்பட்ட பெரு நிறுவனங்கள்தான் இந்தியாவில் இருக்கும் அம்பானி மற்றும் அதானி கம்பெனிகள்.
இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் 119 பேர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 100 கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது. 100 கோடிக்கு மேல் சொத்து இருப்பவர்களின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 9ஆக இருந்தது. இன்று அது 119ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் உழைப்பவர்களின் உழைப்பு எல்லாம் இவர்களுக்கு லாபமாகச் சென்று சேர்கிறது. 2017இ-ல் இந்தியாவில் கிடைத்த வருமானத்தில் 73 சதவிகிதம் இந்த 119 பேர்கள் உள்ளிட்ட 1 சதவிகித பணக்காரர்களுக்கு போய் இருக்கிறது. மீதம் இருக்கிற 27 சதவிகித வருமானம்தான் ஏறத்தாழ 124 கோடி மக்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. இந்த 119 பெரும்பணக்காரர்களில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்டவர் இல்லை, முழுக்க முழுக்க பார்ப்பனர்களும் பனியாக்களும் உயர் ஜாதிக்காரர்களும்தான் இந்தப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். அதில் முதன்மையாக இருப்பவர்கள் இந்த முகேஷ் அம்பானியும், அதானியும். மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்தபின்பு இவர்கள் இருவரின் சொத்து மதிப்பு பல மடங்கு கூடியிருக்கிறது. பெரும் பணக்காரர்கள் மேலும் பெரும் பணக்காரர்கள் ஆகின்றார்கள். ஏழைகள் மேலும் பரம ஏழைகளாக ஆகிக்கொண்டுள்ளார்கள்.
இன்றைய மத்திய அரசு என்பது பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆட்சி என்பது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் பணக்காரர்களால் பணக்காரர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆட்சியாகவும் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் அனைவரும் உயர் ஜாதிக்காரர்கள் மட்டும்தான் என்பதைப் புரிந்துகொண்டால் எளிதில் விளங்கும்.
இந்தியா என்பது வளர்ந்துவரும் நாடு. இதில் பாதி மக்கள்தொகைக்கு வேலை கொடுப்பது விவசாயமே ஆகும். 500 ரூபாய் நோட்டு, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று இரவில் அறிவித்து, மத்திய அரசு செய்த கூத்துகளால் சிறு, குறு வணிக நிறுவனங்கள் எல்லாம் அழிந்து போய் இருக்கின்றன. அதன் மூலமாக வேலை கிடைத்த பல கோடிப்பேர் இப்போது வேலை இல்லாமல் நிற்கிறார்கள். நோட்டு செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வந்த ஜி.எஸ்.டி., அடுத்து வந்த கொரோனா பாதிப்பிற்காக கதவடைப்பு என்று தொடர்ந்து இடி மேல் இடியாக, அடி மேல் அடியாக விழுந்ததால் சிறுதொழில்கள் நசுங்கிவிட்டன. சிறுதொழில் செய்தோர் கதிகலங்கி நிற்கின்றனர். ஆனால், இந்தக் காலகட்டத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் லாபத்தைக் கொட்டி அள்ளியிருக்கிறது.
மருத்துவச் செலவு, படிப்புச் செலவு, குடிக்கும் தண்ணீருக்குச் செலவு, நகரங்களில் வசிப்போர் குளிக்கும் தண்ணீருக்கு வாங்கும் செலவு, சமையல் எரிவாயு செலவு, பெட்ரோல் டீசல் உயர்வினால் ஏற்படும் செலவு என்று ஏழைக்குடும்பங்களும், நடுத்தரக் குடும்பங்களும் தத்தளிக்கின்றன. கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாயக் கூலி, ஒரு பன்னாட்டுக் கம்பெனியில் இருக்கும் உயர் அதிகாரியின் ஒரு வருட சம்பளத்தைப் பெறுவதற்கு 941 வருடம் உழைக்கவேண்டும் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. விவசாயக்கூலி ஒடுக்கப்பட்டவராக இருப்பதையும், பன்னாட்டுக் கம்பெனியின் உயர் அதிகாரி பெரும்பாலும் பார்ப்பனர்களாக இருப்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
“பா.ஜ.க. எப்படிப்பட்ட கோட்சே பக்தர்களையும் வருணாசிரமத்திற்கு வக்காலத்து வாங்கும் வன்னெஞ்சர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதற்கு _ -ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல இது ஆதாரம்” என்று ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 15.12.2020 ‘விடுதலை’ நாளிதழ் அறிக்கையில் குறிப்பிட்டதைப்போல, “சூத்திரன் என்றால் தேவடியாள் மகன்” என்று பொருளிருக்கும்போது சூத்திரன் என்றால் ஏன் எதிர்ப்பு, ஏன் கோபம் என்று கேட்கிறார் காவி சாமியாரிணி பிரக்யாசிங் தாக்கூர்” என்னும் தலைப்பில் வந்த அறிக்கையைப் படிக்கும்போது, இன்றைய பா.ஜ.க. பழைய வருணாசிரம முறையைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு துடிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். “கீழ் ஜாதியில் பிறந்தவன் மேல் வருணத்திற்குரிய குலத் தொழிலைச் செய்தால் அவன் செல்வத்தைப் பறித்து நாடு கடத்த வேண்டும் (மனு 10:85). சூத்திரன் தன் குடும்பத்தைக் காப்பாற்றும் அளவுக்கு மேல் பொருள் சேர்த்து வைக்கக் கூடாது” போன்ற மனு நீதியின் சட்டங்களோடு இன்றைய விவசாயச் சட்டங்களைப் பொருத்திப் பார்த்தால், நிலம் வைத்திருக்கும் விவசாய சூத்திரர்களிடமிருந்து விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றும் திட்டமே மோடி அரசின் விவசாயச் சட்டங்கள் என்பது புரியும்.
விவசாயிகளுக்கு மேம்பட்ட சட்டங்கள் வேண்டுமா என்றால், வேண்டும். டாக்டர் கலைஞர் அவர்கள் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொண்டு வந்தார். சட்டம் இயற்றினார். டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஆனவுடன் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தார். மத்திய மோடி அரசு பதவி ஏற்றவுடன், பெரும் முதலாளிகள் வாங்கியிருந்த ஒரு இலட்சம் கோடிக்கு மேற்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்தார்கள். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகுத்தது. சிறு விவசாயக் கூலிகளாக கிராமங்களில் இருக்கும் மகளிர் இணையவும், அவர்கள் வங்கியில் கடன்பெறவும் மற்றும் பலவகையில் முன்னேறவும் அந்தக் குழுக்கள் பயன்பட்டன; பயன்படுகின்றன. இது பெரும்பான்மையான மக்களின் நன்மை கருதிக் கொண்டுவரப்பட்ட திட்டம். ஆனால், இன்று மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள விவசாயிகள் நலச்சட்டம் என்னும் மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியவை அல்ல. மாறாக கார்பரேட் நிறுவனங்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டவை. கோடிக்கணக்கான விவசாயிகளைப் பலி கொடுத்து சில நிறுவனங்கள் வாழ்வதற்கும், வளமாவதற்கும் வழி வகுப்பவை.
திராவிட ஆட்சி என்பது ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்னும் நோக்கம் கொண்டது. அதனைத் தமிழகம் மெய்ப்பித்தது. இனியும் மெய்ப்பிக்கும். ஆரியம் என்பது ‘பார்ப்பனர்களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே உரிமையும் சலுகையும்’ என்பது. தில்லியில் எல்லையில் நின்று போராடும் இந்தியாவின் பல மாநிலத்தைச் சார்ந்த விவசாயிகள் ஆரிய ஆட்சியின் வஞ்சகத்தைப் புரிந்து கொண்டுள்ளனர். அகிம்சை வழியில் அயராது போரிடுகின்றனர். அவர்களின் போராட்டம் வெல்லட்டும், வெல்லட்டும். கொரோனாவை ஒழிப்பது, தடுப்பது தடுப்பூசி என்றால், அதனைவிடக் கொடிய ஆரியத்தை தடுப்பது, ஒழிப்பது திராவிடமே! திராவிடக் கருத்துகளே என்றும் வெல்லும், வெல்லும்! ஆம், திராவிடம் வெல்லும்!